(சிவராமின் இரத்தக்கறைக்குரிய படுகொலை செய்யப்பட்ட செல்வன் – அகிலன்)
இவ் உரையாடல் 40 பாகங்களை உள்ளடக்கியது. இதன் 24 வது பாகம் இதுவாகும். இவ் உரையாடலின் முக்கிய நோக்கம், சம்பவங்களை கதைப்பதல்ல. அதற்கப்பால், அதன் உள்ளார்ந்த அரசியல், அதன் மீதான அரசியல் விமர்சனப்பார்வை, மற்றும் அமைப்பு வடிவங்கள் பற்றிய பிரச்சனைகள் என அமையும். அத்தோடு தீப்பொறி குழுவினர் மீது தள மத்திய குழுவினர் வெளிப்படையாக விமர்சனங்களை முன்வைக்காமை, மத்தியகுழுவில் தளமத்திய குழு உறுப்பினர்கள் மீது முகுந்தன் சுமத்திய குற்றச்சாட்டுக்கள், பின் தள மாநாடு, இயக்கத்தில் உளவுத்துறைகளின் குறிப்பாக ரோவின் தாக்கம் என உரையாடல் தொடர்கின்றது. இவ் உரையாடல்கள் ரோ முகவர்கள் மற்றும் தனிப்பட்ட விரோதங்களுக்காக பணமுதலைகள் விசிறும் பணத்துக்காக – அவர்களுக்கு வேண்டாதவர்களை தூற்றுவதற்கு எழுதப்படும் ‘அம்புலிமாமா’ கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!
அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!: தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 24 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 11.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.
பாகம் 24
தேசம்: தள மாநாட்டுக்கு முன்பாக செல்வன், அகிலன் படுகொலை இடம்பெற்றது பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த செல்வன், அகிலன் படுகொலையில் ஏதோ ஒரு வகையில் நீங்களும் தொடர்பு படுத்தப்பட்டு இருக்கிறீர்கள். அது நான் நினைக்கிறேன் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. அது உண்மையில் என்ன நடந்தது ? செல்வன், அகிலன் படுகொலை செய்யப்பட காரணம் என்ன? உங்களோடு முதல் மத்திய குழுவுக்கு தெரிவு செய்யப்பட்ட பிறகு அவர் எடுபடவில்லை. அப்படி என்றால் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அப்பவே தொடங்கிவிட்டது…
அசோக்: அது உண்மையிலேயே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் மத்திய குழுவிற்கு தேர்வு செய்யப்படாமல் நிராகரிக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்பது உண்மையிலேயே எனக்கு தெரியாது. மத்திய குழுவைச் சேர்ந்த இப்ப உயிரோட இருக்கிற ஆட்கள் தான் அதை சொல்ல வேண்டும். தோழர் ரகுமான் ஜான், சரோஜினிதேவி, சலீம்… செல்வன் தெரிவு செய்யப்படாமைக்கான காரணம் சொல்லப்பட்ட மத்திய குழு கூட்டத்தில் நான் இல்லை. அதற்குப் பிறகுதான் நான் கலந்து கொண்டேன். தோழர் செல்வன் பல்மருத்துவ பீட மாணவர். மிகத் திறமையான தோழர். திருகோணமலை மாவட்டப் பொறுப்பாளராக இருந்தவர்.
தேசம்: இதுல முக்கியமாக குறிப்பிட வேண்டும் என்றால் பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீடத்துக்கு அல்லது பொறியியல் பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மிகத் திறமையான மாணவர்கள் தங்களுடைய படிப்பை குழப்பிக்கொண்டு வந்தவர்கள். தோழர் ரகுமான் ஜானும்…
அசோக்: ஓம் . தோழர் ரகுமான் ஜான் மருத்துவபீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர். அதை நிராகரித்துவிட்டு தொடர்ந்து புளொட்டில் வேலை செய்தவர். அவர் மீது எங்களுக்கு விமர்சனம் இருக்கலாம். ஆனால் இன்றும் போராட்ட உணர்வுகளுடன் இயங்கும் ஒருவர் அவர். அடுத்தது அர்ஜுனா என்று சொல்லி ஜெகநாதன். அவர் மன்னார் பகுதியிலிருந்து வந்த மிகத் திறமையான மருத்துவபீட மாணவர். இப்படி படிப்புக்களை விட்டு நிறைய தோழர்கள் வந்திருக்கின்றார்கள். தோழர்கள் படிப்பை கைவிடாமல் தொடர வேண்டும் என்பதில் தோழர் குமரனும், நானும் மிக வும் கவனமாக இருந்தோம். இது பற்றி முன்னர கதைத்திருக்கிறம்.
செல்வன் அகிலன் பிரச்சனை என்னவென்று கேட்டால் சிவராம் இந்தியாவுக்குப் போய் வரும்போது வெங்கட் என்பவரையும் தளத்திற்கு அழைத்து வருகின்றார். முகுந்தனின் உத்தரவின் அடிப்படையிலேயே வெங்கட் வருகின்றார். நான் நினைக்கிறேன் பின்தளத்தின் முடிவோடுதான் செல்வன், அகிலன் படுகொலைகள் நடந்தது என்று. அவர்களின் நோக்கம் செல்வன் தான். செல்வனோடு அகிலனும் இருந்தபடியால் அவரையும் இவர்கள் படுகொலை செய்தார்கள்.
தேசம்: வெங்கட் என்றது…
அசோக்: வெங்கட் என்றது முகுந்தனுடைய உளவுத்துறை யை சேர்ந்தவர்.
தேசம்: பண்டத்தரிப்பா?
அசோக்: இல்லை சுழிபுரம். அவர் சங்கிலி கந்தசாமியோடு உளவுத்துறையில் வேலை செய்தவர். பின் தளத்தில் பல்வேறு படுகொலையுடன் தொடர்புபட்ட ஒராள். அவரும் இன்னொருவரும் அவருடைய பெயர் எனக்கு தெரியாது. ரெண்டு பேரும் சிவராமோடு வாரார்கள். அந்தக் காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் ஈஸ்வரன் நிற்கிறார். அவர்தான் கிழக்கு மாகாணத்துக்கு பொறுப்பாளர். இவங்கள் கிழக்கு மாகாணத்தில் ராணுவ தாக்குதலை செய்ய வேண்டும் அதற்கு சில இடங்களை பார்வையிடுவதற்கு அங்க போக வேண்டும் என்று சொல்லி ஈஸ்வரனிடம் அனுமதி கேட்டிருக்கிறார்கள். ஏனென்றால் கிழக்கு மாகாண பொறுப்பாளரின் கடிதம் இல்லாமல் இவர்கள் அங்க போக இயலாது. வழிகாட்டிகளோ, தங்குமிடங்களோ, சாப்பாடுகளோ பொறுப்பாளர்களின் அனுமதியோடு தான் செய்ய வேண்டும். தன்னிச்சையாக ஒராள் போக இயலாது. அந்தந்த பொறுப்பாளர்களின் அனுமதியோடு தான் நீங்கள் போக வேண்டும். அடுத்தது வழிகாட்ட வேண்டும்… வழிகாட்டிகள் இல்லாமல் பாதுகாப்பாக பயணம் செய்யமுடியாது.
தேசம்: பொதுப் போக்குவரத்தில் போக இயலாது தானே…
அசோக்: அப்போ ஈஸ்வரன் கடிதமொன்று கொடுத்திருக்கிறார், இந்தக் கடிதம் கொண்டு வருபவருக்கு தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கவும் படி.
தேசம்: அடுத்தது அகிலன் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.
அசோக்: அகிலன் மூதூரைச் சேர்ந்த தோழர். அங்க மூதூர் பிரதேசத்திற்கு பொறுப்பாளராக வேலை செய்த தோழர். அவரும் திறமையான தோழர். காந்தியத்துக்கூடாக செல்வனை போல வந்தவர் என்று நினைக்கிறேன். மிகத் திறமையான தோழர்கள். அப்போ அந்த நேரத்தில் அவர்கள் மூதூர் பகுதியில் தான் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அந்தப் படுகொலைகள் மூதூருக்கு பக்கத்தில் தான் நடந்திருக்கு.
தேசம்: இந்த இரண்டு கொலைகளுக்கும் முதல் பின் தளத்தில் சில கொலைகள் இடம்பெற்றதாக…
அசோக்: நிறைய கொலைகள் நடந்து இருக்குதானே.
தேசம்: தளத்தில் அதாவது புளொட்டினுடைய தலைமை புளொட்டினுடைய உளவுத்துறை தளத்தில் இவ்வாறான கொலைகளில் ஈடுபட்டிருந்ததா?
அசோக்: தளத்தில் நடந்த கொலைகள் பற்றி முன்னர் கதைத்திருக்கிறன். அந்த கொலைகளுக்கும் பின் தள உளவுத்துறைக்கும் தொடர்பில்லை. அவைகள் கண்ணாடிச் சந்திரன், நேசன் ஆட்களினால் செய்யப்பட்டவை.
தேசம்: இதுதான் முதல் படுகொலை என்று நினைக்கிறேன்.
அசோக்: சுழிபுரம் படுகொலை நடந்ததுதானே. ஆனா திட்டமிட்டு, அதாவது தலைமையால் உளவுத்துறையால் தளத்தில் நிகழ்த்தப்படுகின்ற முதலாவது படுகொலை, இரட்டைப் படுகொலை இதுதான்.
தேசம்: அதற்கான ஏதாவது சமிஞ்சை இருந்ததா? ஏனென்றால் முரண்பட்டு வந்தது நீங்கள்…
அசோக்: என்ன சந்தேகம் இருந்தது என்று கேட்டால் தளத்தில் தளத்தில் நேசன் ஆட்கள் வெளியேறிவிட்டார்கள் தானே. பின் தளத்தில் தோழர் ரகுமான் ஜான் ஆட்கள் வெளியேறி விட்டார்கள். செல்வன் ரகுமான் ஜானின் நெருங்கிய தோழர். திருகோணமலை தானே, ஒரே இடம். தோழர் ரகுமான் ஜான் வெளியேறின உடன் அவங்களுக்கு ஒரு சந்தேகம் வந்துட்டுது இவரும் ரகுமான் ஜானின் ஆளாக இருப்பார் என்று. யாழ்ப்பாணத்தில் நேசன் ஆட்கள் வெளியேறியதைப் போன்று திருகோணமலையிலும் குழப்பங்கள் ஏதும் வரலாம் என்று நினைத்திருக்கலாம்.
நிறைய விடயங்களை மறந்திட்டன். இப்பதான் ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. தள மாநாட்டிக்கு பிறகு பின்தளத்தில் ஒரு மத்திய குழு கூட்டம் நடந்தது. அதில்தான் நீண்ட காலத்திற்கு பிறகு ராஜன் கலந்து கொள்கிறார். இந்த கூட்டத்தில் முகுந்தன் தொடர்பாக கடும் விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள் ராஜனால் வைக்கப்பட்டு, இடையில் குழப்பத்தில் முடிந்த கூட்டம் அது. சந்ததியார் கொலை, செல்வன், அகிலன் கொலை பற்றியெல்லாம் கதைக்கப்பட்டது. முகுந்தனிடம் இருந்து ஓழுங்கான எந்த பதிலும் வரல்ல.
இதைப்பற்றி பிறகு கதைக்கிறன். இதில செல்வன் அகிலன் கொலை பற்றி நான் கேள்வி எழுப்பிய போது முகுந்தன் சொன்னது ஞாபகம் வருகிது. அவர்கள், சந்ததியார், ரகுமான் ஜான் ஆட்களோடு சேர்ந்து புளொட்டை உடைக்க முயன்றதாகவும், விசாரிக்க சென்ற போது செல்வனிடம் இருந்து இவங்க எழுதிய கடிதங்கள் பிடிபட்டதாகவும் கூறி குற்றச்சாட்டுக்களை சுமத்திக் கொண்டே இருந்தார். ஒழுங்கான எந்த பதிலும் முகுந்தனிடம் இருந்து கிடைக்கல்ல. பிறகு தளத்தில் இருந்த எங்கள் மீது சில குற்றச்சாட்டுக்களை சுமத்த தொடங்கினார். அதற்கிடையில் ராஜனுக்கும், முகுந்தனுக்கும் வாக்குவாதம் அதிகமாகி பெரிய குழப்பமாகி கூட்டம் இடையில் குழம்பிவிட்டது. இதுதான் நாங்கள் கலந்து கொண்ட கடைசி மத்தியகுழு கூட்டம். இதைப் பற்றி பிறகு கதைப்பம்.
உண்மையில பார்த்தீங்க என்றால் இயக்கங்களின் ஆரம்ப வரலாறே பிரச்சனைகளுக்கு முரண்பாடுகளுக்கு ஒரே தீர்வு கொலைதான் என்றுதான் செயற்பட்டு இருக்காங்க. உரையாடல் என்பதே அங்கு இருக்கல்ல. ஆயுத போராட்டம் என்றால் அது வன்முறை ஒன்றுதான் என்ற பார்வைதான் எங்களிட்ட இருந்திருக்கு.
தேசம்: அகிலன்
அசோக்: அகிலன் மூதூர். ரகுமான் ஜானை தெரிந்திருக்குமே ஒழிய பெரிய நெருக்கம் இருக்காது. சிவராம், வெங்கட் ஆட்கள் செல்வனை முதூரில் வைத்து அவரை அரெஸ்ட் பண்ணும் போது கூடவே அகிலனும் இருந்திருக்கின்றார். எங்களுக்கு நடந்ததற்கு பிறகுதான் தெரிய வருது.
தேசம்: இவர்கள் கொல்லப்பட போகிறார்கள் என்பது சிவராமுக்கு தெரியும்.
அசோக்: தான் வழிகாட்ட தான் போனவர், தனக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று அவர் சாதித்துக் கொண்டிருந்தார். அடுத்தது ஈஸ்வரன் கொடுத்த கடிதம் தன்னிடம் இருக்கு என்று சொல்லி நிறைய பெயரிட்ட சொல்லிக் கொண்டிருந்தவர். கடைசியா பார்த்தா கடிதத்தில் ஒன்றும் இல்லை.
தேசம்: அதுக்குள்ள என்ன இருந்தது…
அசோக்: இந்த கடிதத்தை கொண்டு வருபவருக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கவும் என்று சொல்லி ஈஸ்வரன் எழுதி கொடுத்திருந்தார்.
தேசம்: அப்போ ஈஸ்வரனுக்கும் தெரியாது என்ன நடக்க போகுது என்று சொல்லி…
அசோக்: இல்லை. ஆனால் ஈஸ்வரனுக்கும் தொடர்பு என்று சொல்லி வெளியில கதையை பரப்பினார்கள். என்னைப் பொறுத்தவரை நிச்சயம் தெரிந்திருக்காது என்றே நம்புகிறேன்.
தேசம்: அப்போ வெங்கட்டும் சிவராமும் தான் இந்த கடிதத்தை கொண்டு போயினம்.
அசோக்: இன்னும் ஒருத்தரும் இவர்களோடு வந்தவர். பெயர் ஞாபகம் இல்லை.
தேசம்: இவைக்கு தான் என்ன நடக்கப் போகுது என்று தெரியும்…
அசோக்: மூன்று பேரும் அந்த நோக்கத்தோடு தானே வந்திருக்கிறார்கள்.
தேசம்: மூன்றாவது ஆளைப் பற்றி உங்களுக்கு தெரியாது?
அசோக்: தெரியாது, மூன்று பேரும் அந்த நோக்கத்துடன்தான் வந்திருக்கிறார்கள். இதில இந்த கடிதம் கொண்டு போனால் மட்டும்தான் அங்கு போக முடியும் என்பதற்காக, திருகோணமலை மாவட்டங்களில் ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு இடங்கள் பார்க்க வாரோம் என்று சொல்லித்தான், ஈஸ்வரனிடம் கடிதம் கேட்டிருக்கிறார்கள். ஏனென்றால் பின் தளத்தின் அனுமதியோடுதானே வருகிறார்கள். அப்போ ஈஸ்வரனும் நம்பிட்டு இவங்கள் ஏதோ தாக்குதல் செய்வதற்கு ஆய்வு செய்ய வாறாங்கள் இடங்கள் பார்க்கத்தான் வாறாங்கள் என்று அந்த கடிதத்தை கொடுத் திருக்கிறார்.
தேசம்: அந்தக் கடிதத்தில் செல்வன் அகிலன் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.
அசோக்: ஒன்றுமே இல்லை. அப்படி நடந்திருந்தா தள மாநாட்டில் ஈஸ்வரன் மீது குற்றச்சாட்டு வந்திருக்கும். இன்னும் ஒரு உதாரணம் சொல்ல வேண்டும். அந்த மாநாட்டில் வாக்கெடுப்பு நடந்தது. பின்தள மாநாட்டிக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் சாதாரணமாக தெரிவு செய்யப்படவில்லை. வாக்கெடுப்பின் அடிப்படையில் தான் தெரிவு செய்யப்பட்டார்கள். பின்தள மாநாட்டிக்கு செல்வதற்கு தேர்தல் அடிப்படையில் தோழர்கள் தெரிவு செய்யப்பட்டது பற்றி முன்னர் கதைத்திருகிறன். அந்த தேர்தலில் மத்தியகுழு உறுப்பினர்கள் நாங்க நான்கு பேர்களும் கலந்து கொண்டோம். அதில் கூடிய வாக்கு ஈஸ்வரனுக்கும் அடுத்தது எனக்கும் தோழர் கௌரிகாந்தனுக்கும்தான் கிடைத்தது. எங்கள் மீது குற்றச்சாட்டு வந்தால் எனக்கும் ஈஸ்வரனுக்கும் ஏன் தோழர்கள் வாக்கு கூட போடுகிறார்கள்?
தேசம்: பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அறிக்கையில் உங்களுடைய பெயர் வரக் காரணம் என்ன? பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்துடன் ஆரம்ப காலங்களில் மிக நெருக்கமாக வேலையும் செய்திருக்கிறீர்கள். அவர்கள் எல்லோருக்கும் உங்களைத் தெரியும். தனிப்பட்ட முறையிலும் தெரியும்.
அசோக்: ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்சின் புலிகளின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவாளனாக ஆரம்ப காலகட்டங்களில் நான் இருந்திருக்கிறன். UTHRரோடு பெரிதாக எனக்கு தொடர்பு இருக்கவில்லை.
ஆனால் அதில் எனக்கு தெரிந்தவர்கள் இருந்தார்கள். UTHRரோடு பெருசாக உடன்பாடு இருக்கவில்லை. அதுல உள்ள சில நபர்கள் தொடர்பாக சிக்கல்கள் இருந்தது. பிறகு நீங்கள் தான் ஒருநாள் அனுப்பி இருந்தீர்கள். உங்களுக்கு யாரோ ஒரு ஆள் என்னைப் பற்றிய இந்த குற்றச்சாட்டை அனுப்பியதாக.
தேசம்: நட்சத்திரன் செவ்விந்தியன்.
அசோக்: அப்போதான் எனக்கு தெரியும். அதுவரைக்கும் UTHR ரிப்போர்ட்டில் என்னைப் பற்றி இப்படி இருக்கு என்று எனக்கு தெரியாது. பிறகு விசாரிச்சா என் மீது முரண்பாடு இருக்கிற தோழர் ஒருவர் என் மீது இந்த குற்றச்சாட்டை சுமத்த வேண்டும் என்பதற்காக அந்த ரிப்போர்ட்டை கொடுத்திருக்கிறார். UTHR ஆட்களும் எந்த விசாரணையும் இல்லாமல், சிவராமுக்கு நான்தான் கடிதம் கொடுத்தேன் என்ற தோழரின் புனைவை தங்களின்ற ரிப்போர்ட்டில் பதிவு செய்திருந்தாங்க. எனக்கே இந்நிலை என்றால் அவர்களின் தகவல்களில் எப்படி உண்மைகள் இருக்கமுடியும்?
தேசம்: உங்களுக்கு முரண்பாடான தோழர் என்றால் இயக்கத்தில் இருந்த தோழரா? அல்லது
அசோக்: புளொட் இயக்கத் தோழர்தான். அப்போ பெரிய அதிர்ச்சியாக இருந்தது. நான் UTHRரோடு சம்பந்தப்பட்டவர்களுடன் கதைத்தேன். அப்போ விளக்கம் ஒன்று எழுதித்தர சொன்னார்கள் என்ன நடந்தது என்று சொல்லி. நான் பெரிய அக்கறை எடுக்கவில்லை. எழுதிக் கொடுக்கவில்லை. இப்ப எனக்கு எதிரிகளாக இருக்கிறவர்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள். அது பிரச்சினை இல்லை. தளத்தில் நடந்த மாநாட்டிக்கு வந்த தோழர்களுக்கு தெரியும்தானே. தளத்தில் எத்தனை தோழர்கள் என்னோடு வேலை செய்திருப்பார்கள். அவர்களுக்கு தெரியும் என்னைப்பற்றி.
தள மாநாட்டில் செல்வன், அகிலன் பிரச்சனை முன்வைத்தவர்கள் நாங்கள்தான். சிவராமுக்கும் எனக்கும் அதன் பின் பெரிய முரண்பாடு. தனக்கும் கொலைக்கும் தொடர்பில்லை என்றும் அது பின் தள முடிவு என்றும் சொன்னார். நான் நினைக்கிறேன் அவர் நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும். ஆனால் அவர் அதை செய்யவில்லை. பிற்காலங்களில் சிவராமை நான் இங்க பரிசில் சந்தித்த போது கூட இதைத்தான் சொன்னார்.
தேசம்: மற்றது அகிலன், செல்வின் படுகொலையில் நான் நினைக்கிறேன் ஜென்னி தோழரும் திருகோணமலையைச் சேர்ந்தவர் என. அந்த பாதிக்கப்பட்ட குடும்பம் அவரிட்டையும் போய்க் கேட்டிருக்க வேண்டும்.
அசோக்: எல்லோரும் திருகோணமலையில் மிக நெருக்கமான தோழர்கள்தான். ஜென்னி, ஜான் மாஸ்டர் எல்லார்கிட்டயும் கேட்டிருப்பார்கள். தோழமைக்கு அங்காள குடும்ப நட்பாக அவங்க எல்லோரும் இருந்தவங்க. செல்வன், அகிலன் எல்லாம் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் தளத்தில் சேர்ந்து வேலை செய்த அருமையான தோழர்கள். நான் நினைக்கிறேன். செல்வனுக்கும் சிவராமுக்கும் முன்னரே முரண்பாடு இருந்திருக்கும் என்று. ஏன் என்றால் அவர் நினைத்திருந்தால் நிச்சயம் இக் கொலைகளை தடுத்திருக்க முடியும். பின் தள உத்தரவு என்றால் அங்கேயே இந்த உத்தரவை தடுத்திருக்க முடியும். ஆனால் அவர் செய்யல்ல. இங்க பரிசில் சந்தித்த போது கடுமையாக அவரைப் பேசினேன். பின்தளம்தான் காரணம் என்று தன்னை நியாப்படுத்திக் கொண்டே இருந்தார்.
தேசம்: அதுல நான் நினைக்கிறேன் ஜென்னியும் கடுமையாக எதிர்த்து இருந்தவர் என்று. படுகொலைகளை கண்டித்து இருந்தவர். ஆனால் அவர் மீதும்…
அசோக்: ஜென்னி மீதும் குற்றச்சாட்டு சொல்லப் பட்டது. ஜென்னி இயக்கத்தோடு விசுவாசமாக வேலை செய்வது அவரது அரசியல் சம்பந்தப்பட்ட பிரச்சினை. ஆனால் அவருக்கு ஒரு தீர்மானம் இருக்கும் முகுந்தன் சரியாக நடக்கிறார் என்று. அதனால அவ சப்போர்ட் பண்ணுவா. இந்த நிலைப்பாடு, அவரின் அரசியல், முகுந்தன் விசுவாசம் இவை எல்லாம் விமர்சனத்திறகுரியதுதான். அவர் முகுந்தன் சப்போர்ட் என்பதற்காக படுகொலைக்கு எல்லாம் அவரை சம்பந்தப்படுத்த இயலாது.
தீப்பொறியினருக்கு நிறைய விமர்சனங்கள் இருந்தன. எங்களைப் பற்றியும் இருந்தன . தங்களோடு நாங்க வெளியேறவில்லை என்ற கோபம் இருக்குதானே. தங்களை நியாயப்படுத்த பல கதைகளைச் சொன்னாங்க. உண்மையிலேயே அவர்கள் தளமாநாட்டில் கலந்து கொண்டிருக்க வேண்டும். அவங்க வைக்கிற குற்றச்சாட்டை தானே நாங்களும் வைக்கிறோம். நீங்கள் ஒரு 4, 5 பேர் ஒளிந்துகொண்டு என்னத்தை சாதித்தனீங்க? எங்களோடு தோழர் ரகுமான் ஜான், கேசவன் இருந்திருந்தால் பலமான சக்தியாக நாங்கள் இருந்திருக்கலாம். அந்த அடிப்படையில் அவங்களுக்கும் எங்களுக்கும் முரண்பாடு இருந்தது.
தேசம்: இந்த மாநாடு முடிந்த பிறகு நான் நினைக்கிறேன் விடுதலைப் போராட்டத்தில் மிகப்பெரிய பின்னடைவு டெலோ புலிகளால் அழிக்கப்படுவது.
அசோக்: உண்மைதான். பெரிய அழிவு அது. அதுல ஒன்று குறிப்பிட வேண்டும் ரெலோ தோழர்கள் நிறைய பேர் இந்த புலிகளின் கொலை வெறி தாக்குதலில் பாதிக்கப்பட்டு எங்களிட்ட வந்து தஞ்சம் கேட்டு பாதுகாப்பு கொடுத்தோம். முக்கியமாக பொபி மற்றது சந்திரன் என்று சொல்லி அவரும் எங்கட குரூப்போட கூட்டிக்கொண்டு தான் நாங்கள் பின்தள மாநாட்டுக்கு சென்றது. யாழ்ப்பாணத்திலிருந்து மிகப் பாதுகாப்பாகத் தான் நாங்கள் போனது. காட்டுப்பாதையால் அவங்களை அழைத்துக் கொண்டு மன்னார் சென்று அங்கிருந்து நாங்கள் பின் தளத்தில் அவர்களை கொண்டு விட்டோம்.
தேசம்: அதுலயும் ஒரு சிக்கல் இருக்கு என்னவென்றால் ரெலோ அழிப்பிலும் கூட கூடுதலாகப் பாதிக்கப்பட்டது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். ஏனென்றால் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாதைகள் எல்லாம் வடிவாக தெரியும். தப்பிப்பதற்கான வழிகளும் தெரியும். அதேநேரம் பிடிபட்டவர்களை அவர்களுடைய பெற்றோரோ உறவினர்களோ போய் சண்டை பிடித்து கூட்டி வந்து இருப்பார்கள். கிழக்கு மாகாண தோழர்கள் கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலைமையில் தான்.
அசோக்: உண்மைதான். சம்பவம் நடந்த உடனே மட்டக்களப்பு தோழர்கள் சிலர் எனக்கு தகவல் அனுப்பினாங்க இப்படி பிரச்சனை என்று. எனக்கும் மட்டக்களப்பு டெலோ தோழர்களுக்கும் உறவு இருந்தது. ரெலோ பிரச்சினை வந்தவுடன் அவர்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. அப்போ கோப்பாய்க்கு பக்கத்தில் ஒரு கேம்ப் இருந்தது என்று நினைக்கிறேன். அது புலிகளால் வளைக்கப்பட்டு அவர்கள் 4 பேரும் தப்பிட்டாங்க. தப்பி என்னட்ட வந்துட்டாங்க. அவங்களோட நிறைய தோழர்கள் வந்தவங்க. பிறகு மென்டிஸ் தான் அவங்களுக்கு பாதுகாப்பு கொடுத்தது. இந்த தோழர்களையும் காப்பாற்றி அனுப்பி போட்டுத்தான் நாங்க பின் தள மாநாட்டிக்கு போனது.
தேசம்: எத்தனை தோழர்களை அனுப்பி வைத்திருப்பீர்கள்…
அசோக்: கிழக்கு மாகாணத்துக்கு நான் நினைக்கிறேன் பத்து பதினைந்து தோழர்களை அனுப்பி இருப்போம். நான் பொறுப்பெடுத்து அனுப்பினேன். மெண்டிஸ் நிறைய செய்தது. எல்லா தோழர்களுக்கும் மெண்டிஸ் ஆட்கள்தான் பாதுகாப்பு கொடுத்தது.
தேசம்: எப்ப நீங்கள் பின் தளத்துக்கு போகிறீர்கள். ஏப்ரல் மே வரைக்கும் இது நடக்குது என்று நினைக்கிறேன்.
அசோக்: அதுக்குப் பிறகுதான் நாங்கள் போறோம் ஏனென்றால் பின்தள மாநாடு எண்பத்தி ஆறு கடைசியில் தான் நடக்குது.