இரா.சாணக்கியன்

இரா.சாணக்கியன்

“நினைவேந்தல் தடைகளுக்கும் இளைஞர்கள் கைதுக்கும் ஆளும் கட்சியுடன் இணைந்துள்ள தமிழ் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு வாக்களித்த மக்களும் இதற்கான பொறுப்பினை ஏற்க வேண்டும்” – இரா.சாணக்கியன் 

மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க முடியாது போனமைக்கு, அரசாங்கத்துக்கு வாக்களித்த தமிழ் மக்களும் பொறுப்புக் கூற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஊடக சந்திப்பில் இரா.சாணக்கியன் மேலும் கூறியுள்ளதாவது,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்னர் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பெற்றோருக்கு எனது கவலையினை தெரிவித்துக்கொள்கின்றேன். மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமன்றி கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலைப்புலிகளின் தலைவரின் படத்தினை இணைத்து பதிவிட்டிருந்ததையும் குற்றமாக கொண்டு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, ஒரு சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நல்லாட்சி இருந்த காலப்பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சித்து ஒரு மாற்றம் உருவாகவேண்டும் என்று தமிழ் தேசியத்திற்கு எதிராக வாக்களித்த ஒவ்வொருவரும், இந்த இளைஞர் கைது விடயத்தில் பொறுப்புக்கூறவேண்டும். கடந்த ஆட்சிக்காலத்தில் நல்லிணக்கம் இருந்ததன் காரணமாக நாங்கள் சுதந்திரமாக செயற்பாடுகளை முன்னெடுத்தோம்.

மாவீரர் தின நாட்களில் வீடுகளில் தமது உறவுகளை நினைவுகூர்ந்ததை கூட வீடுகளுக்குள் புகுந்து தடைசெய்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. மாவீரர்களை நினைவுகூருதல் என்பது 1989ஆம்ஆண்டில் இருந்து நடைபெற்று வருகின்ற விடயம். ஆனால் இன்று மாவீரர்களை நினைவுகூருவதை தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. தமிழர்களின் உணர்வின் அடையாளங்கள் அழிக்கவேண்டும் என்பதற்காக பல திட்டமிட்ட செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இதற்கான பொறுப்பு  தற்போதைய அரசாங்கத்துக்கு வாக்களித்தவர்களையே சேரும்.

அதாவது, ஒரு தாய் தனது பிள்ளையினை நினைவுகூரமுடியாத சூழ்நிலையினை அமைத்துக்கொடுத்த ஆளும் கட்சியுடன்இணைந்துள்ள தமிழ் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு வாக்களித்த மக்களும் இதற்கான பொறுப்பினை ஏற்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு ஒரு இலட்சம் ரூபாய் வாங்கப்பட்டுள்ளது” – பாராளுமன்றில் இரா.சாணக்கியன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பாராolgளுமன்றத்தில் நேற்றைய தினம் மாவீரர்களை நினைவு கூர்ந்திருந்து தன்னுடைய பாராளுமன்ற உரையை நிகழ்த்தியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“பிள்ளையான் சிறையிலிருந்து வருகை தந்து ஆணைக்குழுவுக்கு செல்கின்றார். பின்னர் கூட்டங்களில் கலந்துகொள்கின்றார். அதனைத் தொடர்ந்து காரியாலத்துக்கு செல்கின்றார். அங்கு மக்களை வருமாறு அழைத்து அவர்களுடன் கலந்துரையாடுகின்றார். இவ்வாறு சிறையிலுள்ள கைதிகளுக்கு செய்ய முடியுமா? ஏனைய குற்றங்கள் புரிந்த சிலரை அவர்களது பெற்றோரினால் கூட காண முடியாது. காரணம் கொரோனா அச்சுறுத்தலாகும்.

ஆனால், பிள்ளையான் மட்டக்களப்பு வருகின்றார், ஆலய வழிப்பாட்டுக்கு செல்கின்றார். நிகழ்வுகளில் பங்கேற்றுகின்றார். இதனை எவ்வாறு செய்ய முடியும். இவ்வாறான செயற்பாடுகளை செய்வதற்கு எவ்வாறு இடமளிக்க முடியும்.

83 கலவரத்தினைத் தொடர்ந்து நாட்டை விட்டுச் சென்றவர்கள் நாட்டுக்கு திரும்பிவர வேண்டுமாயின் முதலில் அவர்களுக்கு இங்கு வாழ்வதற்கு முடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும்.

உண்மையாக இங்கு இருக்கின்றவர்கள் ஜனாதிபதி, தோல்வியடைந்துள்ளார். தோல்வியடையவில்லை என பேசுகின்றார்கள். ஜனாதிபதி இன்னும் தோல்வியடையவில்லை. ஏனென்றால் ஒரு வருடம் தான் கடந்துள்ளது. இன்னும் 4 வருடங்கள் இருக்கின்றன. ஆனால், தற்போதைய நிலைமை தொடர்ந்து நீடித்தால் ஜனாதிபதி நிச்சயம் தோல்வியடைவார்.

மட்டக்களப்பில் உள்ள அமைச்சர் ஒருவர், மண் அகழ்வுக்கு அனுமதி வழங்கியுள்ளார். மஹிந்த அமரவீர மட்டக்களப்புக்கு வருகை தந்தபோது, அவரை சந்தித்து இதுபற்றி கூறினேன். மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என வலியுறுத்தினேன்.

ஆனால் புதிதாக 32 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு அனுமதிக்கு 5 இலட்சம் ரூபாய் பணம் வாங்கியுள்ளனர். அதாவது மாதம் ஒன்றுக்கு ஒரு அனுமதிக்கு 2 இலட்சம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு ஒரு வருடத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 22 கிலோ மீற்றர் உள்ள ஆற்றில் விரும்பிய எந்த பகுதியிலும் மணல் அகழ்வில் ஈடுபட முடியும்.மணல் அகழ்வில் ஈடுபடுவது பிரச்சினை இல்லை. குறித்த பகுதி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களுக்கு உரித்தான பகுதி. இங்கு ஒருவருக்கு 2 இலட்சத்தை கொடுத்து அவரிடம் மண்ணினை பெறுவதற்கு என்ன அவசியம் இருக்கின்றது.

அதாவது வருடம் ஒன்றுக்கு 10 இலட்சத்தை பெறுவதற்காகவா இவர்கள் நாடாளுமன்றம் வருகின்றார்கள் என கேட்க விரும்புகின்றேன்.

அத்துடன், ஒரு இலட்சம் வேலை வாய்ப்பினை வழங்கும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கமைய மட்டக்களப்பில் 250 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இங்கு சிலரிடம் ஒரு இலட்சம் வரை பணத்தினைப் பெற்றுக் கொண்டே வேலையினை வழங்கியுள்ளனர்.

யார் இதனை கூறியுள்ளது என பார்த்தால் பிரதமரின் கிழக்கு மாகாண இணைப்புச் செயலாளராகவுள்ள கருணா அம்மானே இதனைக் கூறியுள்ளார்.

இந்த விடயங்களை நன்றாக தேடிப்பாருங்கள். இத்தகையவர்களுடன் இணைந்து சேவையாற்ற வேண்டாம் என ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

“தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை அரசாங்கம் ஏற்படுத்துமானால் தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும்” – இரா.சாணக்கியன்

“தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை அரசாங்கம் ஏற்படுத்துமானால் தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும்”  என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  இரா.சாணக்கியன்  தெரிவித்துள்ளார்.

இன்று(10.11.2020) அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபையின் 33 ஆவது மாதாந்த அமர்வில் புதிய ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் வெற்றி பெற்ற நிலையில் அதில் கலந்து கொண்ட பின்னர் , ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இரா. சாணக்கியன் மேற்கண்டவாறு குறிப்பிடடடுள்ளார்.

IMG 20201110 104333

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“ தமிழ் மக்கள் வாழும் அனைத்து பிரதேசங்களிலும் காணி அபகரிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக தமிழ் பேசும் மக்கள் ஒன்று படவேண்டும். எமது பகுதிகளில் திட்டமிட்ட குடியேற்றங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது இதற்கு எதிராக நாங்கள் குரல் கொடுக்க வேண்டும்.

தமிழ் பேசும் மக்கள் இனிவரும் காலங்களில் பிரிந்து நிற்க கூடாது. தற்போது சிறுபான்மையினருக்கு எதிராக இந்த அரசாங்கம் செயற்பட ஆரம்பித்துள்ளது.

உண்மையில் நீங்கள் தமிழராக இருந்தால், தமிழ் தாய்க்கு பிறந்தவர்களாக இருந்தால் இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக இடம்பெறும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து அரசாங்கத்திலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.

“தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி என்ன காரணத்துக்காக இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கினர் என்பதை தெளிவு படுத்த வேண்டும்” – இரா.சாணக்கியன்

“தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி என்ன காரணத்துக்காக இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கினர் என்பதை தெளிவு படுத்த வேண்டும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக வாக்களிக்கும்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது ஜனநாயக விரோதமான செயல், இந்த நாட்டை பின்கொண்டுசெல்லும் செயல் என்ற அடிப்படையில் அதற்கு எதிராக வாக்களித்திருந்தோம். இதன்போது, இஸ்லாமிய சகோதரர்கள் சிலர் அதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றார்கள். அது தொடர்பாக பல கருத்துகளை பலரும் கூறிவருகின்றனர்.

என்னைப் பொறுத்தவரையில் இஸ்லாமிய சகோதரர்கள், தங்களுடைய எதிர்காலம் தொடர்பாக ஏதேனும் ஒப்பந்தங்கள் செய்து அதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கலாம் என நான் கருதுகின்றேன். மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இருவரும் 20ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். வியாழேந்திரன் மொட்டுக்கட்சியை சேர்ந்தவர், அதனால் அவர் அதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கலாம். ஆனால் பிள்ளையானுடைய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது ஒரு தனிக்கட்சியாகும் அவர்கள் ஏதாவது ஒப்பந்தங்கள் செய்தார்களா? என்ற கேள்வி எங்கள் மனதில் இருக்கின்றது.

மயிலந்தனை, மாதவனை பிரச்சினையை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சென்று, அதனை நிறுத்தச்சொல்வதை விட 20வது திருத்த சட்டத்திற்கு ஆதரவு தருவதாகயிருந்தால் இந்த பிரச்சினையை நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்திருக்க முடியும்.

மேலும், கல்முனை- வடக்கு பிரதேச தரமுயர்த்துவது தொடர்பிலான கோரிக்கையினை முன்வைத்திருக்கலாம் அல்லது அரசியல் கைதிகள் 62பேர் இன்னும் உள்ளனர் அவர்களை விடுதலைசெய்தால் ஆதரிப்போம் என்றிருக்கலாம், தமிழ் பகுதிகளில் பாதுகாப்பு பிரிவினர் வைத்திருக்கும் காணிகளை விடுவிக்குமாறு கோரியிருக்க முடியும் இவ்வாறு பல நிபந்தனை முன்வைத்து வாக்களித்திருக்க முடியும்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தனிக்கட்சி என்ற அடிப்படையில் பேரம்பேசும் சக்தி இலகுவாக இருந்திருக்கும். அவ்வாறான ஒப்பந்தங்களை ஏதும் செய்ததாக தெரியாது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரை வெளியில் விடுவதற்கான ஒப்பந்தமோ? அல்லது அக்கட்சியின் தலைவர் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கான அனுமதியை வழங்கவேண்டும் என்ற ஒப்பந்தங்களை செய்தார்களா?மக்களுடைய நலனைக்கொண்டா? அல்லது தங்களது நலனைக்கொண்டா? ஒப்பந்தங்கள் செய்யப்பட்டது என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரின் பதவி ஆசை காரணமாக மாவட்ட மக்கள் மிகவும் கஸ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.