புலிகளுடன் தமிழக தலைவர்கள் ஆயுத வியாபாரம் – தினமலர் பேட்டியில் கருணா அம்மான்

karuna.jpgபுலிகளுக்குத் தேவையான பயங்கர ஆயுதங்களை தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள், தமிழகத்தில் இருந்து கடல் வழியாகக் கடத்தப்படுகின்றன. இந்த கடத்தலின் பின்னணியில் தமிழகத்தில் புலி ஆதரவு பேசும் தலைவர்கள் இருக்கின்றனர். கடத்தலை முறியடிக்க இலங்கை ராணுவம் முயலும் போது தான், தமிழகத்தின் அப்பாவி மீனவர்களும் பாதிக் கப்படுகின்றனர்,” என்று புலிகள் இயக்கத்தில் ராணுவப் பொறுப்பில் இருந்த கருணா அம்மான் தினமலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தப் பேட்டியின் முதலாம் கட்டம் கீழே தரப்பட்டுள்ளது

thina-malar.pngவிடுதலைப் புலிகள் இயக்கத்தில் ராணுவத் தளபதியாக இருந்தவர் கருணா அம்மான். இலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயக் குடும்பத்தில், விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற பெயரில் பிறந்த இவர், ’83ம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் சேர்ந்து, கருணா அம்மானாக மாறினார். படிப்படியாக உயர்ந்து புலிகளின் ராணுவப்பிரிவு தலைமை தளபதியாக இருந்து, இலங்கை அரசுப் படைக்கு எதிராக போர்க்களங்களில் நின்றவர். இலங்கையின் வடக்குப்பகுதி முழுவதையும், போர் நடவடிக்கையால் புலிகள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவர். தற்போது, இலங்கை ராணுவ வசமாகியுள்ள கிளிநொச்சி, ஆனையிறவு போன்ற பகுதிகளில் இருந்த ராணுவ முகாம்களை தாக்கி அழித்து அவற்றை புலிகள் கட்டுப் பாட்டில் வைத்திருந்தார். பிரபாகரனோடு ஏற்பட்ட மோதலால், 2004ம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறிய இவர், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (டி.எம்.வி.பி.,) என்ற அமைப்பைத் துவக்கினார். இலங்கை கிழக்கு மாகாணத்தில் இவரது கட்சி தான் தற்போது ஆட்சியில் உள்ளது. இலங்கை அரசில் நியமன எம்.பி.,யாக பதவியில் உள்ளார். இவர், புலிகளின் ராணுவத் தளபதியாக இருந்த போது பிடித்த பகுதிகள் முழுவதும் இப்போது மீண்டும் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. இலங்கையில் புலிகளின் நிலைக்களங்களை ராணுவம் முழுவதுமாக அழித்து, உள்நாட்டுப் போர் முடிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையில் கடுமையான பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு இடையே, “தினமலர்’ இதழுக்கு அவர் அளித்த விரிவான பேட்டி:

உங்கள் குடும்ப பின்னணி பற்றி…

இலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் வயல்களின் ஊடாக இருக்கிறது எனது சொந்த கிராமம்; அருகில் கடலும் உண்டு. அப்பா விவசாயி. சொந்தமாக நிலம் இருந்தது. அம்மாவின் குடும்பத்தில் அனைவரும் படித்தவர்கள். நாங்கள் ஐந்து பேர். நான் கடைசியாக பிறந்தவன். எங்கள் அனைவரையும் அப்பா நன்கு படிக்க வைத்தார். படித்து பட்டம் பெற்று அனைவரும் நல்ல நிலையில் இருக்கின்றனர். குடும்பத்தில் எதற்கும் குறைவில்லாமல் மகிழ்ச்சியாகவே இருந்தது.

இலங்கைத் தமிழர் போராட்டத்தில் ஈடுபட்டதற்கு நேரடியான பாதிப்புகள் எதுவும் உங்களுக்கு இருந்ததா?

இது பற்றி விரிவாக சொல்ல வேண்டும். ’83ம் ஆண்டு குடாநாட்டில் அரசியல் ரீதியான போராட்டங்கள் தீவிரமாகியிருந்தன. ஆதே ஆண்டு ஜூலை 23ம் தேதி நடந்த போராட் டத்தின் போது, 13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் இலங்கை முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழர்களுக்கு எதிராக துவேஷங்கள் விதைக்கப்பட்டன. அப்போதைய சிங்கள அரசியல்வாதிகள் இப்பிரச்னையை மிகவும் மோசமாக கை யாண்டு, இனமோதலை உருவாக்கினர்; இலங்கையில் கலவரம் வெடித்தது. கிட்டத் தட்ட ஐந்தாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர்; உடைமைகள் நாசமாக்கப்பட்டன. கொழும்பில் கலவரம் தீவிரமாக இருந்தது. கலவரத்தில் சிதைந்து போன பல குடும்பங்கள், எங்கள் பகுதிக்கு அகதிகளாய் தஞ்சம் வந்தனர். அவர்கள் சொன்ன விஷயங்கள் கடுமையான அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தின. இலங்கை முழுவதும் கொந்தளிப்பான நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பு இது தொடர்பான துண்டு பிரசுரங்களை கிராமங்கள் தோறும் வெளியிட்டு பிரசாரம் செய்தது. அதில் இருந்த விஷயங்கள் எங்களை ஈர்த்தன. இதைத் தொடர்ந்து எங்கள் பகுதியில் இருந்து 20 இளைஞர்கள் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தோம். உடனடியாக பயிற்சிக்காக வல்வெட்டித்துறையில் இருந்து, தமிழகத்தின் கோடியக்கரைக்கு படகில் அனுப்பினர். அங்கிருந்து மதுரை சென்றோம். அங்கு தான் பிரபாகரனை சந்தித்தோம். சேலம், கொளத்தூரில் இருந்த மையத்தில் தான் நான் பயிற்சி எடுத்தேன். இந்திய அரசு எங்கள் போராட்டத்தை ஆதரித்து, எல்லாவகை உதவியையும் செய்ததை இப்போதும் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

நீங்கள் புலிகளுடன் சேர்ந்த காலத்தில் இலங்கையில் பல்வேறு விடுதலை இயக்கங்கள் தோன்றியிருந்ததே…

பிளாட், ஈரோஸ், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., என்று பல அமைப்புகள் இருந்தன. இவை எல்லாமே இந்தியாவில் உதவி பெற்றன. ஆனால், இவைகளில் இல்லாத அமைப்பு ரீதியான ஒழுக்கம் புலிகள் இயக்கத்தில் இருந்தது. குடிப்பது, பெண்கள் மீதான தவறான கண்ணோட்டம் போன்ற பல்வேறு விஷயங்களில் தீவிரமான தனி மனித ஒழுக்கத்தை கடைபிடித்தது. எங்கள் குடும்பம் ஏற்கனவே கட்டுப்பாடு ஒழுக்கத்தை அதிகமாக வலியுறுத்தியது. இந்த பின்னணியால் தான் புலிகள் இயக்கத்தை தேர்ந்தெடுத்தேன்.

ஒழுக்கமான இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், தமிழகத்தில் தங்கியிருந்த போது, பல நேரங்களில் தங்களுக்குள் மோதிக் கொள்வதும், பொதுமக்களுடன் மோதிக்கொள்வதையும் நடைமுறையில் கடைபிடித்தார்களே. 1986ம் ஆண்டு தீபாவளியன்று சென்னை சூளைமேட்டில் சாலையில் சென்றவர்களை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார்களே. பாண்டி பஜாரில் துப்பாக்கியால் மோதிக்கொண்டார்களே…

உண்மை தான். விடுதலை இயக்கம் என்று இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்டு, சகல உதவிகளையும் பெற்ற நாங்கள், அதன் பின் தான் உலக நாடுகள் பலவற்றாலும் விடுதலைப் போராளிகள் என்று அங்கீகரிக்கப்பட்ட நாங்கள், எப்படி பயங்கரவாதிகளாக மாற்றம் பெற்றோம் என்பதை சொல்ல வேண்டும்.விடுதலை இயக்கமாக அங்கீகரிக்கப்பட்டதை, அமைப்பின் தலைவராக இருந்த பிரபாகரன் முறையாகப் பயன்படுத்தவில்லை. அவரது எதேச்சதிகாரமான போக்கும், ஆணவமும், வரட்டு கவுரவமும் இதை பயங்கரவாத இயக்கமாக மாற்றியது.இந்திய அமைதிப்படையை அனுப்பி சமாதான முயற்சி நடந்தபோது, பல்வேறு பிரச்னைகள் நடந்தன. அவற்றை அத்துடன் விட்டிருக்க வேண்டும். ஆனால், நன்றி மறந்து, இந்தியாவுக்குள் புகுந்து, அங்கு ராஜிவ் காந்தியை கொலை செய்துவிட்டார். இப்படித்தான், இயக்கத்தை எதேச்சதிகாரமாக பயங்கரவாத இயக்கமாக மாற்றிவிட்டார்.

ராஜிவ்காந்தியை கொலை செய்வது பற்றிய முடிவு எடுத்த போது நீங்கள் உடன் இருந்தீர்களா? அப்போது இயக்க ரீதியாக விமர்சனங்கள் சொல்லப்படவில்லையா?

தெரியவே தெரியாது. ஆண்டன் பாலசிங்கத்துக்குக் கூட தெரியாது.

கொலை நடந்து முடிந்த உடனேயாவது தெரியுமா?

அப்போதும் தெரியாது. பின்னர், சிவராசன் ஆட்கள் பெங்களூரில் பிடிபட்டார்களே, அதுக்குப்பிறகு தான் இயக்கத்தில் அனைவருக்கும் தெரிந்தது. சிவராசனை அனைவருக்கும் தெரியும் என்பதால், இதை இயக்கம் தான் செய்தது என்று தெரிந்தது. தொடர்ந்து இயக்கத்தில் அது தொடர்பான விமர்சனங்கள் எழுந்தன. நானும் எனது கருத்தை தெரிவித்தேன். விடுதலைக்காக இயங்கிக் கொண்டிருக்கும் நாம், இது போன்ற செயல்களை செய்வது தேவையற்றது. இது இயக்கத்தை பாதிக்கும் என்று சொன்னேன். பிரபாகரன் அதை நியாயப்படுத்தினார். அமைதிப்படை செய்த காரியம் சரியல்ல… “தமிழ்ப் பெண்களை அவர்கள் கற்பழித்தனர்’ என்று, பல விஷயங்களைச் சொல்லி நியாயப்படுத்தினார். மற்றொரு நாட்டில் சென்று ஒரு தலைவரை கொல்வது நியாயமான செயல் அல்ல; இதை எந்த நாட்டுக்காரனும் ஏற்கமாட்டான் என்று சொன்னேன். அதை அவர் ஏற்காமல் மழுப்பி விட்டார்.

இந்த காரணத்தை முன்வைத்து இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் யாரும் உண்டா?

அப்படி யாரும் இல்லை. ஆனால் இனி இந்தியாவின் உதவி கிடைக்காது என்பது தெளிவாக தெரிந்தது. அதன்பின் தான், ஐரோப்பிய நாடுகளில் உதவி தேடப்பட்டது. தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டன.

இயக்கத்தை நடத்துவதற்கும், ஆயுதங்கள் வாங்குவதற்கும் பணம் வேண்டுமே. எந்த உற்பத்தியையும் சாராமல் இருந்த அமைப்புக்கு பணம் எப்படி வந்தது?

ஈழத் தமிழர்கள் அறிவாளிகள். பொருளீட்டுவதற்காக அவர்கள் பல நாடுகளுக்கும் சென்றனர். 40ம் ஆண்டு வாக்கிலே, ஐரோப்பிய நாடுகளில் குடியேறி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டவர்கள் ஏராளம். ’83ம் ஆண்டு கலவரத்துக்குப்பின், வெளியேறி, ஐரோப்பா, அமெரிக்கா, கனடா என்று வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் ஏராளம். இவர்கள் மத்தியில் பிரசாரம் செய்து புலிகள் பணம் திரட்டினர். கண்டிப்பாக பணம் தரவேண்டும். அவர்கள் பற்றிய பட்டியல் இயக்கத்தில் இருந்தது. கண்டிப்பாக அவர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டது.

போராட்டத்துக்கான ஆயுதங்களை வாங்குவதற்கு பேரங்கள் நடத்தியது யார்?

கிழக்காசிய நாடுகளில் இருந்து தான் முதலில் ஆயுதங்கள் வாங்கப்பட்டன. கே.பி.என்., என்ற கே.பத்மநாபன் தான் ஆயுத பேரம் நடத்தியவர். கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து நாடுகளில் தான் வியாபாரிகளுடன் பேசி ஆயுதங்களை வாங்கி அனுப்புவார். அதன்பின், உக்ரேன் நாட்டில் இருந்து ஆயுதங்கள் வாங்கப்பட்டன. சீன தயாரிப்புகளும், உக்ரேன் கம்பெனிகள் மூலம் எங்களுக்கு கிடைத்துக் கொண்டிருந்தன.

ஆயுதங்களை சிக்கலின்றி எப்படி கொண்டு வந்தீர்கள்?

வெளிநாடுகளில் உள்ள வர்த்தக கம்பெனிகள் பெயரில் உள்ள கப்பல்களில் அனுப்புவர். அதை யாரும் கண்டுபிடிக்க முடியாது. பெரும்பாலும் வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் பெயரில் இருந்த கப்பல்களில் தான் ஆயுதங்கள் வந்தன. பல நேரங்களில் உபயோகத்துக்கு இனி உதவாது என்ற நிலையில் உள்ள கப்பல்களில் தான் ஆயுதங்கள் கொண்டுவரப்படும். அத்துடன் அந்த கப்பல் அங்கேயே கிடக்கும்.

தமிழகத்தில் உள்ள தமிழர்கள் யாராவது ஆயுத ரீதியாக உதவி செய்திருக்கிறார்களா?

தமிழகத்தில் இருந்து ஆயுத ரீதியாக பல உதவிகள் கிடைத்திருக்கின்றன. வெடி பொருட்கள், கண்ணிவெடி செய்வதற்கான மூலப் பொருட்கள் தமிழகத்தில் இருந்து பலர் கடத்தி தந்துள்ளனர். அலுமினியம் பவுடர், பைபர் பிளாஸ்டிக் மெட்டரீயல் போன்றவையும் தமிழகத்தில் இருந்து கொண்டு வருவார்கள். அது இப்போது வரை கடத்தப்பட்டது. மன்னார் வளைகுடா வழியாத்தான் அதைக் கொண்டு வருவார்கள். இதை, இலங்கை ராணுவம் தற்போது தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. எனவே இனி கடத்தல் நடத்துவது கடினம்.

தமிழகத்தில், புலி ஆதரவு பேசும் தலைவர்களுக்கு இந்த ஆயுதக் கடத்தல் பேரத்தில் தொடர்பு இருந்ததா?

இருந்தது. இந்த கடத்தலின் ஊடாகத்தான், நெடுமாறன் வந்திருக்கிறார். வைகோ வந்திருக்கிறார். எல்லாரும் இல்லீகலாகத்தான் வந்தனர்; கள்ளத்தோணியில் தான் வந்தனர்.

ஆயுத கடத்தல் ரீதியான நேரடி தொடர்பு தமிழக தலைவர்களுக்கு இருக்கிறதா?

இருக்கிறது; பணம் விடுதலைப் புலிகளால் வழங்கப்படுகிறது. இதுதான் உண்மையான விஷயம். தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாகக் கூறும் பலத் தலைவர்களுக்கும் அந்த சப்போர்ட் தான், ஆயுதம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் கடத்துவதற்கு உதவியாக உள்ளது. இதில் கிடைக்கும் பணம் தான் இவர்களை, புலிகளுக்கு ஆதரவாக பேச வைக்கிறது.

பணம் நேரடியாக தமிழகத் தலைவர்களுக்கு போய்ச் சேர்ந்ததா?

இல்லை. மீனவர்கள் போர்வையில் ஆயுத தயாரிப்புக்கான மூலப்பொருள் கடத்தப்படுகிறது. தமிழகத்தில் பல ஏஜென்டுகள், மீனவர்கள் போர்வையில் இதைச் செய்கின்றனர். இந்த ஏஜென்டுகளுக்கு பின்னணியில் புலி ஆதரவு பேசும் தமிழகத் தலைவர்கள் இருக்கின்றனர். அவர்கள் மூலமாக பணம் தாராளமாக போய் சேர்கிறது. இப்படி வரும் மூலப் பொருட்களை இலங்கை கடற்படை மடக்கிப் பிடிக்கிறது. இந்த கடத்தலை தடுக்கும் பொருட்டுத்தான், அடிக்கடி துப்பாக்கிச் சூடுகள் நடக் கின்றன. இலங்கை கடற்படை அனைவரையும் சந்தேகக் கண்ணுடன் பார்ப்பதால் தமிழகத்தில் பல அப்பாவி மீனவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இலங்கையில் தமிழர் வாழ்க்கை இவ்வளவு நெருக்கடிகளை சந்திக்க யார் காரணம்? இன்றைக்கு இலங்கையில் இந்த அழிவுகளும் விளைவுகளும் யாரால் நடக்கிறது? அது பிரபாகரனால் தானே நடக்கிறது. இதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவருடன் நான் 22 ஆண்டுகள் இருந்திருக்கிறேன். ராணுவத்துடனான அனைத்து சண்டைகளையும் நான் தான் நடத்தினேன். அவர் ஒரு முறை கூட போர்க்களத்துக்கு வந்தது கிடையாது. பிரபாகரன் என்றால் ஒரு டம்மி ஆள் போலத்தான். அரசியல் ரீதியாக முதிர்ச்சியடைந்த நபராக மாற்றுவதற்கு நாங்கள் முயற்சி செய்தோம். குறிப்பாக நானே அவரிடம் நேரடியாக பலமுறை பேசியுள்ளேன். நான் ஒருவன் தான் அப்போது அவரிடம் பேச முடியும். இயக்கத்தின் செயல்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். கொள்கைகளை மாற்ற வேண்டும். தனிநபர்களை கொல்வதை நிறுத்த வேண்டும்; பொதுமக்களை கொல்வதை நிறுத்த வேண்டும் என்று சொன்னேன். சிங்கள மக்களை கொலை செய்வதை நிறுத்த வேண்டும்; முஸ்லிம் மக்களுடன் இணக்கம் வேண்டும் என்று சொன்னேன்.

புலிகள் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்களே…

இது பிரபாகரனின் பாசிச மனநிலை. தான் என்ற அகங்காரத்தில் எடுத்த முடிவு. கிழக்கு மாகாணத்தில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றிய போது நான் கடுமையாக எதிர்த்தேன். அங்கே தமிழ், சிங்கள, முஸ்லிம்கள் சேர்ந்து வாழ்கின்றனர். ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதை வலியுறுத்தி சொன்னேன். எதையும் கேட்கவில்லை. யாழ்ப்பாணம் பகுதியில் இருந்த முஸ்லிம்களை விரட்டியடித்தனர். வீடுகளில் இருந்த பொருட்களை சூறையாடினர். வர்த்தக மையங்களை கொள்ளையடித்து பொருட்களை தெருவில் போட்டு விற்றனர். நூறு கோடி ரூபாய்க்கு மேல் இப்படி பொருட்கள் விற்கப்பட்டது. ஒரு பொருளை கூட எடுத்துச் செல்வதற்கு அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இப்போது போர்க்களத்தில் நிற்கிற பானு என்பவர் தான் சூறையாடுவதற்கு தலைமை ஏற்றவர். இவையெல்லாம் மறையாத வடுக்கள். இவற்றையெல்லாம் தமிழக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழர் பிரச்னையை தீர்க்க பல வாய்ப்புகள் இருந்தன. பேச்சுவார்த்தைக்கு சாதகமான சூழ்நிலைகள் இருந்தன. இவை எதையும் பிரபாகரன் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பேச்சுவார்த்தைகளுக்கும் வாய்ப்பு அளிக்கவில்லை.

நீங்கள் இயக்கத்தை விட்டு வெளியேறுவதற்கு இவைதான் காரணமா…

நான் வெளியேறுவதற்கு பல காரணங்கள் இருந்தன. 22 ஆண்டுகள் நான் போர்க்களத்தில் இருந்துள் ளேன். சண்டைகளுக்கு தலைமை ஏற்றிருந்தேன். ராணுவப் பொறுப்பாளராக நான்தான் இருந்தேன். அமைப்பில் 25க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு பொறுப்பாளர் இருந்தனர். அயல்நாட்டு உறவுக்கு என்று கூட பிரிவு இருக்கிறது. ராணுவத்துக்கு நான் தான் தலைமை பொறுப்பாளன். ஒரு நாட்டின் ராணுவ அமைப்பு போல் தான் செயல்பட்டோம். 30 ஆயிரம் வீரர்கள் இருந்தனர். இதில், ஆறாயிரம் பேர் பெண்கள். ஒரு கட்டத்தில், அரசியல் தீர்வுக்கு வாய்ப்பு இருக்கும் போது ஏன் போராட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. குறிப்பாக 2000 ஆண்டுகளுக்கு பின், நடந்த பேச்சுவார்த்தைகளை கணக்கில் எடுக்க வேண்டும். 2001ம் ஆண்டில் நடந்த பேச்சுவார்த்தை முக்கியமானது. சர்வதேச சமூகத்தின் கண்காணிப்புடன் பேச்சு நடந்தது. பேச்சு வார்த்தைக் குழுவில் நானும் ஒருவனாக நியமிக்கப்பட்டிருந்தேன். உலக நாடுகளில் நாங்கள் பேசினோம். சமஷ்டி முறையிலான தீர்வு ஒன்றை எடுப்பதற்கு முயற்சி செய்தோம். கடைசியில் நார்வேயில் நடந்த பேச்சு வார்த்தையில் ஓர் ஒப்பந்தத்தை பரிசீலிக்கிறோம் என்பதாக ஒரு அறிக்கையை தயாரித்து ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவதற்கான இறுதி வடிவம் தயாரித்து முடிவு எடுக்கப்பட்ட போது, நாங்கள் பிரபாகரனிடம் இது பற்றி கேட்கவில்லை. அதற்கு ஒரு காரணம் இருந்தது. பேச்சு வார்த்தைக்கு எங்களை அழைத்த போதே, “பேச்சு பேச்சு என்று சொல்லி ஐந்து ஆண்டுகளை கடத்துங் கள். அதற்குள் ஆயுதங்களை வாங்கி குவித்து மீண்டும் தாக்குதல் நடத்தலாம்’ என்று, பிரபாகரன் எங்களிடம் சொல்லி அனுப்பியிருந்தார். நாட்களைக் கடத்துவது என்றால் விஷயம் இல்லாமல் முடியாது. ஐந்து வருடம் என்பது இயலாது. சர்வதேச சமூகமே இதை பார்த்துக் கொண்டிருக்கிறது. என்ன செய்ய முடியும். மீண்டும் காலம் கடத்த முடியாது. ஒப்பந்தத்தை பரிசீலிப்பதாகத்தான ஒப்பந்தத்தில்தானே கையெழுத்துப் போடுகிறோம். நீங்கள் போடுங்கள் என்று பாலசிங்கத்திடம் நான் சொன்னேன். அவரும் சம்மதித்து கையெழுத்தைப் போட்டார். அதன்பின்தான் சொன்னார், “இதை நான் அங்கு கொண்டு வந்தால், பிரபாகரன் என்னை சுட்டுப்போடுவான். நான் என்ன செய்ய’ என்றார். “நார்வேயிலிருந்து நீங்கள் நேராக லண்டனுக்கு போய்விடுங்கள். ஒப்பந்த பத்திரத்தை நான் கொண்டு போகிறேன்’ என்று சொன்னேன். நானும், தமிழ்ச்செல்வனும் ஒப்பந்தத்துடன் இலங்கைக்கு கொண்டு வந்து மொழிப் பெயர்ந்து பிரபாகரனிடம் கொடுத்தோம். இதைப் பார்த்ததும் மிகுந்த கோபப்பட்டார். அதைத் தூக்கி வீசி எறிந்தார் பிரபாகரன்.

நன்றி: தினமலர்

Show More
Leave a Reply to vekuli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • ambalavarner
    ambalavarner

    /ராஜிவ்காந்தியை கொலை செய்வது பற்றிய முடிவு எடுத்த போது நீங்கள் உடன் இருந்தீர்களா? அப்போது இயக்க ரீதியாக விமர்சனங்கள் சொல்லப்படவில்லையா?
    தெரியவே தெரியாது. ஆண்டன் பாலசிங்கத்துக்குக் கூட தெரியாது.

    கொலை நடந்து முடிந்த உடனேயாவது தெரியுமா?
    அப்போதும் தெரியாது/……..

    உங்கள் ஒருத்தருக்கும் தெரியாது. ஆனால் யாழ்ப்பாணத்தில் வெடி கொழுத்தி மகிழேக்கை பொதுசனம் உட்பட எல்லாருக்கும் தெரியும்

    Reply
  • palli
    palli

    மேலே கருனா சொன்ன விடயம் யாவுமே கற்பனையானதுதான்.

    //இலங்கையின் வடக்குப்பகுதி முழுவதையும், போர் நடவடிக்கையால் புலிகள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவர்.//
    அதுதானே தெரியுமே. அப்ப இந்த டெலோவை அழித்தத்தும் அம்மான் தலமையில்தான்.

    // படித்து பட்டம் பெற்று அனைவரும் நல்ல நிலையில் இருக்கின்றனர். /
    நீங்கழும்தான் ஒன்னுமே படிக்காமல் எம் பி பட்டம் எடுத்து அமோகமாக இருக்கிறியள்.

    //இந்திய அரசு எங்கள் போராட்டத்தை ஆதரித்து, எல்லாவகை உதவியையும் செய்ததை இப்போதும் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.//
    உங்கழுக்கு கீழ் இருந்த ஜெயந்தன் படைஅணிதான் அமைதி படைக்கு எதிரான பல சகாஜங்களை செய்ததாக உமது உடன்பிறப்பு சொன்னது பொய்யா??? அல்லது அமைதிபடை போரின் போது நீண்டலீவில் எங்காவது போயிருந்தீரா??? கணக்கில் வீக்கா???

    //தெரியவே தெரியாது. ஆண்டன் பாலசிங்கத்துக்குக் கூட தெரியாது//
    பல்லி சொல்கிறது உமது மனைவிக்கு இது தெரியும். காரணம் அவர் அப்போது பிரபாவின் நேரடி செயலாளர். அத்துடன் அன்றே தாங்கள் புலியை விட்டு விலகாததின் நோக்கம் .நீர் புலியை விட்டு வெளியேறியவுடன் புலி உம்மை விட உமது மனைவியை தீர்த்து கட்டவே முனைவதாக தாங்கள் சொன்னது மறந்து விட்டதா??

    //அப்போதும் தெரியாது. பின்னர், சிவராசன் ஆட்கள் பெங்களூரில் பிடிபட்டார்களே, அதுக்குப்பிறகு தான் இயக்கத்தில் அனைவருக்கும் தெரிந்தது. சிவராசனை அனைவருக்கும் தெரியும் என்பதால், இதை இயக்கம் தான் செய்தது என்று //
    இது உமக்கு கோமாளிதனமாக இல்லை. உமது போர் தந்தரம் புளொட் உறுப்பினர் 15பேரை உமது வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து வழியில் உமது கோளை புலிகளால் கொன்ற போதே மக்கள் அறிந்து விட்டனர். அதில் உமது மாமாவும் அடங்குவார்(சுபாஸ் என நினைக்கிறேன்) இதில் வேடிக்கை என்னவெனில் இது நடப்பதுக்கு முதல் நாள் மாமா உறவை சொல்லி அங்கு போய் அவர்களை நம்பும்படி பேசி கழுத்தறுத்த பெருமை நாயகனல்லவா, உமக்கு அம்மான் பட்டம் கிடைத்ததே இப்படியான அருவெருப்பான கொலைமூலம் தானே. அப்படியிருக்க ரஜீவ் கொலைமட்டும் உமக்கு தெரியாதாக்கும்.

    பல்லிதொடரும்.

    Reply
  • rooto
    rooto

    என்ன நக்கலே அம்பலவாணர், தலைவர் இப்ப ஜனநாயக நீரோட்டத்தில இருக்கிறார். அவருக்கு பழைய துன்பியல் சம்பவங்கள் எல்லாம் தெரியாது. பாசிச புலிகள் இவரை 30 வருடமா சிறைபிடித்து வைத்துவிட்டு எவளவு அடிச்சாலும் தாங்குவார் கருணா எண்டு அவருக்கு கேணல் பட்டமும் அம்மான் தோட்டமும் கொடுத்ட்கு அனுப்பினவை. சும்ம அவருக்கு சம்பந்தமில்லாதத கேக்கதையுங்கோ!! வெணுமென்னா கிழக்கு அபிவிருத்தி பற்றி கேளுங்கோ சொல்வார்!!

    Reply
  • Ambalavarner
    Ambalavarner

    பல்லி அவர்களே கருணா சொன்ன எல்லா விடங்களையும் பொய் என்று சொல்லுவதற்கில்லை என நான் நினைக்கிறேன்.

    தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவதற்கான காரணம் மற்றும் இந்திய அரசியல்வாதிகள் கைகளுக்கு புலிகளின் காசு போய் சேரும் வழி பற்றி சொல்வது எல்லாம் பொய் என நான் நினைக்கவில்லை.

    கருணா தான் தற்போது இருக்கும் நிலைக்கேற்ப்ப அதற்கேற்றவாறே கதைப்பார். தன்காலத்தில் செய்த தவறுகளை பிரபாகரன் தலையில் போட்டு தப்பிக்கப் பார்ப்பார்.

    பல்லியிடம் நான் கேட்பது என்னவெனில் கருணா சொல்வது பொய் என உறுதியாக கூறும் உங்களுக்கு உண்மையான விடயம் என்னவென்று தெரிந்துள்ளீர்கள் என நான் நினைக்கிறேன். பல சந்தர்ப்பங்களில் பல பின்னுட்டங்கள் மூலம் பழைய சம்பவங்களின் உண்மைகளை வெளிக் கொண்டுவந்துள்ளீர்கள் அதேபோல இவ்விடத்திலும் உண்மை நடப்புக்களையும் யார் செய்தது என்பதையும் ஏன் நீங்கள் வெளிப்படுத்தக் கூடாது.

    Reply
  • vekuli
    vekuli

    கருணா சொன்னது பொய்யா மெய்யா- பொய்கலந்த மெய்யா இல்லை மெய்கலந்த பொய்யா..? வட் எவர் இட் இஸ் கருணாவின் கைகளில் பிளட் கறை தொரியுதெண்டிட்டு கதைக்க வேண்டாம் எண்டு சொல்லுறது றோங். கருணா புளொட் காரரை ஈபீடிபிக் காரரை முஸ்லிம்காரரை கொலைசெய்து வாங்கின அம்மான் பட்டத்தை இன்னும் பெருமையாத்தான் நினைக்கிறார். எண்டாலும் தன்ர எசமானாற்ர வண்டவாளங்களக் சொல்லும்போது சுடச் சுடக் ரெம்ப உண்மையையும் சொல்லியிருக்கிறார் – தன்னைச் சுடாதெண்ட நம்பிக்கையில. உள்வீட்டு ரகசியங்கள் வெளியால வரேக்க விசயத்தைப் பெறுக்கிறத விட்டிட்டு உனக்கென்ன அருகதையிருக்குதெண்டு கேட்டு கதைக்காதிருக்க வைக்கிறது விவேகமில்லையண்ண. ராஜீவ் கொலை- கப்பல் கடத்தல்கள் -பேச்சுவார்த்தைத் திருகுதாளங்கள்- தமிழ்நாட்டு டீலிங்குகள் எண்டு சப்டர் சப்டரா சப்ஜெக்ட் இறங்குது. லெட் தெம் கம் அவுட்! தான் சரி தலைவன்தான் பிழை எண்டு கதைய முடிச்சாலும் தானும் பிழை தலைவனும் பிழை எண்டதைத்தான் வெளிக்காட்டியிருக்கிறார்.

    Reply