பிள்ளையானின் எதிர்காலம் கேள்விக் குறியாகின்றது ? விதியா? சதியா ? ரிஎம்விபி இன் அடுத்த தலைவர் கருணா அம்மானா ?
அண்மையில் கருணா அம்மான் விசாரிக்கப்பட்ட நிலையில் பிள்ளையான் கைது இடம்பெற்றுள்ளது. கருணா – பிள்ளையான் – வியாழேந்திரன் இணைந்த கிழக்கு முன்னணி உதயம்பெற்றுள்ளது. இந்தப் பின்னணியில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் நடந்த காலகட்டங்களில் கருணா இலங்கையில் இருக்கவில்லை. அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளும் புலம்பெயர் தமிழர்களும் பிள்ளையானையே குறிவைத்து பிரச்சாரம் செய்வதாக பிள்ளையானின் நெருங்கிய நண்பரொருவர் தேசம்நெற்குத் தெரிவித்தார். உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில் தனக்கு மாற்றுக் கருத்து இல்லை எனத் தெரிவிக்கும் அவர், கைது செய்யப்பட்ட காலகட்டம் தங்களுடைய அரசியல் செயல்பாட்டை முடக்கவே மேற்கொள்ளப்படுவதாகக் குற்றம்சாட்டுகின்றார்.
தமிழீழ விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்த பிள்ளையானின் அரசியல் அஸ்தமனமாகின்றது என்ற கணிப்புகள் பரவலாகத் எதிர்வு கூறப்படுகின்றது. இக்கைதுக்கு சில மாதங்களுக்கு முன் இவற்றையெல்லாம் மீறி வருவேன் என்று பிள்ளையான் தேசம்நெற்க்குத் தெரிவித்திருந்த போதும் பிள்ளையானின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது.
யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர் சிவசுப்பிரமணியம் இரவீந்திரன் கடத்தப்படுவதற்கு முன் கிழக்குப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி கிழக்கைச் சேர்ந்த பால சுகுமாரன் கடத்தப்பட்டு இருந்தார். தற்போது லண்டனில் உள்ள பால சுகுமாரனுடன் இது தொடர்பில் உரையாடுவதற்குத் தொடர்பு கொண்ட போதும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இந்தக் கடத்தல் நாடகங்களுக்குப் பின்னால் பிரதேசவாதம் தலைதூக்கியிருந்த காலகட்டம் அது. தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து கருணா அம்மான் 2004 யூலை இறுதிப் பகுதியில் வெளியேறியாதிலிருந்து கிழக்குப் பல்கலைக்கழகமும் வடக்கு – கிழக்கு பிரதேசவாதச் சிக்கலுக்கு உள்ளாகியது. கிழக்கு பல்கலைக்கழகத்தில் கருணாவுக்கு ஆதரவாக சில பேராசிரியர்கள் திரும்பினர். ஆனால் வடக்கைச் சேர்ந்தவர்கள் அணிசேரா நிலையை எடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அவர்களுடைய குடும்பங்கள் வடக்கில் இருந்தது.
2004 இல் கருணா அம்மானுக்கு ஆதரவாக கிழக்கு பல்கலைக்கழகத்தில் போராட்டங்களை மேற்கொண்ட கிழக்கு பல்கலைக்கழக விவசாய பீடாதிபதி தம்பையா திருச்செல்வம் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். 2004 மார்ச் 24ஆம் திகதி மட்/கல்லடியிலுள்ள அவரது வீட்டில் இருந்தபோது சுமார் மலை 8.30 மணியளவில் ஆயுதமேந்திய இரு இளைஞர்களால் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
2004ஆம் ஆண்டின் பாராளுமன்ற தேர்தலுக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான இராஜன் சத்தியமூர்த்தி அவர்கள் மட்டக்களப்பு மக்களின் பெருமதிப்புக்குரியவர். மார்ச் மாதம் 30ஆம் திகதி அதிகாலை 07.40 மணிக்கு அவர் தன்னுடைய பூசையறையில் முருகன் படத்தில் முன்னால் நின்று தீபம் ஏற்றி சாம்பிராணி கொளுத்தி வழிபாடு செய்து கொண்டிருக்கையில் புலிகளால் சாராமரியாகச் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்நிலையில்தான் 2004, 63 வயதான மட்டக்களப்பு அரசாங்க அதிபர் இரத்தினம் மௌனகுருசாமி, தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னரான மார்ச் 27ல் மட்/ பிள்ளையாரடியில் வைத்து கைத்துப்பாக்கி ஏந்திய புலிகளால் சுடப்பட்டார். எனினும் அதிஷ்ட வசமாக அவருடைய உயிர் காப்பாற்றப்பட்டது.
இந்த வடக்கு – கிழக்கு பிளவின் போட்டியில் நடந்த மற்றுமொரு முக்கிய படுகொலை தமிழரசுக் கட்சியின் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை. 2005 கிறிஸ்மஸ் தினமான டிசம்பர் 25இல் இவர் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பில் பிள்ளையான் குற்றம்சாட்டப்பட்டு கொலைக் குற்றச்சாட்டு நிருபிக்கப்படாத நிலையில் பிள்ளையான் விடுவிக்கப்பட்டார்.
இதனையடுத்து 2006இல் கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் இரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். பிள்ளையானை கைது செய்து தண்டிப்போம் என்பதை தேசிய மக்கள் சக்தி அரசு பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னரேயே அறிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 08 மட்டக்களப்பில் வைத்து அவர் கைது செய்யப்பட்டு தற்போது பிள்ளையான் கொழும்பிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏட்டிக்குப் போட்டியான கொலைக் கலாச்சாரம் புலிகள் உட்பட்ட தமிழ் ஆயுதக் குழுக்களிடம் மலிந்து காணப்பட்டது. யாழ்ப்பாணத்தில் வளர்ந்த சகோதரப் படுகொலைக் கலாச்சாரம் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து கருணா அம்மான் வெளியேறியதும் கிழக்கிலும் பரவியது. யாழ்ப்பாணத்தில் பாடசாலை அதிபர்களே ஏட்டிக்கு போட்டியாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்தேறியுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டம் படுமொசமான கொலைக் கலாச்சாரத்தை தன்னகத்தே கொண்டிருந்தது.
இதற்கு பிள்ளையான் என அறியப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் விதிவிலக்கல்ல. இவர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் என்பதோடு, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அவர் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
பிள்ளையான் மீது ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியாமல் போனாலும் பிள்ளையான் மீதுள்ள நீண்ட குற்றச்சாட்டுகளின் பட்டியலில் இருந்து விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தாங்கள் அரசியலுக்கு வந்த 2008க்குப் பின் தாங்கள் வன்முறையில் ஈடுபடவவில்லை எனத் தேசம்நெற்க்குத் தெரிவித்து இருந்தார். ஆனால் நடைமுறையில் 2008க்கு முன்னும் பின்னும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கள் பல உள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசு தற்போது அடுத்தடுத்த முன்னாள் அமைச்சர்கள், முதலமைச்சர், பொலிஸ் தலைமைப் பொறுப்பாளர் என எவ்வித வேறுபாடுமின்றி சட்டத்தை மிகத் தீவிரமாக அமுல்படுத்த முயற்சிப்பதால் பிள்ளையான் இந்தக் கிடுக்குப் பிடியிலிருந்து தப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே கருதப்படுகின்றது.
இந்த வடக்கு – கிழக்கு முரண்பாட்டில் யாழ் மையவாதம் எப்போதும் ஏனையவர்கள் மீது பழியைப் போட்டு தப்பிவிடுகின்ற போக்கே இன்னமும் தொடர்கின்றது. தற்போது புலம்பெயர் தமிழர்களின் பழிவாங்கும் உணர்வு பிள்ளையானையே மையம் கொண்டுள்ளது. மேலும் தேசிய மக்கள் சக்தி வெற்றியை நழுவவிட்ட ஒரே மாவட்டம் மட்டக்களப்பு. அந்த வகையில் பிள்ளையான் ஒரு இளகிய இரும்பு. தூக்கித் தூக்கி அடிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே சமயம் பிள்ளையான் கொலைகள் மற்றும் வன்முறைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிக்கப்படுவதும் அவை நிரூபிக்கப்படும் பட்சத்தில் தண்டிக்கப்படுவதும் மிக அவசியம்.
பிள்ளையான் தற்போது கிடுக்குப் பிடியில் மாட்டியுள்ளதால் கருணா அம்மானின் தலைமைத்துவத்திற்கு கதவுகள் திறந்துவிடப்படும் வாய்ப்பு உள்ளது. பிள்ளையானுக்கு விழுந்த வாக்குகளுக்குப் பின் யாழ் மையவாத எதிர்ப்பு பலமாக இருப்பதை தமிழ் தேசியவாதிகள் உணர்ந்து தமிழ் சமூகம் ஒரு பல்லின சமூகம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பிள்ளையானின் மீது அனைத்து பழிகளையும் போட்டுவிட்டு நாங்கள் சுத்தமான சுவாமிப்பிள்ளைகளாக காட்டிக்கொள்ள முடியாது. கிழக்கை ஆதரித்தமைக்காக கிழக்கின் ஆளுமைகள் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவையும் விசாரிக்கப்பட வேண்டும்.