அரசாங்கத்தின் 48 மணிநேரக்காலக்கெடு முடிவடைந்துவிட்டது. ஆழ ஊடுருவும் படை ஊடுருவுமா? – ஏகாந்தி

sl_navy.jpgஇலங்கையில் அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் நடைபெற்றுவரும் யுத்தத்தில் மனிதாபிமான நெருக்கடிமிக்க ஒரு கட்டத்தில் தற்போதைய யுத்த நிலை காணப்படுகின்றது. மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் மாவிலாறில் ஆரம்பித்த எதிர்நடவடிக்கை படிப்படியாக முன்னேற்றமடைந்து இன்று விடுதலைப்புலிகளின் பலத்தை சுமார் 35 சதுர கிலோமீற்றர் பரப்புக்குள் முடக்கியுள்ளது. விடுதலைப் புலிகளின் கேந்திர முக்கியத்துவமிக்க பல இடங்களை படையினர் கைப்பற்றியுள்ள நிலையில் தற்போது முல்லைத்தீவை கைப்பற்றுவதில் அரச படையினர் முழுமூச்சாக இருப்பதாக தெரிகின்றது.

இங்கு அவதானிக்கக்கூடிய முக்கிய விடயம் விடுதலைப் புலிதரப்பில் கட்டுப்பாட்டுப் பிரதேச எல்லை சுருங்கியுள்ளதால் இப்பிரதேசத்தினுள் சிக்கியுள்ள பொதுமக்களின் நிலை என்னவாகும் என்பதாகும்.

வன்னி நிலப்பரப்பில் அகப்பட்டிருக்கும் பொதுமக்களின் எண்ணிக்கைப் பற்றி இதுவரை உத்தியோகபூர்வமான கணிப்பீடு வெளியிடப்படவில்லை. பொதுவாக 2 இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் இப்பிரதேசத்தினுள் இருக்கலாம் என கூறப்படுகின்றது. நேற்றைய தினம் (31) அமைச்சர் மஹிந்த சமரசிங்க முல்லைத்தீவுப் பிரதேசத்தினுள் 1 இலட்சத்து 20ஆயிரம் மக்கள் இருப்பதாக கிடைக்கும் தகவல்களின் ஊடாக உறுதிப்படுத்த முடியுமென தெரிவித்தார்.

எவ்வாறாயினும் முல்லைத்தீவுப் பிரதேசத்துக்குள் பெருமளவு பொதுமக்கள் சிக்குண்டுள்ளார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் வன்னி நிலப்பரப்பில் மோதல் நடைபெறும் பிரதேசங்களிலுள்ள பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வருவதற்கு அரசாங்கம் வழங்கிய நாற்பத்தெட்டு மணித்தியால கால அவகாசம் நேற்று இரவுடன் முடிந்தது.

palitha_koahana.jpg48 மணி நேர கெடு முடிந்ததும், ராணுவம் தாக்குதலைத் தொடங்கி விடும் என இலங்கை வெளியுறவு செயலாளர் பலித கொஹனா எச்சரித்துள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளன. ஆனால் இந்த கெடுவை ஏற்று அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் மிகவும் சொற்ப எண்ணிக்கையிலான தமிழர்களே இடம் பெயர்ந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இது பற்றி இராணுவப் பேச்சாளர் உதயநாணயக்கார தகவல் தெரிவிக்கையில்  கடந்த 48 மணி நேரத்தில் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்த 171 சிவிலியன்கள் பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக  தெரிவித்தார். அதேநேரம்,  பாதுகாப்புப் படையினரால் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தை நோக்கி பொது மக்கள் வருகை தந்துள்ளனரா இல்லையா என்பது தொடர்பாக தகவல்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

விசுவமடு பிரதேசத்தை நோக்கி நேற்றுக் காலை 16 குடும்பங்களைச் சேர்ந்த 63 சிவிலியன்கள் இராணுவத்தினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களில் 38 ஆண்களும், 25 பெண்களும் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, முல்லைத்தீவு வலைமடு பிரதேசத்திலிருந்து புல்மோட்டையை நோக்கி 43 சிவிலியன்கள் கடற்படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர்.

43 சிவிலியன்களில் 16 சிறுவர்களும், 14 ஆண்களும், 13 பெண்களும் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். இரு சிறிய ரக படகுகள் மூலமே இவர்கள் வருகைத் தந்துள்ளதாகவும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, வவுனியா, ஓமந்தைச் சோதனைச் சாவடியை நோக்கி 35 குடும்பங்களைச் சேர்ந்த 65 சிவிலியன்கள் நேற்று முன்தினம் அதிகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையான நேரத்திற்குள் வருகை தந்துள்ளனர். இந்த 65 சிலியன்களில் 12 சிறுமிகள், 10 சிறுவர்கள், 34 பெண்கள் மற்றும் 9 ஆண்களும் அடங்குவதாகவும் இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். இந்த நிலையில், 48 மணி நேர கெடு முடிந்துள்ள நிலையில் இராணுவம் மீண்டும் தாக்குதலைத் தொடங்குமிடத்து பொதுமக்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியாகிவிக் கூடிய நிலையுள்ளதுடன்,  ராணுவம் நடத்தப் போகும் கடும் தாக்குதலில் சிக்கி பெருமளவில் உயிரிப்புகள் ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது.

முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு, விஸ்வமடு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் யுத்தம் நடைபெறுகின்றது. பரந்தன் முல்லைத்தீவு வீதியில் A35 மையமாக வைத்தே நடைபெறும் இந்த யுத்தம் முடிவுக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக படைத் தரப்பு கூறுகின்றது. 15 கிலோமீற்றர் X 15 கிலோமீற்றர் பரப்பளவில் புலிகள் உள்ளதாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்படும் அதேநேரத்தில் இப்பகுதியினுள்ளே பொதுமக்களை கேடயங்களாக புலிகள் பயன்படுத்தி வருவதாகவும் அரச தரப்பு அறிவிக்கின்றது.

தற்போது புலிகளின் வசம் எஞ்சியிருக்கும் முக்கிய நகரான புதுக்குடியிருப்பை பிடித்துவிடவே படையினர் முயல்கின்றனர். இந்த நகரையும் கைப்பற்றி விட்டால் A35 வீதியையும் கைப்பற்றி புலிகளுக்கான கடைசி விநியோகப் பாதையையும் மூடிவிட முடியும் என கருதுகின்றனர். அத்துடன்,  புலிகளின் பகுதியையும் மிகவும் குறுகளாக்கி A35 வீதிக்கு வடக்கே செவ்வகம் போன்றதொரு பகுதிக்குள் முடக்கிவிட வேண்டுமென கருதுவதால் எட்டுத் திக்கிலிருந்தும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதேநேரம் விடுதலைப் புலிகள் கடல் மார்க்கமாக தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காகவும், முல்லைத்தீவு கடற்பரப்பில் தங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அதிவேக டோறா பீரங்கிப் படகுகள், தாக்குதல் படகுகள், விரைந்து தாக்குதலை நடத்தும் படகு அணிகள் என முல்லைத் தீவு முதல் வட மேற்கே சாலை வரையான கடற்பரப்பு பலத்த பாதுகாப்பு வலயமொன்றை அமைத்துள்ளனர். தரையில் தற்போது படையினர் புலிகளின் பகுதியை U வடிவில் சுற்றி வலைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Protest_UK_Jan31எனவே இலங்கையின் களநிலைகள் இவ்வாறிருக்க முன்னெப்போதுமில்லாத வகை சர்வதேச ரீதியில் தமிழ் மக்களின் உணர்வலைகள் ஒன்றிணைந்து வெளிப்படுவதையும் காணக்கூடியதாகவுள்ளது. ஆனாலும்,  இத்தகைய கவனயீர்ப்பு நடவடிக்கைகளினால் இலங்கை அரசாங்க நடவடிக்கைகளுக்கு பாரிய தாக்கங்கள் ஏற்படுவதை காணமுடியவில்லை.

banki-moon.jpgசிலதினங்களுக்கு முன்பே ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பங்கிமூங் வெளியிட்டிருந்த கருத்துக்களைப் பார்க்கும்போது வன்னியில் சிவிலியன்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பு வலயமொன்றை அறிவித்தமையை பான் கீ மூன் வரவேற்றிருந்தார்.

மோதல் நடைபெறும் பகுதிக்குள் சிக்குண்டுள்ள மக்களின் நிலை குறித்த அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வழிகளை உறுதிப்படுத்துமாறு இலங்கை இராணுவத்தினருக்கும்,  விடுதலைப் புலிகளுக்கும் ஐ.நா.பொதுச் செயலாளர் பான்கீ மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனினும் போர்நிறுத்தத்திற்கான சர்வதேசத்தின் அழைப்புகளுக்கு மத்தியிலும் வெற்றியில் கவனத்தைக் குவித்து இலங்கை இராணுவம் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இந்நிலையில், தங்களுக்கு பாதுகாப்பான இடம் எதுவென்று மக்கள் உணருகிறார்களோ அங்கு செல்வதற்கு மக்களை அனுமதிக்கவேண்டுமென விடுதலைப்புலிகளைக் கோரியுள்ள ஐ.நா.செயலர், மோதல் நடைபெறும் பகுதிகளிலிருந்து வெளியேறும் மக்கள் சர்வதேச நடைமுறைமைகளுக்கேற்ப நடத்தப்படுகிறார்கள் என்பதை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் வன்னி மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளபோதிலும் அங்குள்ள மக்களின் நிலை குறித்து தான் தொடர்ந்தும் கவலையடைவதாக பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

மேலும், சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் பிரகாரம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வெளியேறுவதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை உண்மைத் தன்மையுடன் ஏற்படுத்தவும் தம்மால் இயன்ற அனைத்தையும் விடுதலைப் புலிகளும் அரசாங்கமும் மேற்கொள்ளவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதுதவிர, விரும்பிய இடங்களுக்கு மக்கள் செல்வதற்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் அதேவேளை, மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு மனிதாபிமான அமைப்புகள் முழு அளவில் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமெனவும் கேட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் நிலைவரம் மிகவும் துக்ககரமாக இருப்பதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க அரச திணைக்களம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகளை ஐ.நா.வின் உதவி அமைப்புகளுடன் இணைந்து அமெரிக்கா மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. அரச திணைக்களத்தில் செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கும் நாளாந்த நிகழ்வின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனைத் தெரிவித்த திணைக்களத்தின் பேச்சாளர்களில் ஒருவரான ரொபேர்ட் வூட், மோதல்கள் விரைவில் முடிவுக்கு வருமென அமெரிக்கா நம்புவதாகவும் தெரிவித்தார்.

unicef_2301.jpgஇந்நிலையில், மோதல் பகுதிக்குள் சிக்குண்டுள்ள சிறுவர்களின் நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ள ஐ.நா. சிறுவர் பாதுகாப்பு நிதியம் (யுனிசெப்), கொல்லப்படும் அல்லது காயமடையும் சிறுவர்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.  மேலும் இங்கு நடைபெறும் மோதல்களால் சிறுவர்கள் கொல்லப்படுவது குறித்தும் காயமடைவது குறித்தும் தங்களிடம் தெளிவான ஆதாரங்கள் இருப்பதாக யுனிசெப்பின் தென்னாசியாவுக்கான பிராந்திய பணிப்பாளர் டானியல் ரூல் தெரிவித்துள்ளார்.

மேலும் எந்தவொரு சூழ்நிலையிலும் பாடசாலைகள் மற்றும் மருத்துவ நிலையங்கள் என்பன பாதுகாப்பு வலயங்களாக கருதப்படவேண்டுமெனத் தெரிவித்துள்ள அவர், மோதல் பகுதிக்குள் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் சிக்கியிருப்பது குறித்து தாம் மிகுந்த கவலையடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  இப் பகுதிகளில் இருக்கும் சிறுவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டுமெனவும் யுனிசெப் அரசாங்கத்தையும் விடுதலைப் புலிகளையும் கேட்டுள்ளது.

redcrose2801.jpgமோதல்கள் காரணமாக காயமடைந்து வன்னிப் பிரதேசத்தின் மீட்கப்படாத பிரதேசங்களில் சிக்கியிருக்கும் பொது மக்களை அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு கொண்டு வருவது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவை சங்க குழு (ஐ.சி.ஆர்.சி) அரசாங்கத்துடனும் விடுதலைப் புலிகளுடனும் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கின்றது.  அரச கட்டுப்பாடற்ற பகுதியில் மேலதிக வைத்திய உதவி தேவைப்படும் மக்கள் பெருமளவில் உள்ளனர். இந்நிலையில் அவசர சிகிச்சை தேவைப்படுகின்ற இவர்களுக்கு உதவுவது அவசியமானதென்று சர்வதேச செஞ்சிலுவை சங்கம் இரு தரப்பினரையும் வலியுறுத்தியுள்ளதாகவும் அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சரசி விஜயரட்ண தெரிவித்தார்.

குறிப்பாக மோதல்கள் நடைபெற்றுவரும் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திலேயே பெருமளவு பொதுமக்கள் ஷெல் தாக்குதல்களால் படுகாயமடைந்து உரிய வைத்தியசாலை வசதிகளின்றி பெரும் அவல நிலையை எதிர்கொள்வதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அரசாங்கத்தின் காலக்கெடு நேற்று நள்ளிரவுடன் முடிவுற்றது. இதைத் தொடர்ந்து வன்னி நிலைகள் குறித்த செய்திகளை இச்செய்தி எழுதப்படும்வரை தெரிந்துகொள்ள முடியவில்லை. படைத் தரப்பிலிருந்து கிடைக்கும் உத்தியோகப்பற்றற்ற தகவல்களின் அடிப்படையில் முல்லைத்தீவில் புலிகளைப் பிடிப்பதற்கு ஆழ ஊடுருவும் படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என தெரியவருகின்றது.

Show More
Leave a Reply to mutugan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • mutugan
    mutugan

    கவலைப் படதீர்கள். நேற்றைய ஒரு லட்சம் பேரும் அங்கு போய் போராடி மீட்டு வருவார்கள்!

    Reply
  • Nalan
    Nalan

    தம்பிமார் சும்மா ஜமாய்ச்சி சிங்கள இராணுவத்திட்ட இருந்து எங்கட மக்கள காப்பாத்துவார்கள்.

    weldone prapakaran

    Reply
  • Mr.Cool
    Mr.Cool

    விடுதலைப் புலிகளுடன் போரிட மூவாயிரம் இந்திய இராணுவம் முல்லைத்தீவு சென்றது- தமிழகத் தலைவர்கள் தகவல் –

    3,000 இந்திய இராணுவத் துருப்புக்கள் வெள்ளிக்கிழமை மாலை இலங்கை நேரடிப்படி 4 மணிக்கு அங்கு தரையிறங்கியதாகவும் அவர்கள் அனைவரும் உடனடியாக கொழும்பு ஊடாக முல்லைத்தீவை நோக்கி விடுதலைப் புலிகளுடன் போரிட செல்வதாகவும் இந்தியத் தலைவர்கள் கூறுகின்றனர். இந்திய பாரதிய போர்வேட் பிளாக் கட்சியின் தலைவர் நகைமுகன் இதுபற்றி கூறுகையில்; இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ அறிவித்த 48 மணிநேர காலக்கெடுவுக்குள் இந்தியாவிலிருந்து வந்த 3000 இராணுவத்தினர் முல்லைத்தீவை நோக்கி பயணித்துள்ளனர். அவர்கள் அனைவரும் முல்லைத்தீவிலுள்ள விடுதலைப்புலிகளுடன் நேரடியாக போரிடச்செல்கின்றனர்.

    இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் நமது தமிழக முதல்வருக்கு வெள்ளிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் சொல்லப்படுவது உண்மையல்ல. ஐ.நா.வின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் டில்லி வருவதற்கு முன்பே இலங்கைக்கு நமது படைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அண்மையில் புலிகளால் கல்மடு அணை தகர்க்கப்பட்ட போது ஏற்பட்ட இழப்பில் இந்திய படைகள் மிக மோசமான இறப்புக்களை சந்தித்துள்ளன. அதை ஈடுகட்டவே , இன்றைக்கு (வெள்ளிக்கிழமை) 3000 இந்தியப் படைகள் இலங்கை சென்றுள்ளன. இதற்கு தன்னிடம் ஆதாரமுள்ளதாகவும் கூறினார்.

    இந்தத் தகவலை உறுதி செய்யும் விதமாக தமிழர் களத்தின் அமைப்பாளர் அரியமாவளன் திருச்சியிலிருந்து கூறுகையில்; 3000இந்தியத் துருப்புக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை இலங்கையில் இறங்கியுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் முல்லைத்தீவை நோக்கி போரிடச் செல்வதாகவும் கூறினார்.

    இதேவேளை, தஞ்சாவூர் விமானத் தளத்திலிருந்து இலங்கைக்கு போர் கருவிகள் அனுப்பப்படுவதாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுசெயலாளர் பெ.மணியரசன் கூறியுள்ளார். இது குறித்து தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ; இலங்கை சென்ற பிரணாப் முகர்ஜி போர் நிறுத்தம் கோர மறுத்து விட்டார். அப்பாவித் தமிழர்களைக் கொல்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்றுதான் அவர் கூறியிருக்கிறாரே தவிர, தமிழர்களைக் கொல்லாதீர்கள் என்று கூறவில்லை.

    தஞ்சாவூர் விமானத் தளத்திலிருந்து இலங்கையின் பலாலி விமானத் தளத்துக்கு ஆயுதங்களை இந்திய அரசு அனுப்பிக் கொண்டிருக்கிறது. எனவே, தஞ்சாவூர் விமானப் படைத்தளத்தை மூட வேண்டும் என்று வலியுறுத்தி விமானத் தளத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என்றார்.

    Reply
  • mutugan
    mutugan

    சாவகச்சேரி கனகம்புளியடியில் வதனனையும் பெற்றோரையும் கொன்று வங்காலையில் ஒரு குடும்பத்தை குதறிக் கொன்று அவர்களின் இரத்தம் காய முன்னமே இன்ரநெற்றில் படம் போட்ட புலிகள் இன்று புதினத்திலும் சங்கதியிலும் நியூஸை போட்டு விடடு சனத்திற்கு செல்லடித்து கொல்லுகிறார்கள்.

    Reply
  • ஏகாந்தி
    ஏகாந்தி

    வன்னியில் மோதல் நடைபெறும் பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை விடுவிப்பதற்காக அரசு விடுத்த 48 மணித்தியால காலக்கெடு முடிவடைந்துள்ளதைத் தொடர்ந்து அங்குள்ள மக்களை மீட்பதற்கான இராணுவ நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மோதலில் சிக்கியுள்ள மக்களை விடுவிப்பதற்காக இராணுவ நடவடிக்கையை படையினர் முன்னெடுப்பார்கள் என பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.

    “இராணுவத்தினர் பொதுமக்களைக் காப்பாற்றுவதற்காக முன்னேற வேண்டியுள்ளது. அதனால் பொதுமக்கள் மத்தியில் ஒழிந்துள்ள விடுதலைப் புலிகளின் தலைவரைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை தொடரும்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரபாகரன் தன்னைப் பாதுகாப்பதற்காக பொதுமக்களைப் பயன்படுத்துகின்றமை தற்போது நன்கு புலனாகியுள்ளது என்று மேலும் குறிப்பிட்டுள்ள அவர் இந்த இராணுவ நடவடிக்கைகளின்போது பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக ஆகக்கூடிய கவனம் செலுத்தப்படும்என்றும் உறுதியளித்துள்ளார்.

    இதேவேளை அரசால் ஏற்கனவே பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் தொடர்ந்தும் அவ்வாறு மோதல் தவிர்ப்பு பிரதேசமாக இருக்கும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

    Reply