ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

“13 வந்தால் தமிழீழம் மலரும். இரத்த ஆறு ஓடும்.” – எச்சரிக்கிறார் விமல் வீரவங்ச

‘தான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற மமதையுடன் ஒவ்வொரு நாளும் வாய்க்கு வந்த மாதிரி கருத்துக்களை வெளியிடுகிறார்.” என உத்தர லங்கா சபாவின் தலைவரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால், நாடு பிளவுபடாது. எனவே இந்தத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படிச் செய்யாமல் இருக்க வேண்டுமானால், யாராவது 22ஆம் திருத்தத்தை கொண்டுவந்து 13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்யவேண்டும் என நேற்றுமுன்தினம் நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்தக்கூட்டத்தை புறக்கணித்த விமல் வீரவன்சவிடம் அதிபரின் கருத்து தொடர்பில் செய்தியாளர்கள் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நாடு பிளவுபட்டே தீரும். அது தமிழீழம் மலர வழிவகுக்கும். நாடெங்கும் மீண்டும் இரத்த ஆறு ஓடும். இப்படியான நிலைமை ஏற்படக் கூடும் என்று ஜனாதிபதிக்கு தெரியும்.

13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இதனை பல தடவைகள் தெரிவித்து விட்டோம்.

தான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற மமதையுடன் ஒவ்வொரு நாளும் வாய்க்கு வந்த மாதிரி கருத்துக்களை வெளியிடுகிறார்.

சிங்கள மக்களையும், தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் ஏமாற்றும் நோக்குடனேயே ஜனாதிபதி செயற்படுகின்றார். ஆனால், சிங்கள மக்கள் விழிப்பாகவே இருக்கின்றார்கள்.

ஜனாதிபதி இவ்வாறு  நடைமுறைச்சாத்தியமற்ற கருத்துக்களைக் கூறி காலத்தை இழுத்தடிப்பார் என்று தெரிந்து தான் நாம் சர்வகட்சி கூட்டத்தை புறக்கணித்தோம்” – என்றார்.

“ஜனாதிபதியின் அதிகாரங்களை பயன்படுத்தி 13ஆம் திருத்தத்தை கொண்டு வருவேன்.” – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று முன்தினம் (26) கொழும்பில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் அரசியல் கட்சித் தலைவர்களின் முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க  தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்குரிய நிறைவேற்று அதிகாரம் தன்னிடம் இருப்பதால், நாட்டின் அரசியலமைப்பில் உள்ள 13 ஆம் திருத்தம் உட்பட்ட விடயங்களை தான் நடைமுறைப்படுத்தப் போவதாகவும், அவர் தெரிவித்திருந்தார்.

தனது இந்த நகர்வை எதிர்க்கும் தரப்புகள் முடியுமானால் 22ஆம் திருத்தத்தை கொண்டுவந்து 13ஆம் திருத்தத்தை அரசியல் அமைப்பில் இல்லாமல் செய்யலாம் எனவும் அவர் சீற்றத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள மாகாண சபைகளுக்கு, லண்டன் நகர சபைக்குள்ள அதிகாரங்கள் கூட கிடையாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

13ஆம் திருத்ததை அரசியலமைப்பில் வைத்துக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்தாமல் இருக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகளான ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் இந்தக் கூட்டத்தை புறக்கணித்திருந்த போதிலும் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ் மக்கள் விடுதலை கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

சுதந்திர தினத்திற்காக மலர் மாலைக்கு 97 ஆயிரம் ரூபா. தேசிய கீதத்தை பாட 18 லட்சம் ரூபா எதற்கு..? – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

நடைபெறவுள்ள 75வது சுதந்திர தின செலவுகளை குறைத்து அதை பெருமையுடன் கொண்டாட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று சுதந்திர தின கொண்டாட்ட வேலைத்திட்டங்கள் குறித்து நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

மேலும் சுதந்திர தினத்தை கொண்டாட ஒதுக்கப்பட்டுள்ள நிதி சம்பந்தமாக மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பு இருப்பதால் அது தொடர்பில்  கவனம் செலுத்தி செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு  ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்

“சில செலவு மதிப்பீடுகள் குறித்து நான் ஆச்சரியமடைகின்றேன். டி.எஸ் சேனாநாயக்கவுக்கு மலர் மாலை அணிவிக்க 97 ஆயிரம் ரூபா ஐக்கிய தேசியக்கட்சி செலவு செய்தது.

எப்படி 97 ஆயிரம் ரூபா செலவாகும் என்பது எனக்கு தெரியாது. தேசிய கீதத்தை பாட 18 லட்சம் ரூபா கேட்டுள்ளனர். நாங்கள் கடந்த காலங்களில் போக்குவரத்து செலவு மற்றும் உணவை வழங்கினோம்.

செயலாளர் செலவுகள் பற்றி பார்க்க வேண்டும். நான் ஒரு உதாரணத்தை கூறுகிறேன்.கலை, பண்பாட்டு பல்கலைக்கழகத்தின் சார்பில் இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

அதற்கு தேவையான பணத்தை அவர்களே தேடிக்கொள்கின்றனர். நாங்கள் தாமரை தடாகம் அரங்கத்தை மாத்திரம் இலவசமாக வழங்குகிறோம். இப்படி வேலைகளை செய்ய வேண்டும்.75 வது சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும்.

இதனை செய்யவில்லை என்றால் நாட்டுக்கு சரியில்லை. சுதந்திர தினத்தை கொண்டாட பணம் இல்லை என்று உலகம் கூறும். முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க வேண்டுமாயின் இவ்வாறான வேலைகளை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

“நூறாவது சுதந்திர தினத்தின்போது இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு பல்கலைக்கழக சமூகம் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும்.” – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

நூறாவது சுதந்திர தினத்தின்போது இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு பல்கலைக்கழக சமூகம் உள்ளிட்ட இளைஞர், யுவதிகளின் ஆகக்கூடிய பங்களிப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அபிவிருத்திப் பணிகளின்போது பல்கலைக்கழக சமூகத்தின் பங்களிப்பு மிக அவசியம் என்றும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

75 ஆவது சுதந்திர தினத்திற்கு இணையாக தேசிய இளைஞர் தளத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

2048 ஆம் ஆண்டாகும்போது சுபீட்சமானதும் பலம் மிக்கதுமான இலங்கையை கட்டியெழுப்பும் வேலைதிட்டத்தில் பங்குதார்களாவதற்கு இலங்கையின் இளைஞர் யுவதிகளுக்கு வாய்ப்பளித்தல் மற்றும் 25 வருட கால அபிவிருத்தி வேலைதிட்டத்துக்கு இளைஞர் சமூகத்தை பொறுப்பு மிக்க பங்காளர்களாக இணைத்துக் கொள்ளுதல் என்பன தேசிய இளைஞர் தளத்தின் நோக்கங்களாகும்.

அனைத்துப் பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களை இணைத்துக்கொண்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முக்கிய நகரங்களை சுற்றுலா நகரங்களாக மேம்படுத்தும் வேலைத்திட்டமொன்றும் இதன் கீழ் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அது தொடர்பான முன்மொழிவுகளும் இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.

அதற்கமைய, யாழ்.மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்த முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகங்களும் அநுராதபுரம் மாவட்டம் தொடர்பான சுற்றுலா திட்டங்களை களனி மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகங்களும் கையளித்தன.

ருஹுனு பல்கலைக்கழகம், சப்ரகமுவ பல்கலைக்கழகம் மற்றும் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து காலி மாவட்டத்தை மையமாகக் கொண்ட சுற்றுலா மேம்பாட்டு வேலைத் திட்டங்களையும் கொழும்பு பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், நுண்கலை பல்கலைக்கழகம் மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து கொழும்பு மாவட்டத்திற்கான வேலைத் திட்டங்களையும் சமர்ப்பித்துள்ளன.

பேராதனை, வடமேற்கு மற்றும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகங்கள் இணைந்து கண்டி மாவட்டம் தொடர்பான திட்டங்களையும், கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சுற்றலா மேம்பாட்டு திட்டங்களையும் முன்மொழிந்துள்ளன.

முன்மொழியப்பட்டுள்ள அனைத்து சுற்றுலாத் திட்டங்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பாராட்டுகளைத் தெரிவித்ததுடன் அவற்றை நடைமுறைப்படுத்தும்போது தனியார் துறையினரின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியங்கள் குறித்தும் இங்கு சுட்டிக்காட்டினார்.

நாட்டின் அபிவிருத்திக்குப் பல்கலைக்கழக சமூகம் பங்களிப்பது மிகவும் நல்லதொரு விடயம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், இந்த தேசிய இளைஞர் தள வேலைத்திட்டத்திற்கு பல்கலைக்கழக கட்டமைப்பு வழங்கும் ஒத்துழைப்புக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்தியா கோரிக்கை!

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதும், மாகாண சபைத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதும் அரசியல் அதிகாரப் பகிர்வு அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கு மிகவும் முக்கியமானது என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பையடுத்து, இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் இணைந்து அவர் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பினை நடாத்தியிருந்தார்.

இந்தியாவுடனான கூட்டாண்மை, நாட்டின் பொருளாதார மீட்சியை எவ்வாறு எளிதாக்குவது என்பது குறித்து கலந்துரையாட ஜனாதிபதி விக்ரமசிங்கவை விரைவில் இந்தியாவிற்கு வருமாறு, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கடிதத்தை கையளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் சமூகத்தின் தேவைகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி விக்ரமசிங்கவிடம் ஜெய்சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா, இலங்கையின் நம்பகமான அண்டை நாடு, நம்பகமான பங்காளி மற்றும் இலங்கைக்கு தேவை ஏற்படும்போது, எந்த தொலைவுக்கு செல்ல தயாராக உள்ள ஒரு நாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது இலங்கைப் பயணம், பிரதமர் மோடியின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் அறிக்கை என வலியுறுத்திய ஜெய்சங்கர், தேவைப்படும் நேரத்தில் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து துணை நிற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், திருகோணமலையை ஒரு வலுசக்தி மையமாக மேம்படுத்தும் திறன் இலங்கைக்கு உள்ளது. அத்தகைய முயற்சிகளுக்கு நம்பகமான பங்காளியாக, இந்தியா தயாராக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒத்துழைப்பை முன்னோக்கி கொண்டு செல்லும், புதுப்பிக்கத்தக்க சக்தி கட்டமைப்புக்கு, கொள்கை அடிப்படையில் இன்று இணக்கம் எட்டப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்துக்கு செல்ல கூட தகுதியில்லாத ரணில் விக்கிரமசிங்க எப்படி 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த முடியும்..? – குணதாச அமரசேகர கேள்வி !

“மக்கள் ஆணையில்லாது பாராளுமன்றத்துக்கு செல்ல கூட தகுதியில்லாத ரணில் விக்கிரமசிங்க எப்படி 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த முடியும்.” என  தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் அமைப்பாளர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.

18 ஆம் திகதி பொரளை என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமல்படுத்துவதற்காக வடக்கு மக்களுக்கு வாக்குறுதியை வழங்கி இருக்கிறார். மேலும் வடக்கு கிழக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தருவதாகவும் கூறி வருகிறார். இதனை கூறுவதற்கு ஜனாதிபதிக்கு எந்தவொரு அதிகாரமும் கிடையாது. அதனை நிறைவேற்ற வேண்டுமாயின் அவருக்கு மக்களாணை வேண்டும். அது அவரிடம் காணப்படுகின்றதா?

ரணிலை ஜனாதிபதியாக தெரிவு செய்தது 13 ஐ நிறைவேற்றவோ அல்லது நாட்டில் புரட்சி ஏற்படுத்தி அதன் ஊடாக அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவோ அல்ல. அதிகாரத்தை விட்டு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி காலப்பகுதியில் எஞ்சியிருக்கும்  காலப்பகுதியை முன்னெடுத்து செல்லவும், நாட்டு மக்களை வழிநடத்தவும் மற்றும் நாட்டை பாதுகாக்கவும் என்பதை ரணில் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் மக்களாணை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு முறையாக நாட்டை ஆள முடியாமல் தப்பியோடிய கோட்டாபயவிற்கு பதிலாக வெற்றிடமாக காணப்பட்ட  ஜனாதிபதி பதவியை நிரப்புவதற்கு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் மூலம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்நிலையில் 13 ஐ அமுல்படுத்த எந்தவொரு அதிகாரமும் தற்பொழுது ரணிலுக்கு கிடையாது. மேலும்  கோட்டாபய ராஜபக்ஷவினால் நிறைவேற்ற முடியாமல் விட்டுச்சென்ற வேலைத் திட்டங்களை முன்னெடுத்து செல்வதே அவருடைய தற்பொழுதுள்ள பொறுப்பாகும்.

ஜனாதிபதி ரணில் அரசியலில் இருந்து மக்களால் ஒதுக்கப்பட்ட மற்றும் தேர்தலின் போது நிராகரிக்கப்பட்டதோடு பாராளுமன்றத்தில் கூட அங்கம் வகிக்க தகுதியில்லாத நபர். இவ்வாறான ஒருவருக்கு அரசியமைப்பை மாற்றுவதற்கு எப்படி அதிகாரம் இருக்கிறது. இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

மேலும் 13 ஐ நடைமுறைப்படுத்துவதானால் யாருக்கு இலாபம்? அதன் பயனை யார் பெற்றுக்கொள்ள போவது? இந்நிலையில் இந்தியாவின் வேண்டுகோளுக்கு இனங்கவே 13 ஐ நடைமுறைப்படுத்த ரணில் ஆர்வம் காட்டுகிறார்.அவர்கள் இலங்கை மீது முழுமையாக அதிகாரத்தை பயன்படுத்தி 13 ஐ நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

மேலும் அமெரிக்காவிற்கும் அதில் ஒரு பங்கு இருக்கிறது. அன்று 13 ஐ நடைமுறைப்படுத்த ஜே.ஆர். ஜயவர்தன கைச்சாத்திட்ட போது  அமெரிக்கா உயர்தானிகரே முதலில் வாழ்த்து செய்தி அனுப்பினார். எம்மை பொறுத்தமட்டில் இந்தியா மற்றும் அமெரிக்காவே இதன் பின்னணியில் இருக்கிறது.

நாட்டில் 13 ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தினால் பிரிவினைவாத அரசியல்வாதிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகளின் நோக்கம் நிறைவேறுமே தவிர தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கபோவதில்லை என்றார்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா மற்றும் சீனாவுடனான பேச்சுவார்த்தை வெற்றி !

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா மற்றும் சீனாவுடன் தற்போதுவரை முன்னெடுத்துள்ள பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் இன்று தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களை நோக்கும்போது, எமது பொருளாதாரத்தை சரியான பாதையில் தடமேற்றுவதற்காக நாம் முன்னெடுத்த செயற்பாடுகளை அவதானிக்க முடியும்.

மேலும், இந்தியா மற்றும் சீனாவின் கடன் மறுசீரமைப்பு ஒப்புதலை பெற வேண்டிய பணிகள் மாத்திரமே மீதமுள்ளன.

அந்த இரு நாடுகளுடனும் தற்போதுவரை முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதென கூறமுடியும்.

விரைவில் அது தொடர்பான பதில்கள் கிடைக்கப்பெறும் என்று ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் மீது நம்பிக்கை இல்லை – எம்.ஏ.சுமந்திரன்

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் நம்பிக்கை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு பதில் வழங்கினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எந்த காலப்பகுதிக்குள் காணிகள் விடுவிக்கப்படும் என சொல்லவில்லை, 108 ஏக்கர் காணி உடனடியாக விடுவிக்கப்படலாம் என சொல்லுகின்றார்கள்.

உடனடியாக விடுவிக்கப்படலாம் என பல நாட்களாக சொல்லுகின்றார்கள் ஆனால் இன்னும் விடுவிக்கப்படவில்லை, அதனால் நேற்றைய கூட்டத்தில் சொல்லப்பட்ட விடயங்கள் தொடர்பாக எங்களுக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை என தெரிவித்துள்ளார்.

இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு எப்போது..? – யாழ்ப்பாணத்தில் வைத்து திகதியை அறிவித்தார் ஜனாதிபதி ரணில்!

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவில் பங்கேற்று உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து பகிரங்க அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் அவர் தெரிவிக்கையில்;

நல்லிணக்கத்தை காண்பித்தே இந்த நிகழ்வின் இறுதி நடனம் இடம்பெற்றிருந்தது. நல்லிணக்கம் இந்த நாட்டிற்கு அவசியமாகும். 25 , 30, 40 ஆண்டுகளாக யுத்தம் இருந்தது. கலகம் இருந்தது.

அதேபோன்று அரசியல் ரீதியான பிரிவினைவாதம், இனவாத அரசியல் மத வாத அரசியல், வங்குரொத்து அரசியல் ஆகியவற்றால் எமது நாடு பிளவுபட்டுள்ளது.

நாம் அனைவரும் ஒரு நாட்டில் வாழ்வதனால், ஒரு நாட்டில் வாழ வேண்டும் என்பதால், இன்று நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டும் என்பதனால், ஒரே நாடு என்ற வகையில் நாம் மீண்டும் 75 ஆண்டுகளுக்கு முன்னர் டி.எஸ்.சேனாநாயக்க உருவாக்கிய சிறிலங்காவின் தனித்துவம் நோக்கி பயணிப்போம்.

ஆகவே இந்த தருணத்தில் இந்த மேடையில் எனக்கு தைப்பொங்கல் பண்டிகையே நினைவுவந்தது. நெருப்பின் மேல் பானை வைக்கப்படுகின்றது.நீர் ஊற்றப்படுகின்றது. பால் ஊற்பபடுகின்றது. அரிசி போடப்படுகின்றது.சக்கரை போடப்படுகின்றது. இறுதியில் பொங்கல் வருகின்றது.

இந்த நெருக்கடியான தருணத்தில் நாம் சிங்களவர்களை போடுவோம், தமிழர்களை போடுவோம், முஸ்லிம்களை போடுவோம். பறங்கியர்களையும் போடுவோம். தனித்துவமான இலங்கையை உருவாக்குவோம்.

சில பிரச்சினைகள் குறித்து வடக்கிலும் தமிழ் மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நாம் பேச்சு நடத்திவருகின்றோம்.

நான் நாடாளுமன்றத்தில் இருக்கும் அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்தேன்.நாம் மீண்டும் இந்த நாட்டை ஒன்றிணைக்க பணியாற்ற வேண்டும் என அனைவரிடமும் கூறினேன்.

நல்லிணத்தை மீண்டும் ஏற்படுத்துவோம் என நான் குறிப்பிட்டேன். நான் நாடாளுமன்றத்தில் இருக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாடினேன். அடுத்த வாரம் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை மீண்டும் கூட்டவுள்ளேன். பெப்ரவரி 8 ஆம் திகதி நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நாம் எடுக்கும் நடவடிக்கை என்ன என்பதை கூறுவேன்.

இந்த பிரச்சினையை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, அல்லது தாமதப்படுத்தி கால்பந்து போன்று அடித்து விளையாடி தீர்க்க முடியாது.

தீர்வு என்ன என்பதை நாட்டிற்கும் நாடாளுமன்றத்திற்கும் கூற வேண்டும்.ஆகவேதான் முதலில் நாடாளுமன்றத்தின் கருத்தை கேட்கவுள்ளேன். நாம் பல பிரச்சினைகள் தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளோம்.

காணாமல் போனோர் தொடர்பிலும் அவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பது, என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறிவது தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளோம்.

அதேபோன்று இது தொடர்பில் ஆராய்வதற்கு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவையும் அமைக்கவுள்ளோம். விசேடமாக என்ன நடந்தது ? யாரேனும் தவறு செய்துள்ளார்களா என்பதை இந்த ஆணைக்குழு ஊடாக ஆராயவுள்ளோம்.

மூன்று வாரங்களுக்கு முன்னதாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கவுள்ளோம். இது தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன என இராணுவ கட்டளை தளபதியிடம் நாம் வினவினோம். உண்மையை கண்டறிய தாமும் விரும்பத்துடன் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். எமக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதில் வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமிப்பதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டத்தை நாம் கொண்டுவருவோம்.

இது வடக்கிற்கு எதிராக பிரயோகிக்கப்படுவதாக சிலர் கூறுகின்றனர். எனினும் இது நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கே பிரயோகிக்கப்படுகின்றது.இதனை கடந்த ஆண்டு தெற்கிற்கு பிரயோகிக் வேண்டி ஏற்பட்டது” – என்றார்.

“கலாசார அழிவை தமிழர் தாயகத்தில் விதைத்த ரணில் விக்கிரமசிங்க இன்று தேசிய தைப்பொங்கல் என கூறுகிறார்.” – அருட்தந்தை மா.சத்திவேல்

“கலாசார அழிவை தமிழர் தாயகத்தில் விதைத்து அதன் அறுவடையில் மகிழ்ந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேசிய பொங்கல் என கூறிக்கொண்டு தமிழர் தாயகத்தில் காலடி எடுத்து வைக்க கூடாது.” என அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அரச திணைக்களங்கள் பேரினவாத சிந்தனையோடு தமிழர்களின் நிலத்தையும் வாழ்வையும் தொடர்ந்து சூறையாடிவரும் காலம் இது என குற்றம் சாட்டியுள்ள அவர், மக்கள் பூர்வீகமாக விவசாயம் செய்த நிலங்கள் இராணுவத்திடம் சிக்கி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தேசிய தை பொங்கல் என்பது அரசியல் நாடகம் என்றும் இதனை ஏற்க தமிழர்கள் ஏமாளிகள் அல்ல என்பதை போலி தேசியவாதிகள் உணர வேண்டும் என்றும் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தைப்பொங்கல் என்பது பானையும், அரிசியும், அடுப்பும் சம்பந்தப்பட்ட விடயம் மட்டுமல்ல உழைப்பாளரின் வியர்வை, அதனால் விளைந்த விளைச்சல் உழைப்பு, உழைப்புக்கு அடிப்படை காரணமான மண் அதனுடைய உரிமை கலந்த விடயமாகும். இதிலே வாழ்வும் வளமும் தங்கி இருக்கின்றது.

கலாசார சிறப்போடு தேச உணர்வும் அதன் பாதுகாப்பும் அதற்கான உறுதியும் மேலோங்கி இருக்கின்றது. இவற்றையெல்லாம் சிதைத்தழித்து தொடர் அழிவுகளுக்கும் திட்டமிட்டு கொண்டு தேசிய பொங்கல் என்று அதிபர் தமிழர் தாயகத்தில் காலடி வைப்பதோ அவரின் வருகையை வரவேற்பதையோ நாம் எந்த வகையிலும் அங்கீகரிக்க முடியாது.

வியர்வை விதைத்த நிலம், உழுது விளைந்த நிலம், பொங்கலிட்டு மகிழ்ச்சியோடு உறவுகளோடு கூடி பகிர்ந்து உண்ட நிலம், இராணுவத்திடம் சிக்கி உள்ளது. அரச திணைக்களங்கள் பேரினவாத சிந்தனையோடு தமிழர்களின் நிலத்தையும் வாழ்வையும் தொடர்ந்து சூறையாடிவரும் காலமிது.

இதற்கு மத்தியில் தேசிய தை பொங்கல் என அரசியல் நாடகம். இதனை ஏற்க தமிழர்கள் ஏமாளிகள் அல்ல என்பதை போலி தேசியவாதிகள் உணர வேண்டும். தமிழர்களின் கலாசாரத்தை முற்றாக அழிப்பதற்கு போதை பொருட்களின் பாவனையும் எங்கும் வியாபித்துள்ளது.

இதற்குப் பின்னால் அரச படைகள் உள்ளதாகவும் மக்கள் சந்தேகிக்கின்றனர். நாட்டில் வேறெந்த பிரதேசத்திலும் இல்லாத அளவிற்கு முப்படையினரும் காவல்துறையினரும் அவர்களுக்கு உதவியாக இரகசிய காவல்துறையும் அவர்களின் புலனாய்வாளர்களும் அவர்களோடு சேர்ந்து இயங்கும் ஒட்டுக் குழுக்களும் பலமாக இருக்கும் போது போதை பொருட்கள் வடகிழக்கில் அதிகரித்துள்ளதென்றால் அதற்கு பொறுப்பு கூற வேண்டியது பாதுகாப்பு அமைச்சும் பாதுகாப்புக்கு பொறுப்பான ஜனாதிபதியுமே.

இத்தகைய கலாசார அழிவை தமிழர் தாயகத்தில் விதைத்து அதன் அறுவடையில் மகிழ்ந்த ஜனாதிபதி தேசிய தைப் பொங்கல் என தமிழர் தாயகத்தில் காலடி வைக்க வேண்டாம் என்றே கேட்கின்றோம்.

தமிழர்களின் தேசிய பாதுகாப்பிற்காக போராடி உயிர்த்தியாகமானோரை சொந்த மண்ணிலே நினைவு கூர முடியாது. இறுதி யுத்தத்தில் வான் தாக்குதலாலும், நச்சு குண்டுகளாலும் படுகொலை செய்யப்பட்டோரை கூட்டாக நினைவு கூருவதற்கு முடியாதுள்ளது.

வலிந்து காணாமலாக்கப்பட்டோர்க்கு நீதி இல்லை. தமிழர் தேச தேசியத்தின் உயிர்த் துடிப்போடு இயங்கியவர்கள் அரசியல் கைதிகளாகி விடுதலை இன்றி வாடுகின்றனர்.

இவற்றுக்கெல்லாம் அடிப்படை காரணர்களில் ஒருவரான தற்போதைய ஜனாதிபதி தேசிய தைப்பொங்கல் என தமிழர்கள் மத்தியில் வந்து உழைப்பின் விழாவை பாரம்பரிய தேசிய நிகழ்வை அசிங்கப்படுத்துவதற்கு இடமளிக்கக் கூடாது.

அத்தோடு தேசிய தைப்பொங்கல் என தமிழர்களை கூட்டுச் சேர்க்கும் செயற்பாட்டிலும் பல அரசியல் கைக்கூலிகள் நம்மத்தியிலே தோன்றி இயங்கத் தொடங்கியுள்ளனர்.

இது இவர்களின் அரசியலாகும் இவர்கள் காலாகாலமாக எமக்கு எதிராகவே செயல்பட்டு வந்துள்ளனர். இத்தகைய புல்லுருவிகளை அகற்றி தமிழர் தாயக அரசியலை காப்பதற்கு உறுதி கொண்டு நிலம் காக்கும் பொங்கல் எம் மண்ணிலே பொங்க சக்தி கொள்வோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.