இலங்கை மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கி

மத்திய வங்கியில் 50 இலட்சம்  ரூபா  திருட்டு – சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு !

மத்திய வங்கியில் 50 இலட்சம்  ரூபா  திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களைக் கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெகுணாவெல கோட்டை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், நீதிமன்றத்துக்கு  இந்த விவகாரம் தொடர்பில்  கோட்டை பொலிஸார் சமர்ப்பித்த அறிக்கையை கவனத்தில் எடுத்துக் கொண்ட நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மத்திய வங்கியின் உயர்பாதுகாப்பு அறையில்  வைக்கப்பட்டிருந்த பணம் திருடப்பட்டமை தொடர்பில் ஏற்கனவே திணைக்களத்தின் பல அதிகாரிகளிடம் வாக்குமூலங்களை பதிவு செய்து வருவதாகவும் கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை மத்திய வங்கியில் இருந்து 50 லட்சம் ரூபாவை காணவில்லையாம் ..!

இலங்கை மத்திய வங்கியில் இருந்து 50 இலட்சம் ரூபா பணம் காணாமல் போயுள்ளதாக மத்திய வங்கி தகவல் தரப்புகள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் மத்திய வங்கியின் அதிகாரிகள் சிலர், நேற்று(11) பிற்பகல் கொழும்பு கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அவர்கள் மேலும் ஒருமுறை பணம் காணாமல் போனது தொடர்பில் சரிபார்த்து, பின்னர் வருவதாக தெரிவித்து திரும்பிச் சென்றுள்ளதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பு தரப்பினரும், கோட்டை காவல்துறையினரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மத்திய வங்கி இலங்கை மக்களின் நிர்வாகத்திலிருந்து விலகி , சர்வதேசத்தின் ஆட்சிக்கு உட்படும்.” – எச்சரிக்கிறார் உதய கம்மன்பில !

“மத்திய வங்கி இலங்கை மக்களின் நிர்வாகத்திலிருந்து விலகி , சர்வதேசத்தின் ஆட்சிக்கு உட்படும்.” என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மத்திய வங்கி சட்டமூலத்தினை சர்வசன வாக்கெடுப்பின்றி நிறைவேற்ற முடியாது என தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுமீதான இன்று (24) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மத்திய வங்கி சட்ட மூலத்தில் நிறைவேற்றதிகாரம் , சட்டவாக்க சபைக்கு அப்பால் முற்றிலும் சுயாதீன மத்திய வங்கியை ஸ்தாபிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு நிர்வாகமும் இன்றி சுயாதீன மத்திய வங்கி ஸ்தாபிக்கப்படுமானால் அதன் மூலம் அசுரன் ஒருவனே தோற்றம் பெறுவான் என உயர் நீதிமன்ற நீதியரசர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நீதியரசர்களால் இவ்வாறு பகிரங்கமாக சுட்டிக்காட்டப்பட்டமை மகிழ்ச்சியளிக்கிறது. மத்திய வங்கியை சுயாதீனப்படுத்துவதற்கான சட்ட மூலத்தின் ஊடாக நிறைவேற்றதிகாரம் மற்றும் பாராளுமன்றத்திற்கு சமாந்தரமாக அரசமைக்கக் கூடிய அதிகாரம் கிடைக்கப்பெறும் என்பதை நாமும் இதன் போது சுட்டிக்காட்டினோம்.

இதன் ஊடாக நூல் அறுந்த பட்டம் போன்று மத்திய வங்கி இலங்கை மக்களின் நிர்வாகத்திலிருந்து விலகி , சர்வதேசத்தின் ஆட்சிக்கு உட்படும். எனவே சர்வனவாக்கெடுப்பின்றி இந்த சட்ட மூலத்தை நிறைவேற்ற முடியாது என்ற தீர்ப்பினை வழங்க வேண்டும் என நாம் நீதிமன்றத்திடம் கோரிக்கையை முன்வைத்துள்ளோம் என்றார்.

இலங்கையின் மொத்த கையிருப்பு எவ்வளவு உள்ளது. ? – மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

2023 ஜனவரி இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 2.1 பில்லியன் டொலர் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

2022 டிசம்பரில் இருந்து உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துப் புள்ளிவிபரங்களுடன் ஒப்பிடுகையில் 11.7 சதவீத அதிகரிப்பு என மத்திய வங்கி கூறியுள்ளது.

அந்நிய செலாவணி கையிருப்பு 2022 டிசம்பரில் 1.8 பில்லியனில் இருந்து 2023 ஜனவரியில் 2 பில்லியன் (10.8%) டொலராக உயர்ந்துள்ளது.

“எங்களால் வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியும்.” – அஜித் நிவாட் கப்ரால்

எங்களால் வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் அடுத்த ஒன்பது மாதங்களுக்கான பொருளாதார வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், இந்த ஆண்டில் 5.5 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகத்தை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளாதாரம் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளதாக சிலர் தெரிவிக்கும் கருத்துக்களில் உண்மை இல்லை என்றும்அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களே அவதானம் – இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை !

நாடு முழுவதும் போலி நாணயத் தாள்கள் அதிகளவில் புழக்கத்தில் இருப்பதால், குறித்த விடயம் சம்பந்தாக மிகவும் கவனமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சந்தேகத்திற்குரிய நாணயத்தாள் கிடைத்தால், பாதுகாப்பு அடையாளத்தை ஆராய்ந்து, அதனை தம்வசம் வைத்துக்கொள்ளுமாறும், இலங்கை மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.

இதன் போது குறித்த நாணயத்தாளை கொண்டு வந்த நபர், அவரது வெளித் தோற்றம், வாகனத்தில் வந்திருந் தால், அது பற்றிய விபரங்கள், நாணயத்தாளின் பெறுமதி, அதன் தொடர் இலக்கம் ஆகியவற்றைக் குறித்து வைத்துக்கொண்டு அருகில் உள்ள பொலிஸ் நிலையத் திற்கோ அல்லது குற்றவியல் விசாரணை திணைக்களத் தின் போலி நாணயம் தொடர்பான பிரிவின் தொலைபேசி இலக்கங்களான 0112422176 மற்றும் 0112326670 இலக்கங் களுடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போலி நாணயத்தாள்களை வைத்திருந்தமை, பயன் படுத்துதல் அல்லது அச்சடித்தல் போன்ற குற்றங்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக போலி நாணயத்தாள்களை அச்சடித்து விநியோகிப்பது தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.