சென்னை முதல் டெல்கி வரை ஈழத் தமிழர்களின் நடைபயணம்! : ஈ.என்.டி.எல்.எப்.

ENDLF_Logoஇன்று 20-12-2010 அன்று சென்னையில் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளரின் சந்திப்பில் கொடுக்கப்பட்ட அறிக்கை!

தமிழர்களைப் புறக்கணித்து, பிரித்தானியரை ஏமாற்றி இலங்கை அரசாங்கத்தைக் கைப்பற்றிய சிங்கள ஆட்சியாளர் 1948ம் ஆண்டு முதல் தமிழ் இனத்தை அழித்து வருகின்றனர்.

ஈழத் தமிழர்களின் விவசாய நிலங்களைக் கைப்பற்றி சிங்களக் குடியேற்றங்களை வடக்குக் கிழக்கு மாகாணங்களில் புகுத்தி வந்த சிங்கள அரசு இப்போது தமிழர்களின் வாழ்விடங்களையும் ஆக்கிரமித்துச் சிங்களக் குடியேற்றங்களை வலுக்கட்டாயமாகத் திணித்து வருகிறது.

இலங்கையின் மொத்தக் கடல் பரப்பில் 85 சதவீதமான கடல்பகுதிகள் தமிழர்களுக்குச் சொந்தமானவை. இன்று அனைத்துக் கடல் பகுதிகளையும் கைப்பற்றி, தென்பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்தையும் தாண்டி சிங்கள மீனவர்கள் எங்களது கடல் செல்வங்களை அள்ளிச் செல்கின்றனர். அரசாங்கம் அவர்களுக்கு (சிங்களவர்களுக்கு) நவீன படகுகளை வழங்கி கடல் வளத்தை அள்ளி தென் பகுதிக்குக் கொண்டு செல்கின்றனர். தமிழ் மீனவர்கள் தங்களது சொந்தப் பகுதியில் குறிப்பிட்ட தூரத்தைக் கடக்கக் கூடாது என்று வாய்வழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்களின் பூர்விகப் பிரதேசங்களை ஆக்கிரமிப்பது சிங்கள அரசின் கடமையாக கடந்த 62 ஆண்டுகளாக செய்து வருகிறது. 1987ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை இந்திய அமைதிப்படை இலங்கையிலிருந்த காலத்தில் மட்டும்தான் சிங்களக் குடியேற்றங்களை நடத்த முடியாமல் நிறுத்தி வைத்திருந்தது சிங்கள அரசாங்கம். ஏனைய அத்தனை ஆண்டுகளும் ஏன் இன்றும் கூட சிங்களக் குடியேற்றங்களை அரசின் சொந்தச் செலவில் தமிழர் பகுதிகளில் திட்டமிட்டுப் புகுத்தி வருகிறது.

இது தமிழ் இனத்தின் அடையாளங்களை முற்றாக அழிக்கும் நடவடிக்கைதான். தமிழ் இனத்துக்கும் சிங்கள இனத்துக்கும் பிரச்சினையே இந்தச் சிங்களக் குடியேற்றங்கள்தான். இதனைத் தடுத்து நிறுத்தும் அளவுக்கு தமிழர்கள் பலம் குறைக்கப்பட்டுள்ளது.

1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தை ஏற்படுத்தி தமிழ் இனத்தை அடித்து விரட்டிய பின்பு ஏற்படுத்தப்பட்டதுதான் வெலிஓயா (மணல் ஆறு) என்று பெயர் மாற்றப்பட்ட சிங்களக் குடியேற்றமாகும். இக்குடியேற்றம் திருகோணமலையையும் முல்லைத்தீவையும் பிரிக்கும் சிங்களக் குடியேற்றமாகும். இப் பகுதி தமிழ் இனத்தின் பூர்விகப் பகுதியாகும்.

இது போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட சிங்களக் குடியேற்றங்களை தமிழர் பகுதிகளில் திணித்து தமிழர் நிலங்களைக் கைப்பற்றியுள்ளனர். அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா மாவட்டங்களில் பல லட்சக்கணக்கானவர்களைக் குடியமர்த்திய சிங்கள அரசு இப்போது முல்லைத் தீவு, மன்னார், யாழ்ப்பாண மாவட்டங்களில் முழுவீச்சில் சிங்களவர்களைக் குடியமர்த்தி வருகிறது.

தமிழினம் கல்வி, மொழி, தொழில், வாழ்வு, உயிர் என்று அனைத்தையும் இழந்து இன்று அவர்களது பூர்விகப் பிரதேசங்களையும் சிங்களவரால் இழந்து வருகின்றனர். ஈழத்தில் வாழும் தமிழர்களால் இந்தக் கொடுமையைத் தடுத்து நிறுத்தும் பலம் சிறிதளவும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தடுத்து நிறுத்தும் உரிமையும், தகுதியும் இந்தியாவுக்கு மட்டுமே உண்டு என்று நாங்கள் நம்புகிறோம்.

ஈழப் போராளிகள் பல குழுக்களாக ஒற்றுமையில்லாதிருந்தபடியால், இந்தியா ஈழத் தமிழர் சார்பாக இலங்கையுடன் 1987ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டது. அந்த ஒப்பந்தத்தின் வலிமை தெரியாமல் பலரும் தங்களது அரசியல் லாபங்களுக்காக எதிர்த்தனர். சிங்கள அரசும் சிங்கள இனத்தவரும் இந்தியாவை எதிர்த்தனர். தமிழ் இனத்தின் சார்பாகவும், தமிழ் இனத்தைப் பாதுகாக்கவும்தான் இந்தியா இலங்கைக்கு வந்ததாகக் கருதினர் சிங்களவர்.
இதனால் இந்திய அமைதிப்படையை வெளியேற்ற வேண்டும் என்று தீர்மானித்தனர் சிங்கள அரசும், சிங்கள இனத்தவரும். சில உண்மைகளைச் சொன்னால் பலருக்கும் கோபம் வரும். விடுதலைப் புலிகள் இந்தியாவுக்கு எதிராகத் துப்பாக்கியைத் திருப்பாது விட்டிருந்தால் நாங்கள் இப்போது ஒரு லட்சம் தமிழர்களை இழந்திருக்க வேண்டியதில்லை, தமிழர் பிரதேசங்களும் காப்பாற்றப்பட்டிருக்கும். குறைந்தபட்சம் எங்கள் அனைத்து உரிமைகளாவது மீட்;டிருப்போம்.

விடுதலைப் புலிகள் செய்துவிட்ட தவறு எங்கள் இனத்தை மொத்தமாகவே பாதித்துவிட்டது. இப்போது எஞ்சியிருக்கும் மக்களையும், தமிழரின் பூர்விகப் பகுதிகளையும் நாம் காப்பாற்ற வேண்டும் என்றால் இந்தியா ஈழத் தமிழர் விடயத்தில் நேரடியாகத் தலையிட வேண்டும். 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு சிங்கள அரசியல்வாதிகளும், பௌத்த பிக்குகளும் தமிழ் இனத்துக்கு எதிராக சிங்கள மக்களை தூண்டிவிடும் வகையில் பேசியும் செயற்பட்டும் வருகின்றனர்.

தமிழ் இனத்தை விரட்டுவதற்கும் அழிப்பதற்கும் தங்களுக்கு உரிமை உண்டு என்று பிரசாரம் செய்கின்றனர். ஈழத் தமிழர்கள் இலங்கையில் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை அழிக்கும் செயல்களை புத்தப் பிக்குகளும் இராணுவமும் இணைந்து செயற்படுத்தி வருகின்றனர். 1981ஆம் ஆண்டு யாழ்ப்பாண நூல் நிலையம் இவர்களால் எரிக்கப்பட்டது. இதுவும் தமிழினத்தின் வரலாற்றை அழிக்கும் அவர்களது பாரிய திட்டமிட்ட சதிச் செயலாகும். ஒரு இனத்தின் வரலாற்றுப் பதிவுகள் வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் நூல் நிலையத்தை அரசாங்கமே தீயிட்டு அழித்த நடவடிக்கை மன்னிக்க முடியாத குற்றச் செயலாகும். அந்த இனத்தவர் இச்செயலுக்காக வருத்தப்பட்டதோ, வெட்கப்பட்டதோ கிடையாது.

இப்போது தமிழர்களது எஞ்சியிருக்கும் விவசாய நிலங்களைக் கைப்பற்ற முன்னர் S.W.R.D. பண்டாரநாயக்க “நெற்காணி மசோதா” என்று ஒரு சட்டத்தினை 1958ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து தமிழர் நிலங்களைப் பறித்தது போன்று ராஜபக்சேயும் சட்டம் கொண்டு வந்து மீதி நிலங்களையும் பறிப்பதற்கு நாடாளுமன்றத்தில் முன்மொழியவுள்ளார்.

தமிழர்களது உரிமைகளையும், பூர்விக நிலங்களையும் பாதுகாக்க வேண்டுமானால் எங்களுக்கு இந்தியாவின் துணை அவசியமாகிறது.
1987ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.)யினராகிய நாங்கள் ஏற்றுக்கொண்டோம். ஏன் ஏற்றுக்கொண்டோமென்றால்,

இந்த “ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், வடக்கு மற்றும் கிழக்கில் இருக்கும் இலங்கை இராணுவம் தங்களுடைய முகாம்களுக்குள் திரும்பிவிட வேண்டும்! ஒரு இராணுவம் கூட வெளியில் கடமையாற்றுவதற்கு முகாம்களைவிட்டு வெளியில் வரக்கூடாது! இலங்கை இராணுவம் எந்தத் தமிழரையும் கைது செய்யக்கூடாது இலங்கை இராணுவத்துக்கு அதற்கு உரிமை இல்லை! என்ன குற்றம் செய்திருந்தாலும் சரி, சிறையில் இருக்கும் அத்தனை தமிழரும் விடுதலை செய்யப்பட வேண்டும்”

வடக்குக் கிழக்கு இணைந்த ஒரு மாநிலமும் அதற்கான நிர்வாகமும் அமைக்கப்படும், அந்த மாநிலத்துக்கான அதிகாரங்கள், குறிப்பாக நிலம், தொழில், கல்வி, இது சம்பந்தமாக தீர்மானம் எடுக்கிற உரிமை, அந்த மாகாண அரசையும் தமிழ் மக்களையும் பாதுகாக்கவென பொலிஸ் மற்றும் ஆயுதம் தாங்கிய தமிழ்த் தேசிய இராணுவம் போன்ற உரிமைகள் அந்த ஒப்பந்தத்தில் இருந்தபடியால் நாங்கள் அந்த ஒப்பந்தத்தை ஒரு ஆரம்பகட்ட தீர்வாக ஏற்றுக்கொண்டோம்.

மேற்கூறிய இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் உள்ள அத்தனை சரத்துக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்தியாவால் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தான் விடுதலைப்புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் இணைந்து முறியடித்தார்கள். ஆயினும், “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நாங்கள் எங்கள் முழு ஆதரவையும் வழங்கினோம். இதனால் எங்கள் இயக்கத் தோழர்கள் ஆயிரக்கணக்கானவர்களை இழந்துள்ளோம்.

சிறிலங்கா அரசும், புலிகள் இயக்கமும் இணைந்து தமிழர்களுக்கு ஓரளவுக்கு உரிமையுள்ள மாகாண அரசைக் கலைக்க வேண்டும், அமைதிப்படை நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று ஒன்றாகக் கோரிக்கை வைத்தனர். இந்தியாவுக்கு அவர்கள் பெரும் அவமானத்தையும் ஏற்படுத்தினர். இதனைத் தொடர்ந்து மாநில அரசில் அங்கம் வகித்த நாமும் நாட்டை விட்டு வெளியேறினோம்.

அப்படி வெளியேறிய நாம் இன்றுவரை இந்தியாவில் வாழ்ந்து வருகிறோம். தமிழ் மக்களது ஏகப் பிரதிநிதிகள் நாங்கள் மட்டும்தான் என்று புலிகள் உரிமை கோரினர். அது தவறு என்பதைக் காலம் கடந்தும் உணர்வதாகத் தெரியவில்லை.

இந்தியா ஏற்படுத்திய ஒப்பந்தத்தினை ஏற்றுக்கொண்டவர்கள் என்ற அடிப்படையிலும், மிகவும் பாதிக்கப்பட்டுள்ள எம் மக்களிடையே மீண்டும் ஒரு யுத்தத்தைப் புகுத்தி இழப்புகளை ஏற்படுத்தாமல், எமது மக்களையும், எமது பிரதேசங்களையும் எமது உரிமைகளையும் கைப்பற்ற ஒரே வழி “இந்திய-இலங்கை” ஒப்பந்தம்தான் என்பதை நாம் உணர்ந்து, இந்தக் காலகட்டத்தில் மீண்டும் இந்தியாவைக் கோருகிறோம்.

“இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை முழுமையாக நடை முறைப்படுத்த வேண்டும். ராஜபக்சே “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தில் உள்ள தனக்கு வேண்டிய பகுதிகளை மட்டும் நடைமுறைப்படுத்தி தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான பிரிவுகளை நிராகரித்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறார்.

எனவே நாங்கள் இரண்டு கோரிக்கையினை மட்டும் முன்வைத்து சென்னை சிறிபெரும்புதூரிலிருக்கும் ராஜீவ்காந்தி நினைவு மண்டபத்திலிருந்து புது டெல்கியில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடம் வரையில் 2500 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொள்ளவிருக்கிறோம். ஈழத் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட ஈழத் தமிழர்களே நடத்தும் இந்தக் கோரிக்கை நடை பயணத்துக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
ஈழத் தமிழரது கீழ்க்காணும் கோரிக்கையினை மாண்புமிகு ஜனாதிபதி ஸ்ரீமதி. பிரதீபா பாட்டில் அவர்களிடமும், மாண்புமிகுப் பாரதப் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங் அவர்களிடமும், எதிர்கட்சித் தலைவர் திருமதி. சுஸ்மா சிவராஜ் அவர்களிடமும் காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியாகாந்தி அவர்களிடமும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் உயர்திரு. பிரகாஸ் கரத் அவர்களிடமும், யு.டீ. பரதன் அவர்களிடமும் மற்றும் அனைத்து எதிர்கட்சிகளின் தலைவர்களிடமும் கையளிக்கவுள்ளோம்.

(01) “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

(02) 1948ஆம் ஆண்டுக்குப் பின்னர் (இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர்) தமிழரது பூர்விகப் பகுதிகளில் சிங்கள அரசினால் குடியேற்றம் செய்யப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை முற்றாக வெளியேற்ற வேண்டும்.

என்ற இந்த இரு கோரிக்கைகளையும் முன்வைத்து நாங்கள் இந்த நடைபயணத்தை மேற்கொள்ளவிருக்கிறோம்.
இந்த நடை பயணத்தை காங்கிரஸ் முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரும், காங்கிரசின் தமிழ் நாட்டு மூத்த தலைவருமான திரு. இரா. அன்பரசு அவர்கள் ஆரம்பித்து வைக்கிறார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தோழர். தா. பாண்டியன் அவர்கள் இந்த நடைபயணத்தை வழியனுப்பி வைப்பார்கள்.

மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் திரு. G.இராமகிருஸ்ணன் அவர்களையும் கலந்துகொள்ளும்படி நாங்கள் கோரியுள்ளோம். மேலும் தமிழகத்தின் ஏனைய அனைத்துக் கட்சிகளையும் சந்தித்து ஆதரவு கோரவுள்ளோம், அவர்களுக்கு இது தொடர்பாக கடிதங்கள் அனுப்பியுள்ளோம், ஆதரவு வழங்குவார்கள் என்று நம்புகிறோம்.

பத்திரிகைத் துறையும் எங்களது இந்த நடைபயணத்துக்கு மட்டுமல்லாமல், ஈழத் தமிழர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்தும் எம்மினத்துக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

நாள்: 16-01-2011 ஞாயிறு
நேரம்: காலை 10:00 மணி.
இடம் : இராஜீவ்காந்தி நினைவு மண்டபம், சிறிபெரும்புதூர்.

இவ்வண்ணம்,
ஞா.ஞானசேகரன்
தலைவர்,
ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி
(ஈ.என்.டி.எல்.எப்.)

Show More
Leave a Reply to kovai Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • BC
    BC

    //இலங்கையின் மொத்தக் கடல் பரப்பில் 85 சதவீதமான கடல்பகுதிகள் தமிழர்களுக்குச் சொந்தமானவை. //
    என்ன இது? 25சதவீதமான தமிழ் ஆட்கள் 85 சதவீதமான இலங்கையின் கடலுக்கு சொந்தகாரரா? கொஞ்சம் பொருத்தமாக இருக்க வேண்டும்.

    //தென்பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்தையும் தாண்டி சிங்கள மீனவர்கள் எங்களது கடல் செல்வங்களை அள்ளிச் செல்கின்றனர். //
    தமிழ்நாட்டு மீனவர்களாலே தங்களுக்கு பிரச்சனை என்று யாழ்ப்பாண மீன் தொழிளாளர்கள் சொன்னதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அப்படி தான் சிங்கள மீனவர்கள் மீன்களை அள்ளிச் சென்றாலும் அந்த மீன்களை அங்கே தென்பகுதியிலிருக்கும் பல தமிழ் ஆட்களும் வாங்கி சாப்பிட்டு மகிழ்வார்கள்.

    Reply
  • Ravi
    Ravi

    ஜூனியர் கோமாளியின் (விகடன்) சொதப்பல் செய்திக்கு ஈ.என்.டி.எல்.எப். தெளிவான விளக்கம்!
    December 22,2010
    26-12-2010 தேதியிட்ட ஜூனியர் கோமாளியின் (விகடன்) “தமிழ் நாட்டில் தங்கி இருந்த “காட்டிக்கொடுப்பு” கருணா”, என்ற தலைப்பில் ஜூனியர் விகடன் “ஸ்பெசல் டீம்” என்ற சில கோமாளிகள் கதை எழுதியுள்ளனர்.

    இந்தக் கோமாளிகள் பற்றி எங்களுக்குத் தெரியாது! வாராவாரம் ஈழத் தமிழர்கள் பற்றி கதை விட்டுப் பணம் சம்பாதித்து வரும் வார இதழின் இது போன்ற தவறான பிரசாரங்களுக்கு பதில் கொடுக்க வேண்டிய கட்டாயம் எற்படுத்தப்பட்டிருக்கிறது எங்களுக்கு. கருணா துரோகி என்றால் இவர்களும் துரோகிகள் தானே என்ற தோரணையில் எழுதப்பட்டிருக்கும் அக்கட்டுக்கதையில் விகடன் புலிகளிடம் பணம் பெறுவார்கள், சிங்கள அரசிடமும் பணம் பெறுவார்கள் என்பதை தங்களை அறியாமலேயே வெளிப்படுத்தியுள்ளனர் அந்த “டீம்”.

    “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்,

    “1948ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழரின் பூர்விகப் பகுதிகளில் குடியமர்த்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் அனைத்தையும் வெளியேற்ற வேண்டும்”

    என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஈ.என்.டி.எல்.எப். டில்லிவரை நடைபயணம் மேற்கொள்ளவிருப்பதை இலங்கை அரசு விரும்பவில்லை.

    இதனை எப்படியும் தடுத்து நிறுத்தவேண்டும் என்ற சிங்கள அரசின் எண்ணத்தை ஜூனியர் கோமாளி (விகடன்) நிறைவேற்ற பெரிதும் தங்களது மூளையை முறுக்கி பணியாற்றியுள்ளனர்.

    இந்தக் கோமாளிக்காக நாம் பதில்சொல்லவில்லை, தமிழக மக்களுக்கும், ஈழத் தமிழர்களுக்குமாக நாம் பதில் சொல்கிறோம்.

    ஈழ விடுதலைப் போராட்டத்தின் “முதுகெலும்பு” கிழக்கு மாகாணமாகும். தமிழ் நாட்டில் புலிகளின் புகழ்பாடுபவர்களுக்கு இந்த உண்மை தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

    இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு கிழக்குத் தமிழர்களையும், வடக்குத் தமிழர்களையும் பிரித்து பகை மூட்டுவதற்காக சிங்கள அரசினால் தூண்டப்பட்டதுதான், யாழ்ப்பாணத்தான் மட்டக்களப்பான் என்ற பாகுபாடு.

    யாழ்ப்பாண மக்கள் படித்து அரசத்துறையில் அங்கம் வகிக்கின்றனர், என்ற வெறுப்பை சிங்கள அரசு தமிழ் மக்களைப் பிளவுப் படுத்துவதற்கு பயன்படுத்தியது. மட்டக்களப்பு மக்களுக்கு வரவேண்டிய அரசுப் பணிகளை யாழ்ப்பாணத்தான் தட்டிச்செல்கிறான் என்று வேண்டுமென்றே அரசாங்கம் விசத்தை விதைத்தது மட்டக்களப்பு மக்கள் மத்தியில்.

    இந்த விதை சில இடங்களில் முளைத்தது. நாளடைவில் பெரிதாகியது, இந்தப்பாகுப்பாட்டை எப்படிக் களைவது என்று தெரியாமல் கட்சிகளும், தமிழ் இளைஞர்களும் திகைத்து நின்றனர். 1978ஆம் ஆண்டு நவம்;பரில் மட்டக்களப்பில் மிகப்பெரிய சுறாவளிக் காற்று வீசி பேரழிவை ஏற்படுத்தியது. கிழக்கு மக்கள் அனைத்தையும் இழந்து நின்றனர். இலங்கை அரசாங்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை மட்டக்களப்பு மக்களை.

    அப்போதுதான் வடக்கு மாகாணத்திலிருந்து கடல்மார்க்கமாகப் படகுகளில் அறுநூறு இளைஞர்கள் மட்டக்களப்பை அடைந்தனர். தரைவழியாக மட்டக்களப்புக்குச் செல்லும் பாதைகள் மரங்கள் வீழ்ந்ததால் மூடப்பட்டு விட்டன. இவர்கள் மட்டக்களப்புக்குச் சென்று தரைப்பாதைகளைத் திருத்தியமைத்து உணவு மற்றும் மருந்து நிவாரணப் பொருட்கள் வந்தடைவதற்கு வழிவகுத்தனர். இந்தப் பணிகளை அரசாங்கம் வேடிக்கைப்பார்த்ததே தவிர எந்தவித உதவியும் செய்யவில்லை. இந்த அறுநூறு இளைஞர்களுக்கும் தலைமை எற்றுச் சென்றவர் யார் என்று தெரியமா உங்களுக்கு, நீங்கள் இப்போது இழிவுபடுத்தி எழுதியிருக்கும் ராஜன் அவர்கள்தான்.

    யாழ்ப்பாணத்தான் மட்டக்களப்பான் என்ற பாகுபாட்டை கழைய ராஜன் அவர்கள் எடுத்த முயற்சிதான் கிழக்குமாகாணம் முழுமையாக போராட்டத்தில் இணையக் காரணமாக அமைந்தது. இலங்கை அரசாங்கம் செய்து வந்த பிரசாரம் பொய்த்துவிட்டது. கிழக்கு மாகாணத் தமிழருக்கு ஓர் ஆபத்து, அவலம் என்று வந்ததும் வடக்குப் பகுதி தமிழர்கள்தான் வந்தார்களே தவிர சிங்கள அரசு அல்ல என்பதைத் தெரிந்து கொண்டனர் கிழக்கு மக்கள். யாழ்ப்பாணத்தான் மட்டக்களப்பான் என்ற பாகுபாடு மறைந்தது.

    1979ஆம் ஆண்டில் புலிகள் இயக்கத்தில் நபர்கள் இல்லை, 1976ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்திலிருந்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மைக்கேல் என்பவரை புலிகளின் தலைவர் பிரபாகரன் சுட்டுக்கொன்றுவிட்டார், இதனால் பிரபாகரன் அவர்களுடன் கிழக்கில் இருந்த ஒரு சிலரும் தங்கள் தொடர்பைத் துண்டித்துக்கொண்டனர்.

    1979ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்வரை யாழ்ப்பாணத்து இளைஞர்கள் மட்டக்களப்பில் தங்கியிருந்து சுறாவளி நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர். 1979ஆம் ஆண்டு ஜனவரியில் பிரபாகரன் அவர்கள் மட்டக்களப்புக்கு வந்து இந்த இளைஞர்கள் தங்கியிருந்த செல்வநாயகம் மெமோரியல் மண்டபத்தில் ராஜன் அவர்கள் தங்கியிருந்த அறையில் அவருடன் தங்கினார். இங்கிருந்துதான் ராஜன் அவர்களின் துணையுடன் மட்டக்களப்பு இளைஞர்களை தனது இயக்கத்துக்கு எடுத்தார்.

    பழைய பகையை மறந்து அனைத்து இயக்கங்களிலும் மட்டக்களப்பு இளைஞர்கள் இணைவதற்கு ராஜன் (ஞானசேகரன்) அவர்கள் செய்த அந்தச் சுறாவளி நிவாரணப் பணிதான் காரணமாக அமைந்தது. துப்பாக்கி ஆதிக்கத்தால் வரலாறு மறைக்கப்பட்டது பற்றி இந்த “டீமுக்கு” எப்படி தெரிய வரும்? தமிழகத்திலிருக்கும் பல தலைவர்களுக்கே வரலாறு தெரியாது, உங்களைச் சொல்லி என்ன குற்றம் காணமுடியும்?

    யாழ்ப்பாணம், குறிப்பாக வடக்கு மாகாணம் சிங்களவரால் சூழப்பட்டது அல்ல. ஆனால் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய கிழக்கு மாவட்டங்கள் சிங்களவரால் சூழப்பட்டது. 1948ஆம் ஆண்டு முதல் கிழக்கின் மூன்று மாவட்டங்களையும் வளைத்து சிங்களக் குடியேற்றங்களை நடத்தி வந்தது சிங்கள அரசு. விடுதலையும், பாதுகாப்பும் கிழக்கு மக்களுக்குத்தான் அன்று தேவைப்பட்டது.

    “இந்திய-இலங்கை” ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட போது வடக்கு, கிழக்கு மாகாணத்தின் தலைநகரமாக கிழக்கின் திருகோணமலையைத்தான் நாம் தெரிவு செய்தோம். கிழக்கின் முக்கியத்துவம் என்ன என்பது உங்களைப் போன்ற டீமுகளுக்கு விளங்காது!

    ஒப்பந்தம் ஏமாற்று, அதை ஆதரித்தவர்கள் துரோகிகள் என்று உங்களைப் போன்ற அரை வேக்காடுகள் தூற்றித் திரிந்ததை நாம் மறந்துவிட வில்லை.

    ஒப்பந்தத்தில் என்ன பயன் என்று கூறுகிறோம்,

    (01) ஒப்பந்தம் கையெழுத்தானதும் இலங்கை இராணுவம் முகாம்களுக்குள் சென்று விடவேண்டும்.

    (02) வடக்குக் கிழக்கில் கடமையாற்றும் உரிமை சிங்கள இராணுவத்துக்குக் கிடையாது.

    (03) சிங்கள இராணுவம் மற்றும் பொலிஸ் தமிழர்கள் எவரையும் கைதுசெய்ய முடியாது.

    (04) சிறையிலிருந்த அனைத்து தமிழ் இளைஞர்களும் இயக்கப்பாகுபாடு இல்லாமல் விடுவிக்கப்பட்டனர்.

    (05) வடக்குக் கிழக்கு மாகாணத்தை இணைத்து இடைக்கால நிர்வாகம் தமிழர்களைக் கொண்டு அமைக்க ஏற்பாடானது.

    (06) நிலம், கல்வி, பொலிஸ் ஆகியவை மாகாண அரசின் நிர்வாகத்தின் கீழ் வந்தது.

    (07) அதனை புலிகள் இயக்கம் முறியடித்தனர், என்றாலும் கொள்கையின்படி தேர்தல் நடத்தி மாநில அரசு அமைக்கப்பட்டது.

    (08) அந்த மாநில அரசையும், தமிழர்களையும் பாதுகாக்க CVF (Citizen volunteer force) என்ற ஆயுதம் தாங்கிய படை அமைக்கப்பட்டது.

    சட்டரீதியான பலம் கொண்ட ஒரு மாகாண அரசையும், தமிழ் மக்களையும் பாதுகாக்கவென உருவாக்கப்பட்ட சி.வி.எப். என்ற முழுக்க முழுக்க தமிழர்களைக் கொண்ட இராணுவப் படையைத்தான் எதிரியான பிரேமதாசாவுடன் இணைந்து முறியடித்தார் பிரபாகரன்.

    சட்டபூர்வமாக ஓர் படை அமைத்ததை விரும்பாத சிங்களத் தலைவர்கள் புலிகளைப் பயன்படுத்தி அந்த அதிகாரப்பூர்வப் படையை முறியடித்தனர்.

    பின்னாளில் சிங்கள அரசு தனது தந்திரத்தை நிறுத்தி தாக்குதலில் இறங்கியபோது, ஐயோ எங்களைக் கொல்கிறார்கள் என்று ஒப்பாரி வைத்தனர் புலிகள். முன்யோசனை இருந்திருந்தால் தமிழ் இனம் இப்படி அனாதைகள் ஆக்கப்பட்டிருப்பார்களா? எத்தனை தமிழ் தலைவர்களையும் போராளிகளையும் கொன்றனர் என்ற கணக்காவது உங்களுக்குத் தெரியுமா?

    ஒரு இராணுவத்தை முடக்குவதென்றால் சாதாரண விடயமா? எவ்வளவு மிகப்பெரிய போர் நடத்தி மிகப்பெரிய இழப்புக்களைச் சந்தித்துதான் ஒரு இராணுவத்தை முடக்க முடியும். ஆனால் மிக சாதாரணமாக இந்திய-இலங்கை ஒப்பந்தம் அந்த சிங்கள இராணுவத்தை எப்படி முடக்கியது என்று உங்களுக்குத் தெரியுமா?

    “இந்திய-இலங்கை” ஒப்பந்தம் மூலம் எற்படுத்தப்பட்ட மாகாண அரசு கிழக்கை முக்கியத்துவப் படுத்தித்தான் அமைக்கப்பட்டது. இந்திய அமைதிப்படை வெளியேறிய வேளை அம்பாறை மாவட்டத்தில் சிங்கள அரசுக்கும் எங்கள் இயக்கங்களுக்கும் (ஈ.பி.ஆர்.எல்,எப்., ஈ.என்.டி.எல்.எப்.) இடையில் மோதல் ஏற்பட்டது. சிங்கள இராணுவ முகாம் ஒன்று தாக்கி அழிக்கப்பட்டது. மறுநாள் காலையில் விடுதலைப் புலிகளும் இலங்கை இராணுவமும் இணைந்து வந்து எங்கள் இயக்கம் மீது தாக்குதல் தொடுத்தனர்.

    அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த 700 பேரை புலிகளும் இராணுவமும் இணைந்து 1989ஆம் ஆண்டு இதே டிசம்பர் மாதம் படுகொலை செய்தனர். நீங்கள் தூற்றும் கருணாவும், மாத்தையாவும் இலங்கை இராணுவத்துடன் இணைந்து வந்து எங்கள் இளைஞர்களைப் படுகொலை செய்த வரலாறு எப்படி உங்களைப் போன்றவர்களக்குத் தெரியவரும்?

    புலிகளின் தலைவர் பிரபாகரனின் உத்தரவின் பேரில்தான் இப்படி இவர்கள் சிங்களப் படையுடன் இணைந்து தமிழர்கள் மீது தாக்குதல் தொடுத்தனர்.

    இப்படி எங்கள் இயக்கத்தோழர்களைப் படுகொலை செய்த கருணா தனக்குப் பிரபாகரனால் ஆபத்து என்றதும் எங்கள் இயக்கத்தினைத் தொடர்புகொண்டு காப்பாற்றும்படி வேண்டினார். நாங்கள் நினைத்திருந்தால் பழிக்குப் பழி தீர்த்திருக்கலாம். ஆனாலும் நாம் அவரையும் அவரது இயக்கத்தினரையும் காப்பாற்றினோம். அதுவே பிரபாகரன் என்றால் அத்தனை இயக்கப் போராளிகளையும் கொன்று பழிதீர்த்திருப்பார்.

    கிழக்கு மாகாண இளைஞர்கள் ஆறாயிரம் பேர் கருணாவுடன் இணைந்திருந்தனர். இந்த ஆறாயிரம் பேரையும் அடித்து விரட்டி அழிக்கும் பணியினை பிரபாகரன் செய்தார். பிரபாகரன் தனது பலம் எது பலவீனம் எது என்று அறிந்திருக்கவில்லை. கிழக்கின் இளைஞர்கள் அடித்துவிரட்டப்பட்டால், ஈழப்போராட்டத்தின் வலிமை மூன்றில் ஒன்றாக குறையும், அப்படிக் குறைந்தால் சிங்கள இராணுவத்துக்கு அது சாதகமாக அமையும். விடுதலைப் போராட்டமானது பிரபாகரனிடத்துக் குத்தகைக்குக் கொடுக்கப்பட்ட ஒன்றல்ல!

    எங்கள் பகுதியின் பூகோளத் தன்மையையும், இனத்தின் ஸ்திரத்தன்மையையும், எங்கள் இனத்தின் அரசியல் சாணக்கியத்தையும் பொறுத்துதான் எங்கள் விடுதலை தீர்மானிக்கப்பட்டிருக்கவேண்டும்.

    விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனது ஆயுத பலம் வன்னியிலும், அரசியல் பலம் தமிழ்நாட்டின் வாய்பேச்சு வல்லவர்களிடத்திலும் இருந்ததன் விளைவுதான் நாம் நாதியற்றவர்களாகக் காரணமாக அமைந்தது. இதனைக் கேள்விப்பட்டால் கொதித்து விடுவார்கள் வள்ளல்கள். ஆனால் இதுதான் உண்மை!

    கருணா எங்களிடத்து உதவி கோரினார். நாங்கள் ஈழப்போராட்டத்தின் மூத்த தலைவர்களிடத்துப் பேசினோம், புலிகளின் மூத்த உறுப்பினர்கள் கூட எங்களிடத்து வேண்டினார்கள், காப்பாற்றுங்கள்! ஆறாயிரம் போராளிகள் வீணாகப் போகிறார்கள். மீண்டும் ஆறாயிரம் போராளிகளை அதிலும் அனுபவம் வாய்ந்த போராளிகளைத் தயாரிப்பதென்றால் அடுத்த பத்துஆண்டுகளானாலும் கூட முடியாது என்று எங்களை வேண்டிக்கொண்டார்கள்.

    ஏனென்றால் வடக்கின் இளைஞர்கள் திரவியம் தேட திரைகடல் தாண்டி சென்றுவிட்டனர் குறிப்பாக யாழ்ப்பாணத்து இளைஞர்கள். போராட்டமே கிழக்கு மாகாண இளைஞர் கைகளிலும், வன்னி இளைஞர்களது கைகளிலும் தான் இருந்தது.

    கருணா புலிகளை விட்டுப் பிரிந்தவுடனேயே இலங்கை இராணுவத்துடன் இணைந்திருக்கலாம். எங்களிடம் அடைக்கலம் கேட்டிருக்க வேண்டியதில்லை. ஈ.என்.டி.எல்.எப். அவர்களைக் காப்பாற்றிவிட்டது என்று அறிந்ததும், புலிகளின் வாய்வீச்சு வள்ளல்கள் ஈ.என்.டி.எல்.எப். க்கு எதிராகச் செயல்பட்டனர்,

    நாங்கள் கருணாவுக்கென்று ஒரு கட்சியும் ஆரம்பித்து, அவர்களது கட்சியையும் இணைத்து கிழக்கின் இளைஞர்களை மீண்டும் ஒன்று திரட்ட முயற்சித்த வேளையில்தான் எங்கள் இயக்கத்தின் தலைவர் ராஜன் ஞானசேகரன் அவர்களையும் மற்றும் 10 உறுப்பினர்களையும் சிறப்பு முகாமில் அடைத்தனர், புலி ஆதரவாளர்களின் சூழ்ச்சியால் இது நடைபெற்றது.

    இதனை அறிந்த கருணா புலிகளால் ஆபத்து வந்துவிடும் என்று பயந்து இலங்கை அரசிடம் சென்று சரணடைந்தார். இந்த விபரம் தெரியாத நபர்களால் அவர் துரோகி ஆக்கப்பட்டார். போராட்டமும் முடிந்தது.

    அரசியல் அறிவோ, ராஜ தந்திரமோ, விட்டுக்கொடுப்போ, மன்னிக்கும் மனப்பாங்கோ இல்லாத விடுதலை இயக்கத்தினால் எங்கள் இனம் அடிமையாக்கப்பட்டுள்ளது.

    விடுதலைப் புலிகள் வழிதவறிச் செல்ல தமிழகத்தின் சில தலைவர்கள்தான் காரணம் என்றால் யார்தான் நம்புவார்கள்?

    உயர்திரு. அமிர்தலிங்கம் அவர்களை தமிழர்களின் எதிரியான பிரேமதாசவின் துணையுடன் கொழும்பில் வைத்து புலிகள் படுகொலை செய்தனர். இதற்கு தமிழகத்தில் விளக்கக் கூட்டம் போட்டு, சரிதான் தம்பி விடாதே, கொல்லு, இன்னும் பல தமிழர்களைக் கொல்லு என்று தூண்டிவிட்டவர்கள்தான் இவர்கள். இதனால் பாதிக்கப்பட்டு இழந்து நிற்பது ஈழ மக்கள்தான்! இந்த நபர்களுக்கு வந்துகொண்டிருந்த வருவாயில் சிறிதளவு இழப்பு அவ்வளவுதான்.

    உயர்திரு. அமிர்தலிங்கம் அவர்களைப் படுகொலை செய்ததும், நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த யோகியும், அவரது சகாக்களும் சிங்கள இராணுவ கெலிகாப்டரில் பிரேமதாசாவின் உத்தரவின் பேரில் வன்னிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அமிர்தலிங்கம் அவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்று அனைத்து சிங்களக் கட்சிகளும் நடாளுமன்றத்தில் கூடப் பேசினர். தமிழர்களின் எதிரியான சிங்களவர்கள் செய்யவேண்டிய வேலையை அவர்களுக்குப் பதிலாக புலிகள் செய்தனர்.

    இவை இப்படியிருக்கையில் வாரப்பத்திரிகை நடத்தி பிளைப்பு நடத்தும் கோமாளி “டீம்” களும் எங்களுக்கு பட்டம் சூட்ட முற்பட்டு அதிலும் லாபம் தேட முனைந்துள்ளனர்.

    அமைதிப் படைக்கு அஞ்சி பிரபாகரன் பிரேமதாசாவுடன் இணைந்தார் அன்று (1989), பிரபாகரனுக்குப் பயந்து கருணா ராஜபக்சேயடன் இணைந்தார் இன்று (2005). இவர் கட்சியில் இணைந்து அமைச்சர் பதவியை அடைந்தார். அவர் அப்படிக் கட்சியில் இணைந்து அமைச்சர் பதவியை நாடவில்லை, அதற்குப் பதிலாக பணத்தையும், ஆயுதத்தையும் பெற்றுக்கொண்டார்.

    இவை ஒரு பக்கம் இருக்கட்டும் ஜூனியர் விகடனில் தலைமை நிருவாகியாக இருந்த சரவணக்குமார் நிர்வாகத்திலிருந்து விரட்டப்பட்டதற்கும், ஆசிரியர் அசோகன் அச்சுப் பகுதியில் மை நிரப்பும் பொறுப்புக்கு மாற்றப்பட்டதற்கும் என்ன காரணம்? இலங்கை தூதராலயத்தில் கைநீட்டியதற்காகவா? இன்னும் என்னென்ன லஞ்சங்கள் வரப்போகிறதோ தமிழ் அனுதாபிகளுக்கு?

    இந்தப் பத்தாண்டு காலத்தில் பிளைப்புத் தேடி ஈழப் பிரச்சினைக்குள் புகுந்த உங்களைப் பற்றி எங்களுக்குத் தெரியாது! நாங்கள் நடந்த வரலாற்றைத்தான் சொல்லமுடியும், அது விடுதலைப் புலிகளுக்கு எதிராகத்தான் இருக்கும். உங்களுக்கு எந்த இழப்பும் ஏற்படாது, மோதுவதும், அழிவதும், இழிவுபடுவதும் ஈழத் தமிழர்கள்தானே! ம்ம்… தொடருங்கள் உங்கள் இழிவுப்படுத்தும் செயல்களை!

    இவ்வண்ணம்,

    அரசியல் துறை

    ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி

    (ஈ.என்.டி.எல்.எப்.)

    Reply
  • பல்லி
    பல்லி

    என்னடா இது வார்த்தைக்கு வார்த்தை ரவுடி ரவுடி என எழுதும் ராஜன் இப்படி வரலாற்றை அளவுக்கு அதிகமாகவே தெரிந்து வைத்திருக்கிறாரே, தகுதியானவர்கள் தலமை ஏற்கவேண்டும்; அல்லது தலமை ஏற்ப்பவர்கள் தகுதியா ஏற்படுத்த வேண்டும் , இங்கே இரண்டாவது ரகமோ;;??

    Reply
  • thurai
    thurai

    ஆயுதமேந்தி, தமிழருக்குள் வேற்ருமையை வளர்த்து, பாரிய அழிவுகளிற்கு காரணமாக இருந்தவர்கள் ஒதுங்கி வாழ்வதே இன்று ஈழத்தமிழரின் முதல் தேவையாகும்.துரை

    Reply
  • kovai
    kovai

    ராஜனின் புகழ்பாடிகளின் முரண்பாடுகளில் ஒன்று.
    //.. உடனடியாக 160 இளைஞர்கள் ராஜன் தலைமையில் உணவுப் பொருட்களுடனும் நிவாரணப் பொருட்களுடனும் புறப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை ஊடாக புறப்பட்டு பின் இங்கிருந்து 14 படகுகளில் கடல்வழியாக மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தை அடைந்தனர்……….
    அங்கு உடனடியாக இவ் இளைஞர்கள் தங்குவதற்காக, வனசிங்கா மாஸ்டர் தலைமை ஆசிரியராக இருந்த அரசடி மகாவித்தியாலத்தில் இவ் ஆசிரியரால் இந்த 160 பேருக்கும் தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது….//

    கடந்தகால வரலாற்றை மிகத் துல்லியமாக ஆராய்ந்து வரலாற்றை சரிவரப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில்,நிலா எழுதியது.

    //…..அப்போதுதான் வடக்கு மாகாணத்திலிருந்து கடல்மார்க்கமாகப் படகுகளில் அறுநூறு இளைஞர்கள் மட்டக்களப்பை அடைந்தனர்….//
    வரலாறு படைக்கும் அரசியல் துறை,ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி வெளியிட்டது.

    ஆனந்தசங்கரிக்கு இந்தியாவிடம் சொல்லி யுனெஸ்கோ விருது வாங்கிக் கொடுத்தவர் ராஜன் எனவும் வரலாறு வரும்.வாய் பிளப்போம்.

    Reply
  • பல்லி
    பல்லி

    நிர்வாகத்துக்கு இதை சரியான கட்டுரையில் பதிவு
    செயவும்;நன்றி,

    அனைத்து நண்பர்களுக்கும் பல்லி குடும்ப நத்தார்
    வாழ்த்துக்கள்;

    Reply