Multiple Page/Post

’தொடுக்கப்பட்ட ஊழல் வழக்குகள் மீளப்பெறப்பட்டது ஏன்?’’ ஜனாதிபதி அனுர

‘’தொடுக்கப்பட்ட ஊழல் வழக்குகள் மீளப்பெறப்பட்டது ஏன்?’’ ஜனாதிபதி அனுர

69 தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்குகளில் 40 வழக்குகள் மீளப்பெறப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஜனாதிபதி அனுரா. பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் டிசம்பர் 9ஆம் திகதி நடைபெற்ற 2024 சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின தேசிய நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இக்கேள்வியை எழுப்பினார். 2013 சர்வதேச சுட்டெண்ணில் 79 ஆவது இடத்தில் இருந்த இலங்கை 2023 ஆம் ஆண்டளவில் 115 வது இடத்தைப் பிடித்துள்ளது. எனவே சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் ஏன் கொண்டாடப்படுகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊழல் வழக்குகள் மீளப் பெறப்பட்டமைக்கான காரணம் மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். விசாரணை அதிகாரிகள் வழக்குகளில் சாட்சிகளாகாதது ஏன் என்பதற்கான காரணங்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஒரு வருடமொன்றில் இரண்டு கான்ஸ்டபிள்கள், ஒரு கிராம உத்தியோகஸ்தர் மற்றும் ஒரு எழுதுவினைஞர் ஆகியோர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தண்டிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் சட்டம் சிலந்தி வலையைப் போன்று செயற்படுவதாக மக்கள் கருதுகின்றனர். அந்த வலையில் சிறிய விலங்குகள் சிக்குகின்றன. பெரிய விலங்குகள் சிலந்தி வலையை சேதமாக்கி தப்பிச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனடா மோகத்தால் தொடரும் கொள்ளைகள்!

கனடா மோகத்தால் தொடரும் கொள்ளைகள்!

கனடாவிற்கு அனுப்புவதாக 1 கோடி 10 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த சம்பவத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, மன்னார், மாங்குளம், கிளிநொச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வசித்து வந்தவர்களிடம் கனடாவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்கு வேலைக்கு அனுப்புவதாகவும், முதல் கட்டமாக ஒரு தொகைப் பணத்தை தருமாறும், மிகுதிப் பணத்தை கனடா சென்று வேலை செய்து கொடுக்கலாம் எனவும் கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளார்.

ஒவ்வொருவரிடமும் 5 இலட்சம் தொடக்கம் 10 இலட்சம் ரூபாய் வரை 16 பேரிடம் பணம் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட 16 பேர் வவுனியா பொலிசில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்தியதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனடா செல்வதற்காக பல லட்சம் பணத்தை பணமாற்று முகவரிடம் பெற்றுத் திரும்பிய இளைஞர் வவுனியாவில் படுகொலை செய்யப்பட்டசம்பவம் இவ்வாண்டு ஓகஸ்டில் இடம்பெற்றது தெரிந்ததே.

யார் இந்த தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணம் வந்த வெள்ளைச்சீலைக்காரிகள்..? மலையகத் தமிழர்களால் ஏன் யாழ்ப்பாணத்தில் ஒட்டியிருக்க முடியவில்லை..?

யார் இந்த தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணம் வந்த வெள்ளைச்சீலைக்காரிகள்..? மலையகத் தமிழர்களால் ஏன் யாழ்ப்பாணத்தில் ஒட்டியிருக்க முடியவில்லை..?

தமிழ்க்கவி இன்றைய ஈழத்து தமிழர் தம் இலக்கிய பரப்பில் செயற்பாட்டு நிலையில் உள்ள மூத்த எழுத்தாளர் என்பதற்கு அப்பால் இரத்தமும் சதையுமாக போராட்டத்தின் ஆரம்ப புள்ளி தொடங்கி அதன் முடிவுப் புள்ளி வரையான பக்கங்களை அதன் உள்ளிருந்து பார்த்த ஓர் தாய். இந்த நிலத்துக்கான போராட்டத்திற்காக தன் பிள்ளைகளை இழந்த ஓர் மாவீரர் குடும்பத்தின்தாய் என்பதுடன் முன்னாள் போராளியும் கூட. அவருடனான தேசம் திரை நேர்காணல் மிக முக்கியமான புள்ளிகளை தொட்டு ஊடாடுகின்றது. மலையக தமிழர்களை எல்லைப்பாதுகாவலுக்காக சிறுதுண்டு நிலத்தை வழங்கிவிட்டு ஏமாற்றிய தமிழ்தலைமைகள் பற்றியும், தமிழர்கள் 1950 ற்கு முன்பு வாழ்ந்த நிலத்துடன் இணைந்த வாழ்க்கை பற்றியும், வெள்ளைச்சீலைக்காரிகள் என்போரை தமிழகமும் தொடர்ந்து யாழ்ப்பாணமும் துரத்தி விட்ட வரலாறு பற்றியும் , மலையக தமிழர்களை ஏன் கிளிநொச்சி நிலம் மட்டுமே ஆதரித்தது என்பது பற்றியும், ஈழத்து இலக்கிய பரப்பில் எழுத்தாளர்களின் இன்றைய நிலை தொடர்பிலும் , இயற்கையை தொலைக்க முதல் தமிழனின் வாழ்வியல் – இன்று இயற்கையை தொலைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வியல் பற்றியும் மிக்க தெளிவான வரலாற்று மற்றும் நடைமுறை உரையாடலாக இந்த நேர்காணல் நிற்கிறது. இந்த நேர்காணலின் போது தமிழ்க்கவி அவர்களுடைய அடுத்த படைப்பை தேசம் பதிப்பகம் வெளியீடு செய்யும் என தேசம் ஜெயபாலன் உறுதியளித்துள்ளமையும் கவனத்தில் கொள்ளத்தக்கது..!

ஆவாகுழுவின் கொலை, கொள்ளை, கப்பம் கனடா வரை ஊசி அர்ச்சுனா – டொக்டர் சத்தியமூர்த்தி முறுகல்: சலிப்படையும் யாழ் மக்கள்!

இன்றைய செய்திகள்: 10.12.2024

ஆவாகுழுவின் கொலை, கொள்ளை, கப்பம் கனடா வரை

ஊசி அர்ச்சுனா – டொக்டர் சத்தியமூர்த்தி முறுகல்: சலிப்படையும் யாழ் மக்கள்!

1. ஜனாதிபதி அனுரா டெல்லி பயணம்: எல்லைதாண்டும் தமிழக மீனவர்கள்! தொடரும் கைதுகள்!

டிசம்பர் 7 சனிக்கிழமை சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை நெடுந்தீவுப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட 8 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இரண்டு படகுகளும் பறிமுதல். இது தவிர கடந்த டிசம்பர் 4 ஆம் திகதி 14 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த ஆண்டில் மட்டும் எல்லை தாண்டிய 537 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். 70 க்கு மேற்பட்ட மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்திய மீனவர்கள் எல்லைதாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக இலங்கை வடபகுதி தமிழ் மீனவர்கள் முறையிட்டு வருகின்றனர். மறுபுறம் இந்தியாவில் தமிழ்நாட்டிலும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் இந்திய மீனவர்களுக்கு ஆதரவான போராட்டங்களும் இடம்பெற்று வருகின்றன.

ஜனாதிபதி அநுரா திஸ்ஸநாயக்க தன்னுடைய பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தருவதாக யாழ் குருநகரில் வைத்து உறுதியளித்திருந்தார்;. டிசம்பர் 16 ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது இந்திய மீனவர்கள் பிரச்சினையை இந்திய மத்திய அரசாங்கத்தோடு கலந்துரையாடி ஒரு நிரந்தர தீர்வு எட்ட வேண்டும் என்று இலங்கை வடக்கு தமிழ் மீனவர்களின் சங்கங்களின் பிரதிநிதிகள் கோருகின்றனர்.

2. ஊசி அர்ச்சுனா – டொக்டர் சத்தியமூர்த்தி முறுகல்: சலிப்படையும் யாழ் மக்கள்!

வைத்தியரும் எம்பியுமான அர்ச்சுனா யாழ். போதனா வைத்தியசாலைக்குள் டிசம்பர் 09 இல் முன் அனுமதியின்றி நுழைந்து வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தியுடன் தகராறில் ஈடுப்பட்டு பணிக்கு இடையூறு செய்ததால் யாழ்ப்பாண பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இம் முறைப்பாடு மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தன்னுடைய அதிகாரத்தை நிலைநாட்ட மற்றவர்களுக்கு பாடம் எடுக்க வெளிக்கிடும் ஊசி அர்ச்சுனாவுக்கு கடைசியில் மிஞ்சுவது நீதி மன்ற வழக்குகள் தான். மறுபுறம் அர்ச்சுனா மருத்துவ மாபியாக்கள் தொடர்பாக கூறிய குற்றச்சாட்டுக்கள் உரிய ஆதாரங்களை சமர்பிக்க தவறியதால் சிறையும் சென்று வந்திருக்கிறார். ஊசி அர்ச்சுனா யாருக்கும் அண்மையில் ஊசிபோட்டதாகத் தெரியவில்லை. அவருக்குத் தான் ஊசி போட இடமில்லாமல் ஊசி வழக்குகள் அடிக்கடி போடப்படுகின்றது.

ஏற்கனவே ஒரு வாரத்திற்கும் முன் தம்பி தம்பிராஜா தொட்டு கொழும்பு அழைத்துச் சென்று போராடிய விடயத்தை தற்போது அர்ச்சுனாவும் தன்கையில் எடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் நேரலையில் வந்த அர்ச்சுனா இது பற்றி இவ்வாறு விளக்குகிறார். சுமார் 180க்கு மேற்பட்ட இளவயதினரை சுகாதார தொண்டர் அடிப்படையில் வேலைக்கு சேர்த்துள்ளதாகவும். வெறுமனே 5 மாதங்கள் அவர்களுக்கு சம்பளம் வழங்கியுள்ளதாகவும் நலன்புரி சங்க மூலம் சுகாதார தொண்டர் ஊழியர்களாக வேலை செய்பவர்களுக்கு நிரந்தர வேலைக்கான அனுமதி வழங்கப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊதியம்மின்றி மூன்று வருடங்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் வேலை செய்யும் சுகாதார தொண்டர் ஊழியர்களுக்காக அர்ச்சுனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் விளக்கம் கேட்க சென்றதாகவும் கூறுகிறார்.

இவர்களை நிரந்தர பணிக்கு அமர்த்துவதாக கூறி மோசடி செய்துள்ளார் வைத்தியர் சத்தியமூர்த்தி. இது பற்றிய விடயங்களை திரட்டவே சென்றேன் என கூறியுள்ளார். மேலும் த. சத்தியமூர்த்தியுடன் தான் உரையாடி குரல்பதிவை பாராளுமன்றத்தில் வெளியிட இருப்பதாகவும் பகீர் கிளப்புகிறார். மேலும் சத்தியமூர்த்தி தற்போதைய கடற்தொழில் அமைச்சர் தன்னுடைய ஆள் என கூறி தனக்கு சவால் விட்டதாகவும் , அதனையும் தான் பதிந்து வைத்துள்ளதாகவும் பெருமையடிக்கிறார்.

 

3. கஜேந்திரகுமார் எம்.பியின் வாகனத்தில் மோதுண்டு பெண்பலி – புத்தளத்தில் சம்பவம்

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் வாகனம் மோதியதில் பாதசாரி கடவையில் பயணித்த யாசகப் பெண் ஒருவர் டிசம்பர் 08 ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம், பொலவத்தை சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின்போது படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த பெண் 70 வயது நபராவார். விபத்தின்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜீப் வாகனத்தில் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் ஹன்னஸ்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான ஜீப் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், ஐந்து லட்சம் ரூபாய் சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த தகவலை வெளியிட்ட பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் கஜேந்திரகுமார் எம்.பி பயணித்த வாகனத்தில் குறித்த பெண் தானாக மோதி உயிரிழந்ததார் என்பது போன்றதான தோற்றப்பாட்டை உருவாக்கும் வகையிலான தகவல்களை பதிவு செய்துள்ளது பலருடைய விசனத்தையும் பெற்று வருகிறது. உண்மையிலேயே குறித்த பெண் பாதசாரி கடவையில் பயணித்த நிலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி பயணித்த வாகனம் மோதியே குறித்த யாசகப் பெண் உயிரிழந்துள்ளார் என்பதை தென்னிலங்கை ஊடகங்கள் பதிவுசெய்துள்ளன.

இதேவேளை இலங்கையில் தினசரி வீதி விபத்துகளாலும் – கட்டுப்பாடற்ற சாரதிகளின் வாகன ஓட்டத்தாலும் தினசரி பத்து மரணங்கள் இலங்கையின் சகல பகுதிகளிலும் பதிவாகி வரும் அதேவேளை ஒவ்வொரு ஆண்டும் மூவாயிரத்துக்கும் குறையாத வீதிவிபத்து மரணங்கள் நிகழ்வதாக இலங்கையின் கடந்த கால பதிவுகள் தெரிவிக்கின்றன. விபத்துக்கள் அதிகாலை நான்கு மணியளவிலேயே அதிகம் நிகழ்வதையும் தேசம்நெற் சுட்டிக்காட்டியிருந்தது.

4. ஆவாகுழுவின் கொலை, கொள்ளை, கப்பம் கனடா வரை

யாழ்ப்பாணத்தை பிரதான தளமாக கொண்டு இயங்கிவரும் வன்முறைக்கும்பல் ஆவா குழுவின் தலைவர்களில் ஒருவனான அஜந்தன் சுப்பிரமணியம் எனவும் பிரசன்னா நல்லலிங்கம் என அழைக்கப்படுபவர் அண்மையில் கனேடிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இலங்கையில் 45 முறைப்பாடுகள் இவருக்கு எதிராக பொலிஸில் செய்யப்பட்டுள்ளன. யாழ் நீதிமன்றம் 9 தடவைகள் பிடியாணையை பிறப்பித்துள்ளது. சிவக்குமார் ஜீவரட்டணா என்ற நபரின் கொலை குற்றத்திற்காகவும் இவர் இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வரும் போது, கடல் மார்க்கமாக இந்தியா தப்பிச் சென்று, அங்கிருந்து முகவர் மூலம் பிரான்ஸ் வந்தாகவும் கூறப்படுகிறது . இன்னுமொரு தகவலின் படி கொழும்பில் தலைமறைவாகியிருந்து முகவர்கள் மூலம் போலிப் பெயரில் பிரான்ஸ்க்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. பிரான்ஸ்ஸிலும் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளார். கொலையும் செய்துள்ளார்.

பிரான்ஸ் லார்க்கூர்னேயில் இயங்கிய ‘எல் சி போய்ஸ்’ (டுஊ டீழலள அதாவது லார்க்கூர்னே பையன்கள்) என்ற ரவுடிக்குழுக்கும் பிரசன்னா தலைமையிலான ஆவா குழுவுக்கும் அடிக்கடி மோதல் சம்பவங்கள் பொலிஸாரின் பதிவிற்கு வந்ததாகவும் கூறப்படுகின்றது. பிரான்ஸில் இடம்பெற்ற கொலைத் தாக்குதலுக்காக பிரசன்னா இன்ரப்போல் பொலிஸாரால் தேடப்பட்டார். விரைவில் சன்னா பிரான்ஸ்க்கு நாடு கடத்தப்படவுள்ளார்.

கனடாவில் தலைமறைவாகியிருந்த பிரசன்னா கனடாவிலும் கடத்தல், களவு மற்றும் கப்பம் என தொடர்ந்தபோது கனேடிய பொலிஸாரால் மடக்கிப்பிடிக்கப்பட்டார். இந்த கைதின் பின்னணியில் கனடா வாழ் ஒரு தாயும் மகளும் சம்பந்தப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளத்தில் செய்திகள் வெளியாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கனடாவில் கைதுசெய்யப்பட்ட இவரின் நெருங்கிய சகாவான ஆவாகுழுவின் பிரதான தலைவனான வினோத்தின் அட்டகாசங்கள் இன்னமும் இலங்கையில் தொடர்கின்றது. இந்த வருடம் ஓகஸ்டில் வெளிநாடு செல்ல டொலர் மாற்ற சென்ற இளைஞன் வவுனியாவில் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் ஆவா குழு வினோத் தொடர்புபட்டுள்ளதாக இந்தோனிசியாவில் இருந்து தேசம் நெட்டுக்கு அறியவந்துள்ளது.

இலங்கையில் ஆவாகுழுவால் இடம்பெற்று வரும் சமூக விரோதச் செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர யாழ் பொலிஸார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். கனடாவில் கைதாகியுள்ள ஆவா குழு பிரசன்னாவிடம் இலங்கை பொலிஸார் கனடாவிற்கு சென்று விசாரணை செய்ய வேண்டும் எனவும் இலங்கையில் இக்குழுவோடு தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்துகின்றனர்.

5. இயற்கையை அழிக்கும் மனிதன்: இராணுவம் வெளியேறிய அன்றிரவே மரக்கடத்தல்!

முல்லைத்தீவில் தனியாருக்குச் சொந்தமான 80 ஏக்கர் காணியிலிருந்த இராணுவம் அரசகாணிக்குச் சென்ற அதேயிரவு அதற்கு அருகில் அரச காணியிலிருந்த தேக்கு மரங்கள் அன்றிரவே மரக்கடத்தல் காரர்களால் வெட்டி ஏற்றிச் செல்லப்பட்டுள்ளதாக அப்பகுதியில் வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர். அப்பகுதியிலிருந்த 80 தேக்குமரம் மரக்கடத்தல் காரர்களால் வெட்டி ஏற்றப்பட்டுள்ளது. இராணுவம் தனியார் காணிகளிலிருந்து வெளியேறி அரச காணிகளுக்கு செல்வதுடன் தடுப்பு முகாம்களையும் நீக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தேசிய மக்கள் சக்தி தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உறுதியுடன் செயற்பட்டு வருகின்றது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோத மண் அகழ்வு, காடுகளில் உள்ள மரங்களை சட்டவிரோதமாக வெட்டிக் கடத்துவது, குளங்களை மண்போட்டு நிரப்பி காணிகளைக் கைப்பற்றுவது போன்ற சூழலியல் கொடுமைகள் பரவலாக நடைபெறுகின்றது. இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் கையுமெய்யுமாக மாட்டியதும் உச்சிக்கொண்டு வெளிநாடுகளுக்கு ஓடி வந்து அரசியல் தஞ்சம் கோருகின்றனர். திடீர் பணக்காரன் ஆகவேண்டும் என்ற கனவில் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளைச் செய்தாவது பணமீட்டுவதில் தவறில்லை என்ற எண்ணம் பலரிடம் பரவலாகக் காணப்படுகின்றது.

ஆவாகுழுக்கள் போதைப் பொருள் கடத்தல் எல்லாமே திடீர் பணக்காரர் ஆகவேண்டும் என்று விரும்புபவர்களால் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவருகின்றது. சமூகத்தின் அடிப்படை விழுமியங்கள் ஆட்டம் காண, பிறள்வான கருத்துக்கள் விழுமியங்களாக மாறிவருகின்ற அபாயம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

6. 1984 இல் வெளியேறியவர்கள் 2024 மீள் குடியமர்த்த கோரிக்கை

முல்லைத்தீவு ஆண்டாள் குளம், தண்ணிமுறிப்பு கிராமங்களில் மக்களை மீள் குடியமர்த்த அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும் என வன்னி மாவட்ட தமிழரசக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார். இராணுவ கெடுபிடிகள் காரணமாக 1984இல் இக்கிராம மக்கள் அவ்விடங்களை விட்டு வெளியேறினர். கடந்த 40 ஆண்டுகளாக அப்பிரதேசங்களுக்கு மக்கள் மீளவில்லை. அவ்வாறு மீள்குடியேறுவதற்கான கட்டமைப்புகளும் அக்கிராமங்களில் இல்லை. இந்நிலையில் அக்கிராமங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொண்டு அம்மக்களை மீள்குடியமர்த்துவதற்கான முயற்சிகள் எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் விரைந்தும் எடுக்கப்பட வேண்டும். மேலும் அப்பகுதியிலுள்ள குருந்தூர் குளத்தின் அபிவிருத்தி தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கவனம் செலுத்தியுள்ளார்.

தமிழரசுக் கட்சி தமிழ் மக்களுக்கானஅபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகளைப் பட்டியலிட்டு அதைநோக்கி தங்களுடைய செயற்பாடுகளையும் பாராளுமன்ற செயற்பாடுகளையும் நகர்த்திச் செல்ல வேண்டும் என்கிறார் ஆய்வாளர், கலைஞர் மாவடி ஏஅர் சிறிதரன். எழுந்தமானமாக நாளுக்கொரு அழுத்தம் கொடுக்கும் கதையாடல்களைத் தவிர்த்து கட்சியாக செயற்பட்டு இந்த இந்த விடயங்களை இப்பாராளுமன்ற காலத்துள் செய்வோம் என்ற அடிப்படையில் இயங்க வேண்டும். ஏனைய கட்சிகளோடு. வட மாகாண ஆளுநரோடு, அரசோடு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுப்பதோடு தேவையான இடங்களில் விட்டுக்கொடுப்புகளைச் செய்தும் எங்களுடைய மக்களின் வாழ்நிலையைப் பேண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஏஆர் சிறிதரன் தெரிவித்தார்.

7. இன்று சர்வதேச மனித உரிமை தினம்!

இன்று ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மனித உரிமைகள் தினம். ஆண்டுதோறும் டிசம்பர் 10ம் திகதி மனித உரிமைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. சமத்துவம், நீதி, தன்னுணர்வின் முக்கியத்துவத்தை உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் வலியுறுத்துவதற்கான நாள் இதுவென ஐக்கியநாடுகள் சபை குறிப்பிடுகின்றது. ‘எங்களுடைய உரிமைகள், எங்களுடைய எதிர்காலம், இப்பவே வேண்டும்’ என்ற கருத்தியலோடு இவ்வாண்டு மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுகின்றது.
ஆனால் மனித உரிமைகளை கிஞ்சித்தும் மதிக்காத யுத்தங்களுக்கு மனித உரிமைகாவலர்களாக தங்களைக் காட்டிக்கொண்ட மேற்குலகம் உலகை வழிநடத்துகின்றது. உக்ரைன், நோட்டோ – ரஷ்ய யுத்தம், காஸா, லெபனான் – இஸ்ரேல், அமெரிக்க யுத்தம். சிரியாவில் கடந்த 15 ஆண்டுகளாகத் தொடரும் பதட்டம் வேறொரு அரசியல் திருப்பு முனையில் வந்து நிற்கின்றது.

ஒப்பீட்டளவில் இலங்கை ஒரு அமைதிச் சூழலுக்குள் திரும்பியுள்ளது. வன்முறைகளற்ற தேர்தல். இனவாதத்துக்கு எதிரான கருத்துருவாக்கம் என்பன இலங்கையில் நம்பிக்கை துளிர்விடுவதைக் காணக்குடியதாக உள்ளதாக மக்கள் கூறுகின்றனர். இருந்தாலும் தீர்க்கப்படாத தொடரும் பிரச்சினைகளும் உள்ளது. அது அண்மைய எதிர்காலத்தில் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையை தேசிய மக்கள் சக்தி அரசு மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

“தமிழர்களுக்கு மாகாண சபை தவிர்ந்த ஒரு இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்குப் புறம்பான ஒரு தீர்வை நோக்கி என்பிபி – ஜேவிபி போகின்றது. நாங்கள் தமிழர்கள். நாங்கள் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் இலங்கை மக்கள் அனைவரும் சரி சமமமானவர்கள் என்ற ரீதியிலான அதிகாரப்பரவலாக்கத்தை நோக்கியே அவர்கள் நகர உள்ளனர்” என்கிறார் ‘வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை’ என்ற இறுதி யுத்தம் தொடர்பான நூலின் ஆசிரியர் த ஜெயபாலன். “எப்போதும் தாங்கள் சரிசமமாக நடத்தப்படுவார்கள் என்கின்ற பட்சத்தில், பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு இனங்களுக்கிடையேயான நல்லிணக்கம் உருவானால் கணிசமான தமிழர்கள் அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பார்கள்” என்றும் அந்நிலையை உருவாக்குவதும் அதனை சட்டபூர்வமாக உறுதிப்படுத்துவதும் தேசிய மக்கள் சக்தியின் கைகளில் உள்ளது எனவும் த ஜெயபாலன் தெரிவித்தார்.

மனித உரிமைகளில் மிக முக்கியமானது உயிர்வாழ்வதற்கான உரிமை. இந்த யுத்தங்களை ஆதரிப்பவர்களும் யுத்தங்களுக்கு ஆயுத தளபாடங்களை விநியோகித்து உயிர்வாழ்வதற்கான உரிமையை இல்லாமல் செய்பவர்கள் மனித உரிமைகள் பற்றிக் கதைக்க தகுதியற்றவர்கள் எனவும் நூலாசிரினர் த ஜெயபாலன் தெரிவித்தார். இதனை காஸாவிலும் லெபனானிலும் பார்க்கின்றோம். உக்ரைன் யுத்தமும் சாட்சியாகின்றது.

8. 2009 இறுதி யுத்தமும் மனித உரிமைகளும் த ஜெயபாலனின் மனித உரிமைகள் தினக் குறிப்பு:

இலங்கையின் 2009 இறுதி யுத்தம் இவ்வளவு அழிவுகளுக்குச் சென்றிருக்க வேண்டியதில்லை. மாவிலாறு மூடப்பட்டது முதல் பெப்ரவரி 2009 வரையான காலத்தில் ஆயிரம் பேர்வரையே கொல்லப்பட்டனர். இந்த யுத்தத்தை புலம்பெயர்ந்த தமிழர்கள் முன்தள்ளினர். ‘பனை மரத்தில், வெளவாளா தலைவருக்கே சவ்வாலா’ என்பவர்கள் தற்போது மனித உரிமைகள் பற்றிப் பேசத் தகுதியற்றவர்கள். பெரும் தொகையில் தமிழர்கள் பலிகொடுக்கபட்டால் சர்வதேசம் இராணுவத்தை இறக்கி தங்களைக் காப்பாற்றி தமிழீழம் பெற்றுத் தருவார்கள் என புலம்பெயர் தமிழர்களில் கணிசமானவர்கள் சிந்தித்தனர். அவ்வாறே செயற்பட்டனர். அன்றைய கொசோவோ போல் தாங்களும் அங்கிகரிக்கப்படுவார்கள் என இவர்கள் கனவு கண்டனர். புலம்பெயர்ந்த தமிழர்களின் இந்தக் கனவுக்கு தாயகத் தமிழர்கள் கொடுத்த விலை மிக அதிகம்.

முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அம்மாவை நம்பி அழிக்கப்பட்டது தான் பெரும்பாலான உயிரிழப்புகள். 2006இல் யுத்தத்திற்குச் சென்றது மிகப்பெரும் அரசியல் முட்டாள்தனம். அவ்வளவு தோல்விகளுக்குப் பின் 2009 பெப்ரவரியில் ஆயுதங்களை ஒப்படைத்து அரசியல் நீரோட்டத்திற்கு வருமாறு சர்வதேசம் அழைப்பு விடுத்தது. அன்று அதனைச் செய்திருந்தால், பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம். மக்கள் உயிருக்காகப் போராட்டிக் கொண்டிருக்கும் போது மனித உரிமை பற்றிக் கதைக்காமல். பலிகொடுத்துவிட்டு மனித உரிமை பற்றி கூக்குரலிடுவதில் எவ்வித பலனும் இல்லை.

எதிர்காலத்திலாவது பலிகொடுத்துவிட்டு மனித உரிமைப் போராட்டம் நடத்தலாம், பழிவாங்கலாம் என்ற உலுத்துப்போன சிந்தனையோடு அரசியல் செய்வதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். உயிர்கள் கொல்லப்படாமலிருக்க மனித உரிமைப் போராட்டம் நடத்த வேண்டும்.

சகமனிதர்களை மனிதாபிமானமாக நடத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். மனித உரிமைகளை வலியுறுத்தும் பலர், இன்றும் சாதிய ஒடுக்குமுறைகள் பற்றி மௌனமாகவே உள்ளனர். எம்மோடு வாழும் சக மக்களை கீழானவர்களாக கருதுகின்ற மதிக்கின்ற போக்கு இன்னமும் தாயகத்திலும் புலம்பெயர் மண்ணிலும் உள்ளது. இவற்றுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைத்துவிட்டு மனித உரிமைகள் பற்றிப் பேசினால் அதில் ஒரு தார்மீக நியாயம் இருக்கும். யாரும் கொல்லப்படாமலிருக்க, ஒடுக்கப்படாமலிருக்க மனித உரிமைகளைக் கோருவோம். பழிவாங்கலுக்கு அல்ல. காஸாவிலும் லெபனானிலும் இனப்படுகொலை செய்யும் சர்வதேசத்திடம் மனித உரிமை நியாயம் கேட்பது மிக இழிவான செயல்.

ராஜபக்ஷ அரசின் முக்கிய அதிகாரிகளுக்கு தடை விதித்து அமேரிக்கா – கடுமையான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்கிறது இலங்கை அரசாங்கம்! 

ராஜபக்ஷ அரசின் முக்கிய அதிகாரிகளுக்கு தடை விதித்து அமேரிக்கா – கடுமையான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்கிறது இலங்கை அரசாங்கம்!

இலங்கை நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பணத்தை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவருவது தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்க தயாராகவுள்ளதாக தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனல்ட் லூ அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க ஆகியோருக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தடைகள் மற்றும் வீசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது பாரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

இவர்களுக்கு எதிரான நிதி மோசடி சம்பவங்கள் தொடர்பில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் கீழ், ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, எயார்பஸ் விமானங்களை சந்தை பெறுமதியை விட அதிக விலைக்கு கொள்வனவு செய்வதற்கு இலஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  அதேநேரம் இலங்கை விமானப்படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்யும் ஊழல் திட்டத்தை நடைமுறைப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், ரஷ்ய முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க வெளியுறவுத்துறையின் 7031(c)சரத்தின் கீழ், இவர்கள் இருவரின் பெயர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இரு தரப்பின் பெயர்களும் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த அறிவிப்பை இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளதுடன் மிக் விமானம் மற்றும் எயா பஸ் கொள்வனவுகளில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் உதயங்க வீரதுங்க, கபில சந்திரசேனவுக்கு வழங்கியுள்ள தீர்ப்பு ஏனைய மோசடியாளர்களுக்கும் சிறந்த பாடமாகும். இவற்றை அடிப்படையாயகக் கொண்டு சர்வதேசத்தின் உதவியுடன் ஊழலில் ஈடுபட்டோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இது பற்றி மேலும் தெரிவித்த போது “அரசாங்கம் என்ற ரீதியில் இவர்களுக்கு எதிராக கடுமையாக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். கடந்த காலங்களில் தம்மை நிரபராதிகள் என நிரூபிக்க முற்பட்டவர்களுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தீர்ப்பு சிறந்த பாடமாகும் என்றார்.

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் சேர் என தன்னை அழைக்குமாறு கூறி தர்க்கம் செய்த ஊசி அர்ச்சுனா!

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் சேர் என தன்னை அழைக்குமாறு கூறி தர்க்கம் செய்த ஊசி அர்ச்சுனா!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீண்டும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு குழப்பம் விளைவிக்க வருவாரெனின், வாசலிலேயே வைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவார் என்று யாழ். போதானா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

யாழ். போதனா வைத்தியசாலைக்கு வருகைத் தந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தான் தற்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்றும், தன்னை “சேர்” என்று அழைக்குமாறும் கூறி எம்மோடு முரண்பட்டார்.

அவரை சேர் என்று அழைக்க முடியாது என்று பதிலளித்ததற்கு, என்னை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவியில் இருந்து அகற்றுவேன் எனவும், நாடாளுமன்றத்திற்கு அழைத்து கேள்வி கேட்பேன் என்றும் கூறினார்.

அத்தோடு, யாழ். போதனா வைத்தியசாலைக்குள் உள்நுழைந்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குழப்பம் விளைவிப்பதற்கு இடமளிக்க முடியாது.

மீண்டும் ஒருமுறை அவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு குழப்பம் விளைவிக்க முற்படுவராயின் அவர் வாசலிலேயே வைத்து தடுத்து நிறுத்தப்பட்டு, பாதுகாப்பு உத்தியோகத்தரால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவார் என குறிப்பிட்டுள்ளார்.

https://www.facebook.com/share/v/75njvG1Rsf3XoKvx/

உலக அரசாங்கங்களின் மாநாட்டில் உரையாற்ற ஜனாதிபதி அனுரவுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் அழைப்பு!

உலக அரசாங்கங்களின் மாநாட்டில் உரையாற்ற ஜனாதிபதி அனுரவுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் அழைப்பு!

அரசாங்க சேவையை ஒன்லைன் முறைக்கு மாற்றுவதே ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்கு சிறந்த முறைமையென்று, ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலத் நசீர் அல்அமேரி தெரிவித்தார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலத் நசீர் அல்அமேரி (Khaled Nasser AlAmeri) இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் (கலாநிதி) அசோக ரன்வலவைவ நேற்று (09)மரியாதையின் நிமித்தம் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.

2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உலக அரசாங்கங்களின் மாநாட்டில் உரையாற்றுமாறு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி அழைப்பு விடுக்கவிருப்பதாகவும் இலங்கைக்கான தூதுவர், கௌரவ சபாநாயகரிடம் சுட்டிக்காட்டினார். 2024ஆம் ஆண்டு நடைபெற்ற உலக அரசாங்கங்களின் மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியிருந்ததாகவும், அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் குறித்த மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி உரையாற்றுவதை தாம் விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்க சேவையை ஒன்லைன் முறைக்கு மாற்றுவதே ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்கு சிறந்த முறைமையென்றும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. இது விடயத்தில் இலங்கையுடன் தமது நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்ள ஐக்கிய அரபு இராச்சியம் தயாராக இருப்பதாகவும் அந்நாட்டுத் தூதுவர் சுட்டிக்காட்டினார். மேலும், வெளிப்படையான மற்றும் ஈர்க்கக்கூடிய முதலீட்டு நடைமுறையை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்தும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் இலங்கையர்கள் தொழில்துறை சார்ந்தவர்களாகவும், அமைதியான சமூகத்தினராகவும் வாழ்வது தொடர்பில் நன்மதிப்பைக் கொண்டிருப்பதாகவும் அந்நாட்டுத் தூதுவர் சுட்டிக்காட்டினார்.

தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறைகளை முன்னேற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் இரு தரப்புக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டது. முதலீடுகளை விஸ்தரிப்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

இலங்கை – ஐக்கிய அரபு இராச்சிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை மீளவும் ஸ்தாபித்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்துவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்  கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இதன் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவருடைய உறவினர்கள், சிவில் அமைப்பினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் இதே காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சூழல் காணப்படுகின்றது.  அதேவேளை சாதாரண மக்களை வைத்து தமிழ்தேசியம் பேசும் தரப்பினர் அரசியல் செய்யும் போக்கு காணப்படுவதையும் பல தரப்பினரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். தொடர்ச்சியாக இதனை ஒரு அரசியல் வியாபாரமாக்குவது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எவ்விதத்திலும் நன்மை பயக்கப்போவதில்லை என்ற குரல்களும் தற்போது எழ ஆரம்பித்துள்ளது. வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் இன்று பல்வேறு பிரிவுகளாக சுயேட்சைக்குழுக்கள் போல் சிதறிப்போயிருப்பதாக வலிந்து காணாமலாக்கப்பட்டவரின் மனைவியும் தமிழ் அரசியல் பரப்பில் நன்கு அறியப்பட்டவருமான அனந்தி சசிதரன் முன்னைய உரையாடல் ஒன்றில் சுட்டிக்காட்டியிருந்தார். பாதிக்கப்பட்ட இப்பெண்கள் அரசியல் கட்சிகளாலும் வெளிநாட்டு சக்திகளாலும் முகாமைத்துவப்படுத்தப்பட்டு திட்டமிட்ட அடிப்படையில் வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும் அனந்தி சசிதரன் குற்றம்சாட்டினார்.

இதேவேளை அண்மையில் இடம்பெற்ற தேசம் நெட் நேர்காணலில் பேசிய எழுத்தாளர் தமிழ்க்கவி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் திரும்பி வரமாட்டார்கள் என்பது நன்கு தெரிந்திருந்தம் அவர்களை வைத்து அரசியல் செய்வது மிகமோசமான அரசியல்” என முன்னாள் போராளியும் மாவீரர்களின் தாயுமான தமிழ்கவி தேசம்நெற்க்குத் தெரிவித்தார். தன்னுடைய பிள்ளையும்தான் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டது எனத் தெரிவித்த தமிழ்கவி “அவர்கள் யாரும் திரும்பி வரப்போவதில்லை” என்பது அந்த உறவுகள் அனைவருக்கும் தெரியும். இதனை அரசியலாக்குபவர்களிடம் நான் செல்வதில்லை” என்றும் தெரிவித்தார்.

 

ஊசி அர்ச்சுனா – டொக்டர் சத்தியமூர்த்தி முறுகல்: சலிப்படையும் யாழ் மக்கள்!

ஊசி அர்ச்சுனா – டொக்டர் சத்தியமூர்த்தி முறுகல்: சலிப்படையும் யாழ் மக்கள்!

வைத்தியரும் எம்பியுமான அர்ச்சுனா யாழ். போதனா வைத்தியசாலைக்குள் டிசம்பர் 09 இல் முன் அனுமதியின்றி நுழைந்து வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தியுடன் தகராறில் ஈடுப்பட்டு பணிக்கு இடையூறு செய்ததால் யாழ்ப்பாண பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இம் முறைப்பாடு மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தன்னுடைய அதிகாரத்தை நிலைநாட்ட மற்றவர்களுக்கு பாடம் எடுக்க வெளிக்கிடும் ஊசி அர்ச்சுனாவுக்கு கடைசியில் மிஞ்சுவது நீதி மன்ற வழக்குகள் தான். மறுபுறம் அர்ச்சுனா மருத்துவ மாபியாக்கள் தொடர்பாக கூறிய குற்றச்சாட்டுக்கள் உரிய ஆதாரங்களை சமர்பிக்க தவறியதால் சிறையும் சென்று வந்திருக்கிறார். ஊசி அர்ச்சுனா யாருக்கும் அண்மையில் ஊசிபோட்டதாகத் தெரியவில்லை. அவருக்குத் தான் ஊசி போட இடமில்லாமல் ஊசி வழக்குகள் அடிக்கடி போடப்படுகின்றது.

ஏற்கனவே ஒரு வாரத்திற்கும் முன் தம்பி தம்பிராஜா தொட்டு கொழும்பு அழைத்துச் சென்று போராடிய விடயத்தை தற்போது அர்ச்சுனாவும் தன்கையில் எடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் நேரலையில் வந்த அர்ச்சுனா இது பற்றி இவ்வாறு விளக்குகிறார். சுமார் 180க்கு மேற்பட்ட இளவயதினரை சுகாதார தொண்டர் அடிப்படையில் வேலைக்கு சேர்த்துள்ளதாகவும். வெறுமனே 5 மாதங்கள் அவர்களுக்கு சம்பளம் வழங்கியுள்ளதாகவும் நலன்புரி சங்க மூலம் சுகாதார தொண்டர் ஊழியர்களாக வேலை செய்பவர்களுக்கு நிரந்தர வேலைக்கான அனுமதி வழங்கப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊதியம்மின்றி மூன்று வருடங்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் வேலை செய்யும் சுகாதார தொண்டர் ஊழியர்களுக்காக அர்ச்சுனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் விளக்கம் கேட்க சென்றதாகவும் கூறுகிறார்.

இவர்களை நிரந்தர பணிக்கு அமர்த்துவதாக கூறி மோசடி செய்துள்ளார் வைத்தியர் சத்தியமூர்த்தி. இது பற்றிய விடயங்களை திரட்டவே சென்றேன் என கூறியுள்ளார். மேலும் த. சத்தியமூர்த்தியுடன் தான் உரையாடி குரல்பதிவை பாராளுமன்றத்தில் வெளியிட இருப்பதாகவும் பகீர் கிளப்புகிறார். மேலும் சத்தியமூர்த்தி தற்போதைய கடற்தொழில் அமைச்சர் தன்னுடைய ஆள் என கூறி தனக்கு சவால் விட்டதாகவும் , அதனையும் தான் பதிந்து வைத்துள்ளதாகவும் பெருமையடிக்கிறார்.

 

ஜனாதிபதி அனுரா டெல்லி பயணம்: எல்லைதாண்டும் தமிழக மீனவர்கள்! தொடரும் கைதுகள்!

ஜனாதிபதி அனுரா டெல்லி பயணம்: எல்லைதாண்டும் தமிழக மீனவர்கள்! தொடரும் கைதுகள்!

டிசம்பர் 7 சனிக்கிழமை சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை நெடுந்தீவுப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட 8 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இரண்டு படகுகளும் பறிமுதல். இது தவிர கடந்த டிசம்பர் 4 ஆம் திகதி 14 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த ஆண்டில் மட்டும் எல்லை தாண்டிய 537 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். 70 க்கு மேற்பட்ட மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்திய மீனவர்கள் எல்லைதாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக இலங்கை வடபகுதி தமிழ் மீனவர்கள் முறையிட்டு வருகின்றனர். மறுபுறம் இந்தியாவில் தமிழ்நாட்டிலும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் இந்திய மீனவர்களுக்கு ஆதரவான போராட்டங்களும் இடம்பெற்று வருகின்றன.

ஜனாதிபதி அநுரா திஸ்ஸநாயக்க தன்னுடைய பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தருவதாக யாழ் குருநகரில் வைத்து உறுதியளித்திருந்தார்;. டிசம்பர் 16 ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது இந்திய மீனவர்கள் பிரச்சினையை இந்திய மத்திய அரசாங்கத்தோடு கலந்துரையாடி ஒரு நிரந்தர தீர்வு எட்ட வேண்டும் என்று இலங்கை வடக்கு தமிழ் மீனவர்களின் சங்கங்களின் பிரதிநிதிகள் கோருகின்றனர்.