ஒட்டிசுட்டானில் பெண்ணுக்கு விழுந்த அடி அர்ச்சுனாவுக்கும் தமிழ்அடியானுக்கும் விழ வேண்டியது!
தமிழ்ப்பெண்களின் மீது அதிகரித்திருக்கிற வன்முறைகளின் உச்சகட்டம் ஒரு தமிழ் எம்பி அர்ச்சுனா இராமநாதன் பாராளுமன்றத்தில் ஒரு தமிழ்ப் பெண்ணை “ விபச்சாரி “ என்று சொன்னதாகும்.
அந்த வெட்டகக்கேடான செயலை கண்டிக்காத மற்றைய தமிழ்த் தேசியம் பேசும் அரசியல் வாதிகளும் எம்பிக்களும் என ஒரு மரத்துப்போன சமூகமே வேடிக்கை பார்த்தது. போதாக்குறைக்கு பெண்களின் நிர்வாணப் படங்கள் மற்றும் வீடியோக்களை “ ஊழல் ஒழிப்பு அணி வன்னி “ என்ற பெயரில் பதிவிட்ட போதும் அதனை வரவேற்ற தமிழ்அடியான் என்ற ரஜீவன் ராமலிங்கம் போன்றவர்களுமே “ ஒட்டிசுட்டான் “ சம்பவத்திற்கு பொறுப்பானவர்களாவார்கள்.
பாராளுமன்றம் போய் விபச்சாரி என்று சொன்ன எம்பி அர்ச்சுனாவிடம் நியாயம் கேட்க சாளினியின் குடும்ப ஆண்கள் யாரும் முன்வந்திருந்தால் நிலமை என்னவாகியிருக்கும் யோசித்து பார்க்க வேண்டும்.
மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவில் பணியாற்றிய இரு பெண்களுக்கிடையிலான முரண்பாட்டில் , தனது மனைவிக்காக தலையீடு செய்த கணவன் , பொல்லுக்கட்டுடன் வந்து சம்பந்தப்பட்ட பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். சண்டை சச்சரவுகளில் வார்த்தை தடிக்கும் போது மனிதர்கள் வார்த்தைகளை சிதற விடுவது ஒன்றும் புதிதில்லை. ஆனால் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் உண்மைத் தன்மைக்கு அப்பால் சட்டத்தை கையில் எடுக்கும் துணிவை யார் கொடுத்தது? . தாக்குதலை மேற்கொண்ட நபர் தன்னுடைய மனைவி இன்னாரா இன்னாரா? என்று கேட்டு அடிக்கிறார். இப்படியான இழிச் செயலை செய்ய ஒரு நபரை தூண்டியது வேறு யாருமல்ல, இந்த சமூகம் தான். குறையறிவுடையவர்கள் சமூகத்தில் கொட்டும் அபத்தமான கருத்துக்கள், எண்ணங்கள் மற்றும் செயல்கள் தான் இப்படியான பரிதாபமான சம்பவங்களை தோற்றுவிக்கின்றன.
சமீபத்தில் கூட ஊழல் ஒழிப்பு அணி வன்னி ஊடகவியலாளர் சங்கவியின் நடத்தை குறித்து அவதூறுகள் பரப்பியிருந்தது. சங்கவி மீதனா அந்த வசையை சங்கவியின் கணவர் பொதுவெளியில் வந்து சங்கவி உத்தமி , நான் அதை நம்புகிறேன் என உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ்அடியான் என்றழைக்கப்படும் எம்பி அர்ச்சுனாவின் ஜால்ரா ரஜீவன் ராமலிங்கம் வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இப்படியான பகுத்தறிவு அற்ற பெண்கள் விரோத “ஆண்மையை “கருத்தியல்கள் தமிழ்ச் சமூகத்தில் புரையோடிப் போய்யுள்ளன. இவை தணிக்கை குறைந்த சமூக வலைத்தளங்களினூடாக சமூகத்தில் மீள் வலியுறுத்தப்படுகின்றன. இந்த காலத்திற்கும் ஒவ்வாத காட்டுமிராண்டிக் கருத்துக்களால் கவரப்படும் ஒரு தமிழ்ச் சமூகம் வெடித்து வளர்ந்து வருகின்றது.
இவர்கள் வெறும் உணர்ச்சி கொந்தளிப்புகளால் உந்தப்பட்டு காரியங்களில் இறங்குகிறார்கள். ஊடகவியலளர் சங்கவியின் கணவர் தனது மனைவிக்கு நற்சான்றிதழ் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கும் சமூகத்தில் ஒட்டிசுட்டான் சம்பவங்கள் நடக்கும். இலங்கையில் மட்டுமல்ல ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் இப்படி நடக்கிறது. பிரான்ஸ்சில் பாரிஸில் வைத்து , ரிக்ரொக் பெண்ணான சுஜி கூல்லை’ லாச்சப்பல் வர்த்தக சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தமிழ்க் காவாலிகள் கொஞ்சப் பேர் என கூடித் தாக்கியமை குறிப்பிடத்தக்கது. அந்த தாக்குதல் வீடியோவுக்கு புலிகள் ஆனையிறவு இராணுவ முகாமை வெற்றி கொண்ட வெற்றிப்பாடலை பின்னணி இசையாக போட்டு சமூவ வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தனர்.
“சுஜி கூல் “என்ற பெண் தாக்கப்பட்ட போது பாரிஸில் ஈழத்தமிழர்கள் எப்படி வேடிக்கை பார்த்தார்களோ அப்படியே ஒட்டிசுட்டானில் நடக்கின்றது. மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவில் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்யும் பெண்ணுக்கு கூட வேலை செய்கிறவர்கள் உட்பட யாரும் உதவ முன்வரவில்லை. அடியின் கொடூரம் தாங்காது கதறும் பெண்ணிடம் மன்னிப்பு கேளடி என இன்னுமொரு பெண்மணியும் ஆணும் அறிவுறுத்துகிறார்கள். இன்னும் பலர் மறிப்பமா? வேண்டாமா ? என வாகனத்திற்குள் இருந்து கலந்துரையாடுகிறார்கள். வேறுயாரோ நபர்கள் நடப்பதை வீடியோ எடுக்கிறார்கள். வீடியோ காட்சியின்படி தாக்குதலில் ஈடுபடும் நபர் தனது மனைவி இன்னாரா? இன்னாரா?
கேட்டு அடிக்கிறார் .
அதாவது தமிழ் அடியான் ரஜீவன் ராமலிங்கம் ஆலோசனைப்படி தனது மனைவிக்கு நற்சான்றிதழ் கொடுக்கிறார். இதேமாதிரியே பாரிஸில் தாக்கப்பட்ட சுஜி கூலிடம் ரிக்ரொக்கில் தமிழீழம் பிடிக்க புறப்பட்ட நபர் ஒருவர் என்னுடைய அம்மா இன்னாரா? இன்னாரா? என்று கேட்டு அடிக்கிறார்.
பெண் சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகளை கடும் கண்காணிப்புடன் பாதுகாக்கும் புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து கொண்டிப்பவர்களே பிரான்ஸில் தமிழ்ப் பெண்கள் மீது வன்முறையில் ஈடுபடுகிறார்கள். புலம்பெயர் நாடுகளில் பெரும்பாலான ஈழத்தமிழர்கள் மேற்கத்தைய சாராயத்தையும் , உணவையும் மற்றும் நவநாகரீக உடையையும் தான் கற்றுக் கொண்டுள்ளார்கள். மேற்கத்தைய நாடுகளின் முற்ப்போக்கு கருத்துக்களான பாலினச் சமத்துவம், சகோதரத்துவம், சாதியற்ற சமூகம் , பல்லினச் சமூக ஒழுங்கமைப்புக்கள் என எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றன. அவற்றைப் படிக்கவில்லை.
இலங்கையைப் பொறுத்தவரை போருக்குப் பிந்திய ஈழத்தமிழர் வாழ்வியல் மாறிவிட்டது. இதனை ஊடகவியலாளர் மற்றும் சூழலியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் இவ்வாறு தனது முகநூலில் கருத்துப் பதிவிட்டுள்ளார். “ சட்டவிரோதிகளுக்கு இருக்கும் சட்ட பாதுகாப்பும் செல்வாக்கும், அதனை தட்டிக்கேட்பவர்களுக்கு இன்மையே வேடிக்கை பார்ப்பவர்கள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது “ என்கிறார்.

கடந்த வருடம் தமிழ்ச்செல்வன் ஏ9 வீதியில் வைத்து கறுப்பு வாகனத்தில் வந்தவர்களால் தாக்கப்பட்டு கடத்திச் செல்ல முற்பட்ட போதும் மக்கள் ஒட்டிசுட்டானில் நடந்தது போன்று வேடிக்கை பார்த்தனர் என வேதனையுடன் பதிவு செய்துள்ளார். சமூகத்தின் இந்த மனப்பாங்கு ஆபத்தானது. ஏன் ?இந்த சமூகப் பிரக்ஞை அற்ற மாற்றம். நீண்ட காலமாக வன்முறைகளை மட்டுமே பார்த்து வந்த சமூத்தில் “ வன்முறைகளுக்கு இசைவாக்கம்” அடைந்து விட்டார்களா? அல்லது யுத்தம் முடிந்தும் இராணுவ முற்றுகையில் ஆயுத முனையில் கண்காணிப்பில் அவர்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளமையா? என கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகிறது.
ஒட்டிசுட்டானில் தாக்குதலுக்குள்ளான பெண்ணுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். பெண்கள் மீதான வன்முறை எந்த வடிவமாக இருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் மகளிர் விவகார அமைச்சு உரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
வன்முறைக்கு பின்னான வாழ்க்கையை எதிர்கொள்ள பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவள ஆலோசனை மற்றும் சமூக பாதுகாப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். ஒட்டிசுட்டான் பெண், ரிக்ரொக் சாளினி, ஊடகவியலாளர் சங்கவி போன்றோருக்கு உரிய உதவிகளை வழங்க பெண்கள் உரிமைகளுக்காக போராடும் அமைப்புகள் முன்வர வேண்டும்.
ஒட்டிசுட்டான் பெண் பணியாற்றும் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் இந்தவிடயத்தில் கண்டிக்கப்பட வேண்டும். தன்னுடைய நிறுவன ஊழியரை பாதுகாக்கத் தவறியுள்ளது. சம்பந்தப்பட்ட பிணக்கில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் மனைவி மீது விசாரணைகளை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்குதலுக்குள்ளான பெண் வேலைக்கு அணியும் சீருடையில் உள்ளார். அவர் பணியிலிருக்கும் போதே அவர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். எனவே சம்பந்தப்பட்ட நிறுவனம் தாக்குதலுக்குள்ளான பெண்ணுக்கு உரிய இழப்பீடு மற்றும் நிவாரணத்தை வழங்க வேண்டும். வேலையிடங்களில் பணியாளர்களிடையே மனஸ்தாபங்கள் பிணக்குகள் வரும் போது மூன்றாம் நபர் பணியிடத்திலேயே தலையீடு செய்து சுமூகமாக தீர்க்கும் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா , காலாச்சார காவலர்கள் என சமூக ஊடகங்களில் வாயாடுபவர்கள் மற்றும் சமூகம் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். ஒட்டிசுட்டானில் பொல் கொண்டு பெண்ணைத் தாக்கிய நபர் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்திலுள்ள பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
ஒட்டுசுட்டான் பெண் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலில் பூச்சியம் சகிப்புத் தன்மை கூட கடைப்பிடிக்கப்படக் கூடாது. இந்த விடயத்தில் பரப்பப்படும் காணொளியில் பெண்ணின் தனிநபர் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். அவருடைய ஆள் அடையாளம் மறைக்கப்படுதல் வேண்டும்.
விபச்சாரி மற்றும் பாலியல்த் தொழிலாளி என்ற முத்திரை குத்தல்களை எதிர்கொள்பவர்கள் அவமானம் அடையத் தேவையில்லை. இவ்வாறான பிரச்சினைகளை வன்முறையால் அல்ல அறிவார்ந்த ரீதியில் எதிர்கொள்ள வேண்டும். அந்தவகையில் பெண் உரிமைகளுக்காக குரல் கொடுப்போர் சமூக ஊடகங்களில் போராடுவது மட்டுமன்றி களத்தில் பணியாற்ற வேண்டும் என்பதே சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.