ஈஸ்டர் தாக்குதல்

ஈஸ்டர் தாக்குதல்

“உண்டியல் குலுக்கி பணம் சேர்க்கிறார் மைத்திரிபால .” நாடாளுமன்றத்தில் பொன்சேகா – மைத்திரிபால இடையே பெரும் விவாதம் !

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கும் இடையில் இன்று பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

முன்னாள் ஜனாதிபதியால் பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.

 

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 2019 ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 மில்லியன் இழப்பீடு வழங்க வேண்டும். உண்டியல் மூலம் நிதி சேகரிக்கும் இது போன்றவர்கள் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் நாடு பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பொன்சேகா தெரிவித்தார் .

 

அதற்குப் பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெடிகுண்டுத் தாக்குதலில் இருந்து இராணுவத் தலைமையகத்தைப் பாதுகாக்க முடியாத ஒருவருக்கு தம்மைப் பற்றி எந்தக் கருத்தையும் தெரிவிக்க உரிமை இல்லை என்று கூறினார்.

 

 

நட்டஈடு வழங்குவதற்கு உதவியாக பணம் சேகரிக்கப்படுமாயின், அவ்வாறான வசூலை ஏற்றுக் கொள்வதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் .

 

பொன்சேகா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் பீல்ட் மார்ஷலாக நியமிக்கப்பட்டதற்கு தாம் தான் காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவிற்கு சிறிசேன மேலும் நினைவூட்டினார்.

“அனைத்துத் தரப்பினரும் ஈஸ்டர் தாக்குதலை அடுத்து என்னை சிறைக்குள் தள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள்.” – மைத்திரிபால சிறிசேன

“அனைத்துத் தரப்பினரும் ஈஸ்டர் தாக்குதலை அடுத்து என்னை சிறைக்குள் தள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள்.”  என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது உரையாற்றிய அவர்,

“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு தொடர்பாக கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் பேசப்படுகிறது. 2009 ஆம் ஆண்டுவரை இந்நாட்டை ஆட்சி செய்த ஒவ்வொரு ஜனாதிபதியின் காலத்திலும் நாட்டில் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றன.

ஒரு நாளைக்கு குறைந்தது ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் அன்று உயிரிழந்தார்கள். ஆனால், நாம் அன்று நாட்டின் தேசியப் பாதுகாப்பு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதிகளை குற்றஞ்சாட்டவில்லை. எனினும், இன்று அனைத்துத் தரப்பினரும் ஈஸ்டர் தாக்குதலை அடுத்து என்னை சிறைக்குள் தள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள்.

2015, 2016, 2017 காலப்பகுதியில் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இவ்வாறான நிலைமை எமது நாட்டுக்குள் வர, ஒருபோதும் இடமளிக்க வேண்டாம் என 2015 இலிருந்து, நான் பாதுகாப்புச் சபைக் கூட்டங்களின்போது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்தேன்.

உரிய ஆலோசனைகளை வழங்கியிருந்தேன். பாதுகாப்புச் சபையானது அவசரகாலச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட ஒன்றாகும். யுத்தம் முடிவடைந்து இரண்டு – மூன்று வருடங்களிலேயே இது கலைக்கப்பட்ட நிலையில், நான் ஒரு சம்பிரதாயப்பூர்வமாகத் தான் இதனை தொடர்ச்சியாக கூட்டிவந்திருந்தேன்.

2010 – 2015 வரையான காலப்பகுதியில்கூட தேவைக்கேற்ப தான் பாதுகாப்புச்சபை கூட்டப்பட்டது. ஆனால் நான் தான் மாதத்திற்கு ஒருதடவை இதனைக் கூட்டினேன். 2019, ஏப்ரல் 9ஆம் திகதிகூட, பாதுகாப்புச்சபை கூட்டப்பட்டபோது குற்றத்தடுப்புப் பிரிவின் பிரதானி, பிரதி பொலிஸ் மா அதிபர்கள், பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட பல அதிகாரிகள் வருகைத் தந்திருந்தார்கள்.

இதன்போது எந்தவொரு அதிகாரியும் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெறும் என்று கிடைத்த புலனாய்வுத் தகவல் குறித்து எனக்கு தெரியப்படுத்தவில்லை. ஆனால், நான் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மதிப்பளிக்கிறேன். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அதிகாரியொருவரால் ஏதேனும் தவறுகள் இழைக்கப்பட்டிருந்தால்தான், 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று அந்தத் தீர்ப்பில் உள்ளது.

இது நஷ்ட ஈடே ஒழிய, அபராதம் கிடையாது. ஆனால், இந்த நஷ்டஈட்டை வழங்கும் அளவிற்கு என்னிடம் சொத்துக்கள் கிடையாது. எனினும், எனக்கு நெருக்கமானவர்களிடம் இந்தத் தொகையை பெற்று அந்த நஷ்டஈட்டை வழங்க தீர்மானித்துள்ளேன்.

இந்த வழக்கின் தீர்ப்பானது நாட்டில் எதிர்க்காலத்தில் வரவுள்ள ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களிடத்திலும் தாக்கம் செலுத்தும். அவர்களால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தவறிழைத்தால்கூட, அவர்கள் இன்று எனது நிலைமைக்குத்தான் தள்ளப்படுவார்கள்.’ எனத் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் – ஐவர் பிணையில் விடுதலை ! 

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணி வந்தது தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த 60 பேரில் 5 பேர் இன்று (22) பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் ஏனையவர்களை தொடர்ந்து மே 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர்போல் உத்தரவிட்டார்.

கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் காத்தான்குடியை சேர்ந்தவர்கள் மற்றும் சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், உட்பட 69 பேரை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிசார் 4 வெவ்வேறு இலக்கம் கொண்ட வழக்குகளை தாக்கல் செய்தனர். இவர்கள் அனைவரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இதில் சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், ஆகியோரது வழக்குகள் நீதவான் நீதிமன்றில் இருந்து உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதுடன் 5 பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

இருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதையடுத்து ஏனைய 60 பேரும் நாட்டிலுள்ள பொலன்னறுவை, அனுதாரபுரம், கேகாலை, திருகோணமலை, போன்ற சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது பலத்த பாதுகாப்புடன் சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்ட 9 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது இதில் 5 பேரை தலா ஒருவருக்கு 50 இலச்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையிலும், மாதாந்தம் 2 ஆம் மற்றும் 3 ஆம் கிழமைகளில் உள்ள ஞாயிற்றுக்கிழமையில் பிற்பகல் 4 மணிக்கும் 6 மணிக்கும் இடையில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையொழுத்து இடுமாறு உத்தரவிட்டு பிணையில் விடுவித்தார்.

இதேவேளை ஏனைய 55 பேரையும் தொடர்ந்து மே மாதம் 4 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காணொளி மூலம் நீதவான் உத்தரவிட்டார்.

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு 3 ஆண்டுகள் பூர்த்தி – சஜித் பிரேமதாச வழங்கியுள்ள உறுதி !

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு 3 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், கொலை செய்யப்பட்டவர்களுக்காக நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சபாநாயகரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இவ்வாறு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்தோடு, இன்றைய தினம் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கறுப்பு ஆடையுடன் நாடாளுமன்றத்திற்குள் பிரசன்னமாகியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமாக அனைவரையும் தண்டிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றுகையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச,

“3 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மிலேச்சத்தனமான பயங்கரவாத் தாக்குதலில் நாம் எமது உறவுகளை இழந்தோம். இந்த பயங்கரவாத் தாக்குதலால் நாடு என்ற ரீதியில் நாம் பல பாதிப்புக்களை எதிர்கொண்டோம்.

இந்த நேரத்தில், கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் நாம் ஒன்றைக் கூறிக்கொள்கிறோம்.

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் பாரபட்சம் பாராது சட்டநடவடிக்கை எடுப்போம் என்றும் அவர்களுக்கு உச்ச தண்டனை கிடைக்க வழிவகை செய்வோம் என்றும் பேராயருக்கு நாம் எழுத்துமூலமாக இவ்வேளையில் அறியத்தருகிறேன்.

இன்று ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கத்தோலிக்க மக்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த நாட்டு மக்கள், பேராயர் மற்றும் எதிர்க்கட்சியாக எமக்கு என அனைவருக்கும் சந்தேகம் இருந்துக்கொண்டேதான் உள்ளது.

இதுதொடர்பான உண்மைகள் இன்னமும் வெளிவரவில்லை. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இன்னமும் பொது மக்களுக்கு காண்பிக்கவில்லை. இதனை நாடாளுமன்ற இணையத்தில் வெளியிடவேண்டும் என நான் இவ்வேளையில் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தத் தாக்குதலின் பின்னணியில் பாரிய சூழ்ச்சியொன்று இருப்பதாக முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்திருந்தார். இதனை கண்டுபிடிக்க வேண்டியது இந்த அரசாங்கத்தின் பிரதான கடமையாகும். உண்மைகள் வெளிவர வேண்டும். உண்மைகளை பேச வேண்டும்.

எனது தந்தையும் பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றில்தான் கொல்லப்பட்டார். அன்று எனக்கு இருந்த மனநிலை, இன்றும் என்னுள் இருக்கிறது. இதனால், ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை என்னால் உணர்ந்துகொள்ள முடிகின்றது.

எனவே, இவர்களை கருத்திற்கொண்டு தகவல்களை மறைத்துக்கொண்டிருக்காமல், வெளிப்படையாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இதுதொடர்பாக புதிய விசாரணையை அரசாங்கம் நடத்த வேண்டும். இதில் கொழும்பு பேராயர் உள்ளிட்ட கத்தோலிக்க மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்களை உள்வாங்க வேண்டும்.

இந்த விடயத்தில் நாம் யாரையும் பாதுகாக்கவே, காப்பாற்றவோ முற்படக்கூடாது” என அவர் மேலும் தெரிவித்தார்.

“சஹ்ரான் தொடர்பான விசாரணை அறிக்கைகள் ஏன் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை.?” – ரணில் கேள்வி !

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான், புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த எவரையும் சந்திக்கவில்லை என்பது ஆதாரங்களின்படி தெரியவந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் விசேட அறிக்கையொன்றை விடுத்த அமைச்சர், ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னரும் பின்னரும் சஹ்ரானின் மனைவி விசாரிக்கப்பட்டதாகவும், தனது கணவர் புலனாய்வு அதிகாரிகளை சந்தித்ததாக அவர் ஒருபோதும் குறிப்பிடவில்லை எனவும் தெரிவித்தார். தான் ஆதாரங்களின் பதிவுகளை ஆய்வு செய்ததாகவும் அவருடைய கணவர் உளவுத்துறை அதிகாரிகளை சந்தித்தது பற்றி எந்த ஆவணங்களும் வெளிப்படுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். சஹ்ரானுக்கு புலனாய்வுப் பிரிவுகளுடன் அல்லது பாதுகாப்புப் படையினருடன் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.

இதே நேரம் சஹ்ரான் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றில் உரையாற்றிய முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிய போது , “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நான் இங்கு ஒன்றைக் கூற வேண்டும். சிரியாவுக்குச் சென்று ஐ.எஸ். பயங்கரவாதப் பயிற்சிப் பெற்ற எந்தவொரு நபராலும் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த விடயத்தை யாரும் அரசியல் மயப்படுத்தக்கூடாது. விசாரணை அறிக்கைகளை ஏன் நாடாளுமன்றுக்கு சமர்ப்பிக்கவில்லை என்பதுவே எமது கேள்வியாகும். சாதாரணமாக எந்தவொரு ஆணைக்குழுவில் விசாரணைகள் நடக்கும்போதும் சாட்சிகளின் வாக்குமூலம் உள்ளிட்டவற்றின் அறிக்கைகளை வெளிப்படுத்திக்கொண்டுதான் வருகிறோம்.

இவற்றை சபையில் இருந்து மறைக்க முடியாது. அவ்வாறு விசாரணைகளை மறைப்பது எமது வரப்பிரசாதங்களை மீறும் செயற்படாகும். தாக்குதல் இடம்பெற்ற உடனனேயே, பொலிஸாரும் சி.ஐ.டியினரும் இணைந்துதான் பொரளை உள்ளிட்ட பகுதிகளில் பதுங்கியிருந்த சூத்திரதாரிகளை கைது செய்தார்கள். மாறாக புலனாய்வுப் பிரிவினர் அல்ல என்பதையும் நான் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

“ஈஸ்டர் தாக்குதலை விடுதலைப்புலிகள் கணக்கில் சேர்த்து திட்டமிட்ட சூழ்ச்சி நடந்துள்ளது.” – நாடாளுமன்றில் மனுஷ நாணயக்கார !

ஈஸ்டர் தாக்குதலை விடுதலைப்புலிகள் கணக்கில் சேர்த்து திட்டமிட்ட சூழ்ச்சி ஒன்றினை முன்னெடுத்துள்ளனர் என்பது இப்போது தெரிய வந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார  தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று ஆளுந்தரப்பு உறுப்பினரும் கோபா குழு தலைவருமான கலாநிதி திஸ்ஸ விதாரணவினால்  கொண்டுவரப்பட்ட அரச கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

ஈஸ்டர் தாக்குதல் நடத்த சில தினங்களுக்கு முன்னர் வனாதவில் பகுதியில் இரண்டு காவல்த்துறை அதிகாரிகள் கொலைசெய்யப்பட்ட வேளையில் அவர்களை கொலை செய்தது யார் என ஆராய முயற்சித்த வேளையில் அதனை விடுதலை புலிகளின் மேல் சுமத்தினர்.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் முக்கியமான 42 வழக்குகள் கைவிடப்பட்டுள்ளன, தேசிய பாதுகாப்பு நெருக்கடி, பிணைமுறி ஊழல் என்பவற்றை கூறி ஆட்சிக்கு வந்தவர்களுக்கு மத்திய வங்கி ஊழல் வாதிகளையோ அல்லது ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளையோ பிடிக்க முடியவில்லை.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து  தொடர்ச்சியாக கேள்வி எழுப்பியும் அதற்கு பதில் தெரிவிக்கவில்லை.பொதுமக்கள் அரசதலைவரிடமும் பாதுகாப்பு அமைச்சரிடமும் கேள்வி எழுப்பியும் அவர்கள் உறுதியான பதில் கூறவில்லை.

ஷாரா என்ற பெண் எங்கே? என நாமும் சபையில் கேள்வி எழுப்பிய வேளையில் அவரது மரபணுவை பெற்றுக்கொண்டு அவர் இறந்துவிட்டார் என நிருப்பிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன.

ஷாரா என்ற பெண் இன்றும் இராணுவ முகாமில் உள்ளாரா? அல்லது கொலை செய்யப்பட்டுள்ளாரா? அல்லது இந்தியாவிற்கு தப்பிசெல்ல விட்டீர்களா என்ற உண்மையை எமக்கு தெரிவிக்க வேண்டும்.

ஏன் அரசாங்கம் இவற்றை மூடி மறைக்கின்றது. அதுமட்டுமல்ல சஹாரானின் மனைவின் வாக்குமூலத்தில் உள்ள தகவல்களை ஏன் வெளிப்படுத்தவில்லை. அவரது வீட்டிற்கு வந்த புலனாய்வு அதிகாரி யார்?

உண்மைகள் வெளிவந்துவிடும் என்ற அச்சத்தில் சகலரும் அச்சமடைகின்றனர். தேசிய பாதுகாப்பு நெருக்கடிகளை தீர்க்க ஆட்சிக்கு வந்தவர்கள் உண்மையில் என்ன நடந்தது என கூறுங்கள் என்றார்.

இது குறித்து கேள்வி எழுப்பும் வேளையில் எம்மை அடக்காது உண்மை என்ன என்பதை கூற வேண்டும் என்று மனுஷ நாணயக்கார சபையில் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் , ஹிசாலினி மரணம் தொடர்பான வழக்குகளில் இருந்து ரிஷாட் பதியுதீனுக்கு பிணை !

ஈஸ்டர் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாதிக்கு உதவிய குற்றச்சாட்டு மற்றும் ஹிசாலினி மரணம் தொடர்பான வழக்குகளில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாதிக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கு இன்று (வியாழக்கிழமை) கொழும்பு கோட்டை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, தலா இரண்டு 50 இலட்சம் ரூபாய் பிணைகளில் அவரை விடுவிக்கக் கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றி வந்த சிறுமி ஹிஷாலினி மரணித்தமை தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகளுக்காக கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றிலும் அவர் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, அவ்வழக்கிலும் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“மைத்திரிபால சிறிசேன அவர்களே இதற்காக நீங்கள் வெக்கப்படவில்லையா? ஆடை அணிந்திருக்கிறீர்களா ? ” – பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கேள்வி !

பல உயிர்களை காவு கொண்டமைக்கு பொறுப்புக் கூற வேண்டிய மைத்திரிபால சிறிசேன அவர்களே இதற்காக நீங்கள் வெக்கப்படவில்லையா? ஆடை அணிந்திருக்கிறீர்களா ? என்றும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று (4.04.2021) ஈஸ்டர் ஞாயிறு திருப்பலியின் பின்னரே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், ஈஸ்டர் பயங்ரவாதம் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவில் செயற்படுத்துங்கள். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த தற்கொலை தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை இன்று நினைவு கூறுகிறோம்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவை குற்றவாளியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளார்.

எனவே அவருக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு மேலும் தாமதிக்க வேண்டிய அவசியம் இல்லை. அத்துடன் இந்த தாக்குதலுடன் தொடர்புடைய அமைச்சர்கள் மற்றும் ஏனைய சிலர் தற்போது சுதந்திரமாக நடமாடுகின்றனர்.

இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். எனவே நடுநிலையாக அதனுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“ஐ.எஸ். அமைப்பின் நிலைப்பாட்டினை கொண்டவர்கள் நாட்டில் இருந்தபோதிலும் அவர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்காமையால் அந்த அமைப்பை இலங்கையில் தடைசெய்யவில்லை” – முன்னாள்பிரதமர் ரணில் விக்ரமசிங்க .

“ஐ.எஸ். அமைப்பின் நிலைப்பாட்டினை கொண்டவர்கள் நாட்டில் இருந்தபோதிலும் அவர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்காமையால் அந்த அமைப்பை இலங்கையில் தடைசெய்யவில்லை” என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில்  தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று இரண்டாவது முறையாக சாட்சியம் வழங்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

ஐ.எஸ். அமைப்பின் நிலைப்பாட்டினை கொண்டவர்கள் நாட்டில் இருந்தாலும் அவர்களது செயற்பாடுகள் குறித்து தகவல்கள் வௌிவராமை, இணையத்தளம் ஊடாக மாத்திரம் அவர்கள் தொடர்புகளைப் பேணியமை தெரியவந்ததால் அந்த அமைப்பை இலங்கையில் தடைசெய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார். எனினும் ஐ.எஸ். அமைப்பை தடை செய்ய வேண்டியிருந்ததாக முன்னாள் பிரதமர் ஆணைக்குழுவில் ஒப்புக்கொண்டுள்ளார்.

அரச நிர்வாகத்தின்போது தமது தரப்பிற்கும் மைத்திரிபால சிறிசேனவின் தரப்பிற்கும் இடையில் அரசியல் ரீதியாக பாரிய கருத்து மோதல்கள் ஏற்படவில்லை எனவும் ரணில்விக்ரமசிங்க  தெரிவித்துள்ளார்.

தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பது மற்றும் அபிவிருத்தி பணிகள் போன்ற அன்றாட செயற்பாடுகள் தொடர்பாக மாத்திரம் சில பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும்  அப்போதைய அரசாங்கத்தால் நடத்தப்பட்ட பாதுகாப்பு பேரவைக் கூட்டங்கள் குறுகிய அறிவித்தலுக்கு அமைய இடம்பெற்றதாகவும் சுட்டிக்காட்டிய ரணில் விக்ரமசிங்க, இதனால் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த கடமைகளை இரத்து செய்து பாதுகாப்பு பேரவை கூட்டங்களில் பங்கேற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இருந்த அரசாங்கங்கள் பாதுகாப்பு பேரவை கூடுவதற்கான நிலையான நாள் ஒன்றை ஒதுக்கியிருந்ததாகவும் அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.