ஈஸ்டருக்கு முன் பிள்ளையான் சி.ஐ.டியினரால் கைது ! பயங்கரவாதத் தடைசட்டம் பயன்படுத்தப்படும் !
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து வந்த குற்றப் புலனாய்வுப் பிரிவால் கட்சி தலைமை காரியாலயத்தில் வைத்து பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைதுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
தற்போதுள்ள நிலையில் அரசாங்கம் விரும்பியோ விரும்பாமலோ பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்தும் நிலையிலேயே இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். தற்போதுள்ள குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு பயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியமாக உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார். திட்டமிட்ட பாதாளக்குழுக்கள், போதைவஸ்து கடத்தல் மற்றும் குற்றங்கள், தேசிய பாதுகாப்புக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு வேறு சட்டங்கள் நடைமுறையில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதில் உறுதியாக உள்ளோம் என்றும் அதற்கு அவகாசம் தேவை எனவும் சுட்டிக்காட்டினார்.
அந்தவகையில் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரிகள் தொடர்பான தகவல்கள் ஏப்பிரல் 21 ஈஸ்டருக்கு முதல் வெளியாகும் என ஜனாதிபதி அநுர சமீபத்தில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதன்பின்னணியில் கோத்தபாய மற்றும் ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் துணை இராணுவக் குழுவாக செயற்பட்ட பிள்ளையானின் கைது இடம்பெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது. அநுர தலைமையிலான என்பிபி அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக பிள்ளையான் இரண்டு தடவை கொழும்பு குற்றப் புலனாய்வுத் துறைக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அதேநேரம் பிள்ளையான் போன்று விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறி துணை இராணுவக் குழுவாக செயற்பட்ட கருணா அம்மானும் முன்னாள் எம்பி சதாசிவம் வியாழேந்திரனும் பிள்ளையானுடன் இணைந்து ‘ கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ என்றவொரு தேர்தல் கூட்டை உருவாக்கியிருந்தனர். இந்த அமைப்பு உள்ளூராட்சித் தேர்தல்களில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது. இரு வாரங்களுக்கு முன்னர் ச. வியாழேந்திரன் கைதானார். இப்போது பிள்ளையான் கைதாகியுள்ளார். என்பிபி அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை தேர்தல் காரணங்களுக்காக பயன்படுத்துகிறது என பிள்ளையான் ஆதரவாளர்கள் விமர்சிக்கின்றனர். இன்னொரு பக்கம் ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்ற பிள்ளையான் பலி ஆடாக்கப்படுகிறார் எனவும் கூறப்படுகிறது.