ஒரு குடைதான், ஒரு நிறக்குடையல்ல! : யூட் ரட்ணசிங்கம்

Multicoloured_Umbrella1948ம் ஆண்டு ஆங்கில ஆதிக்கத்திலிருந்து விடுபட்டது இலங்கை. அன்றிலிருந்து தமிழ் பேசும் மக்களின் சுதந்திரத்துக்காக பல தமிழ், முஸ்லீம் அரசியல் கட்சிகள் உருவாக்கப்பட்டு அகிம்சை வழியில் போராடிவந்தன. தனித்தனிக் கட்சிகளாக நின்று தமிழ்பேசும் மக்களின் உரிமையை வென்றுவிடமுடியாது என்று எண்ணிய இந்த தலைமைகள் 1976ம் ஆண்டு யாழ்ப்பாணத்திலே வட்டுக்கோட்டை என்னும் இடத்தில் கூடி தனித்தமிழீழத்தை வென்றெடுக்க அனைவரும் ஒரு குடையின் கீழ் அணிதிரள வேண்டும் என்று அறைகூவல் விடுத்து, தமிழீழத்தின் தேவையை வலியுறுத்தினார்கள். அதுவே வட்டுக்கோட்டை தீர்மானம் என்று அழைக்கப்பட்டது. (வட்டுக்கோட்டை தீர்மானத்தை ஏதோ ஐ நா பாதுகாப்புக் கவுன்சிலில் எடுக்கப்பட்ட தீர்மானம்போல் சிலர் பிதற்றித்திரிகிறார்கள்.)

இலங்கையின் நான்கு தனித்துவமான இனங்களில் தமிழ்பேசும் மூன்று தனித்துவமான இனங்களின் பிரதிநிதிகள் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற (TULF) குடையை உருவாக்கினார்கள். 1977ம் ஆண்டு தேர்தலில் வரலாறுகாணாத வெற்றியீட்டி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஸ்தானத்தில் இருந்தது TULF. இதன் தலைவராக அன்று திரு அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் இருந்தார். (இவர் தந்தை செல்வாவின் தமிழிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பாளராகவும் இருந்தார் என்று என் நண்பர் அடிக்கடி கூறுவார்.) இவர் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். சட்டவல்லுனர்.

தேர்தலின்பின் ஒரு குடையில் ஏற்பட்ட விரிசலால் கூட்டுச்சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக குடைக்கம்பிகள் போன்று விலக்கப்பட்டார்கள். அல்லது விலகிப்போனார்கள். ஒரு குடையிலிருந்து விலகிப்போன திரு தொண்டமான், திரு ராசதுரை, திரு தேவநாயகம் போன்றோர் ஆட்சி அதிகாரத்தில் இருந்த J R ஜயவர்த்தனாவின் UNP யுடன் சேர்ந்து கொண்டார்கள். தனித் தமிழீழம் அவர்களின் முதல் எதிரியானது. ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுகாண அறைகூவல் விடுத்தார்கள்.

மிதவாதிகளை மறுத்து அகிம்சையைப் புறக்கணித்து தீவிரவாத இயக்கங்கள் ஆயதப்போராட்டத்தை முன்னெடுத்தன. இவர்களுடைய இலக்கும் தமிழீழமே ஆனால் ஒரு குடைக்கொள்கையை உடனடியாக அமுல்படுத்த முயலவில்லை. காலப்போக்கில் எல்லா இயக்கங்களும் வளர்ந்து போராளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்த பின்னர் நான்கு இயக்கத் தலைவர்கள் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து வெளியிட்டார்கள். வட்டுக்கோட்டை போல் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. இதுவும் வெளிப்படையாக அறிவிக்கப்படாத ஒரு குடைக் கொள்கைதான். அதுவும் காலப்போக்கில் போட்டுத்தள்ளப்பட்டு முடியாட்சியில் முடிந்தது. தனிக்காட்டு ராஜாவாக உருவெடுத்த மன்னர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் அவரது LTTE அமைப்பும் ஒரு குடைக் கொள்கையை கையிலே எடுத்துக்கொண்டார்கள். இது யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டு வன்னிக்கு வந்துசேர்ந்த விடுதலைப் புலிகளின் கிளிநொச்சிப் பிரகடனமாக இருந்தது.

இது வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைப்போல் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டதல்ல, ஆயதத்தை அரணாகக் கொண்ட தீர்மானம். “வடக்குக் கிழக்கிலே வாழுகின்ற அத்தனை அசையும் அசையாச் சொத்துக்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருதல், அதன்மூலம் தமிழீழத்தை வென்றெடுத்தல்.”

இந்தக் குடைக் கம்பிகளும் கருணாவைத் தொடர்ந்து ஒவ்வொன்றாக கழற்றப்பட்டன அல்லது கழன்று போயின. கழற்றப்பட்ட கருணாவும் அவர் சகாக்களும் ஆட்சியில் இருந்த சுதந்திரக்கட்சியுடன் உடனடியாக இணைந்து கொண்டார்கள். தனித்தமிழீழம் அவர்களின் முதல் எதிரியானது. ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுகாண அறைகூவல் விடுக்கிறார்கள். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமது மிகுதியான அரசியல் வாழ்வை அர்ப்பணிக்க விரும்புகிறார்கள்.

Tamil_Eelam_Umbrellaகடந்த கால வரலாற்றை நோக்கின் தமிழ்த் தேசியக் குடைக் கொள்கை மக்களை இணைத்ததைவிட பிரிப்பதில் அதிக பங்கு எடுத்துள்ளது. அகிம்சைவாதிகளும் சரி, ஆயததாரிகளும் சரி ஒரு குடையிலிருந்து பிரியும்போது முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஒன்றாகவே காணப்படுகின்றன.
1) ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையின் அடிப்படையில் பொறுப்பானவர்கள் செயல்படவில்லை
2) ஒரு மாவட்டத்தின் ஆளுமை
3) தனிநபர் விரோதப்போக்கு
4) மற்றய மாவட்டங்களையும் அந்த மக்களையும் சமமாக ஏற்று மதிக்கப்படாத தன்மை
5) சாற்றை எடுத்துவிட்டுச் சக்கையை துப்புகின்ற சிந்தனை
6) மட்டக்களப்பான் மந்திரவாதி, மலையகத்தான் வடக்கத்தையான், வன்னியான் காட்டுமிராண்டி, முஸ்லீம் தொப்பிபிரட்டி, யாழ்ப்பாணத்தான் பனங்கொட்டை சூப்பி என்று சமூகங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வரைவிலக்கணங்களும் அவை சார்ந்த சிந்தனைப் போக்கும் தொடர்ந்தும் தமிழ்த் தேசிய ஒருகுடையின் கீழ் பேணிப்பாதுகாக்கப்பட்டு வருவதுபோன்ற பல.

இதுவரை காலமும் ஒரு குடை என்றதுமே அது ஒரு நிறக்குடையாக இருக்க வேண்டும் என்பது கடுமையான நிபந்தனை. ஆளுமை செலுத்துகின்றகட்சி, மக்கள் தொகையில் எண்ணிக்கை கூடிய பிரதேசம், அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்ட தனிநபர், அமைப்பு, ஒரு குழுமமக்கள் போன்ற குறுகிய எண்ணமும் செயலும் ஒரு குடையின் இயங்குசக்திகளாக இருந்தன.

கடந்த அரை நூற்றாண்டு கால அனுபவங்களும் கால் நூற்றாண்டு கால வன்முறைகளும் இதுவரை காலமும் கட்டிக்காத்துவந்த தமிழ்த் தேசிய குடைக்கொள்கையின் உள்ளமைப்பை தோலுரித்துக் காட்டி நிற்கின்ற நேரத்தில் மீண்டும் ஒரு குடைக்கொள்கையின் அவசியமும் அவசரமும் பலராலும் உணரப்படுகின்ற வேளை இது ஓர் ஆய்வுக்குரியதாகவும் மாறியிருக்கிறது.

கடந்த 60 ஆண்டுகால அரசியல் வரலாறும் முக்கியமாக கடந்த 30 ஆண்டுகால ஆயுத வன்முறையோடு கூடிய அரசியலும் ஆராயப்பட வேண்டியவை. 30 ஆண்டுகால வன்முறை கலந்த ஆயதப் போரில் நான்கு தனித்துவமான இனங்களின் குறிப்பாக தமிழ், முஸ்லீம், மலையக மக்களிடையே ஏற்பட்டுள்ள மன உளைச்சல்களும், மன மாற்றங்களும் கருத்தில் கொள்ளப்பட்டு ஆய்வு செய்யப்பட வேண்டியவை.

தமிழ் தேசியக் குடை மீண்டும் ஒருமுறை மூன்று தனித்துவமான தமிழ் பேசும் மக்களை உள்ளடக்கி இயங்கும் தன்மை கொண்டதா? இல்லையென்றால் இதன்பின் ஆய்வு எதற்கு? ஆம் என்றால் எப்படி? கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை எவை?
1) இலங்கையில் வடகிழக்கில் நான்கு தனித்துவமான இனங்கள் உள்ளன என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளல்
2) அவர்களுடைய தனித்துவங்களான மொழி, மதம், பிரதேசம் போன்றவை முதன்மையாக கருதப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படல்
3) தவறிப்போன நேர்மையான அரசியலை அறிமுகம் செய்து திறந்த மனதுடனான ஜனநாயக அரசியலை முன்னெடுத்தல், அதுவே ஒரு குடைக் கொள்கையாக பிரகடனப்படுத்தல்
4) சம்பந்தப்படுவோர் தமது சொந்த விருப்பு வெறுப்புகளை கைவிட்டு (முனிவர் நிலையடைதல்) அத்தனையும் தமது மக்களின் வாழ்வுக்கு அர்ப்பணித்தல்
5) அந்தந்த மாவட்டங்களை அந்த மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆளுகின்ற முறைமையை அறிமுகப்படுத்தி செயல்படுத்தல்
6) ஒருவரை ஒருவர் தமது தேவைகளுக்காக பயன்படுத்துவது என்ற காட்டுமிராண்டித்தனமான சிந்தனையை கைவிட்டு ஒருவரை ஒருவர் மதித்து, ஒவ்வொருவரிடமும் காணப்படுகின்ற தனித்துவமான திறன்களை சமூகம் பெறும்படியான திட்டங்களை முன்வைத்தல்
7) ஒவ்வொரு மாவட்டத்திலும் கிடைக்கின்ற வளங்களை அந்தந்த மாவட்டமக்கள் பெறும்படியான திட்டங்களை வகுத்து மிகுதியானவற்றை மற்றய மாவட்டங்களும் பகிர்ந்துகொள்ளும் வழிமுறைகளை கண்டுபிடித்தல் போன்ற பல கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

Multicoloured_Umbrellaஇனி உருவாக்குகின்ற குடை அனைத்து மக்களையும் உள்ளடக்கிய, அவர்களின் தனித்துவங்களையும் ஏற்றுக்கொண்டு மதித்து வாழுகின்ற ஓர் ஜனநாயகத் தளத்தை உருவாக்குகின்ற பல வர்ணக் குடையாக இருக்குமேயானால் இந்தக் குடையின் கீழ் வருவதற்கும் வாழ்வதற்கும் அத்தனை பேரும் விரும்புவார்கள் என்பது என் கருத்து.

மக்களின் மனங்களில் உள்ள சந்தேகங்களை நீக்க புதிய புதிய சிந்தனைகளை வேறுபட்ட தளங்களிலிருந்து உள்வாங்கி ஆய்வுகளை செய்யாதவரை கூடுவதும் பின் பிரிவதும் என்பது தமிழ்த் தேசியத்தின் வாழ்வாக மாறிவிடும். அந்த வாழ்க்கைச் சக்கரத்துள் தமிழ் தேசியம் நிரந்தரமாக சிறைப்பிடிக்கப்பட்டுவிடும்.

ஒருவரோடு ஒருவர் சார்ந்து வாழவேண்டும் என்பது தமிழ் சமூகத்துக்கு மட்டும் கொடுக்கப்பட்ட கட்டளையல்ல. நம்முடைய உருவாக்கத்தின் அடிப்படையிலிருந்து உருவான இயற்கை விதி அது. அணுவிலிருந்து அண்டவெளிவரை அனைத்துமே ஒன்றேடு ஒன்று சார்ந்துதான் வாழுகின்றன. அந்த அணுவால் உருவாக்கப்பட்டு இந்த அண்டவெளிக்குள் வாழும் மனிதன்மட்டும் எப்படி சார்பின்றி வாழ்வது? சார்பின்றி வாழ்வில்லையென்பது வரலாற்று உண்மை. இதை இன்று முழுஉலகும் குறிப்பாக பொருளாதார வல்லரசுகளே உணர்ந்துள்ள காலம் இது. தமிழ்பேசும் மக்களும் தலைவர்களும் உணர்வார்களா?

Show More
Leave a Reply to Kulan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • Kulan
    Kulan

    இக்கட்டுரையில் சில தகவல்கள் என் கணிப்பில் பிழையானவை.

    கூட்டணி என்று இணைந்த பின்புதான் வட்டுமகாநாடு நடந்தது.

    //இதன் தலைவராக அன்று திரு அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் இருந்தார். (இவர் தந்தை செல்வாவின் தமிழிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பாளராகவும் இருந்தார் என்று என் நண்பர் அடிக்கடி கூறுவார்.) இவர் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். சட்டவல்லுனர்.//
    தமிழில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர் என்று சிலர் நக்கலாகக் கதைப்பதுண்டு. தந்தை செல்வாவை வேட்டு வங்கிகளை நிரப்பவும் அரசியல் இலாபம் காணவும் பயன்படுத்தினார்கள். இவர் கடைசிகாலங்களில் வாயால் வீணீர் ஊத்துண்ணத் துடைத்துத் துடைத்து அனுங்கி அனுங்கியயே பேசுவார். அதை உரத்தகுரல் அமிர் எழுத்துரைப்பார்.

    அமிர் யாழ்பாணத்தில் பிறந்தவரல்ல. சுழிபுரத்திலுள்ள பண்ணாகம் எனும் இடத்தைச் சேர்ந்தவர். சுழிபுரம் விற்ரோறியாக் கல்லூரிப்பழைய மாணவர். சட்டத்துறையில் கியூசி. (குயின்கவுண்சில் வழக்கறிஞர்)

    இரட்ணசிங்கம் அவர்களே நீங்கள் எழுதிய 7 புள்ளிகளும் மனிதருக்கும் மனிதராய் வாழ விரும்புபவர்களுக்குமே. மிருகங்களின் பெயரை வைத்துத்தானே போரும் அரசியலும் நடந்தன நடக்கின்றன. எப்படி இவர்களிடம் மனித்தையும் ஒற்றுமையையும் எதிர்பாப்பீர்கள். நிறம் வேறானாலும் குடை ஒன்றுதான் ஆனால் நம்நடை வேறே. இது இன்று நேற்றல்ல எமது சேர சோழ பாண்டியர்களில் இருந்த எமக்கு மரபணுமூலம் கடத்தப்பட்ட விடயமிது. எப்படி ஒருநாளில் அறுத்தெறிய முடியும். இதற்கு புரிந்துணர்வுடன் கூடிய பொது வேலைத்திட்டம் அவசியமானது. இன்று ஐரோப்பிய நாடெங்கும் கூட்டுப்படிப்பு செயல்திட்டம் கூட்டு ஆய்வுகள் கூட்டு அரசு என்று எல்லாமே கூடும் போது நாம் எம்முள்ளேயே கூடாமல் ஓடுகிறோம். இலங்கை அரசு எல்லோரையும் விட பாகுபடுத்துவதில் முன்னிற்கிறது. அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பார்கள் தமிழர்களுக்கு திரண்டால் கடுப்பு என்றாகிறது.

    Reply
  • alfred
    alfred

    நல்ல கட்டுரை. சற்று பிரதேசவாதம் கூடுதலாக இருப்பது போலத் தெரிகிறது. இனியும் பிரதேசவாதம் பேசுவது நல்லததா?

    Reply