தேசம்நெற் இணைய வலையில் இருந்து காணாமற் போனது ஏன்? : தேசம்நெற்

தேசம்நெற் இணைய வலையில் இருந்து காணாமற் போனது ஏன்?
தேசம்நெற் இற்கான இணையச்சேவையை (server)  வழங்கும் நிறுவனம் தேசம்நெற் இன் பதிவுக்கோவையினை (database) தேசம்நெற் இன் இணைப்பில் இருந்து பிரதான இணைப்பிற்கு (root directory)  இடம்மாற்றியது. அதனால் தேசம்நெற் இணையம் இணைய வலையில் காணாமல் போனது. தேசம்நெற் இணையத்திற்கு 500MB கொள்ளவு சேமிப்புத் திறனே வழங்கப்பட்டதாகவும் தேசம்நெற் இன் பாவனை 738 MB க்கு அதிகமாகியதால் இணையச்சேவையை வழங்குபவர்கள் மேற்படி நடவடிக்கையை எடுத்தனர்.

தேசம்நெற் நிர்வாகத்திற்கு இது பற்றி அறிவுறுத்தப்படவில்லையா?
இவ்வாறான அறிவுறுத்தல்கள் மின் அஞ்சலூடாக அனுப்பி வைக்கப்படும் என தேசம்நெற் நிர்வாகம் கருதி இருந்தது. ஆனால் இணைய சேவையை வழங்குபவர்கள் தமது தொடர்புகளை தமது இணையசேவையின் இணையத்தில் உள்ள தேசம்நெற் இற்கான பகுதியில் மட்டும் அவற்றை குறிப்பிட்டு இருந்தனர். வேறு எவ்வித தொடர்புகளும் மேற்கொள்ளப்படவில்லை. தேசம்நெற் இணைய வலையில் காணாமல் போனபோது தேசம்நெற் நிர்வாகமும் ஒரு வாசகனின் நிலையிலேயே இருந்தது.

அதனைச் சரி செய்வதற்கு ஏன் இவ்வளவு காலதாமதம் ஏற்பட்டது?
தேசம்நெற் ஒரு லாபமீட்டும் ஊடகமல்ல. தேசம்நெற் இல் பணிபுரிபவர்கள் அனைவரும் ஒரு நல்ல ஊடகத்தை நடாத்த வேண்டும் என்றதன் அடிப்படையில் எவ்வித பலனையும் எதிர்பாராமலே தங்கள் நேரத்தை சேமித்து தேசம்நெற் இல் பணிபுரிகின்றனர். குறிப்பிட்ட தொழில்நுட்பத் தவறு நடைபெற்ற போது எமக்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்குபவர்களை உடனடியாகத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்களைத் தொடர்புகொண்டு விடயத்தை ஆராயும் போது இரவு ஆகிவிட்டது.

மேலும் இணைச்சேவையை வழங்குபவர்களுடன் மின் அஞ்சலூடாக மட்டுமே தொடர்பு கொள்ள முடியும் ஒவ்வொரு மின் அஞ்சல் அனுப்பும் போதும் அவர்களிடம் இருந்து பதில் வருவதற்கு குறைந்தது அரைமணிநேரம் ஆவது ஆகும். தவறைச் சரி செய்வதற்கு தேசம்நெற் கோவையை மீளப் பதிவிறக்கம் செய்துகொள்ள மட்டும் இரு மணிநேரம் எடுத்துக் கொண்டது.

இவ்வாறான காரணங்களால் தேசம்நெற் யை உடனடியாக மீண்டும் இணைய வலைக்குள் கொண்டுவர முடியவில்லை.

தற்போது தேசம்நெற் இல் என்ன மாற்றம் செய்யப்பட்டு உள்ளது?
தேசம்நெற் இல் 2007 முதல் 2008 டிசம்பர் 31 வரையான சகல பதிவுகளும் கருத்தாளர்களின் பின்னூட்டங்களும் நீக்கப்பட்டு உள்ளது. இவற்றின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கானவை என்பது குறிப்பிடத்தக்கது. தேசம்நெற் இல் இருந்த இணைப்புகள் சிலவும் நீக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தேசம்நெற் இற்கு ஒதுக்கப்பட்ட 500MB கொள்ளளவிற்கு தேசம்நெற் இன் பதிவுக்கோவை கொண்டுவரப்பட்டு உள்ளது.

நீக்கப்பட்ட பதிவுக் கோவையை தேசம்நெற்றில் பார்வையிட முடியாதா?
தற்போது நீக்கப்பட்ட பதிவுகள் எதனையும் பார்வையிட முடியாது. ஆனால் அவற்றின் பிரதிகள் தேசம்நெற் இடம் உண்டு.

இதனை வடிவமைப்பின் ஆரம்பத்தில் கவனிக்கவில்லையா?
தேசம்நெற் வடிவமைக்கப்பட்ட போது அதனை குறிப்பிட்ட காலத்திற்குப் பின் மீள் வடிவமைப்பு செய்யத் திட்டமிட்டு இருந்தோம். அத்துடன் இணையச்சேவை வழங்குபவர்களிடம் ஒவ்வொரு விடயத்திலும் மட்டுப்படுத்தப்படாத (unlimited) எல்லைகளைக் கொண்ட ஒரு ஒப்பந்தத்தையே பெற்றுக் கொண்டோம். ஆயினும் அவர்களின் வர்த்தகச் சொல்லாடலில் இணையத்தின் கோவைகளுக்கான பதிவில் மட்டுப்படுத்தப்படாத கோவைப் பதிவு என்பது குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. நாங்களும் அதனை அடையாளம் காணத் தவறிவிட்டோம்.

எதிர்காலத்தில் இவ்வாறான தவறு ஏற்படமாட்டாதா?
இவ்வாறான தவறு ஏற்படாத வகையில் தேசம்நெற்றை மீள்வடிவமைப்பு செய்ய உள்ளோம். மீள்வடிவமைப்பு வேலைகள் இன்னும் சில வாரங்களில் இடம்பெறும். மீள் வடிவமைப்பு செய்யும் போது நீக்கப்பட்ட பதிவுகள் மீளவும் தேசம்நெற்றுடன் இணைக்கப்படும். அனைத்துப் பதிவுகளையும் ஆண்டு வரிசையில் மீள்பதிவிடத் திட்டமிட்டு உள்ளோம்.

தேசம்நெற் மீள்வடிவமைக்கப்படுவதாயின் வாசகர்களின் கருத்தாளர்களின் ஆலோசனைகள் பரிசீலிக்கப்படுமா?
நிச்சயமாக! தேசம்நெற் இல் எவ்வாறான அம்சங்கள் தற்போது பிரச்சினையாக உள்ளதென்பதையும் எவ்வாறான அம்சங்கள் இணைக்கப்பட வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும் என்பதையும் இங்கு பதிவு செய்தால் தொழில்நுட்பக்குழு அவற்றைப் பரிசீலித்து அதற்கேற்ப தங்கள் வடிவமைப்பை மேற்கொள்வார்கள்.

இறுதியாக இத்தடங்கள் ஏற்பட்டதை அடுத்து எம்முடன் தொலைபேசியூடாகவும் மின் அஞ்சலூடாகவும் தொடர்பு கொண்டு தங்கள் ஆதங்கத்தையும் ஆதரவையும் வழங்கிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தேசம்நெற்.

Show More

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • பல்லி
    பல்லி

    ஏனோ தானோ என இல்லாமல் பொறுப்புடன் நடந்த தவறை சுட்டிகாட்டிய தேசநிர்வாகத்துக்கு தேசத்தின் வாசகனாய் நன்றிகள், அத்துடன் குறுகிய காலத்தில் தமது வேலைபளுவுடனும் தேசத்தை சரிசெய்த தொழில்னிட்ப்ப நண்பர்களுக்கும் பல்லியின் நன்றிகளும் பாராட்டுக்களும்,

    நட்ப்புடன் பல்லி;

    Reply
  • எதிர்வு
    எதிர்வு

    தவறுகளை காரணம் காட்டியும், யார் மீதும் பழி போட்டு விட்டு, இணையத் தளத்தை தொடர்ந்து நடத்துவது பற்றி என்ன சொல்வது, வாசகர்களிடம் மன்னிப்பு கோராமல். எல்லாவற்றையும் கண் மூடிக்கொண்டு, பாராட்டிக் கொள்ள ,சும்மா இருக்க எத்தனை கருத்தாடல்காரர்கள். இப்போதாவது புரிகிறதா, நாங்கள் முன்னேறுவதில் உள்ள தடைகளை, போராட்டத்தின் தோல்விகளை.

    Reply
  • BC
    BC

    தேசம் தனது வாசகர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய தேவையில்லை. தேசம் சந்தா கட்டணம் வாங்கி கொண்டு நடத்தவில்லை. மீண்டும் தேசம் இணையத்தை பார்ப்பதற்க்கு ஏற்பாடு செய்ததிற்க்கு தேசம்நெற்றுக்கு நன்றி.

    Reply
  • பல்லி
    பல்லி

    //தவறுகளை காரணம் காட்டியும், யார் மீதும் பழி போட்டு விட்டு, இணையத் தளத்தை தொடர்ந்து நடத்துவது பற்றி என்ன சொல்வது, // எதிர்வு

    அதன் விளைவுகள் தெரியாத பட்ச்சத்தில் எதுவுமே சொல்லாமல் இருக்கலாம்; யாரும் உங்களை திட்ட மாட்டார்கள்; எப்படியாவது தேசம் ஒழிந்துவிடுமா என்பதில் காட்டும் நேரத்தில் நாம் விடும் தவறுகளை சுட்டி காட்டினால் திருந்த மாட்டோம் என அடம் பிடிக்கமாட்டோம்;

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    உண்மையில் தேசம்நெற்றிற்கேற்பட்ட தடங்களால் நாமும் தான் சற்றுக் குளம்பிப் போனோம். பின்பு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு பெறப்பட்ட பதிலே எனன நடந்தது என்பதை விளக்கியது. முடிந்தவரை விரைவாக நிலைமையைச் சரிசெய்து மீளவும் தேசம்நெற்றை மிளிரச் செய்த, தேசம்நெற் குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள்.

    Reply