மாகாணசபை தேர்தல் முடிவு: யுத்தத்திற்கான மக்கள் தீர்ப்பா? ஆளும் கட்சியில் ஒரு முஸ்லிமும் தெரிவாகவில்லை. 3 தமிழர்கள் தெரிவு. : மொஹமட் அமீன்

mahinda1402.jpgவடமேல், மத்திய மாகாண சபைகளுக்காக நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியீட்டியுள்ளது. இலங்கையில் நடைபெற்று முடிந்த வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளின் தேர்தல் முடிவுகள், யுத்தத்திற்கான மக்கள் தீர்ப்பு என சில அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இரு மாகாணங்களிலும் வெளியான முடிவுகளின்படி இரண்டு தேர்தல் தொகுதிகளைத் தவிர ஏனைய அனைத்துத் தொகுதிகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறுதிப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது. கடந்த காலங்களில் ஐ. தே. க வெற்றிபெற்று வந்த தொகுதிகள் பலவற்றில் ஐ. ம. சு முன்னணி கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளது.

அதே நேரம் இதுவரை வெளியான முழுமையான விருப்பத்தெரிவு முடிவுகளின்படி 4 மாவட்டங்களிலிருந்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஒரு முஸ்லிமாவது தெரிவாகவில்லை. 03 தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள்:

ரா. மருதபாண்டி 21544 (நுவரெலியா மாவட்டம்)
ரா.  முத்தையா 18990  (நுவரெலியா மாவட்டம்)
வே ராதாகிருஸ்ணன் 18513 (நுவரெலியா மாவட்டம்) 

6 ஆசனங்களை எதிர்பார்த்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கட்சிக்கு நுவரெலியாவில் 3 ஆசனங்கள் மாத்திரமே கிடைத்துள்ளது. அமைச்சர் சந்திரசேகரனுக்கு ஒரு ஆசனமேனும் கிடைக்கவில்லை.

வடக்கில் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு மக்கள் அங்கீகாரம்

மத்திய மற்றும் வடமேல் மாகாண மக்கள் வடக்கில் முன்னெடுத்துவரும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர். இது தேர்தல் வெற்றியை விட நாட்டுக்குக் கிடைத்த வெற்றியாகும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம் ஜெயந்த் தெரிவித்தார். தேர்தல் முடிவு தொடர்பாக கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:-

வரலாற்றில் ஒரு போதுமில்லாதவாறு பாரிய வாக்குவீதத்தினால் ஐ.ம.சு. முன்னணி வெற்றியீட்டியுள்ளது. ஐ.ம.சு. முன்னணிக்கு வாக்களித்த வாக்காளர் களுக்கும் கூட்டுக் கட்சிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வடபகுதி மக்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட அந்த மக்களை மீட்கவும் பயங்கரவாதத்தை ஒழிக்கவும் மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர். இந்த தேர்தல் முடிவுகளினூடாக சர்வதேச சமூகத்திற்கும் சிறந்த செய்தியொன்றை மக்கள் வழங்கியுள்ளனர்.

தேர்தல் மிக அமைதியாக நடந்துள்ளது. எதிர்வரும் நாட்களிலும் வன்முறைகளில் ஈடுபடாது வெற்றியை அமைதியாக கொண்டாடுமாறு மக்களை கோருகின்றோம. வெற்றியீட்டிய இரு மாகாணங்களையும் முன்னரைவிட சிறப்பாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மஹிந்த சிந்தனைக்கு மீண்டும் மக்கள் ஆணை – ஜனாதிபதி

மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்திற்கும் அரசின் கொள்கைக்கும் மக்கள் மீண்டும் ஆணை வழங்கியுள்ளதையே தேர்தல் முடிவு எடுத்துக் காட்டுகிறதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மத்திய மற்றும் வட மேல் மாகாண சபைத் தேர்தல் முடிவுகளையிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, மத்திய மற்றும் வட மேல் மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியீட்டியுள்ளது. தாயகத்தை நேசிக்கின்ற சகல மக்களினதும் வெற்றியாகவே இதனை நான் பார்க்கிறேன்.

இது நாட்டை வெற்றி பெறச் செய்துள்ள தேர்தல். அதேநேரம், எமது படைவீரர்களின் வெற்றிகளை குறைத்து மதிப்பிடவென தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் இத்தேர்தல் முடிவுகள் தோல்வியடையச் செய்துள்ளது. பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டும் இறுதி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் படைவீரர்களுக்கு இம் முடிவுகள் மட்டற்ற தைரியத்தையும் பின் சக்தியையும் வழங்கியுள்ளது.

என் மீதும், எனது அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்து செயற்பட்ட மத்திய மற்றும் வட மேல் மாகாண மக்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதேநேரம், இத்தேர்தல் வெற்றியை அமைதியாகக் கொண்டாடுமாறும் சகலரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இத் தேர்தல் முடிவுகள் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்திற்கும் அரசின் கொள்கைக்கும் மக்கள் மீண்டும் ஆணை வழங்கியுள்ளதையே எடுத்துக்காட்டுகிறது- இதனையிட்டு நான் நேர்மையாகத் திருப்தி அடைகிறேன்.

அரசாங்கம் தொடர்பாக மக்கள் மத்தியில் பிழையான அபிப்பிராயத்தைக் கட்டியெழுப்ப சில குழப்பக்காரர்கள் செய்யும் முயற்சிகளை தோற்கடிக்கும் வகையில் மக்கள் இத்தேர்தல் மூலம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளார்கள் என்பது உறுதியாகியுள்ளது-

குரூர பயங்கரவாதத்தை முழுமையாக நாட்டிலிருந்து துடைத்தெறிந்து எமது சகோதர மக்களுக்கு ஜனநாயக உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கவென அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களுக்கு இத்தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள் என்பதும் தெளிவாகிறது.

நானும் எனது அரசாங்கமும் நாட்டுக்குத் தான் முதலிடமளிக்கின்றோம். அதனால் கட்சி, நிற பேதங்களுக்கு அப்பால் புதிய இலங்கையை கட்டியெழுப்பவென சகல முற்போக்கு சக்திகளதும் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன். அமைதியாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையாளர் உட்பட சகல அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

17 ஆசனங்களை பறிகொடுத்து தேர்தலில் ஜே. வி. பி படுதோல்வி

மத்திய மற்றும் வட மேல் மாகாண சபைகளில் 18 ஆசனங்களைக் கொண்டிருந்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே. வி. பி) இம்முறை தேர்தல் மூலம் 17 ஆசனங்களை இழந்து ஒரு ஆசனத்தை மட்டுமே தக்க வைத்துக் கொண்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் மூலம் மத்திய மாகாண சபையில் ஒன்பது ஆசனங்களையும் வடமேல் மாகாண சபையில் ஒன்பது பிரதிநிதிகளையும் என்றபடி 18 ஆசனங்களை ஜே. வி. பி. பெற்றுக் கொண்டிருந்தது. இருப்பினும் இம்முறை தேர்தல் மூலம் மத்திய மாகாண சபையில் ஒரு பிரதிநிதித்துவத்தையும் பெறாத ஜே. வி. பி. வடமேல் மாகாண சபையில் ஒரு பிரதிநிதித்துவத்தையே பெற்றிருக்கிறது.

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் ஜே. வி. பி., ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்டது. இவ்வாறு போட்டியிட்டதன் மூலம் வடமேல் மாகாண சபையில் புத்தளம் மாவட்டத்தில் மூன்று பிரதிநிதிகளையும் குருநாகல் மாவட்டத்தில் ஆறு பிரதிநிதிகளையும் ஜே.வி.பி. பெற்றுக் கொண்டது.

இதே போல் மத்திய மாகாண சபையிலும் கண்டி மாவட்டத்தில் நான்கு ஆசனங்களையும் நுவரெலியா மாவட்டத்தில் மூன்று ஆசனங்களையும், மாத்தளை மாவட்டத்தில் இரு ஆசனங்களையும் ஜே. வி. பி. பெற்றிருந்தது.

இம்முறை மாகாண சபைத் தேர்தலில் ஜே. வி. பி. தனித்துப போட்டியிட்டது. இதனால் குருநாகல் மாவட்டத்தில் மட்டுமே ஒரு ஆசனத்தை வெற்றி பெற்றிருக்கிறது.

இவ்விரு மாகாண சபைகளுக்குமான தேர்தல் முடிவுகளும் ஜே. வி. பி. பாரிய பின்னடைவை அடைந் திருப்பதையே எடுத்துக் காட்டுவதாக அவதானிகள் தெரி விக்கின்றனர்.

இதே போன்று பாரிய பின்னடைவை ஏற்கனவே கிழக்கு, வட மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல்களிலும் ஜே. வி. பி. சந்தித்தது தெரிந்ததே என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

புத்தளம் – நாயக்கர்சேனை வாக்குச் சாவடி வாக்குகள் ரத்து. வடமேல் மாகாண தேர்தல் முடிவுகள் தாமதம்: புதிய தேர்தல் நடத்த ஆணையாளர் தீர்மானம்

புத்தளம் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடியொன்றில் மோசடி இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து அந்த வாக்குச் சாவடியின் தேர்தல் முடிவுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க அறிவித்துள்ளார். அந்த வாக்குச் சாவடிக்கு மாத்திரம் வேறொரு தினத்தில் தேர்தல் நடத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

47 ஆவது வாக்குச் சாவடி அமைந்துள்ள நாயக்கர்சேனை தமிழ் மகா வித்தியாலயத்திலே இவ்வாறு மோசடி நடைபெற்றதாக புத்தளம் தெரிவத்தாட்சி அதிகாரியினால் தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே குறித்த வாக்குச் சாவடி முடிவுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிக்கான தேர்தல் திகதி விரைவில் அறிவிக்கப்படுமென தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த வாக்குச் சாவடி முடிவுகள் ரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக புத்தளம் தேர்தல் தொகுதி யின் இறுதி முடிவுகள் அறிவிப்பது பிற்போடப் பட்டுள்ளது. புத்தளம் மாவட்ட முடிவுகள் மற்றும் வடமேல் மாகாண இறுதி முடிவுகள் என்பனவும் அறிவிக்கப்படாமல் பிற்போடப்பட்டுள்ளன.

1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபை தேர்தல் சட்டத்தின் 46 ஆவது சரத்தின் படியும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் குறித்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்குகள் ரத்துச் செய்யப்பட்டதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளது.நாயக்கர்சேனை தமிழ் வித்தியாலய வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க 1145 பேர் தகுதி பெற்றிருந்தனர்.

43 சுயேச்சைகளும் கட்டுப்பணம் இழந்தன

மத்திய மற்றும் வட மேல் மாகாண சபைத் தேர்த லில் போட்டியிட்ட 43 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தை இழந்துள்ளன. இச்சுயேச்சைக் குழுக்கள் எதுவும் ஐந்து சத வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறாததாலேயே கட்டுப்பணத்தை இழந்துள்ளன.

இம்மாகாண சபைத் தேர்தலில் புத்தளம் மாவ ட்டத்தில் 12 சுயேச்சைக்குழுக்களும், குருநாகல் மாவட்டத்தில் 5 சுயேச்சைக் குழுக்களும், நுவரெலியா மாவட்டத்தில் 10 சுயேச்சைக் குழுக்களும், கண்டி மாவட்டத்தில் 8 சுயேச்சைக் குழுக்களும் மாத்தளை மாவட்டத்தில் 8 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தி இருந்தன.

இது இவ்வாறிருக்க, இரு மாகாணங்களிலும் தேர்தல் நியாயமானதாகவும் சுதந்திரமானதாகவும் இடம்பெற்றதாக சுயாதீன கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்துள்ளன.

தேர்தல் தொடர்பாக 43 வன்முறைகள் இடம்பெற்றதாக கபே அமைப்பு கூறியபோதும் ஒப்பீட்டளவில் வன்முறைகள் குறைவாக இடம்பெற்றிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

அண்மைய காலப்பகுதியில் இடம்பெற்ற தேர்தல்களில் இது மிகவும் அமைதியான தேர்தல் என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். கண்டி, நுவரெலியா, மாத்தளை, குருநாகல், புத்தளம் ஆகிய 5 மாவட்டங்களிலும் பாரிய தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் எவையும் இடம்பெறவில்லை. சுமார் 65% வாக்குப் பதிவு இடம்பெற்றிருப்பதாக தேர்தல் செயலகம் தெரிவித்தது.

இ.தொ.கா., ம.ம.மு. கட்சிகளுடன் எதிர்காலத்தில் தேர்தல்கூட்டு இல்லை – எஸ்.பி. திஸாநாயக்கா கூறுகிறார்

மக்கள் இத்தேர்தலில் அளித்துள்ள தீர்ப்பை முழு மனதுடன் ஏற்றுக்கொள்வதாக மத்திய மாகாணசபைத் தேர்தலில் ஐ.தே.க.முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்ட எஸ்.பி.திஸாநாயக்கா தெரிவித்துள்ளார்.

கண்டிஅனிவத்த ஜானகி ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மாகாண சபைத்தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“நாம் யுத்தத்துக்கு எதிரானவர்கள் அல்ல. யுத்தத்துக்கு ஆதரவு அளிக்கிறோம். அதேநேரம், நாட்டின் இனப்பிரச்சினைக்கு யுத்தத்தினால் மட்டும் தீர்வுகாண முடியாது. இனப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைக்குமாறு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

நாட்டின் பொருளாதாரம் இன்று சீர்கெட்டுப்போயுள்ளது. இதனை ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியால் மட்டுமே சீர்செய்ய முடியும். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி அகிய இரு கட்சிகளும் எம்முடன் இணைந்து போட்டியிடாததால் வெற்றிபெறவில்லை.

இனிமேல் எதிர்வரும் தேர்தல்களில் இவ்விரு கட்சிகளையும் நாம் எம்முடன் இணைத்துக்கொள்ளப்போவதில்லை.

எம்முடன் இத்தேர்தலில் இணைந்து போட்டியிட்ட தமிழ்க்கட்சிகளையும் தமிழ் உறுப்பினர்களையும் பாராட்டுவதுடன், அவர்களை எமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் முன்னெடுத்துச் செல்வோம்.

சதாசிவம், பீதாம்பரம் போன்ற தலைவர்கள் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து செயற்படுவார்கள்’ என்றார்.

Show More

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • அருட்சல்வன் வி
    அருட்சல்வன் வி

    மத்திய மாகாணசபைத் தேர்தலில் கண்டி மாவட்டத்தின் இறுதி முடிவுகளும் வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளும் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் அறிவிக்கப்பட்டன.

    ஐ.ம.சு.மு. 3,63,490 வாக்குகள் பெற்று 18 உறுப்பினர்களையும் ஐ.தே.க.2,37,827 வாக்குகளைப் பெற்று 12 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது. இங்கு மொத்தம் 30 உறுப்பினர்ககளாவர். ஐ.ம.சு.மு.சார்பாக முதலமைச்சர் வேட்பாளர் சரத் ஏக்கநாயக்க 99,932, திலுன் அமுனுகம 77,179, லொகான் ரத்வத்த 70,372, எதிரிவீர வீரவர்தன 46,930, ஆனந்த அளுத்கம 45,172, திலன தென்னகோன் 30,476, மகிந்த அபயகோன் 30,170, பி.பீ.சமரகோன் 29,686, கு?ப்பு ஆராச்சி 29,637, ஆர்.ஜி.சமரநாயக்க 28,679, கே.சிறிசேன 26,676, திலக் ராஜபக்ஷ 25,957, சுனில் அமரதுங்க 25,787, கேசலா ஜயவர்தன 23,963, நிஸங்க ஹேரத் 23,477, லின்டன் விஜயசிங்க 21,302, எம்.ஜி.ஜயரத்ன 21,301, எச்.எ.ரனசிங்க 21,011.

    ஐ.தே.க.சார்பாக

    எஸ்.பி.திஸாநாயக்க 1,81,783, எம்.ஆர்.எம்.ஹம்ஜாட் 27,421, எம்.ஜெயிலாப்டீன் 26,130, சானக்க ஹகிலப்பெரும 22,447, சித்ரா மன்திலக்க 22,063, லக்கிஜயவர்தன 21,728, சிவசாமி ராஜரட்ணம் 20,228, எம்.மர்ஜான் 19,520, சாந்தினி கோங்காகே 18,472, எம்.ஹாபி 18,367, நிஹால் குணசேகர 18,115, லக்கி விஜயசிறி 16,749.

    கண்டி மாவட்டத்தில் ஐ.ம.சு.மு.பட்டியலில் ஒரு சிறுபான்மையினரும் தெரிவாகவில்லை. துரை மதியுகராஜ் 8,440, மொகமட் பாரூக் 17,660, எம்.உவைஸ் 12,493, எம்.எஸ்.செல்லமுத்து 8,086, எம்.நிஸார் 7,982, ஜே.வி.கோவிந்தராஜ் 5,390, கந்தசாமி வரதராஜா 2,573 வாக்குகள் பெற்றுள்ளனர்.

    ஐ.தே.க.சார்பாக ஒரு தமிழரும் நான்கு முஸ்லிம்களும் தெரிவாகியுள்ளனர்.

    Reply
  • அருட்சல்வன் வி
    அருட்சல்வன் வி

    புத்தளம் தேர்தல் தொகுதியில் ரத்துச் செய்யப்பட்ட நாயக்கர்சேனை தமிழ் மகா வித்தியாலய வாக்களிப்பு நிலையத்தில் எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் வாக்களிப்பை நடத்துவதற்கு தீர்மாணிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பின்போது இந்த வாக்களிப்பு நிலையத்தில் மோசடி இடம்பெற்றதாக புத்தளம் தெரிவத்தாட்சி அதிகாரியினால் அறிவிக்கப்பட்டதையடுத்து இதன் தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க ரத்துச் செய்தார்.

    இந்த வாக்களிப்பு நிலையத்தின் முடிவுகள் ரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக புத்தளம் தேர்தல் தொகுதியின் இறுதி முடிவுகளை அறிவிப்பது பிற்போடப்பட்டுள்ளதுடன்ää புத்தளம் மாவட்ட மற்றும் வடமேல் மாகாண இறுதி முடிவுகளும் பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Reply
  • அருட்சல்வன் வி
    அருட்சல்வன் வி

    மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தலில் கிடைத்தது படையினரின் நடவடிக்கைகளின் பின்னணியிலான வெற்றியே தவிர, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கிடைத்த வெற்றியல்லவென ஜே.வி.பி.சுட்டிக்காட்டியுள்ளது.

    மத்திய மற்றும வடமேல் மாகாணசபைகளுக்கான தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஜே.வி.பி.யின் பிரசார செயலாளரான விஜித ஹேரத் எம்.பி. இந்தக் கருத்தை வெளியிட்டார்.

    அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்;

    “இது யுத்த வெற்றியின் பின்னணியில் கிடைத்த வெற்றியே. இது படையினரின் நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றியே தவிர ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கிடைத்த வெற்றியல்ல.

    அரசாங்கமும் இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. அது மட்டுமல்லாது, கடந்த 2 மாதங்களாக அரச ஊடகங்கள் அனைத்தும் அரச ஊடகங்களாக இன்றி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகங்களாகவே செயற்பட்டன. அத்துடன், அரச சொத்துகள், அதிகாரிகள், வாகனங்கள் என அனைத்து அதிகாரங்களும் இந்த தேர்தலில் சுதந்திர முன்னணியினரால் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டன.

    எனினும், நாம் எப்போதும் எமது கொள்கையிலிருந்து விலகிக் செயற்பட்டது கிடையாது. அதை மதிக்கும் வகையிலான சிறந்த சுத்தமான வாக்குகளே எமக்கு கிடைத்துள்ளன. அந்த வாக்குகளை அளித்த மக்களுக்கு நாம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். எமக்கு இந்த வாக்குகள் போதுமானவையே.

    ஏனெனில், யுத்தமற்ற சூழ்நிலையில் இந்த தேர்தல் நடைபெற்றிருந்தால் முடிவுகள் மாறியிருக்கலாம். யுத்த பின்னணியிலான வெற்றியே இது. எனினும், எதிர்வரும் காலங்களிலும் நாம் எந்தவொரு சவாலுக்கும் முகம் கொடுக்க தயாராகவே இருக்கிறோம்’ என்றார்.

    Reply
  • அருட்சல்வன் வி
    அருட்சல்வன் வி

    மத்திய மற்றும் வடமேல் மாகாணசபைகளுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் வெற்றிக்கு ஜனாதிபதியே தேர்தல் சட்டங்களை மீறியிருப்பதுடன், இது அரச அதிகாரங்களும் அரச வளங்களும் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு பெறப்பட்ட வெற்றியென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்திருக்கிறது.

    மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் பெறுபேறுகள் தொடர்பாக ஐ.தே.க.வின் பொது செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க இந்தக் கருத்தை வெளியிட்டார்.

    இது அரச ஊடகங்கள் தொட்டு அரச அதிகாரிகள், அரச வளங்கள், அரச வாகனங்கள் என அனைத்து அரச அதிகாரங்களும் பயன்படுத்தப்பட்டு பெற்ற வெற்றியாகும்.

    அது மட்டுமல்லாது தேர்தல் சட்டத்தின் பிரகாரம் அன்பளிப்புகளை வழங்குவது சட்ட விரோதமாகும். எனினும் ஜனாதிபதியே கண்டியில் உணவுப் பொதி, அன்பளிப்புகள், உடுதுணிகள் போன்வற்றை மக்களுக்கு வழங்கியுள்ளார்.

    அது மட்டுமல்லாது, தேர்தல் பிரசாரத்துக்குரிய சகல அவகாசம் முடிவடைந்த பின்னரும் அரச ஊடகங்கள் மூலம் தொடர்ந்தும் அரசாங்கத்தின் பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டுவந்தன. தொலைக்காட்சி சேவைகள் மூலம் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பாக கிராமம் கிராமமாக ஒளிபரப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

    அது மட்டுமல்லாது சமுர்த்தி அதிகாரிகள் ஊடாக, தேர்தலை புறக்கணிக்குமாறு மக்களுக்கு அழுத்தம் வழங்கப்பட்டிருக்கிறது.

    நாட்டின் தற்போதைய யுத்த சூழ்நிலை காரணமாகவே அரசாங்கத்துக்கு இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. எனினும் அரசாங்கத்தினால் பெரியதொரு முன்னேற்றத்தைக் காண முடியவில்லை. பலர் கருத்து வெளியிட்டது போல் ஐ.தே.க.பாரிய சரிவை சந்தித்துவிடவும் இல்லை.

    அதிகாரங்களை பயன்படுத்தியே அரசாங்கத்தால் இந்த வெற்றியைக் கூட பெற முடிந்திருக்கிறது. நாம் எமது தோல்வியை ஏற்றுக் கொண்டாலும், அரசாங்கம் பெரியதொரு முன்னேற்றத்தை அடைந்து விடவில்லை. எமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

    வன்முறைகள் பெரிதாக இல்லாவிட்டாலும் அரசாங்கத்தினால் அதிகாரங்களும் அரச சொத்துகளும் இத் தேர்தலில் அத்துமீறி பாவிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

    Reply
  • மொகமட் அமீன்
    மொகமட் அமீன்

    மத்திய மாகாண சபைக்கு இம்முறை பல புது முகங்கள் தெரிவாகியுள்ள அதேவேளையில் முன்னாள் உறுப்பினர்களுள் பலர் தோல்வியடைந்துள்ளனர்.

    தமிழ் பேசும் உறுப்பினர்களைப் பொறுத்தமட்டில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட துரை மதியுகராஜா (இ. தொ. கா), எஸ். செல்லமுத்து (இ. தொ. கா.), கந்தசாமி யோகராஜா ஆகியோர் ஐ. ம. சு. முன்னணியில் போட்டியிட்டு தோல்வி கண்டவர்களாவர். இக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்களான றிஸ்வி பாரூக், ஏ. எல். எம். உவைஸ், எம். நிஸார் ஆகியோரும் குறைந்த விருப்பு வாக்கு களைப் பெற்று தோல்வி அடைந்துள்ளனர்.

    மாத்தளை மாவட்டத்தில் போட்டியிட்ட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம். சிவஞானம் இ. தொ. கா., மாத்தளை மேயர் ஹில்மி கரீம் ஆகியோரும் தோல்வி கண்டுள்ளனர்.

    ஐ. தே. கட்சி சார்பில் மாத்தளை மாவட்டத்தில் போட்டியிட்ட எம். எச். எம். இப்ராஹிம், எம். சுதாகரன் ஆகியோரும் தோல்வியைத் தழுவினர்.

    நுவரெலியா மாவட்டத்தில் ஐ. ம. சு. முன்னணி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் வெற்றியீட்டிய அதேவேளை முன்னாள் அமைச்சரான எஸ். அருள்சாமி, திருமதி அனுஷா சிவராஜா, புதிய வேட்பாளர்களான பழனி சத்யவேல், எல். பாரதிதாஸன், மயில்வாகனம் வேலு, கனகரத்தினம், கருப்பையா பிள்ளை, ஏ. கே. கல்யாண குமார் ஆகியோரும் தோல்வி கண்டனர்.

    இதே மாவட்டத்தில் ஐ. ம. சு. முன்னணி சார்பில் போட்டியிட்ட மருதபாண்டிய ரமேஷ், இராமசாமி முத்தையா ஆகிய இருவர் முதன் முறையாக மாகாண சபைக்குத் தெரிவாகி உள்ளனர்.

    ஐ. தே. கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான எஸ். சதாசிவம், கணபதி கனகராஜ், பீ. ஈ. திகாம்பரம் ஆகியோரும் புதிய முகம்களான பிரகாஷ் கணேஷ், உதயகுமார் ஆகியோரும் புதிய உறுப்பினர்களாக மாகாண சபைக்கு வருகிறார்கள்.

    எஸ். முருகையா, முரளி ரகுநாதன், எல். ஆர். நேருஜி, எம். ஆர். எம். ஹில்மி, எஸ். கிருஷ்ணகுமார், ஏ. ஏ. ஹரிச்சந்திரன் ஆகிய புதிய வேட்பாளர்களும் ஐ. தே. கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியுள்ளனர். இதேவேளை ஐ. ம. சு. சார்பில் ஒரு பெண் உறுப்பினர் தெரிவாகி உள்ளார். இவர் திருமதி கேஷலா ஜயவர்த்னா என்பவர் ஆவார்.

    ஐ. தே. கட்சி சார்பில் முன்னாள் உறுப்பினர்களான சித்ரா மன்திலக்க, ஷாந்தினி கோங்கஹகே ஆகியோரும் மீண்டும் தெரிவாகி உள்ளனர். ஐ. தே. கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் உறுப்பினர்களான எஸ். இராஜரட்ணம் எம். ஆர். எம். அம்ஜாத், எஸ். எம். எம். மர்ஜான், எம். எஸ். எம். ஷாபி ஆகியோர் தெரிவாகி இருப்பதுடன் புதிய உறுப்பினராக ஜெயினுலாப்தீன் லாபீர் தெரிவாகி இருக்கிறார். முன்னாள் உறுப்பினர் எம். நைமுல்லா இம்முறை தோல்விகண்டுள்ளார்.

    Reply
  • மொகமட் அமீன்
    மொகமட் அமீன்

    அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த சிலரும் தேர்தலில் தெரிவு

    வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைக்கு தெரிவாகியிருப்போரில் சிலர் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள.

    மாத்தளை மாவட்டத்திலிருந்து ஐ.ம.சு.மு.வில் முதல் இடத்துக்கு தெரிவாகியிருக்கும் பிரமித்த தென்னக்கோன் (49665) அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் மகன்.

    அதேபோன்று ஐ.தே.க.வில் முதலிடம் பெற்றி ருக்கும் வசந்த அலுவிஹார (28555), முன்னாள் அமைச்சர் அலிக் அலுவிஹாரவின் மகனாகும்.

    கண்டி மாவட்டத்தில் ஐ.ம.சு.மு.வில் போட்டியிட்ட திலும் அமுனுகம (77172), அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகமவின் மருமகன், மற்றொருவரான லொஹான் ரத்வத்த (70372), முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்வத்தவின் மகனாவார்.

    நுவரெலியா மாவட்டத்தில் ஐ.ம.சு.மு.வில் போட்டி யிட்ட சாலிய பண்டார திஸாநாயக்க (39005), எஸ்.பி. திஸாநாயக்கவின் சகோதரர்.

    மற்றொருவரான ஆர்.எஸ்.எம்.பி. ரத்னாயக்க (30114), அமைச்சர் சீ.பி. ரத்னாயக்கவின் சகோதரராகும்.

    குருநாகல் மாவட்டத்தில் ஐ.ம.சு.மு.வில் போட்டி யிட்ட சந்தன பிரசாத் யாப்பா, அமைச்சர் அநுர பிரிய தர்ஷன யாப்பாவின் சகோதரராவார். பியோமல் ஹேரத் (49848), அமைச்சர் ஜயரத்ன ஹேரத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    Reply
  • அருட்சல்வன் வி
    அருட்சல்வன் வி

    வடமேல் மாகாண தேர்தல்; குருநாகல் மாவட்டத்தில்
    போட்டியிட்டவர்களின் விருப்பு வாக்குகள்

    வடமேல் மாகாண சபைத் தேர்தலில் குரு நாகல் மாவட்டத்தில் போட்டியிட்டவர் களின் விருப்பு வாக்குகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டன. இதனடிப்படையில் ஐ.ம.சு.முன்னணி 497,366 வாக்குகள் பெற்று 24 ஆசனங்களையும் ஐ.தே.க 193,548 வாக்குகள் பெற்று 09 ஆசனங்களையும் ஜே.வி.பி. 16,084 வாக்குகள் பெற்று 01 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.

    பொதுஜன ஐக்கிய முன்னணி

    அதுல விஜேசிங்க 90295
    சோமாகுமாரி தென்னக்கோன் 67998
    எச். எம். சாந்த பண்டார 61865
    சந்தன யாபா 59500
    நெரன்ஜன் விக்ரமசிங்க 56768
    ஆர். டி. விமலதாச 54380
    பியுமல் ஹேரத் 49848
    மஞ்சுலா திஸாநாயக 47543
    எச்.எம். டிங்கிரிபண்டா ஹேரத் 43886
    குணதாஸ தெஹிகம 41171
    எச். எம். டி. பி. ஹேரத் 38371
    தோன் கமல் இந்திக 37515
    சோமசிரி குணதிலக 37952
    குமார கீர்த்தி சந்ரசிரி 32508
    ஆர். எம். பண்டார ராஜபக்ஷ 32252
    நிலந்த ஸ¤புன் ராஜபக்ஷ 31223
    அஸங்க நவரத்ன 30758
    லக்ஷமன் வேடருவ 28476
    சந்ரா கமலசிரி 28033
    டிகிரி அதிகாரி 27125
    தர்மசிரி தஸநாயக 28057
    ஷெல்டன் நிமல் பீரிஸ் 23841
    ஆர். எம். எச். கே. ராஜபக்ஷ 22020
    ஏ. பி. கீர்த்தி ரத்ன 21338

    ஐக்கிய தேசிய கட்சி

    பிரஸன்ன சமல் ஸெனரத் 40429
    றிஸ்வி ஜவாஹர்ஷா 22663
    துஷார இந்துநில் அமரசேன 20581
    ஜே. ஸி. அலவதுவல 19032
    நிமல் விஜேசிங்க 17400
    ஏ. எச். எம். அலவி 17029
    ஏ. எல். எம். நkர் 16253
    எம். தஸ்லிம் 15706
    அஜித் ரோஹன 15468

    ஐக்கிய மக்கள் விடுதலை முன்னணி

    கே. எம். நிமல்ஹேரத் 2191
    ஆகிய 34 பேர் வடமேல் மாகாண சபைக்காக குருநாகல் மாவட்டத்திலிருந்து
    தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

    Reply