இலங்கை மருத்துவம்

இலங்கை மருத்துவம்

“கிளிநொச்சியில் இறந்து பிறந்த குழந்தை. அகற்றப்பட்ட தாயின் கருப்பை.” – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த கணவன்!

கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர்களின் தாமதத்தாலும் அசமந்த போக்காலும் குழந்தை இறந்து பிறந்துள்ளதோடு தாயின் கற்ப பையை எடுக்க நேர்ந்துள்ளதாக கணவனால் மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தந்தையான இராசதுரை சுரேஷ் என்பவரால் யாழ். ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை நடத்திய பின்னர் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த இராசதுரை சுரேஷ்,

“கிளிநொச்சி வைத்தியசாலையில் பரிசோதனையின் போது 09ம் திகதி இறுதி திகதி கொடுக்கப்பட்டு வைத்தியர் ஒருவரால் பரிசோதிக்கப்படட போது உடல் நிறை குறைவாக இருப்பதால் குழந்தை வளர்ச்சி குறைவாக இருக்கிறது.

அதனால் 12ம் திகதி சத்திரசிகிச்சை மூலமாக குழந்தையை பிரசவிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

குறித்த திகதியில் வைத்தியசாலைக்கு சென்ற போது வேறொரு வைத்தியர் இருந்தார். அவர் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை முதலில் குறித்து கொடுக்கப்பட்ட திகதி 24 ஆக இருந்த போதிலும் 26ம் திகதி வருமாறு கூறினார்.

 

24ம் திகதி மனைவியை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் 27 ம் திகதி காலையில் மருந்தேற்றப்பட்டது. மீண்டும் 12.00 மணியளவில் மருந்தேற்றப்பட்டது. 12.30 மணியளவில் இரத்தப்போக்கு ஏற்பட்டது. 05.30 மணியளவில் குழந்தையின் துடிப்பு குறைவடைகிறது வைத்தியரை கூப்பிடுங்கள் என்று கத்தி கூச்சலிடட போதும் யாரும் வரவில்லை.

07.30 மணியளவிலேயே வைத்தியரை தொலைபேசியூடாக அழைத்து மகப்பேற்று அறைக்கு மாற்றி ஆயுதம் போட்டு பார்த்து சரிவரவில்லை என்று சத்திரசிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

அதன் பின்னர் 12.30 மணியளவில் குழந்தை இறந்ததாகவும் கர்ப்பப்பை அகற்றப்பட்டதாகவும் செய்தி தரப்பட்டது.

இவ் விடயம் எனது பார்வையில் இன்னொரு குழந்தை கொலை செய்யப்பட்டதாகவே கருதுகிறேன்.” என கூறியுள்ளார்.

அரச வைத்தியசாலைகளில் அதிகரிக்கும் மரணங்கள் – விசாரணைகளை மேற்கொள்ள ஐந்து பேர் கொண்ட குழு !

சுகாதாரத்துறைக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அரச வைத்தியசாலைகளில் கடந்த சில நாட்களுக்குள் ஏற்பட்டுள்ள மரணங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க ஐந்து பேர் கொண்ட குழுவொன்றை சுகாதார அமைச்சர் அறிவிக்கவுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நிபுணர் குழுவில், மருத்துவம், செவிலியர், ஒவ்வாமை ஆகிய இரண்டிலும் விரிவான அறிவும் புரிதலும் உள்ள பேராசிரியர்கள் உட்பட 5 பேர் இடம் பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரச மருத்துவமனைகளில் நடந்த அனைத்து சர்ச்சைக்குரிய மரணங்கள் குறித்தும் முழு விசாரணை நடத்தி அமைச்சரிடம் அறிக்கை சமர்பிப்போம். கண்டியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சுகாதாரப் பணிப்பாளர் மேலும், இந்தக் குழுவினால் வழங்கப்படும் அறிக்கை நாட்டில் உள்ள வைத்தியசாலை அமைப்பில் உள்ள மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவதற்கு உதவிகரமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்பதே சுகாதாரத்துறையின் எதிர்பார்ப்பு என அவர் வலியுறுத்தியுள்ளார்.

சில மரணங்கள் சந்தேகத்திற்கிடமானவை என ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகளால், மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு வரத் தயங்குவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நோயாளர்களுக்கு வைத்தியசாலைகளினால் வழங்கப்படும் சுகாதாரம் சீர்குலைந்திருக்கவில்லை எனவும் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தினார்.பேராதனை போதனா வைத்தியசாலை, பேராதனை சிறுவர் வைத்தியசாலை மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலையை அவதானித்ததன் பின்னர் பெறப்பட்ட தகவல்கள் அடங்கிய அறிக்கையை தமக்கு வழங்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“இலங்கையின் வைத்தியத்துறை கொள்ளை மற்றும் ஊழலில் ஈடுபடும் மாபியாவாக மாறியுள்ளது.” -ஜே.வி.பி குற்றச்சாட்டு !

“இலங்கையின் வைத்தியத்துறை கொள்ளை மற்றும் ஊழலில் ஈடுபடும் மாபியாவாக மாறியுள்ளது.” என தேசிய மக்கள் சக்தியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

திவுலப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஆசியாவின் சிறந்த சுகாதார வசதிகள் உள்ள நாடே இலங்கை என அந்த நாட்களில் பெரிதாக பேசிக்கொண்டோம்.ஆனால் இன்று வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு பயமாகவுள்ளது. மருந்து வில்லைகளை பாவிப்பதற்கு கெனூலா ஏற்றிக்கொள்வதற்கு பயமாகவுள்ளது. ஏன் ஏன்றால் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது தான் இன்றைய நாட்டின் நிலைமையாகும். சுகாதார அமைச்சு என்பது கொள்ளை மற்றும் ஊழலில் ஈடுபடும் மாபியா என்பது அறிந்த ஒன்றாகும்.

வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் மருந்துகளில் மாபியா உள்ளது. இலங்கைக்கு மருந்துகளை கொண்டு வரும் மாபியாக்கள் மில்லியன் பில்லியன் கணக்கில் சம்பாதிக்கின்றன. அதற்காகவே இன்று இவ்வளவு சண்டை போடுகிறார்கள் என்றார்.

சுகாதார அமைச்சின் ஊழலால் நாட்டில் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் இறந்து கொண்டிருக்கிறார்கள் – இரா.சாணக்கியன்

சுகாதார அமைச்சரின் ஊழல் காரணமாகவே நூற்றுக்கணக்கானோர் நாட்டில் இறந்து கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் முன்னால் இன்று டெங்கு ஒழிப்பு ஊழியர்களை நிரந்தர நியமனம் செய்யுமாறு கோரி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“சுகாதார அமைச்சரின் ஊழல் காரணமாக தரம் குறைந்த ஊசிகளை கொண்டுவந்த விடயங்களால் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர்.

 

நாடளாவிய ரீதியில் உள்ள ஆயிரம் டெங்கு ஒழிப்பு உதவியாளரர்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேல் தங்களை நிரந்தரமாக்குமாறு கோரி வருகின்றனர்

 

பேராதனை வைத்தியசாலை இலங்கையில் இருக்கும் 2 வது வைத்தியசாலையாகும். அந்த வைத்தியசாலையில் 10 எம்.எம் ஊசி இல்லை என்றால் எமது கிராமப்புற வைத்தியசாலைகளில் அந்த ஊசி இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.

 

அமைச்சரின் ஊழலால் நாற்றுக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர் ஆனால் இந்த டெங்கு ஊழியர்கள்; மக்களை காப்பாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

 

இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். ஜனாதிபதி பிரதமராக இருந்த காலப்பகுதியில் தான் இவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது.

 

அவர் இன்று மொட்டுகட்சியின் அரசியல் கைதியாக இருந்தாலும் கூட நீதியை நடைமுறைப்படுத்த ஜனாதிபதிக்கு பொறுப்பு இருக்கின்றது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சரியான மருத்துவ உபகரணங்கள் இல்லை – 21 வயது யுவதி மரணம் – இலங்கையில் தொடர்கதையாகும் வைத்தியசாலை மரணங்கள்!

அரசு சரியான மருத்துவ உபகரணங்களை வழங்காதது பேராதனை வைத்தியசாலையில் யுவதி உயிரிழந்தமைக்கான காரணமாக இருக்கலாம் என அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எச். எம். பி. எஸ். மடிவத்த இன்று தெரிவித்தார்.

யுவதிக்கு செலுத்தப்பட்ட மருந்தை 10 மில்லி சிரிஞ்சில் கரைத்து செலுத்த வேண்டும் என்றாலும், பேராதனை வைத்தியசாலையில் மட்டுமன்றி கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் 10 மில்லி சிரிஞ்ச்கள் இல்லை.இதனால் தாதி இரண்டு 5 மில்லி சிரிஞ்ச்களில் இரண்டு முறை ஊசி போட்டிருக்க கூடும் .

குறித்த 5 மில்லி சிரிஞ்சில் நீர்த்திருந்தால், அது அதிக செறிவூட்டலில் பெற்றிருக்கலாம் என்றும், அரசு மருத்துவமனைகளுக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்களை வழங்காததே இதற்குக் காரணம் என்றும் அவர் மேலும் கூறினார்.

 

ஊசி மூலம் செலுத்தப்பட்டுள்ள மருந்து, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் மருந்து என்றும், செவிலியர் மீது எந்த தவறும் இல்லை என்றும், சரியான முறையில் தடுப்பூசி போடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

சமீபகாலமாக, தரம் குறைந்த மருந்து மிஷன் அல்லது வேறு காரணங்களுக்காக பெறப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

செவிலியர்களாகிய தாங்கள் நோயாளர்களுக்கு அரசாங்கம் வழங்கும் மருந்துகளையே வழங்க வேண்டியுள்ளது என தெரிவித்த அவர், மருந்தின் தரத்தை கையாளும் திறன் செவிலியர்களுக்கு இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்றதான வைத்தியசாலை மரணங்கள் இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அண்மையில் கிளிநொச்சி போதனாவைத்தியசாலையில் முறையான பராமரிப்பு இன்றி நான்கு சிசுக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது. மேலும் நுவரெலியா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண்சிகிச்சையால் பலர் பாதிக்கப்பட்டிருந்தததுடன் 10ற்கும் அதிகமானோரின் நிலை மோசமடைந்திருந்தது. இதன் தொடர்ச்சியாக இந்திய நிறுவனமொன்றிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் காணப்பட்ட பற்றீரியா காரணமாகவே சத்திர சிகிச்சை மேற்கொண்டவர்கள் அசௌகரியத்தை எதிர்்கொண்டதாகவும் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கான நட்டஈடு விரைவில் வழங்கப்படும் எனவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தமை கவனத்தில் கொள்ளத்தக்கது.

வயிறுவலிக்கு சிகிச்சை பெற சென்ற 21 வயதுடைய யுவதி மரணம் – பேராதனை போதனா வைத்தியசாலையில் சம்பவம் !

பேராதனை போதனா வைத்தியசாலைக்கு வயிறுவலிக்கு சிகிச்சை பெற வந்த 21 வயதுடைய யுவதியொருவர் வைத்தியசாலையில் ஊசி போடப்பட்ட யுவதி உயிரிழந்துள்ளார்.

வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக கடந்த 10ஆம் திகதி கெட்டப்பிட்டி அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அம்புலன்ஸ் மூலம் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் பேராதனை போதனா வைத்தியசாலையும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுபோன்றதான வைத்தியசாலை மரணங்கள் இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அண்மையில் கிளிநொச்சி போதனாவைத்தியசாலையில் முறையான பராமரிப்பு இன்றி நான்கு சிசுக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது. மேலும் நுவரெலியா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண்சிகிச்சையால் பலர் பாதிக்கப்பட்டிருந்தததுடன் 10ற்கும் அதிகமானோரின் நிலை மோசமடைந்திருந்தது. இதன் தொடர்ச்சியாக இந்திய நிறுவனமொன்றிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் காணப்பட்ட பற்றீரியா காரணமாகவே சத்திர சிகிச்சை மேற்கொண்டவர்கள் அசௌகரியத்தை எதிர்்கொண்டதாகவும் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கான நட்டஈடு விரைவில் வழங்கப்படும் எனவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தமை கவனத்தில் கொள்ளத்தக்கது.

இலங்கையின் மருத்துவசாலைகளில் தரமற்ற மருந்துகள் – 3 மாதங்களில் 9 பேர் உயிரிழப்பு !

நாடு சுகாதார துறையில் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுள்ளது. மேலும் மருந்து தட்டுப்பாடு, தரமற்ற மருந்து பாவனை மற்றும் அதிகளவான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை உள்ளிட்ட காரணங்களால் நோயாளர்கள் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் தரமற்ற மருந்து பாவனை காரணமாக கடந்த 3 மாதங்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார துறையை தனியார் மயப்படுத்தவேண்டாம். நோயாளர்களின் உயிர்களை பாதுகாக்குமாறு சுகாதார துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் ரவீந்திர கஹந்தஆரச்சி கருத்து தெரிவிக்கையில்,

கடந்த 3 மாதங்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். தரமற்ற மருந்து பாவனைகளால் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுகாதார ஊழியர்களான எமக்கும், மக்களுக்கும் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது. ஒளடதங்கள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் முறையற்ற சில செயற்பாடுகள் காரணமாக நாட்டுக்கு கொண்டு வரப்படும் மருந்துகள் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன.

தரமற்ற மருந்துகள் காரணமாக கடந்த 3 மாதங்களில் 9 மரணங்கள் சம்பவித்துள்ளன. எனவே சுகாதார துறையை தனியார் மயப்படுத்த வேண்டும் என அரசாங்கத்திடம் கோருகின்றோம். அத்துடன் நோயாளர்களின் உயிர்களை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

மேலும், தரமற்ற மருந்து பாவனை தொடர்பில் அரச மருந்தாளர்கள்  சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ கூறுகையில், உண்மையில் இதுபோன்ற தொடர் மரணங்கள் சம்பவிக்கும் போது ஒளடதங்கள் காரணமாகவே இவ்வாறான சம்பவங்கள் பதிவாகுவதாக சுகாதார மைச்சர் தெரிவிக்கின்றார்.

ஐரோப்பிய ஒன்றியங்கள் போன்ற இடங்களிலும் இவ்வாறு மரணங்கள் இடம்பெறுகிறது. இவ்வாறு அரசியல் செய்யும் வர்களால் தேவையான இடங்களில், பதிவு செய்யப்படாத இடங்களில் ஒளடதங்களை கொள்வனவு செய்து அவற்றை இங்கு கொண்டு வந்து ஜரோப்பிய ஒன்றியங்களில் ஏற்படும் மரணங்களுடன் இங்கு இடம்பெறும் மரணங்களை ஒப்பிட முடியாது என்றார்.

சுகாதார தொழிற்சங்களின் நிபுணர் குழுவின் தலைவர் ரவி குமுதேஷ் கருத்து தெரிவிக்கையில், பேராதனை போதனா வைத்தியசாலையில் இருவர் உயிரிழந்த போது அந்த மருந்தினை தடை செய்ய முடிந்தது. தடைசெய்யப்பட்டமையால் அதற்கு அடுத்த மரணங்கள்  பதிவாகாமல் தடுக்க முடிந்தது.

எனினும் பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் தடை செய்த மருந்தினை பயன்படுத்தியமை காரணமாக மரணங்கள் சம்பவத்துள்ளது. இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை நிராகரித்தமை காரணமாகவே மரணங்கள் ம்பவித்துள்ளன என்றார்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஆரம்பிக்கும் அரசாங்கத்தின் முயற்சியை எதிர்த்த மருத்துவபீட மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல்!

அரச மருத்துவ பீடங்களில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரியும், புதிய தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஆரம்பிக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கொழும்பு, விகாரமகாதேவி பூங்காவில் இருந்து சுகாதார அமைச்சை நோக்கி பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் ஆர்ப்பாட்டம் ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தினை கட்டுப்படுத்தும் வகையில் ஏராளமான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக, கொழும்பு தாமரைத் தடாக சந்திக்கு அருகில் உள்ள ஹோர்டன் பிளேஸில் தற்போது வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.