இன ஒற்றுமையும் இலங்கையின் தேசியகீதமும்…!: இரா.வி.விஸ்ணு

SL_Flag ஒருகாலத்தில் இலங்கை என்றொரு தீவு உலக வரைபடத்தை ஒட்டியே உலக நாடுகளுக்கு அறியப்பட்டிருக்கும். இன்று வளர்சியடைந்த சர்வதேச நாடுகளுக்கு இணையாக உலக சாமானிய மக்கள் பலரும் அறியத்தக்க நாடாக சர்வதேச ஊடகங்கள் தம் செய்திகளில் முக்கியத்துவப் படுத்தப்படும் நாடாகவும் மாறுவதற்கு வழிசமைத்தவர்கள் தமிழர்கள் என்பதை நாம் தைரியமாகச் சொல்லலாம்.

இலங்கையில் இனப்பிரச்சனை ஒன்றின் காரணமாக ஆயுதப் போராட்டம் ஒன்று நடைபெறுகிறதென்று அல்லது நடைபெற்றதென்று உலக சாமானியர் பலருக்கு தெரியும். அத்தோடு, இலங்கையில் தமிழ் என்கிறதொரு மொழி பேசப்படுகிறது என்று தெரிந்த பல உலக சாமானிய மக்களுக்கு சிங்கள மொழி பற்றி தெரியாது. உலக ரீதியில் பார்த்தால் சிங்கள மொழி என்பது ஒரு சிறுபான்மை மொழியே. இருந்தும் ஒரு சிறுபான்மை மொழி இலங்கையில் ஒரு பெரும்பான்மை மொழியாக காணப்படுவது வரவேற்கத்தக்க விடயமே. எமது நாட்டைப் பொறுத்தவரை ஒரு சிறுபான்மை மொழி தன்னைவிட பலமடங்கு பழமையும் பெரும்பான்மையும் மிக்க மொழியினை ஒடுக்க நினைப்பது, புறக்கணித்து இல்லாதொழிக்க நினைப்பது வேடிக்கையான விடயம், அதிலும் மிகவும் ஆழமாக சிந்திக்கப்பட வேண்டிய விடயம்.

பல்லினங்கள் வாழும் ஒரு நாட்டில் இனவாதம், மதவாதம், மொழிவாதம் என்பது தவறாகவே கணிக்கப்பட வேண்டிய அல்லது தவிர்க்கப்பட வேண்டிய விடயமாக இருப்பினும் எமது நாட்டைப் பொறுத்தவரை முஸ்லீம், தமிழ், மலையகமென அரசியல் கலாசார ரீதியில் தனி இனங்களாக பிரிக்கப்பட பல்லினங்களும் பொதுவாக பேசுகின்ற மொழியாக தமிழ் காணப்படுகிறது. ஆகவே இம் மொழிக்கான பாதுகாப்பு என்பதும், உரிமைகள் என்பதும் பாதுகாக்கப்பட வேண்டியவை. தாய் மொழியை காக்கவேண்டிய கடமை தமிழ் பேசும் அனைவருக்கும் இருக்கின்றது. அத்தோடு சக மொழியினை மதிக்க வேண்டியதும் சுதந்திரம் கொடுக்க வேண்டியதுமான கடமை இலங்கை பிரஜை ஒவ்வொருக்கும் இருக்கிறது. இதை சிங்கள மக்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே அனைவரினதும் அவா.

ஏனைய நாடுகளைப் போன்றே இதுவரை காலமும் இலங்கையின் தேசிய கீதமேன்பது சுதந்திரம் பெற்றதன் அடிப்படையிலும் தேசிய கீதம் உருவாக்கப்பட்டது, அவ்வாறே பாடப்பட்டும் வந்தது (இக்கருத்தில் முரண்பாடுகளும் சிலருக்கு இருக்கலாம்). இப்போது புதிதாக எழுப்பப்பட்டிருக்கும் பிரச்சனை மிகவும் பாரதூரமான விடயம். அதுவும் இலங்கையின் அனைத்து சாமானிய மக்களையும் உணர்வு ரீதியில் கட்டிப்போட வேண்டிய, உணர்வு ரீதியில் கையாளப்பட வேண்டிய விடயத்தினை, சமூக அமைப்புகளிடமும், பொதுமக்களிடமும் கலந்து ஆலோசிக்காமல், ஜனாதிபதி, அமைச்சரவை என்ற ரீதியில் தன்னிச்சையாக ஒரு யோசனையோ, தீர்மானமோ எடுப்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். இதனை அபிவிருத்தி, சட்டம், திட்டம் என்கிற ரீதியில் பார்க்க முடியாது. தேசிய கீதம் தொடர்பாக அண்மைக் காலங்களில் ஊடக வாயிலாக வந்த செய்திகள், தேசியகீதம் தொடர்பான சிக்கல்கள் உற்று கவனிக்கப்பட வேண்டியவை. அது மாத்திரமல்ல இப்பிரச்சனை குறிப்பிட்ட சில கால அவகாசத்துக்குள்ளேயே தீர்க்கப்பட்டாக வேண்டும்.

எமது தமிழ் பேசும் சமூகத்தை (முஸ்லீம், தமிழ், மலையகம்) பொறுத்தவரை இலங்கையில் தேசிய கீதம் பாட தடை விதிக்கப்படுமானால் அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளையும், ஜனநாயகவழி போராட்டங்களையும் முன்னெடுக்க வேண்டிய கடமை தமிழ், முஸ்லீம், மலையக அரசியல் வாதிகளுக்கும், நாட்டில் வாழும் அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் இருக்கிறது. அதற்காக தயாராக இருக்கவேண்டிய தேவையும் இருக்கிறது. இந்த விடயத்தில் வடக்கு, கிழக்கு, மலையகம், மேல்மாகாணம் என தமிழ் பேசும் மக்கள் அனைவரினதும் ஆதரவு கிடைக்குமென்றே நம்பலாம். ஒரு சிலர் அமைச்சு பதவிகளுக்கும், அதிகாரங்களுக்குமாக இவ்விடயத்தில் பின்வாங்குவார்களாக இருந்தால் அது ஒருவகையில் மொழித் துரோகத்துக்கு ஒப்பானதாகிவிடும் (மீண்டும் துரோகி பட்டமா ..!) என்பதை உணர்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

“இலங்கையில் தேசிய கீதம் ஒன்றே இருக்கவேண்டும் என்பது சாதகமாக பரிசீலிக்கப்பட வேண்டிய விடயமே”. அப்படியாக இருந்தால் தேசிய கீதத்தினை முற்றாக மறுசீரமைக்கலாம். தமிழ், சிங்கள மொழிகள் கலந்த ஒரு தேசிய கீதத்தினை இலங்கையின் தேசியகீதமாக மறுசீரமைப்பது இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளியாக இருக்குமென தோன்றுகின்றது. அதுமாத்திரமல்ல போருக்குப் பின்னதான இன ஒற்றுமையின் திறவுகோலாகவும், இலங்கையின் அனைத்து இன மக்களுக்கும் தேச பக்தியினை ஊட்டுவதாகவும் தேசியகீதம் அமைவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது.
ஆனாலும் ஒரு நாட்டின் தேசிய கீதத்தினை மறுசீரமைப்பது என்பது சாதரணமான விடயமல்ல. மறு சீரமைப்பதற்கான கருத்துக்கள் இரு மொழிகள் கலந்த தேசிய கீதமாக மறுசீரமைக்க வேண்டும் அல்லது உருவாக்கப்பட வேண்டும் என்ற ரீதியில் சிங்கள, தமிழ், முஸ்லீம், மலையக முற்போக்கு வாதிகளிடமிருந்து, அரசியல் வாதிகளிடமிருந்து பலமாக எழவேண்டும்.

யதார்த்த சூழ்நிலைகளைப் பார்த்தால் இனவாத கருத்துக்களே இன்றுவரை தேசியகீத சர்ச்சை தொடர்பாக ஊடகங்களில் பிரதிபலித்து இருக்கின்றன. அப்படி பார்த்தால் சிங்கள சமூகத்திலிருந்து இனவாத கருத்துக்கள் பலமாகவும் அக் கருத்துக்களை சமாளிக்கக் கூடியவகையில் தமிழ் பேசும் சமூகத்தின் சில அரசியல்வாதிகளிடமிருந்து கவலைகளும், எதிர்க் கருத்துக்களும் தேசியகீத சர்ச்சை தொடர்பில் வந்திருக்கின்றன. இன ஒற்றுமை தொடர்பில் சிங்கள சமூகத்திடமிருந்தோ, தமிழ் பேசும் சமூகத்திடமிருந்தோ உருப்படியான கருத்துக்களோ அல்லது செயற்பாடுகளோ பெரிதாக இதுவரை எழுந்ததாக இல்லை. ஆரோக்கியமான இலங்கையினை கட்டி எழுப்ப வேண்டுமானால் இன ஒற்றுமை என்பது இன்றியயைமயாத ஒன்றாக இருக்கிறது. இதனை அரசியல்வாதிகளும் மக்களும் புரிந்துகொள்ள வைப்பதற்கான செயற்பாடுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் .

தேசியகீத பிரச்சனை உருவாக்கப்பட்டிருக்கின்ற இந்த சமயத்தில் இலங்கையராகிய நாம் கவனமாக இதனை கையாள வேண்டிய தேவை இருக்கிறது. மேற்சொன்னது போல் எமது தமிழ்பேசும் சமூகம் இப்பிரச்சனையில் விழிப்பாகவே இருக்கவேண்டும். அதைவிடவும் இலங்கையின் அரச இயந்திரமும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இவ் விடயத்தில் பொறுப்பாக நடக்கவேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பு.

“இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கின்று உலகு ”

(நன்மை எது தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்கள் ஆவர்)

Show More
Leave a Reply to karu Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • Vasanthi
    Vasanthi

    In human psychology Intention is the key to asses future behaviour of the person concerned.
    In psychology most elements of hidden intentions comes out when that person is agitated or sleep depressed .

    I believe this emotional disclosure by MR due to London failure demonstrate that MR’s hidden intention/mindset is same as SLFP founders SWRD and MR’s father Rajapakse. That is Sinhala only. Hence Mahavamsa mindset.

    Another thing to note is it is not only MR but entire government ministers did not oppose it . it does not matter what happens now after lots of noice. It is now up to Tamil intellects to understand social and political signal came from MR government .–Dr Kumarakuru Vasanthi

    Reply
  • சி.சந்திர மௌலீசன்
    சி.சந்திர மௌலீசன்

    நமோ நமோ சிறீலங்கா மாதா செய்த முதல் கொலை எதுவென்றால் நமோ நமோ மாதா சிறீலங்கா தேசிய கீதம் இயற்றிய ஆனந்த சமரகோன் ஆகும்.
    தனது கீதமான நமோ நமோ மாதவிநை நமோ நமோ சிறீலங்கா மாதா என மாற்றப்பட்டதை பொறுக்க முடியாமல் அவர் தூக்க மாத்திரை அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவரருகில் இருந்த கடிதத்தில் இந்த கொடிய உலகில் வாழ விரும்பவில்லை எனத் தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்த “சிறீலங்கா மாதா வெறி” எடுத்த முதல் உயிர் பலி நமோ நமோ இயற்றிய ஆனந்த சமரகோன், அதன் பின் பல இலட்சம் உயிர்கள் இந்த “சிறீலங்கா மாதா வெறியில்” பலியாகின போதாதென்று இன்னுமா இந்த “சிறீலங்கா மாதா வெறி ”
    -http://sundaytimes.lk/010204/plus5.html
    சி.சந்திர மௌலீசன்
    இலண்டன்

    Reply
  • karu
    karu

    //இலங்கையில் தேசிய கீதம் ஒன்றே இருக்கவேண்டும் என்பது சாதகமாக பரிசீலிக்கப்பட வேண்டிய விடயமே”. அப்படியாக இருந்தால் தேசிய கீதத்தினை முற்றாக மறுசீரமைக்கலாம். தமிழ் சிங்கள மொழிகள் கலந்த ஒரு தேசிய கீதத்தினை இலங்கையின் தேசியகீதமாக மறுசீரமைப்பது இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளியாக இருக்குமென தோன்றுகின்றது. அதுமாத்திரமல்ல போருக்குப் பின்னதான இன ஒற்றுமையின் திறவுகோலாகவும்இ இலங்கையின் அனைத்து இன மக்களுக்கும் தேச பக்தியினை ஊட்டுவதாகவும் தேசியகீதம் அமைவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது// நன்றி விஸ்ணு

    Reply