“பெருந்தோட்ட பகுதியில் 52 சதவீதமானோர் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன். 29 இலட்சம் பேர் புதிதாக ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.” என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (16) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஜனாதிபதியால் சமர்பிப்பிக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியிலா தயாரிக்கப்பட்டுள்ளது என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது. அரச வருமானத்திற்கும்,அரச செலவினத்திற்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகிறது.
வரவு செலவுத் திட்டத்தில் திறைசேரியில் கணக்கறிக்கை 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கபடவில்லை.சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைக்கு இது ஒரு தடையாக அமையும்.பொறுப்புக் கூறல் தொடர்பில் நாணய நிதியம் கேள்வியெழுப்பும்.நாட்டின் உண்மை பொருளாதார நிலையை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் குறிப்பிட வேண்டும்.
அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ள 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் நடைமுறைக்கு சாத்தியமானதா என்ற சந்தேகம் காணப்படுகிறது.எரிபொருளுக்கு வரி அதிகரிப்பை அரச வருமானமாக வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடவில்லை.
எரிபொருளுக்கு வரி அதிகரித்தால் மின்சாரம் மற்றும் போக்குவரத்து சேவையின் கட்டணங்கள் பாதிக்கப்படும்.பல்வேறு காரணிகளினால் நாட்டில் எரிபொருள் பாவனை 40 சதவீதத்தாலும்,மின் பாவனை 20 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதால் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும்.
நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள நிலையில் வரவு செலவுத் திட்டத்தில் வீத மற்றும் உட்கட்டமைப்பு அதிகரிப்பிற்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வீதியை அபிவிருத்தி செய்யும் நிலையில் நாடு இல்லை.
துறைசார் நிறுவனங்களின் செலவுகளை குறைந்தப்பட்சம் 10 சதவீதத்திலாவது குறைத்துக் கொள்ள அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை.அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தப்படுவதால் மாத்திரம் அரச வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியாது.இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்தும் முயற்சிப்பதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
சமூக பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு வரி வீதம் அதிகரிக்கப்பட வேண்டும்.வரி அதிகரிப்பால் நடுத்தர மக்கள் எதிர்க்கொள்ளும் நெருக்கடிக்கு எவ்வாறு தீர்வு காண்பது தொடர்பில் அரசாங்கம் துறைசார் நபர்களுடன் கலந்துரையாடி தீர்வு காண வேண்டும்;.
அரச செலவுகளை குறைத்துக் கொள்ளாமல் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள முடியாது.சமூக கட்டமைப்பு தொடர்பான தகவல்களை புள்ளிவிபரவியல் திணைக்களம் தரப்படுத்துவதை அரசாங்கம் தடுத்துள்ளது.
நாட்டில் தொழிலின்மை 2 மடங்காக அதிகரித்துள்ளது. மறுபுறம் ஏழ்மை நிலை 2005ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்த நிலைக்கு சென்றுள்ளது. பெருந்தோட்ட பகுதியில் 52 சதவீதமானோர் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன்,நாட்டின் ஏழ்மை நிலை 26 சதவீதமாக காணப்படுகிறது. 29 இலட்சம் பேர் புதிதாக ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
இவ்வாரான பயங்கரமான சூழ்நிலையில் அரசாங்கம் மக்கள் கலவரத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தாங்கிக் கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.
கட்டுமாண கைத்தொழில் முழுமையாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.படித்த தொழிற்துறையினர் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.நாடு படித்த மனித வளமற்ற பாலைவனத்தை நோக்கி செல்கிறது.
ஊழல் மோசடிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் ஆண்டு முதல் எந்த சர்வதேச நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ள முடியாமல் போகும் என்றார்.