யுரியூப்பர்ஸின் புதிய வியாபாரம்: ஹெல்ப்பிங் வீடியோ ( helping video ) சமூகச் சிதைவை வியாபாரமாக்கி தன்மானத்தைதொலைக்கும் யுரியூப்பர்ஸ்
சமீபகாலங்களில் சமூக ஊடகங்களில் உதவி கேட்கும் காணொலிளும் கோரிக்கைகளும் பரவிக்கிடக்கின்றன. உலகளாவிய ரீதியில் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி மற்றும் இணையப் பயன்பாடு போன்றனவே இதற்கு பின்னணியாக காணப்படுகிறது. உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் உதவி கேட்பதையே பெரும் கௌரவக் குறைவாக பார்த்த காலம் ஒன்றும் இருந்தது. மிகவும் நெருக்கடியான சூழ்நிலைகளில் மட்டுமே அடுத்தவர்களின் உதவியை நாடும் தலைமுறையினர் மத்தியில் அந்நியர்களிடம் உதவி கேட்பதை கூச்சமாகவே நினைக்காத தலைமுறையினர் உருவாகிவிட்டனர்.
இலங்கையைப் பொறுத்தவரை முப்பது வருடங்களுக்கு மேல் நடந்த யுத்தம் இந்த நிலமைக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் புலம்பெயர்ந்து ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு சென்றதையையும் குறிப்பிடலாம்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை காணப்பட்டது. அப்போது புலம்பெயர் உறவுகள் தாயகத்து உறவுகளுக்கு அன்றாடம் உயிர்வாழ உதவிகள் புரிந்தனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னி மாவட்டம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் பகுதிகளில் புலம்பெயர் நாடுகளில் உறவுகளை கொண்டிருந்தவர்கள் மிகக் குறைவாகவே காணப்பட்டிருந்தனர். அப்படியிருந்தும் போர்க்காலத்தில் கிடைத்த நிவாரணங்கள் மற்றும் உள்ளூரில் மேற்கொண்ட சுயதொழிலில் முயற்சிகள் மூலம் தன்னிறைவாக வாழ்ந்தார்கள். தமக்கு அன்றாடப் பயன்பாட்டுக்கு தேவையான காய்கறிகளை அவர்களே வீட்டுத்தோட்டங்களில் பயிரிட்டனர்.
யுத்தம் முடிவடைந்த 15 வருடங்களில் நிலமை மிக மோசமாகி விட்டது. தன்னிறைவுப் பொருளாதாரம் மறைந்து தங்கியிருத்தல் பொருளாதார சமூக முறைமையொன்று உருவாகியுள்ளது. அடுத்தவர்களிடம் கையேந்துவது என்பது ஈழத்தமிழர்களின் கலாச்சாரத்தில் ஒன்றாகிக் கலந்து வருகிறது துரதிர்ஷ்ட வசமானது என சமூகவியலாளர்கள் கவலையடைந்துள்ளனர். இந்தக் கலாச்சாரம் சாமானிய மக்களிடம் மட்டுமல்ல இலங்கை அரசாங்கமும் அதற்கு விதிவிலக்கல்ல. இலங்கையை மாறி மாறி ஆண்டு வந்த ஆட்சியாளர்களும் உலகவங்கி, சர்வதேச நாணய நிதியம், சீனா, இந்தியா மற்றும் ஜரோப்பிய ஒன்றியம் என உலகெங்கும் கையேந்தி கடன் வாங்கியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, உதவிகளை புலம்பெயர் மக்களிடம் வாங்கிக் கொடுக்க தரகர்களும் உருவாகி விட்டார்கள். சிலர் தாமாகவே உதவி கோரும் காணொளிகளை மற்றும் கோரிக்கைகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டு உதவி பெறுகின்றனர். பலரால் அது முடிவதில்லை. ஆனால் இதற்கெனவே யுரீயூப் சனல்கள் நடத்துபவர்கள், இதில் இடைத்தரகர்களாக செயல்படுகின்றனர்.
யுரீயூப்பில் உதவி வீடியோக்களைப் போடுபவர்களால் பல்வேறு சர்ச்சைகள் ஏற்படுகின்றன. உதவி வீடியோக்கங்கள் போடுபவர்கள் தன்னிச்சையாக செயற்படுகின்றார்கள். அவர்களை ஒழுங்குபடுத்தும் கட்டுப்படுத்தும் எந்த விதிமுறைகளும் இல்லை.
இவ்வாறான உதவி வீடியோக்களை தயாரிக்கும் போது தனிநபர் தகவல்ப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடையங்களில் கவனம் செலுத்தப்படுவதில்லை. சம்பந்தப்பட்ட காணொளிகளில் தோன்றும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையும் ஏற்படுத்தப்படுகிறது. பல சமூகச் சீரழிவுகள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்களும் இவ்வாறான உதவிக் காணொளிகளை யுரியூப்பில் தயாரிப்பவர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. துஸ்பிரயோகங்கள் இடம்பெறும் போது பொறுப்புக் கூறலும் இல்லாமல் போகின்றது.
சமீப நாட்களில் இவ்வாறான உதவி வீடியோக்களை வெளியிடும் யுரீயூப்பர்களுக்கிடையேயான வாய்க்கால் சண்டையால் பல அதிர்ச்சிகரமான விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இந்த விடயம் எப்படி ஒரு பணம் கொட்டும் தொழிலாக மாறியுள்ளது. அப்பாவி பெண்கள், ஆதரவற்றோர் மற்றும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் சுரண்டப்படுகிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இப்படி வீடியோக்கள் போட்ட யுரீயூப்பர்ஸ் பெரும் செல்வந்தர்களாகவும் மாறியுள்ளனர். ஆடம்பர செலவுகளையும் செய்கின்றனர்.
இவ்வாறான குற்றச்சாட்டுக்களை பல தமிழ் யுரீயூப்பர்கள் வடக்கு கிழக்கில் எதிர்கொள்கின்றனர். அதில் கிருஸ்ணா என்பவர் முக்கியமானவர். கிருஸ்ணா தான் இலங்கையின் சுதந்திர தினத்தில் யாழ்ப்பாணத்தில் இலங்கைக் கொடியுடன் முன்னணியில் ஊர்வலமாக சென்றவர். எப்படி உதவிக் காணொளிகளை வெளியிட்டு மோசடி நடப்பதாக கிருஸ்ணாவே இவ்வாறு கூறுகிறார்.
மோசடிக் குற்றச்சாட்டுக்களை யுரீயூப்பர்ஸ் மாறி மாறி குற்றம்சாட்டுகின்றனர். எஸ். கே . கிருஸ்ணா மீது தமிழ் புறோ ( Tamil Bro) என்றவரும் டி. கே. கார்த்தி வன்னி என்ற யுரீயூப்பரும் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கிடையில் எஸ். கே . கிருஸ்ணாவின் ஆடம்பர பிறந்தநாள் கொண்டாட்டமும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திடீர் பணக்காரனான எஸ். கே . கிருஸ்ணா ஆடம்பர வீடொன்றை கட்டி வருவதாகவும் சமூக ஊடகங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. எஸ். கே . கிருஸ்ணாவுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் கிருஸ்ணாவின் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம் இருப்பதாக குறிப்பிடுகிறார். அவர் மேலும் கூறும் போது கிருஸ்ணாவின் குடும்பத்தாரின் தகவலின்படி கிருஸ்ணா ஹெல்ப்பிங் வீடியோ போடுவதன் மூலம் மாதாந்தம் 25 இலட்சம் வருமானம் ஈட்டுவதாகவும் கூறுகிறார்.
இந்த ஹெல்ப்பிங் வீடியோக்கள் எந்தவிதமான தணிக்கையும் இன்றி தயாரிக்கப்படுகின்றன. இப்படியான வீடியோக்களை தயாரிப்பவர்கள் பயன்படுத்தும் மொழியிலும் பிரச்சினை காணப்படுகிறது. இரட்டை அர்த்த வசனங்களில் பேசுவது அந்தரங்க தனிநபர் விடயங்களை கிழறி வெளிச்சம் போட்டு காட்டுதல் என பல ஆபாசங்களும் ஒரு சில யுரீயூப்பர்ஸ்சால் அரங்கேற்றப்படுகின்றது.
இப்படியான நபர்கள் உதவி கோரும் காணொளிகளை தயாரித்து புலம்பெயர் மக்களிடம் உதவி கோருகின்றனர். சமீபத்தில் ஒரு பிரபல்யமான யுரீயூப்பர் மூலம் புலம்பெயர் நாட்டில் வாழும் ஒரு நபர் வன்னியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு உதவி புரிந்துள்ளார். உதவி வழங்கிய நபர் இலங்கைக்கு சுற்றுலா வந்தசமயம் குறிப்பிட்ட குடும்பத்தினரை சந்தித்து பழகியுள்ளார். வெளிநாட்டிலிருந்து வந்தவர் திரும்பிச் சென்று விட்டார். உதவி வாங்கிய குடும்பத்தில் கணவனை இழந்த தாயையும் பதின்ம வயது மகளையும் திருமணம் செய்வதாக கூறி துஸ்பிரயோகம் செய்துள்ளார். இறுதியில் தலைமறைவாகிய புலம்பெயர் நபரை அறிமுகம் செய்த யுரீயூப்பரை அணுகிய போது அவரும் தனக்கும் சம்பந்தப்பட்ட நபருடன் தொடர்பு இல்லை என கையை விரித்துவிட்டார்.
இப்படியான சமூகச் சீரழிவுகளும் பெருமளவில் நடக்கின்றன. புலம்பெயர் நாடுகளிலிருந்து உதவி புரிகிறோம் என்ற பெயரில் சில ஆண்கள் ஹெல்பிங் வீடியோ மூலம் அறிமுகமாகும் பெண்கள் மீது பாலியல் சுரண்டல்களிலும் ஈடுபடுகின்றனர். ஈழத்து எம்ஜிஆர் தியாகி தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உதவி வழங்குவதாக ஏழை மக்களை வரவழைத்து அவர்களை வரிசையில் மணிக்கணக்கில் காக்க வைத்து அடித்த கூத்துக்கள் போலவே எஸ். கே . கிருஸ்ணாவின் நடவடிக்கைகளும் அமைந்துள்ளன.
உதவி செய்ய வேண்டும். அந்த உதவியால் நன்மை விளைய வேண்டும். ஒரு உழைக்க திராணியற்ற சோம்பேறிச் சமுதாயத்தை உருவாக்க வழிசமைக்க கூடாது. அதேநேரம் உதவி வாங்கிக்கொடுக்கும் இடைத்தரகர்கள் விடயத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.