
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கான அரச விஜயமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்று இரவு வந்தடைந்தார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்டோர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இராஜதந்திரிகள் குழுவினருக்கு சிறப்பு வரவேற்பு அளித்தனர். கொழும்பில் இந்திய சமூகத்தினரும் மோடிக்கு வரவேற்பு அளித்தனர்.
இந்தியப் பிரதமர் மோடியைச் சந்திப்பதற்காக தமிழ் தேசியத் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கொழும்பு சென்றுள்ளதாக தேசம்நெற்க்குத் தெரியவருகின்றது, தமிழ் தலைவர்களை தனித்தனியாக சந்திப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்றும் அவர்கள் குழுவாகவே சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் இச்சந்திப்புக்காக கொழும்புவந்துள்ள செல்வம் அடைக்கலநாதனின் பிரித்தானிய பிரதிநிதி சாம் சம்பந்தன் தேசம்நெற்றுக்கு நேற்றுத் தெரிவித்தார். தமிழ் தலைமைகள் இதுவரை இந்திய பிரதமருடன் என்ன பேசப்போகின்றோம் என்பது பற்றி கலந்துரையாடவில்லை என சாம் சம்பந்தன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.
ஆனாலும் சந்திப்பு நேரங்கள் தங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டதும் தாங்கள் சந்திப்புக்கு முன்னதாக அங்கேயே இதுபற்றி கலந்துரையாடிய பின் சந்திப்போம் என சாம் சம்பந்தன் குறிப்பிடுகின்றார். மாகாண சபை வேண்டாம், இந்தியப் பிரதமர் இது பற்றி கதைக்காமல் இருப்பதே நல்லது எனக் கருதும் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் இச்சந்திப்பில் கலந்துகொள்வாரா அவர் என்னத்தை கேட்பார் பேசுவார் என்பது சுவாரஸியமான விடயமாக இருக்கும். ஏற்கனவே முன்னாள் பா உ எம் ஏ சுமந்திரன் இந்தியப் பிரதமரைச் சந்திப்பதற்கு நேரம்கோரியுள்ளார்.
இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை மையப்படுத்தி மோடி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்திய பிரதமர் இந்நாட்டிற்கு விஜயம் செய்யும் நான்காவது சந்தர்ப்பம் இதுவென்பதுடன், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் பொருளாதார, கலாச்சார மற்றும் வரலாற்று தொடர்புகளையும் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக்களை பலப்படுத்திக்கொள்வதும் விஜயத்தின் நோக்கமாகும்.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்திய பிரதமர் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளது. இந்திய ஒத்துழைப்புடன் இலங்கையின் முன்னெடுக்கப்படும் பல வேலைத்திட்டங்களையும் மோடி திறந்து வைக்கவுள்ளார்.
இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட இந்திய அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
சம்பூர் மின்னுற்பத்தி நிலையம் உட்பட்ட பல்வேறு உடன்படிக்கைகளிலும் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. மகோ சந்தி ரெயில் பாதையையும் திறந்து வைக்க உள்ளார். இலங்கையின் கலாச்சாரத் தலைநகரமான அநுராதபுரத்தின் மாகா போதிக்கும் இந்தியப் பிரதமர் விஜயம் செய்ய உள்ளார்.
தமிழ்நாடு மாநில அரசின் ஆதரவைப் பெறுவதற்காவே கடந்த காலங்களில் இந்திய மத்திய அரசு இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் கூடிய கவனம் எடுத்து வந்தது. அந்நிலை தற்போது முற்றாக மாறியுள்ளதை யாழ் ஈழநாடு பத்திரிகை அண்மைய ஆசியர் தலைப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது தமிழக மாநில் அரசுக்கும் இலங்கைத் தமிழர்களுக்குமான உறவு நீர்த்துப்போன நிலையிலேயே உள்ளது. ஒரு பகுதி தமிழர்கள் பாலியல் காமுகனாகியுள்ள சீமானுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றனர். அண்மையில் தமிழகத்தில் நடைபெற்ற அயலவர் திருவிழாவிற்குச் சென்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பார்வையாளர்களாக இருந்து விட்டு நாடு திரும்பினர். முதல்வர் மு கா ஸ்டாலினை சந்திக்கவே முடியவில்லை.
இப்பேர்ப்பட்ட முகவரியற்ற அரசியல்வாதிகளாக தமிழ் தேசியவாதிகள் செயற்படுகின்றனர். முதலமைச்சர் மு கா ஸ்டாலினை அவருடைய மாநிலத்துக்குச் சென்றே சந்திக்க முடியாத தமிழ் தேசியத் தலைமைகள் தற்போது சேடம் இழுத்துக்கொண்டுள்ளனர். பிரதமர் மோடியைச் சந்தித்து தங்களுக்கு ஒட்சிசன் ஏற்றுவதற்கு அவர்கள் கொழும்பில் காத்திருக்கின்றனர்.
தமிழ்நாட்டுக்கும் பிரதமர் மோடிக்குமிடையே பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. திராவிடக் கட்சிகளை ஓரம்கட்ட பிரதமர் மோடி ஈழத்தமிழர்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. ஈழத்தமிழர்கள் இந்திய மத்திய அரசின் நலன்களுக்காக மீண்டும் பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அதனைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு தீவிர வலதுசாரிகளாக இருக்கும் தமிழ் தேசியவாதிகளுக்கு போதுமான அரசியல் அறிவு இருப்பதாகத் தெரியவில்லை.
இலங்கை அரசியலைப் பொறுத்தவரை பாராதிய ஜனதாக் கட்சி புத்தரை கிருஸஷ்ண பகவானின் அவதாரங்களில் ஒன்றாகவே பார்க்கின்றது. இலங்கையில் உள்ள சிங்கள – தமிழ் மக்கள் பௌத்தர்களும் – இந்துக்களும் உறவுகள். கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களுமே சர்ச்சைக்குரியவர்கள் கையாளப்பட வேண்டியவர்கள். இதனை பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கலாநிதி அண்ணாமலை வவுனியாவில் மிகத் தெளிவாகத் தெரிவித்திருந்தார். வலதுசாரித் தமிழ் தேசியத் தலைமைகளின் வங்குரோத்து அரசியலால் தமிழ் மக்கள் தங்களுக்குள் சாதி, மாதம், பிரதேசம் என்று பிரிந்துள்ளவர்கள் ஏனைய சமூகங்களுடன் மட்டுமல்ல தமிழகத்துடனும் முரண்பட வேண்டிய நிலைக்குச் சென்றுள்ளனர்.
இலங்கைத் தமிழர்களுடைய பிரச்சினையைத் தவிர்த்து கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தியப் பிரதமர் மோடியின் கரங்களை இறுகப் பற்றி கரையேற வேண்டும் என ஜனாதிபதி அனுரவுக்கு மனோகணேசன் அறிவுரை வழங்கியுள்ளார்.
இலங்கைக்கு வருகை தரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வடக்கு கடற்றொழிலாளர்களின் விவகாரம் குறித்து பேசுவது மிகவும் முக்கியமானது என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமருடன் கடற்றொழில் அமைச்சர் மற்றும் வடக்கு கிழக்கு தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் உரையாடுவார்களா என்பதும் அரசியலில் முக்கிய பேசுபொருளாக அமையும். வலதுசாரி தமிழ் தேசியத் தலைமைகளும் பிரதமர் மோடியைச் சந்தித்து வடக்கு கிழக்கு தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் கடற்றொழில் அமைச்சரும் மோடியைச் சந்தித்தால் அது தமிழ் தேசிய கட்சிகளின் நிலையை கீழுறக்குவதாகவே கணிக்கப்படும். இந்தியப் பிரதமர் மோடியின் விஜயம் இலங்கை அரசியலிலும் பார்க்க ஈழத்தமிழர்களின் அரசியலிலேயே கூடிய தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது.