Multiple Page/Post

யாழ். குடாவில் குறைந்த விலையில் கோதுமை மா, பால் மா

யாழ்ப்பாணத்தில் பால் மா மற்றும் கோதுமை மா கொழும்பைவிட குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக அத்தியாவசிய சேவைகள் பிரதி ஆணையாளர் தெரிவித்தார்.

உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக பொருள்களைக் கொள்வனவு செய்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்புவதால், குறைந்த விலையில் பொருள்களை விற்பனை செய்ய முடிவதாகவும் அவர் தெரிவித்தார்.

பதற்றத்தைக் குறைப்பது குறித்து ஆராய்வு

w_n.jpgஇந்திய,  பாகிஸ்தான் இராணுவ உயர் அதிகாரிகள் இரு நாடுகளிடையேயும் மூண்டுள்ள பதற்ற நிலையைத் தணிக்கும் பொருட்டு தொடர்புகளை ஏற்படுத்திக் கொணடனர். கடந்த செவ்வாய்க்கிழமை இரண்டு நாடுகளின் இராணுவ உயரதிகாரிகள் தொலைபேசியில் இதுகுறித்து நீண்ட நேரம் கலந்தாலோசித்ததாக பாகிஸ்தான் ஊடகங்களை ஆதாரங்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

மும்பைத் தாக்குதலுக்குப் பின்னர் ஏற்பட்ட போர்ப் பீதியால் இந்திய, பாகிஸ்தான் பிரஜைகளிடையே அச்சம் எழுந்தது. இரு நாடுகளும் பதிலுக்குப் பதில் காரசார மான அறிக்கைகளையும் வெளியிட்டன. இராணுவங்கள் எல்லைகளை நோக்கி நகர்த்தப்பட்டதால் இந்திய சென்ற பாகிஸ்தான் மக்களும் பாகிஸ்தானுக்கு வந்த இந்தியர் களும், அவசர அவசரமாகப் பயணங்களைப் பாதியில் நிறுத்திக் கொண்டு சொந்த நாடு திரும்பினர். அணு ஆயுதங்களையுடைய இரண்டு நாடுகளையும் சமாதானமுறையில் செல்லுமாறு சர்வதேச நாடுகள் தொடர்ந்து அழுத்தங்கள் வழங்கியுள்ள நிலையில் இராணுவ உயரதிகாரிகள் தொடர்புகளை ஏற்படுத்தியமை பதற்றத்தைத் தணிக்க உதவியுள்ளது.

படைகள் இரு எல்லைகளில் குவிக்கப்பட்டுள்ளதால் போரைத் தவிர்க்க முடியாத சூழல் ஏற்படலாம் என எச்சரித்துள்ள இராணுவ ஆய்வாளர்கள் படைகள் விலக்கப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளனர். தற்போது இரு நாடுகளின் இராணுவ அதிகாரிகளிடையே ஏற்பட்டுள்ள தொடர்புகள் பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்தால் படைவிலக்கல் பற்றி பேசப்படலாம்.

பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களின் அவலங்கள் குறித்து கவலையடையாமல் இருக்க முடியாது – யாழ். ஆயர் வேண்டுகோள்

jaffna_thomas.jpg
முடிவில்லா துன்பங்கள் மத்தியில் மீண்டும் ஒரு புத்தாண்டு ஆரம்பிக்கும் இவ்வேளையில் அரசு வெற்றிக்களிப்பில் இந்த ஆண்டை எதிர்கொள்ள விளையும் நிலையில் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களின் அவலங்களைப் பற்றி கவலையில்லாமல் இருக்க முடியாதென்பதால் சிறுபான்மையினர் மீதான அநீதிகளை கண்டித்து நிரந்தர அமைதிக்காகவும் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தர தீர்வை முன்வைக்கவும் இந்நாட்டுத் தலைவர்களும் வெளிநாட்டுத் தூதுவர்களும் உழைக்க வேண்டுமென யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; சென்ற ஆண்டிலே நாட்டிலே பொருளாதார நெருக்கடிகள், இயற்கை அனர்த்தங்கள் போன்ற தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இவற்றையும் விட வன்னிப் பிரதேசங்களை கைப்பற்ற அரசினால் மேற்கொள்ளப்படும் யுத்தத்தினால் உயிர் இழப்பும், ஆயிரக்கணக்கான மக்களின் இடம்பெயர்வுகளையும் சந்தித்தோம். வன்னிப் பிரதேசமும், குடாநாடும், விமானக் குண்டுத் தாக்குதலினாலும், அகோர எறிகணைகளின் சத்தத்தினாலும் அதிர்ந்தது. இக்கொடிய போரைநிறுத்தி அமைதியை கொண்டு வர பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும்படியாக பிற நாடுகளிடமும், அயல் நாடான இந்தியாவிடமும் இருந்து குரல்கள் அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டன.

எமது பரிசுத்த தந்தை 16 ஆவது பெனடிக்ற், இலங்கை ஜனாதிபதி அவரை சந்திக்க சென்ற போது போரை நிறுத்தும்படியாகவும், அமைதிக்காக உழைக்கவும் வலியுறுத்தினார். ஆனால், போர் இன்னும் உக்கிரமடைந்து, இடம்பெயர்ந்த மக்களின் துன்பங்கள் இரட்டிப்பாகின. நத்தார் காலத்தில் அமைதிக்கான போர்நிறுத்தங்களை கடைப்பிடிக்க ஆயர்கள் விடுத்த வேண்டுகோளும் நிராகரிக்கப்பட்டது. 50 வருடங்களின் பின் கொட்டும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு யாழ்.குடாநாட்டு மக்களை மேலும் வெகுவாக பாதித்தது.

முடிவில்லா துன்பங்கள் மத்தியில் மீண்டும் ஒரு புத்தாண்டு ஆரம்பிக்கும் இவ்வேளையில் அரசு வெற்றிக்களிப்பில் இவ்வாண்டை எதிர்கொள்ள விளையும் போது பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களின் அவலங்களைப் பற்றி கவலையில்லாமல் இருக்கவே முடியாது. இந்நாட்டு தலைவர்களும், பிறநாட்டு தூதுவர்களும் சிறுபான்மையினர் மீது நடந்தேறும் அநீதிகளை கண்டித்து நிரந்தர அமைதிக்காக உழைக்கவும் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நீதியான நிரந்தர தீர்வை எதிர்பார்க்கின்றோம். எல்லா மக்களும் யுத்தம் இன்றி மனித உரிமைகள் பேணப்பட்டு சுபீட்சமான வாழ்வு பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டி அனைவர்க்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்துக்கொள்கின்றேன்.

போதைப் பொருட்களுடன் 19 சந்தேக நபர்கள் கைது

handcuff.jpg
நிக்கவரெட்டிய பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், 648 ட்ரம்ஸ் கசிப்பு கைப்பற்றப்பட்டதுடன், 19 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அத்துடன், மற்றொரு சம்பவத்தில் 5800 ட்ரம்ஸ் கோடா கைப்பற்றப்பட்டதுடன் 3 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாகவும் தலைமையகம் தெரிவித்துள்ளது.

புதுவருட தினத்தை முன்னிட்டு, நிக்கவரெட்டிய பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில், 310 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதும், இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்திய கடல் எல்லையில் உலவும் படகுகளைக் கண்காணிக்க செயற்கைக்கோள்

w_n.jpgஇந்தியக் கடல் பகுதியில் உலவும் படகுகளைக் கண்காணிக்க சிறிய அளவிலான செயற்கைக்கோள் ஒன்றை ஏவுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற கடலோரப் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கொன்றில் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறைச் செயலர் சர்மா இந்தத் தகவலைத் தெரிவித்தார். இந்தியக் கடல் எல்லையில் உலவும் சிறிய மீன்பிடி படகுகள் உள்ளிட்டவற்றின் நடமாட்டத்தைக் கண்காணிக்க இது பெரிதும் உதவும் என அவர் தெரிவித்தார். மேலும் அனைத்து துறைமுகங்களிலும் கமாண்டோ படைகளை நிறுத்துவது குறித்தும் பரிசீலித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில் காஸாவின் எல்லைகளைத் திறந்து பொருட்களைக் கொண்டு செல்ல முடிவு

gaasha-con.jpg
காஸாவில் காயமடைந்தோருக்கு சிகிச்சையளித்தல் மற்றும் உணவு, உடை, இருப்பிடங்கள் போன்ற முக்கிய தேவைகளை அவசரமாக அனுப்பி வைப்பதென ஐரோப்பிய யூனியன் வெளிநாட்டமைச்சர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் இந்தக் கூட்டம் நடந்தது. காஸா, இஸ்ரேல் பிரச்சினைகளுக்கு இராணுவ ரீதியிலன்றி பேச்சுவார்த்தைகளூடாக முடிவு காணப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள ஐரோப்பிய யூனியன் இரு தரப்பையும் நிரந்தர யுத்த நிறுத்தத்துக்கு இணங்குமாறு கோரியுள்ள இஸ்ரேலின் தாக்குதலையோ ஹமாஸ் நடத்திய ரொக்கட் தாக்குதலையோ இம்மாநாடு கண்டிக்கவில்லை யென்பதும் குறிப்பிடத்தக்கது.

காஸாவின் சகல எல்லைகளையும் திறந்து காயமடைந்தோர் வெளியேற இஸ்ரேல் அனுமதிக்க வேண்டுமெனவும் ஐரோப்பிய மாநாடு இஸ்ரேலைக் கேட்டுள்ளது. பிரான்ஸ் வெளிநாட்டமைச்சர் இஸ்ரேல் வெளிநாட்டமைச்சர் சிபிலிவினியுடன் தொலைபேசியில் இது குறித்து உரையாடியுள்ளார்.  இன்று சிபிலிவின் பிரான்ஸ் புறப்பட ஏற்பாடாகியுள்ளது. ஜெரூஸலத்துக்கு பிரான்ஸ் ஜனாதிபதி சர் கோஷி விஜயம் செய்து இஸ்ரேல் பிரதமர், பலஸ்தீன ஜனாதிபதி ஆகியோரைச் சந்திக்கவுள்ளதாக வெளியான செய்தியை இஸ்ரேல் மறுத்துள்ளது.

இது இவ்வாறுள்ள நிலையில் ஜேர்மன் வெளிநாட்டமைச்சர் சிரியா, எகிப்து, இஸ்ரேல் அதிகாரிகளுடன் காஸா நிலைவரம் பற்றிப் பேசினார்.  ஐரோப்பிய வெளிநாட்டமைச்சர்கள் மாநாட்டின் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தபோது காஸா மீது தாக்குதல் தொடுத்த இடங்களையும், இலக்குகளையும் இஸ்ரேல் வீடியோவில் காட்டியது.  சில இடங்களை இஸ்ரேல் தாக்கியதாக அறிவிக்க ப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட ஹமாஸின் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறும் இஸ்ரேல் பொதுமக்களின் இழப்பை இயன்றவரை தவிர்த்த போதும் துரதிர்ஷ்டவசமாக சிலர் உயிரிழப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் சமாதான வழியில் செல்லவுள்ளபோதும் இஸ்ரேலின் மனிதாபிமான மற்ற செயல் குறுக்கேயுள்ளதாக ஹமாஸின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஹமாஸின் ரொக்கட் தாக்குதல் தொடர்ந்தால் தரை மார்க்கமான இராணுவ முற்றுகையை ஆரம்பிக்க இஸ்ரேல் தயாரென வெளிநாட்டமைச்சர் தெரிவித்துள்ளார். லெபனானிலிருந்து மருந்து வகைகள், ஆடைகள், உணவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு காஸா சென்ற கப்பலை இஸ்ரேல் வழிமறித்து திருப்பி அனுப்பியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் இராச்சியம் உருவாகி வருவதாக கடுமையாக சாடுகிறது ஐ.தே.க.

check1.jpgபொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்த சில உயர்மட்டங்கள் அரசாங்கத்தின் கையாட்களாகச் செயற்பட்டு வருவதாகவும், நடப்பவற்றைப்பார்க்கும்போது நாட்டில் பொலிஸ் இராச்சியமொன்று உருவாகி வருவதைக் காணக்கூடியதாக இருப்பதாகவும் கடுமையாக சாடியிருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி, சில பொலிஸ் அதிகாரிகளின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது சர்வாதிகார ஆட்சியொன்று நடப்பதாகவே எண்ண வேண்டியிருப்பதாகவும் விசனம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் மொரட்டுவ தேர்தல் தொகுதியில் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தனக்கு கீழிருக்கும் பொலிஸாரை பயன்படுத்தி எதிர்க்கட்சித்தரப்பினர் மீது பழிவாங்கும் முயற்சியிலீடுபட்டுவருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கட்சியின் மொரட்டுவ பிரதான அமைப்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சிறிநாத் பெரேரா மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார்.

அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது; மொரட்டுவ தொகுதியில் அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகளும், கட்அவுட்களும் நகரம் பூராவும் காணப்படுகின்றன. ஆளும்தரப்பினரின் கட்அவுட்கள் வீதியின் இரு மருங்குகளிலும் அணிஅணியாக போடப்பட்டுள்ளன. அவை குறித்து பொலிஸார் கண்டு கொள்ளவில்லை. இத்தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி பிரதான அமைப்பாளரான எனது கட்அவுட்கள் சில கரையோரமாக உள்ள வீதியிலேயே போடப்பட்டுள்ளன. கடந்த 28 ஆம் திகதி மொரட்டுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சில பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் வந்து எனது கட்அவுட்களை உடைத்தெறிந்து விட்டுச் சென்றார். 119 பொலிஸ் வாகனத்திலேயே இவர்கள் வந்து இக்காரியத்தைச் செய்தனர். ஏனைய கட்அவுட்களும் அப்புறப்படுத்தப்பட்டிருந்தால் அதனை நியாயமானதாகக் கருதமுடியும். அரச தரப்பு பெரும்புள்ளிகளின் சுவரொட்டிகளையும், கட்அவுட்களையும் பாதுகாத்துக் கொண்டு எதிரணியினர் மீது பொலிஸ் அதிகாரிகள் இவ்வாறு நடப்பது பக்கச்சார்பானதாகவே நாம் கருத வேண்டியுள்ளது.

இந்தப் பொலிஸ் அதிகாரி சம்பவம் நடந்த நாளன்று விடுமுறையில் இருந்தவராவார். லீவிலிருந்த அவர் பொலிஸ் சீருடையுடன் வந்து இக்காரியத்தை செய்ததன் மூலம் அரச தரப்பு பெரும் புள்ளிகளின் ஆதரவோடுதான் செய்திருக்கின்றார் என்பது புலனாகிறது. பொலிஸ் அதிகாரிகள் சகலருக்கும் ஒரேவிதமாக நடக்க வேண்டியவர்கள். அவர்கள் பாரபட்சமாக நடக்க முற்படக்கூடாது. அண்மைக்காலமாக பொலிஸ் திணைக்களம் தவறான வழியில் நடக்க முற்படுவதைக்காணக்கூடியதாக உள்ளது. அரசுக்கு சார்பாக நடப்பது மட்டுமன்றி எதிரணியினர் மீது கடும் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர். பொலிஸ் மா அதிபர் உட்பட பொலிஸ் உயர்மட்டத்தினர் பலரும் அரசின் அடிவருடிகளாகச் செயற்பட்டுவருகின்றனர். நாட்டில் இன்று பொலிஸ் இராச்சியமொன்று நடப்பதாக காண முடிகிறது. இதற்கு ஜனநாயக நாட்டில் இடமளிக்க முடியாது. மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தயங்கிப் போவதில்லை. சர்வாதிகாரத்தின் பக்கம் நாட்டை இட்டுச் செல்வதற்கு பொலிஸாரும் துணை போவதை எந்தவிதத்திலும் அனுமதிக்க முடியாது.