வடக்கில் 16,000 வேலை வாய்ப்புகள் மூன்று முதலீட்டு வலயங்கள் !
வடக்கு மாகாண அபிவிருத்தியை நோக்கி, அரசாங்கம் முன்மொழிந்துள்ள காங்கேசன்துறை, பரந்தன் மற்றும் மாங்குளம் ஆகிய மூன்று முதலீட்டு வலயங்கள் 2025ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டின் இறுதியில் செயல்படத் தொடங்கும் என இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் அர்ஜூன் ஹேரத் தெரிவித்துள்ளார். இத்திட்டங்கள் முழுமையாக செயல்பட்டால், குறைந்தது 16,000 பேருக்கு தொழில் வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு ஆளுநர் நா. வேதநாயகனின் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலில், முதலீட்டுத் தளங்களில் போக்குவரத்து, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் நில உரிமைச் சிக்கல்கள் உள்ளிட்ட சவால்கள் பற்றிய விவாதங்கள் இடம்பெற்றன.
இந்த மூன்று வலயங்களையும் சுற்றுச்சூழல் நேயமான வகையில் அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக முதலீட்டுச் சபை தெரிவித்தது. குறிப்பாக, காங்கேசன்துறையில் புகையிரத பாதையை துறைமுகம் வரை விரிவுபடுத்துவது, மாங்குளத்தில் காணி விடுவிப்பு நடவடிக்கைகள், மற்றும் பரந்தனில் உள்ள சொந்தமாகும் இடங்களின் சிக்கல்கள் பற்றியும் தீர்வுகள் வகுக்கப்பட்டுள்ளன. வலயங்களை விரைவில் வேலியிட்டு அடையாளப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ள நிலையில், கடந்த கால அனுபவங்களைவிட இம்முறை திட்டங்கள் நடைமுறைக்கு வரும் என முதலீட்டாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் உறுதியளிக்கப்பட்டது.
பட்டதாரிகள் தனியே அரசாங்க வேலைகளில் மட்டும் தங்கியிருக்காமல் தனியார்த்துறைகளிலும் தொழில் முயற்சிகளிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என்று யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம. ரதீபன் தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் துறையைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அரச சேவைகள் பற்றி அறிந்துகொள்ள மாவட்ட செயலகத்திற்கு கள விஜயம் மேற்கொண்டிருந்தனர். அதன் போதே அரசாங்க அதிபர் மேற்கொண்ட கருத்தை வெளியிட்டு இருந்தார்.