பொதுமக்களின் பாதுகாப்பு வலயமாக முல்லைத்தீவில் 35 ச.கி.மீ பிரதேசம் – துண்டுப் பிரசுரம் மூலம் மக்களுக்கு இராணுவம் அழைப்பு

safe-zone.jpgவிடுவிக்கப்படாத பிரதேசத்தில் தங்கியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு பகுதிக்குள் வருவதற்கு ஏதுவாக முல்லைத்தீவு பகுதியில் சுமார் 35 சதுர கிலோமீற்றர் பகுதியை பாதுகாப்பு வலயமாக அரசு பிரகடனப்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு தேவிபுரத்தை மையமாகக்கொண்டு ஏ 35 பாதையில் புதுக்குடியிருப்பு- பரந்தன் பாதையையும் உடையார்கட்டு சந்தி தொடக்கம் மஞ்சள் பாலம் வரையிலான பகுதியையும், இருட்டுமடு முதல் தேவிபுரம் வரையிலான பகுதியையும் உள்ளடக்கியதாக 35 சதுரகிலோமீற்றர் பகுதியை உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில் அரசு பொதுமக்கள் தங்கும் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியுள்ளது.

விடுவிக்கப்படாத பிரதேசத்தில் இருக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் இராணுவத்தினரே பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருப்பதால் பாதுகாப்பு வலயத்தினுள் வருமாறு பொதுமக்களிடம் இராணுவத்தினர் கேட்டுக் கொள்கின்றனர். விடுவிக்கப்படாத பகுதிகளிலுள்ள மக்கள் பாதுகாப்பு பிரதேசத்துக்குள் வருமாறு வலியுறுத்தும் துண்டுப்பிரசுரங்கள் விமானம் மூலம் விடுவிக்கப்படாத பகுதியிலுள்ள மக்களுக்கு போடப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாயணக்கார தெரிவித்தார்.

இப் பாதுகாப்பு பிரதேசத்துக்குள் பிரவேசிப்பதற்குரிய பகுதிகளையும் இராணுவத்தின் துண்டுப்பிரசுரங்களில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

துண்டுப்பிரசுரங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள உள்நுழையும் பகுதிகள் வருமாறு:- வன்னிப் பிரதேசம் ஏ-35 புதுக்குடியிருப்பு, பரந்தன் பாதையில் உடையார்கட்டு சந்தி மற்றும் மஞ்சள் பாலம் வரையில் 4 கி.மீ தூரத்தில் உள்ள இருட்டுமடு மற்றும் பிரதேசம் (09 23 17.20 வ மற்றும் 080 36 25.70 கி) இருட்டுமடு கிழக்கில் இருந்து தேவிபுரம் வரையில் (09 23 17.40 மற்றும் 080 40 53.60 கி) பிரதேசம் உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவரும் நிமித்தம் பாதுகாப்பு வலயமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றும் மஞ்சள் பாலம் (09 20 21.80 வ மற்றும் 080 39 15.20 கி) பிரதேச ஏ-35 பிரதான பாதை எல்லையாகும்.

வவுனியாவில் நான்கு ஏக்கரில் 3 தற்காலிக பாடசாலைகள்
 
கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து வவுனியா அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வரும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கென சுமார் 4 ஏக்கர் நிலப் பரப்பில் மூன்று தற்காலிக பாடசாலைகள் கட்டப்படவுள்ளன. வவுனியா மெனிக் பாம் பகுதியில் தலா 150 ஏக்கர் நிலப்பரப்பில் மூன்று முகாம்கள் அமைக்கப்படவுள்ளன. இம்முகாமில் தங்கவைக்கப்படும் பொதுமக்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைக்காகவே மூன்று பாடசாலைகள் அமைக்கப்படுவதாக வவுனியா வலய கல்விப் பணிப்பாளர் திருமதி வீ. ஆர். ஏ. ஒஸ்வல்ட் தெரிவித்தார்.

அரச கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளவர்களுள் சுமார் 200 ஆசிரியர்களையும் மேற்படி பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைக்காக இணைத்துக் கொள்வதற்கான நியமனக்கடிதங்களும் கையளிக்கப்படவுள்ளன. வன்னியில் சுமார் 55,000 மாணவர்களும் 2500 ஆசிரிய ர்களும் உள்ளதாகவும் இவர்கள் அனைவரும் வவுனியா அரச கட்டுப்பாட்டுக்குள் வரும் பட்சத்தில் மேற்படி பாடசாலைகளிலேயே அனுமதிக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.

மேற்படி மாணவர்களுக்குத் தேவையான பாடசாலை சீருடைகள் நேற்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார வவுனியா வலய கல்விப் பணிப்பாளரிடம் தெரிவித்துள்ளதுடன் தேவையான பாடநூல்கள் அப்பியாசப் புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள் அனைத்துமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மெனிக்பாம் பகுதியில் முல்லைத்தீவு, கிளிநொச்சி மக்களை தற்காலிகமாக குடியமர்த்தும் பகுதிகளிலேயே மேற்படி பாடசாலைகளும் அமைக்கப்படுகின்றன. கல்வி அமைச்சு இவர்களுக்கான சகல நிதி உதவிகளையும் வழங்கி வருவதாக அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார தெரிவித்தார்.

க.பொ.த (சா/த) பரீட்சை: வன்னி மாணவர்களுக்கென வவுனியாவில் பரீட்சை நிலையம்

க. பொ. த. சாதாரண தர புதிய பாடத் திட்டத்திற்கமைவான கணிதப் பாட இரண்டாம் பகுதி பரீட்சைக்குத் தோற்றும் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மாணவர்களுக்காக இரண்டு பரீட்சை நிலையங்கள் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ளன.

வவுனியா செட்டிக்குளம் மற்றும் நெலுக்குளம் பகுதியில் இரண்டு பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 1000 மாணவர்களுக்குரிய வினாத்தாள்கள், பரீட்சை அனுமதி அட்டைகளும் ஆயத்தநிலையில் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா கல்வி வலய பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்தது.

வன்னியில் இப்பரீட்சை நடைபெறாது என்பதால் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வரும் மாணவர்களுக்கு பரீட்சைகளை நடத்த கல்வி அமைச்சு பணிப்புரை வழங்கியுள்ளது. இதற்கமைய வலயப் பணிப்பாளர் திருமதி வீ. ஆர். ஏ. ஒஸ்வல்ட் ஏற்பாடுகளை செய்துள்ளார்.

வன்னியிலிருந்து வெளியேறியோருக்காக இராமநாதன், அருணாசலம், கதிர்காமர் பெயரில் குடியேற்றக் கிராமங்கள் – அரசாங்கம் அறிவிப்பு

வன்னியிலிருந்து வெளியேறி இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ள தமிழ் மக்களுக்காக மூன்று குடியேற்றக் கிராமங்களை உடனடியாக அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மெனிக் பார்ம், மெனிக் பார்ம் 2, ஓமந்தை ஆகிய பகுதிகளில் இதற்காக 750 ஏக்கர் நிலப் பரப்பு கொண்ட காணி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வருட இறுதிக்குள் சகல வசதிகளையும் கொண்ட இந்த மூன்று இடங்களிலும் வீடமைப்புத் திட்டங்களை ஏற்படுத்தி அங்கு அகதி முகாம்களில் தங்கியிருக்கும் அனைவரையும் குடியமர்த்தத் திட்டமிட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் இப்பகுதியில் அகதி முகாம்கள், இடைத்தங்கல் முகாம்கள் அனைத்தையும் மூடி விட அரசு தீர்மானித்துள்ளது. மெனிக்பார்மில் 150 ஏக்கரும் மெனிக் பார்ம் 2 இல் 450 ஏக்கரும் ஓமந்தையில் 150 ஏக்கரும் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு உட்பட முழு வன்னிப் பிரதேசமும் விடுதலைப்புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட போதிலும் அங்கு சொந்த இடங்களுக்கு தமிழ் மக்கள் திரும்பிச் செல்ல கணிசமான காலமெடுக்கும் என்பதால் குறிப்பிட்ட காலத்துக்கு அந்த மக்களை இந்த குடியேற்றக் கிராமங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இக் குடியேற்றக் கிராமங்களுக்கு மறைந்த தமிழ்த் தலைவர்களின் பெயர்களே சூட்டப்படவிருக்கின்றன. பொன்.இராமநாதன் விடுதலைபுரம், பொன்.அருணாசலம் விடுதலைபுரம், கதிர்காமர் எழுச்சி நகர் எனப் பெயரிடப்பட்டுள்ளன. இங்கு குடியமர்த்தப்படுவோருக்கு சகல வசதிகளும் பெற்றுக் கொடுக்கப்படும். சமைத்த உணவு, உலர் உணவுகள், விளையாட்டு வசதி, தொலைபேசி வசதி, தொலைக்காட்சி, வானொலி என்பனவும் வழங்கப்படவுள்ளன. அத்துடன் அவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் உறுதி செய்யப்படும் வரை ஒவ்வொருவருக்கும் நாளாந்தம் நூறு ரூபா கைச்செலவுக்காக வழங்கவும் அரசு தீர்மானித்துள்ளது. சுமார் 30 ஆயிரம் பேருக்கு முதற் கட்டமாக இந்த வசதிகள் பெற்றுக் கொடுக்கப்படும். இம்மாத இறுதியில் இதன் ஆரம்பக் கட்டப் பணிகள் தொடக்கி வைக்கப்படும். இத்திட்டத்துக்கான சகல பொறுப்புகளும் ஜனாதிபதியின் ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவின் மேற்பார்வையில் இடம்பெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Your email address will not be published. Required fields are marked *

16 Comments

  • மாற்றுகருத்துதோழர்
    மாற்றுகருத்துதோழர்

    தமிழர்களை ஏமாற்றி ஒன்று கூட வைத்து அழிக்கும் கொலைவலயம்தான் சிறிலங்கா அரசமொழியில் “பொதுமக்கள் பாதுகாப்பு வலயம்”. தமிழர்களை கூட்டம் கூட்டமாக தடுத்துவைக்கும் தடுப்பு முகாம்கள்தான் “விடுதலைபுரம்” மற்றும் “எழுச்சி நகர்”. சிறைவைப்பிற்கு பெயர் மக்கள் “நலனோன்பு”.

    Reply
  • thambu
    thambu

    தமிழர்களை ஏமாற்றி ஒன்று கூட வைத்து அழித்த கொலைவலயம்தான் புலிகளின் மொழியில் “தமிழீழம்”. சிறுவர்களை கூட்டம் கூட்டமாக அழித்த செயலுக்குப் பெயர்தான் “விடுதலை”. தடுத்துவைக்கும் தடுப்பு முகாம்கள்தான் “போராளி முகாம்கள்”. மற்றும் இவர்களுக்கு கொடுக்கப்படும் இறப்புச் சான்றிதழின் பெயர்தான் “மாவீரர்”.

    Reply
  • ஏகாந்தி
    ஏகாந்தி

    விடுவிக்கப்படாத பகுதிகளிலுள்ள மக்கள் பாதுகாப்பாக வருவதற்கு ஏதுவாக பாதுகாப்பு வலயம் ஒன்றை படையினர் ஏற்படுத்தியுள்ளமையை பேராயர் குழு வெகுவாக வரவேற்றுள்ளதுடன், இதற்கு புலிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுள்ளது.

    யாழ். ரோமன் கத்தோலிக்க பேராயர் வணக்கத்துக்குரிய தோமஸ் செளந்தரநாயகம், மன்னார் ரோமன் கத்தோலிக்க பேராயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப், அநுராதபுரம் ரோமன் கத்தோலிக்க பேராயர் வணக்கத்துக்குரிய கோர்பட் அன்ட்ராடி, குருணாகல் அங்கிலிக்கன் பேராயர் வணக்கத்துக்குரிய குமார இலங்கசிங்க ஆகியோர் அடங்கிய பேராயர் குழுவே வரவேற்றுள்ளதாக கொழும்பு அங்கிலிக் கன் பேராயர் வணக்கத்துக்குரிய டுலிப் டி. சிக்கேரா அறிவித்துள்ளார்.

    அவர் அனுப்பிவைத்துள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-ஊடகங்கள் அறிக்கையின்படி விடுவிக்கப்படாத பிரதேசங்களிலுள்ள குடிமக்களுக்கென பாதுகாப்பு வலயங்கள் அமைப்பதற்கென இலங்கை இராணுவம் எடுத்த ஆரம்ப முயற்சிகள் குறித்து நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். அதேவேளையில் விடுதலைப் புலிகளும் இதற்கு இசைந்து நடவடிக்கை எடுத்து இம்மக்கள் இவற்றை உபயோகிக்க அனுமதிக்க வேண்டுகிறோம்.

    இப்பாதுகாப்பு வலயம் மிகவும் நல்ல முறையில் இயங்க, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகள் அகதிகள் பராமரிப்பு நிலையம் ஆகியவற்றின் பிரதி நிதிகளையும் சுயாதீன சிந்தனையுள்ள மதத் தலைவர்கள், புத்திஜீவிகள் ஆகியோரையும் இலங்கை அரசாங்கம் உதவி வழங்க அழைக்க வேண்டும். நாம் தொடர்ந்தும் எமது பிரார்த்தனைகள், முயற்சிகள் ஊடாக சமூகங்களிடயே நம்பிக்கையை ஏற்படுத்துவதுடன், வன்முறையற்ற நீதியான இலங்கை அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்ற உறுதியுடன் ஏறெடுப்போம்.

    Reply
  • Somu
    Somu

    எடுத்த நடவடிக்கையில பிடிவாதமாய் நிண்டு தமிழ் மக்களைப் பிடிச்சத இல்லாமல் பண்ண அரசாங்கம் முயற்சி! மக்களைக் கொல்லுறான் கொல்லுறான் எண்டு காட்டுக்கத்தல் கத்தும் மாற்றுக் கருத்துகள். மக்களுக்கு பாதுகாப்புத் தருறம் நாங்கள் அடிக்கப் போற இடத்தைவிட்டு வெளிய போங்கள் எண்டு மக்களில அக்கறை காட்டினாலும் இதுக்கும் கத்துறானுகள்

    ஆயிரக்கணக்கில மக்களைத் தனியொருவன் பாதுகாக்கப்படுதற்கு அழியவிடுவதைவிட அந்த தனியொரு……………..

    Reply
  • மாற்றுகருத்துதோழர்
    மாற்றுகருத்துதோழர்

    தமிழரின் தாயகத்தையும் அதன் சுதந்திரவிடிவிற்காக போராடும் போராளிகளையும் அவ் எத்தனத்தில் மரணித்த மாவீரர்களையும் கொச்சைபடுத்த வேண்டாம்.

    Reply
  • ஏகாந்தி
    ஏகாந்தி

    வன்னிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வரும் தமிழ் அகதிகள் வெளிநாடுகள் மற்றும் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களில் உள்ள தமது நண்பர்கள் உறவினர்களுடன் தொடர்புகொண்டு தமது நலன் குறித்துத் தெரிவிப்பதற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

    நெளுக்குளம், செட்டிகுளம் ஆகிய இடங்களில் தங்கியுள்ள வன்னி அகதிகள் இதன் மூலம் நன்மைகளைப் பெற்றுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களில் இருந்து வெளியே செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இந்த ஏற்பாட்டை செய்துள்ளது. வெளியே சென்றுவர அனுமதித்தால் தொலைத் தொடர்பு நிலையங்களில் இருந்து தமது உறவினர்கள் நண்பர்களுடன் தொலைபேசி மூலம் உரையாடலாம எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இந்த ஏற்பாட்டுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்

    Reply
  • மாற்றுகருத்துதோழர்
    மாற்றுகருத்துதோழர்

    “இருட்டுமட்டு பகுதி மக்கள் பாதுகாப்பு வலயம்” மீதும் சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதல்: சைவக்குரு உட்பட 3 பேர் பலி; 46 பேர் படுகாயம் 23 /1/ 2009,புதினம்.கொம்

    somu -மக்களில காட்டப்பட்ட அக்கறை இதுதான்.
    வள்ளிபுனம் பாதுகாப்பு வலய வைத்தியசாலை சூழலில் எறிகணை தாக்குதல் : 30 பேர் பலி; நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம்- வீரகேசரி இணையம் 1/23/2009

    “இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களில் இருந்து வெளியே செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இந்த ஏற்பாட்டை செய்துள்ளது” ஏகாந்தி
    வெளியே செல்ல தடைவிதிக்கப்படுகிற இடத்திற்கு பெயர் தடுப்புமுகாம்/சிறை.

    Reply
  • xxd
    xxd

    வன்னியில் இருக்கும் மக்களை அப்பகுதிகளை விட்டுச் செல்ல சுதந்திரம் இல்லை. மக்கள் தப்பிச் செல்ல வேண்டும். அவ்வாறு சென்றாலும் திறந்த வெளிச் சிறை அந்த மக்களுக்காக காத்துக்கிடக்கின்றது.

    வன்னியில் இருந்தால் தமிழீழ தேசத்தில் சிறை. மற்றைய பகுதியில் இருந்தால் சிறிலங்கா பேரின வாதிகளின் சிறை இந்த இரண்டு சிறைகளுக்கும் இடையில் மக்கள் ஊசலாடிக் கொண்டிருக்கின்றனர்.

    புலிகளின் அரசியல் எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால் புலியெதிர்ப்புவாதிகள் கூறும் ஜனநாயகம் என்பது திறந்த வெளிச் சிறையை நோக்கியதாகவே இருக்கின்றது.

    எமது மக்களுக்கு வேண்டியது. அவர்கள் தமது முடிவை எடுக்கும் உரிமை.
    யுத்தத்தை நிறுத்துங்கள் அதற்காக போராடுங்கள்.
    புலிகளே மக்களை தமது எண்ணத்தின் படி போராட விடு
    இவை இரண்டும் தான் இன்று தேவை .

    எதிரியிடம் சரணடைவதல்ல. கெளரவமான வாழ்க்கை. அந்த கெளரவமான வாழ்க்கையை எதிரியிடம் இருந்து பெறமுடியாது.

    யுத்தத்தை நிறுத்துங்கள்.புலிகளே மக்களை தமது எண்ணத்தின்படி போராடவிடு

    Reply
  • மாற்றுகருத்துதோழர்
    மாற்றுகருத்துதோழர்

    “எமது மக்களுக்கு வேண்டியது. அவர்கள் தமது முடிவை எடுக்கும் உரிமை.”xxd
    ஒரு யதார்த்தமான ஐனநாயககோரிக்கை. ஆனால் கடைசிவரியில் இதற்கு சாதகமற்ற முறையில் உங்கள் கருத்து இருக்கிறது. “.புலிகளே மக்களை தமது எண்ணத்தின்படி போராடவிடு” புலிகளின் நேரடி பிடியில் 4 இலட்சம் தமிழ் மக்கள்தான் இருக்கிறார்கள். மிகுதி 90வீத மக்கள் சிறிலங்கா படையின் பிடியில் இருக்கிறார்கள். “மக்களை தமது எண்ணத்தின்படி போராடவிடு” என்ற கோசத்திற்கு 90வீத மக்களே மிகபொருத்தமானவர்கள். அவர்களை நோக்கி உங்கள் போராட்ட கோசம் மெளனமாகவிருப்பதன் காரணமென்ன!

    Reply
  • BC
    BC

    //யுத்தத்தை நிறுத்துங்கள்.புலிகளே மக்களை தமது எண்ணத்தின்படி போராடவிடு-xxd//
    அரசும் புலிகளும் யுத்தத்தை நிறுத்தியவுடன் மக்கள் யுத்தம் செய்ய போகிறார்களா? அந்த நிலையிலா மக்கள் இப்போ இருக்கிறார்கள்?

    Reply
  • xxd
    xxd

    இன்று புலிகளின் போராட்ட முறையினால் மக்கள் தாம் இன்று உயிர்வாழ்வதே மிக முக்கியமானதாக இருக்கின்றனர். இன்றைய நிலையில் மக்கள் போராடும் நிலை இல்லைதான். ஆனால் எவ்வளவு காலம் திறந்த வெளிச்சிறையில் அவர்கள் வாழ்வார்கள்? வட- கிழக்குப் பகுதியில் உள்ள மக்கள் சுதந்திரமாக வாழ முடிகின்றதா?

    வட- கிழக்கில் இருக்கின்ற பாதுகாப்பு வலையங்கள்/ சோதனைச் சாவடிகள்/ அடையாளப் பதிவுகள் / கட்டுப்பாடுகள் என மக்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கப் போகின்றார்கள. இவர்கள் இவ்வாறு வாழ்வதை சுதந்திரம் என்று கூற முடியுமா?

    புலிகளின் கட்டுப்பாட்டில் இல்லாத மக்களும் ஏகபிரதிநிதித்துவம் என்ற கோட்பாட்டில் கீழ் இருப்பதை மறுக்க முடியாது. இவற்றில் இருந்தும் மக்கள் தமது தேவையின் பொருட்டு போராட சுதந்திரத்தை புலிகள் கொடுத்தேயாக வேண்டும். புலி எதிர்ப்பு அணியினர் மக்கள் எந்த விதமான ஒடுக்குமுறையை அரச கட்டுப்பாட்டில் இருந்து எதிர்கொள்ளப் போகின்றார்கள் என நிதானமான சிந்தனை இன்றி அரச ஆதரவாளர்களாக இருக்கின்றார்கள்.

    90 வீதமான நிலப்பரப்பில் வாழ்கின்ற மக்களுக்காக அரசியல் உரிமைக்காக கோரிக்கையை இவர்களால் வைக்க முடிகின்றதா?
    வெறும் சலுகைகளை கொடுக்கும் செய்திகளைத் தான் பக்கம் பக்கமாக விடுகின்றனர். அல்லது சிறு செயற்பாட்டைச் செய்தபின்னர் கலர் படம் எடுத்து இணையத்தில் விடுவதில் மாத்திரம் வீராகளாக இருக்கின்றனர்.

    எதிரியிடம் சரணடைவதல்ல. கெளரவமான வாழ்க்கை. அந்த கெளரவமான வாழ்க்கையை எதிரியிடம் இருந்து பெறமுடியாது. கெளரவமான வாழ்க்கைக்காக சரிநிகர் சமான வாழ்க்கையை நோக்கியதாக இருக்க வேண்டும். ஆனால் புலியெதிர்ப்பாளர்களே ………….. என்பதற்காக மக்களையும் ஒடுக்கும் அரச இயந்திரத்துக்குள் வாழும்படி கோருகின்றனர். அரச கட்டுப்பாடடில் வாழ்பவர்கள் தற்காலிக அமைதியை பெற்றிருக்கின்றனர். தற்காலிக உயிர் பிழைப்புத்தான். அவர்களுக்காக அரசியல் உரிமை என்ன போராட்டம் மிக நெடியதாகும்.

    “90வீத மக்களே மிகபொருத்தமானவர்கள். அவர்களை நோக்கி உங்கள் போராட்ட கோசம் மெளனமாகவிருப்பதன் காரணமென்ன!”
    எவரும் மெளனமாக இருக்கவில்லை. நிலப்பரப்பைக் கொண்டிருக்காவிடினும் புலிகள் வட- கிழக்கில் இருக்கின்றனர். கருத்துரீதியான கட்டுப்பாடு அங்கு இருக்கின்றது. இந்த கருத்தாக்கத்தை மீறினால் அங்கும் உயிர் உத்தரவாதம் இல்லை. புலிகள் இன்றும் தமது எதிர்நிலை கொண்டவர்களை கொலை செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

    மறுபுறத்தில் சிறிலங்கா ஆதரவாளர்களாகளும் மக்களை கைது/ காணாமல் போதல்/ வெள்ளை வாகன கடத்தல் என்ற வீரசாகசங்களை செய்து கொண்டுதான் இருக்கின்றனர். அரச கட்டுப்பாட்டில் வாழ்பவர்கள் ஜனநாயக காற்றையா சுவாசித்துக் கொண்டு இருக்கின்றார்கள்?ஒரு அரச இயந்திரத்துக்குள் வாழ்கின்றன மக்கள் எந்த இனம் என்றாலும் அவர்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாகாமல் இருக்க முடியாது. இவை ஒப்பீட்டு ரீதியாக வேண்டும் என்றால் மாறுபடலாம். ஆனால் ஒடுக்குமுறை நிலவும்.

    Reply
  • மாற்றுகருத்துதோழர்
    மாற்றுகருத்துதோழர்

    “நிலப்பரப்பைக் கொண்டிருக்காவிடினும் புலிகள் வட- கிழக்கில் இருக்கின்றனர். கருத்துரீதியான கட்டுப்பாடு அங்கு இருக்கின்றது.”
    புலிகளின் கருத்துரீதியான கட்டுப்பாடு வட- கிழக்கில் இருக்கின்றது என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அந்த 90வீத தமிழர்களின் போராட்டம் ஏன் தனிய புலிகளுக்கெதிரனதாக மட்டும் இருக்கவேண்டும்! அவர்கள் எதிர்கொள்ளும் அனைத்து அடைக்குமுறைக்கெதிராக (புலிகளின் அடைக்குமுறைக்கும் எதிராக) பரந்துபட்டளவில் இருந்தால் புலிகள் அந்த மக்களை என்ன செய்துவிடமுடியும். எனெனில் இராணுகட்டுப்பாட்ட பிரதேசத்திலுள்ள புலிகள் தமிழ்மக்களை நம்பிதான் உள்ளனர்.

    Reply
  • Puvee
    Puvee

    //இன்று புலிகளின் போராட்ட முறையினால் மக்கள் தாம் இன்று உயிர்வாழ்வதே மிக முக்கியமானதாக இருக்கின்றனர். இன்றைய நிலையில் மக்கள் போராடும் நிலை இல்லைதான். ஆனால் எவ்வளவு காலம் திறந்த வெளிச்சிறையில் அவர்கள் வாழ்வார்கள்? வட- கிழக்குப் பகுதியில் உள்ள மக்கள் சுதந்திரமாக வாழ முடிகின்றதா?// xxd

    நீங்களும் உங்களைப் போன்றவர்களும் குறிப்பிடுவதில் நான் உடன்படுகிறென். ஆனால் இன்றுள்ள நிலையில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதனை எவ்வாறு மேற்கொள்ள முடியும். புலிகளின் முட்டாள்தனமான இராணுவப் போக்கும் புலிஎதிர்பாளர்களின் அரச ஆதரவும் தமிழ் மக்களுக்கு உதவவில்லை. அப்படியானால் வேறு என்ன வழி அது பற்றி விவாதிப்பது பயனுள்ளதாக இருக்குமே.

    Reply
  • palli
    palli

    //(புலிகளின் அடைக்குமுறைக்கும் எதிராக) பரந்துபட்டளவில் இருந்தால் புலிகள் அந்த மக்களை என்ன செய்துவிடமுடியும்.//

    சரியான கேள்வி. ஆனால் இதை இந்த தேசத்தில் கேப்பதை விட. நம்தேசத்தில்(அங்கு) புலியிடம் கேப்பதே நன்று. அதுசரி எப்போதாவது இந்த
    கேள்வியை புலிக்கு புண்ணாக்கு கொடுப்பவர்களிடம் கேட்டதுண்டா?? தோழரே எந்த ஒரு கேள்வியும் கேக்குமிடத்தை பொறுத்துதான் அதுக்குரிய
    தகமையை பெறுகிறது.
    பல்லி.

    Reply
  • xxd
    xxd

    “நீங்களும் உங்களைப் போன்றவர்களும் குறிப்பிடுவதில் நான் உடன்படுகிறென். ஆனால் இன்றுள்ள நிலையில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதனை எவ்வாறு மேற்கொள்ள முடியும். புலிகளின் முட்டாள்தனமான இராணுவப் போக்கும் புலிஎதிர்பாளர்களின் அரச ஆதரவும் தமிழ் மக்களுக்கு உதவவில்லை. அப்படியானால் வேறு என்ன வழி அது பற்றி விவாதிப்பது பயனுள்ளதாக இருக்குமே.”

    நல்ல கருத்து இதனைத் தான் நாம் வலியுறுத்துகின்றோம். இதற்கான போராட்டத்தலைமை என்பது பலவீனமாகவே இருக்கின்றது. இதுதான் யதார்த்தம்.

    முதலில் வெளிநாடுகளில் உள்ளவர்கள் ஒரே நேரத்தில் பாசீச சக்திகளின் ஒடுக்குமுறைக்கான போராட்ட வடிவங்களை தொடர்வது அவசியமாகின்றது. வெளிநாடுகளில் இருப்பவர்கள் அரச பாசீசத்தின் ஆதரவுகளாக செயற்படுவதை நிறுத்தும்படியான போராட்டத்தை தொடர வேண்டும். இவ்வான செயற்பாடுகள் தளத்தில் உள்ள ஜனநாயக சக்திகளுக்கு ஒரு பலத்தைக் கொடுக்கும்.

    முன்னர் குறிப்பிட்டது போன்று பாசீச சிறிலங்கா அரசை அம்பலப்படுத்துவது புலிகள் மக்களுக்கான ஜனநாயகத்தை வழங்கக் கோருவது. இவைகளை நோக்கிய போராட்டமே தற்போதைக்குத் தேவையாகும்.

    Reply
  • Thaksan
    Thaksan

    வன்னியில் காயப்பட்டு வந்து வவுனியா ஆசுபத்திரியில் இருக்கும் சனத்துக்கு (65) உதவ யாருமில்லை. 3 நாளாக மாத்த உடுப்பு கூட இல்லாமல் கஸ்டப்படுதுகளாம். அவையை பராமரிக்க அவையின்ட உறவினர்களை கூட வர புலி பொடியள் விடேல்லையாம். பாஸ்க்கு பிணைக்கு ஆள் வேணுமெண்டு நிக்கினமாம். இது மிகைப்படுத்தல் இல்லை. 2 காலையும் ஆமியிண்ட செல்லுக்கு பறி குடுத்து இப்ப வவுனியா ஆசுபத்திரியில இருக்கிற ஒரு பெண் அரச உத்தியோகத்தர்(விவசாய திணைக்கள) சொன்ன சோக நிகழ்வு இது. அவவின்ட கணவனை கூட வவுனியா வர விடேல்லையாம் புலி போராளியள். நிலமையை கற்பனை பண்ணி பார்த்தால் புரியும் சனம் படுற பாட்டை. சிவசக்தி ஆனந்தனும் கிசோரும் (பா.உ.க்கள்)ஆசுப்பத்திரிக்கு விசிட் பண்ணினவையாம். நாங்கள் என்ன செய்ய? கவலைப்படாதயுங்கோ ஜனாதிபதிக்கு தந்தி அடிக்கிறம் எண்டினமாம். அங்க போன புளொட்காரர் சஸ்டஜினும் உடுப்பும் சுடுதண்ணி போத்தலும் குடுத்து வேற என்ன வேணும் எண்டும் கேட்டிச்சினமாம். வவுனியா கடைக்காரன்களை கேட்டால் தெரியும் புளொட்காரர் எப்பிடி சாமான் வேண்டினவை எண்டு. தெருத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளளையாருக்கு உடைச்ச கதைதான் போங்கள்.

    Reply