உலக வங்கி

உலக வங்கி

உலக வங்கியின் உணவுப்பணவீக்க சுட்டி – மோசமான நிலையில் இலங்கை !

உலக வங்கியின் மிக சமீபத்திய அறிக்கையின்படி, உணவு விலை பணவீக்கத்தில் இலங்கை இப்போது உலகில் ஆறாவது இடத்தில் உள்ளது. உலக வங்கியின் ஆய்வின்படி, இலங்கையின் உணவுப் பணவீக்கம் 86% ஆக உள்ளது.

அதேசமயம் ஜிம்பாப்வே உலகின் மிகப்பெரிய உணவுப் பணவீக்கத்தைக் கொண்டுள்ளது. அங்கு உணவுப் பணவீக்கம் 321%.

லெபனான், வெனிசுலா, துருக்கி மற்றும் ஆர்ஜென்டினா ஆகியவை முறையே இரண்டாவது, மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளன.
இந்த கருத்துக் கணிப்பின்படி, ஈரான், ருவாண்டா போன்ற நாடுகளிலும் உணவுப் பொருட்களின் விலை இலங்கையை விட குறைவாகவே உள்ளது.

இலங்கைக்கு உதவ தனியார் துறை அடித்தளத்தை உருவாக்குவதற்கு ஆதரவு வழங்குவோம் – உலக வங்கி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2022 ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான உச்சிமாநாட்டில் உலக வங்கி குழுமத்தின் தலைவர் டேவிட் மல்பாஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது, இலங்கையின் சவாலான மெக்ரோ-பொருளாதார மற்றும் சமூக நிலைமை குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது, இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும் மற்றும் நிலையான தனியார் துறை தலைமையிலான வளர்ச்சிக்கான அடித்தளத்தை உருவாக்குவதற்கும் உலக வங்கி குழுவின் ஆதரவை மல்பாஸ் உறுதிப்படுத்தினார்.

உலக வங்கியால் வெளியிடப்பட்டுள்ள உலக உணவுப் பணவீக்க சுட்டி – முதல் பத்து நாடுகளில் இலங்கையும் !

செப்டம்பர் 2021 முதல் ஓகஸ்ட் 2022 வரை, 53 நாடுகளில் உணவுப் பாதுகாப்பு குறித்த புதிய அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகில் உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள 10 நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது.

இலங்கையில் உணவுப் பணவீக்கம் 91 சதவீதமாக உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 செப்டெம்பர் மாதத்தில் இலங்கையில் உணவுப் பணவீக்கம் 9.9 சதவீதமாக இருந்ததுடன் கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் 90.9 சதவீதமாக பத்து மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து உணவுப் பணவீக்கம் வேகமாக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளின் பட்டியலில் சிம்பாப்வே முதலிடத்தில் உள்ளது.

லெபனான் மற்றும் வெனிசுலா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.

துருக்கி, ஈரான், அர்ஜென்டினா, மால்டோவா, எத்தியோப்பியா, ருவாண்டா ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள மற்ற நாடுகள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கி வழங்கிய நிதியிலிருந்தும் 130 கோடி ரூபா மோசடி – சரித ஹேரத் குற்றச்சாட்டு !

நாட்டில் ஏற்பட்டிருந்த பாரிய எரிவாயு பற்றாக்குறையைப் போக்க உலக வங்கி வழங்கிய உதவியிலிருந்து ஒரு குறிப்பிட்ட குழுவினர் 130 கோடி ரூபாவை மோசடி செய்துள்ளதாக கோப் குழுவின் முன்னாள் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற ‘சுதந்திர ஜனதா சபையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

36 டொலருக்கு கொள்வனவு செய்யவிருந்த ஒரு மெட்ரிக் தொன் எரிவாயுவை 129 டொலருக்கு கொள்வனவு செய்ய ஒப்பந்தம் செய்யப் பட்டமையால் இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு கஷ்டத்தில் இருக்கும் போது உலக வங்கி வழங்கிய உதவித் தொகையை கொள்ளையடிக்கும் நிலைக்கு இந்தக் கும்பல் வந்துவிட்ட தாகக் கூறிய அவர், அந்தப் பணத்தை யார் எடுத்து யாருக்கு விநியோகம் செய்தார்கள் என்பது அப்பாவி மக்களுக்குத் தெரியாது என்றார்.

“சுமார் 160 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசரத் தேவைகளை இலங்கைக்கு வழங்கியுள்ளோம்.”- உலக வங்கி

இலங்கையின் மோசமான பொருளாதார நிலைமை மற்றும் அதன் தாக்கம் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த அறிக்கையில்,

மருந்துகள், சமையல் எரிவாயு, உரம், பாடசாலை மாணவர்களுக்கான உணவு, வரிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கான அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையைப் போக்க கடந்த காலங்களில் நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இன்றுவரை, இந்த நிதியில் சுமார் 160 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வழங்கப்பட்டுள்ளன.

இந்த வளங்கள் ஏழ்மையான மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக வலுவான கட்டுப்பாடுகள் மற்றும் நம்பிக்கைக்குரிய மேற்பார்வையை நிறுவுவதற்கு, அதனை செயல்படுத்தும் முகவர்களுடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்.

இதனை தொடர்ந்தும் உன்னிப்பாகக் கண்காணிப்போம். இலங்கை மக்களுக்கு எங்களுடைய ஆதரவினை அதிகரிக்க மற்ற அபிவிருத்தி பங்காளிகளுடன் நாங்கள் நெருக்கமாக ஒருங்கிணைத்து வருகிறோம் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

போதுமான பேரின பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்க உலக வங்கி திட்டமிடவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையின் முகநூல் புரட்சியாளர்களும் பொருளாதாரமும் அரசியலும்: எது நடக்க வேண்டுமோ அது நன்றாக நடக்குமா?

ராஜபக்சாக்கள் நிரந்தரமாக துரத்தப்பட்டுவிட்டார்கள் என்ற குதுகலத்தில் போராட்டக்காரர்கள் உள்ளனர். சர்வதேச மேற்கு ஊடகங்கள் கோத்தாபய ராஜபக்சவின் உள்ளாடையை கொண்டாடியது. ஆனால் எது நடக்க வேண்டுமோ அது நன்றாக நடக்குமா? என்பதற்கு யாரிடமும் பதில் இல்லை. போரட்டக்காரர்களிடமும் பதில் இல்லை. அவர்கள் காலிமுகத்திடலில் காற்று வாங்கி இப்போது ஜனாதிபதி மாளிகையைச் சுற்றிப் பார்த்து செல்பி எடுப்பதிலேயே ஆர்வமாக உள்ளனர். போராட்டக்காரர்கள் இலங்கையை அடுப்பிற்குள் இருந்து நெருப்பிற்குள் தள்ளியுள்ளனர். ஐஎம்எப் மற்றும் உலக வங்கிக்கு இலங்கையைப் பலிகொடுப்பதற்கு இருந்த தடங்கல்கள் நீக்கப்பட்டுவிட்டது. இன்னும் சிறிது காலத்தில் பெற்றோல், எரிவாயு, சேதனப் பசளைக்காக இலங்கையின் இலவசக் கல்வி, இலவச மருத்துவம், வழங்கப்பட்டு வரும் மானியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தப்படும். இன்று போராட்டத்தில் ஈடுபட்ட பொருளாதாரம் பற்றியும் அரசியல் பற்றியும் புரியாத இதே மக்களின் பிள்ளைகளுக்கு இதுவரை கிடைத்துவந்த அடிப்படை வசதிகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இலங்கையைத் தொடர்ந்தும் பொருளாதார அடிமையாக்குவதில் உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் அதன் பின்னுள்ள உலக நாடுகளும் மிகக் கச்சிதமாக இயங்குகின்றன.

ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்கள்:

வினைத்திறனற்ற ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்கள் கிளர்ச்சிகளை மேற்கொள்ள மக்களுக்கு சகல உரிமைகளும் உண்டு. ஆனால் இவ்வாறான போராட்டங்கள் புரட்சிகர கட்சிகளால் முன்னெடுக்கப்படாமல் தலைமை தாங்கப்படாமல் எழுந்தமானமாக நடத்தப்படுவதால் எவ்வித மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை. மாறாக பிரச்சினையை மேலும் மோசாமாக்குவதோடு, போராடியும் பயனில்லை என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள். எதிர்காலம் முன்னிலும் மோசமானதாக அமையும்.

உலக அளவில் அண்மைக்காலங்களாக நடத்தப்பட்டுவரும் திடீர் ஆட்சிமாற்றங்கள் ஒன்றும் மக்களால் மேற்கொள்ளப்படவில்லை. அதற்கு அரப் ஸ்பிரிங் ஆனாலும் காலிமுகத்திடலானாலும் விதிவிலக்கல்ல. மக்களை வைத்தே அந்த மக்களைச் சுரண்டும் கைங்கரியத்தை அமெரிக்க மற்றும் நாட்டுத் தலைமைகள் மிக உன்னதமாக மேற்கொண்டு வருகின்றன. காருக்கும் மோட்டார் சைக்கிளுக்கும் பெற்றோல் கிடைக்காத அகரலியாக்களின் காலிமுகத்திடல் போராட்டம் இலங்கையை நிரந்தரமாக சீரழிப்பதற்கு மேற்குநாடுகளுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. போராட்டத்தை முன்னெடுக்கும் பல்கைலக்கழகங்களில் படிக்கும் இந்த மாணவர்களுக்கு தங்கள் சகமாணவிகளையே ராக்கிங் என்ற பெயரில் கொடூர பாலியல் துஸ்பிரயோகங்களில் இருந்து விடுவிக்க முடியவில்லை. அல்லது விடுவிக்க விரும்பவில்லை. காலிமுகத்திடல் போராட்டம் உணர்ச்சிக்கு அடிமைப்பட்ட நீண்டகால சிந்தனையற்ற உயர்தர சமூகத்தின் போராட்டம். இது மோட்டார் சைக்கிள் காருக்கு பெற்றோலுக்காக கீழ்நிலை மக்களுக்கு இருந்த குறைந்தபட்ச பாதுகாப்பையும் அகற்றியுள்ளது.

பொருளாதாரப் பிரச்சினைத் தீர்க்காமல் நாட்டை விற்கும் போராட்டம்:

நாட்டில் ஏற்பட்டு இருப்பது பொருளாதாரப் பிரச்சினை. அதன் அடிப்படை அம்சம் அந்நியச்செலாவணி கையிருப்பில் இல்லை. இந்த அந்நியச் செலாவணி கையிருப்பில் இல்லாமால் போனதற்காண முக்கிய காரணம் நாட்டிற்கு அந்நியச் செலவணியைக் கொண்டுவரும் துறைகள் அண்மைய நெருக்கடிகள் காரணமாக நிறுத்தப்பட்டது. குறிப்பாக சுற்றுலாத்துறை நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியின் 13 வீதத்தை கொண்டுவருவது. அது முற்றாக முடங்கியது. தேயிலை மற்றும் ஆடை ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டில் வாழும் இலங்கையர் அனுப்புகின்ற பணம். உலகம் முழவதும் ஏற்பட்ட கோவிட் நெருக்கடியால் இவ்வருமானங்கள் முற்றிலும் முடங்கியது. அதேசமயம் முதலீடுகளை ஊக்குவிக் வரிக்குறைப்பைச் செய்ததன் மூலம் அதன் மூலம் ஈட்டக்கூடிய வருமானமும் முற்றிலும் முடங்கியது. தமிழர்களின் ஜஎஸ்பி பிளஸ் நிறுத்த போராட்டத்தின் மூலம் ஆடை ஏற்றுமதியில் கிடைத்த வரிச்சலுகை இலங்கைக்கு தற்போது இல்லை. இவையே பொருளாதார நெருக்கடியின் பின்னணி.

இதிலிருந்து மீள்வதற்கு முதல் செய்ய வேண்டியது நாட்டில் அமைதியை நிலவச் செய்து உல்லாசப் பயணிகளை செங்கம்பளம் விரித்து வரவேற்க வேண்டும். அதனைச் செய்திருந்தாலேயே தற்போதிருந்த பெற்றோல் எரிவாயு நெருக்கடியை தீர்த்திருக்க முடியும். நாட்டில் ஏற்பட்டுள்ள விலை வீக்கத்தினால் இலங்கையின் நாணயப் பெறுமதி மிகக் குறைந்துள்ளது. இது வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளுக்கு மிகப்பெரும் வரப்பிரசாதம். அதனை விடுத்து தொடர்ந்தும் நாட்டை முடக்கி பொருளாதாரத்தை சீரழிப்பது சர்வதேச நாணய நிதியத்திடமும் உலக வங்கியிடமும் இலங்கையை ஒப்படைக்கும் ஒரு திட்டமே.

இலங்கைப் பொருளாதார நெருக்கடியும் சர்வதேசப் பின்னணியும்:

அமெரிக்காவில் ஜனவரி ஆறில் டொனால்ட் ட்ரம் தன்னுடைய ஆதரவு மக்களை ஹப்பிடல் ஹில் மீது ஏவிவிட்டார். செனட்டர்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மேசைகளின் கீழ் பதுங்கினர். ஹபிடல் ஹில் அரகலியாக்கள் கட்டடத்திற்குள் நூழைந்து தங்கள் வெற்றியை ஆர்ப்பரித்து கொண்டாடினர். ஹபிடல் ஹில் அரகலியாக்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 10 பேர்வரை கொல்லப்பட்டனர். ஹபிடல் ஹில் அரகலியாக்களை பயங்கரவாதிகள் என்றும் தீவிர வலதுசாரிகள் என்றும் அமெரிக்க மற்றும் சார்புநாடுகளின் ஊடகங்கள் முத்திரை குத்தின. விசாரணைகள் இன்னமும் தொடர்கின்றது. மாறாக கொழும்பு ஜனாதிபதி செயலகத்தை கைப்பபற்றிய காலிமுகத்திடல் அரகலியாக்களை சர்வதேச ஊடகங்கள் கொண்டாடியது மட்டுமல்ல ஜனாதிபதியின் உள்ளாடையையும் தூக்கி கொண்டாடினர். அத்தோடு சர்வதேச நாணய நிதியமும் உலகவங்கியும் தான் இலங்கையை பொருளாதாரக் கஸ்டத்தில் இருந்து மீட்க வேண்டும் என்று கோரும் காலிமுகத்திடல் அரகலியாக்களுக்கு ஆதரவானவர்களின் பேட்டிகளும் ஒலிபரப்பப்பட்டது.

சீனா இலங்கைக்கு வழங்கிய கடன்கள் தான் நாட்டை இந்நிலைக்கு இட்டுச்சென்றது என்ற பரப்புரையை இந்தியாவும் மேற்குநாட்டு ஊடகங்களும் தீவிரமாகப் பரப்பின. ஆனால் சீனா இலங்கைக்கு வழங்கிய கடன் 10 வீதம் மட்டுமே. இந்த பத்துவீத கடன் கூட இலங்கையின் நீண்டகால கட்டுமானங்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள். அவை நீண்டகாலத்தில் இலங்கையின் வளர்ச்சிக்கும் பொருளாதாரத்திற்கும் பயன்படக்கூடியவை. இலங்கையில் சீனாவின் ஆளுமையை விரும்பாத இந்தியாவும் மேற்குநாடுகளும் இலங்கைக்கும் சீனாவுக்கும் எதிரான பரப்புரைகளில் மிகநீண்டகாலமாக ஈடுபட்டுவருகின்றன. இதற்குச் சாதகமாக 2009 யுத்த முடிவை கோட்டபாய ராஜபக்சவுக்கு எதிராகப் பயன்படுத்தி வந்தன. இந்த யுத்தத்திற்கு முற்று முழதான ஆதரவை அழித்துவந்த சர்வதேசமும் இந்தியாவும் தாங்கள் ஏதோ சுத்தமான சுவாமிப்பிள்ளைகள் போல் நடித்துவருகின்றனர்.

மேலும் அமெரிக்க சார்பான ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் ரஷ்ய விமானங்களைத் தடுத்து வைத்திருந்தார். அதன் பின் கோட்டபாய ராஜபக்ச தனது பிரதிநிதிகளை ரஷ்யாவுக்கு அனுப்பி பெற்றோலைக் கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்தி இருந்தார். அதன் முடிவுகள் வருவதற்கு முன்னரேயே அரகலியாக்கள் கோட்டபாய ராஜபக்ஷவை ஜனாதிபதிச் செயலகத்தைவிட்டும் நாட்டைவிட்டும் வெளியேற்றினர். பாகிஸ்தானில் சினாவுடன் நெருக்கமாக முற்பட்ட தன்னை அமெரிக்கா சதிமூலமாக வெளியேற்றியதாகவும் தற்போது நாட்டை கிரிமினல்களிடம் பாகிஸ்தான் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

இம்ரான் கானுக்கு நடந்த அதே நிலை ராஜபக்சவுக்கும் நடந்தேறியுள்ளது. நாட்டுத்தலைவர்கள் எப்பேர்ப்பட்ட மோசமானவர்களாக, கொடூரமானவர்களாக, சர்வதிகாரிகளாக, மனித உரிமையை மீறுபவர்களாக இருந்தாலும் அமெரிக்கா தலைமையிலான சர்வதேச நாடுகளுக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. அவர்கள் அமெரிக்க மற்றும் சார்பு நாடுகளுக்கு ஆதரவாக இருக்கும் வரை. அவர்களுக்கு எதிரான ரஷ்யாவுடனோ அல்லது சீனாவுடனோ கூட்டுச் சேர்ந்தால் அல்லது திறந்த சந்தைப் பொருளாதார கொள்கைக்கு மாறாகச் சென்றால் அவர்கள் நையப்புடைக்கப்படுவார்கள். அவர்களுடைய உள்ளாடைகள் சர்வதேச ஊடகங்களில் வலம்வரும். சதாம் ஹ_சைன், கேர்ணல் கடாபி, முகாபே இவர்கள் எல்லோருமே அமெரிக்க – பிரித்தானிய கூட்டின் செல்லப்பிள்ளைகளாக இருந்து அமெரிக்காவிற்கு எதிரியானவர்கள். அமெரிக்காவும் பிரித்தானியாவும் தலையீடு செய்த எந்தநாடும் உருப்படவில்லை. உருப்படவும் விடமாட்டார்கள். அந்த நீண்ட பட்டியலில் காலிமுகத்திடல் அரகலியாக்களின் உதவியோடு இலங்கையும் சேர்க்கப்பட்டு உள்ளது.

அரகலியாக்களின் கோரிக்கைகள் அல்ல விருப்பப்பட்டியல்:

பல்கலைக்கழக மாணவர்கள் கீழ்த்தரமான பகிடிவதைகளில் ஈடுபட்டு தண்டனைக்குள்ளாகும் தமது சக தோழர்களுக்கு சார்ப்பாக எப்போது போராடத் தொடங்கினார்களோ அதிலிருந்து அவர்களது போராட்டங்கள் மிகக் கீழ்த்தரமானவையாக்கப்பட்டுவிட்டன.

இந்த காலிமுகத்திடல் அரகலியாக்களால் முன்வைக்கப்பட்ட காலிமுகத்திடல் கோரிக்கை ஒன்றும் மோசமானதல்ல. ஆனால் அதில் உள்ளடக்கம் இல்லை. கபொத சாதாரணதர மாணவர்களிடம் எவ்வாறான அரசு உங்களுக்கு வேண்டும் என்று கேட்டால் அவர்கள் ஒரு விருப்பப்பட்டியலை எழுதித் தருவார்கள். அதற்கு ஒத்ததாகவே அரகலியாக்களின் கோரிக்கைகள் உள்ளது. அவர்களிடம் அரசு பொருளாதாரம் சார்ந்த அடிப்படை அறிவுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கொண்டுவந்த நல்லாட்சி விளையாட்டுத்தான் அது. மத்திய வங்கியை கொள்ளையடித்தது போல் செய்வதற்கான வழி.

நாட்டில் சுதந்திரமான ஒரு தேர்தல் நடத்தப்பட்டு அதில் அரகலியாக்களும் ராஜபக்சக்களும் போட்டியிட்டால் ராஜபக்சாக்கள் அரகலியாக்களைக் காட்டிலும் கூடுதல் வாக்கைப் பெறுவார்கள். ஆனால் அமெரிக்காவில் ஹபிடல் ஹில் அரகலியாக்கள் ட்ரம் தலைமையில் போட்டியிட்டால் பைடன் தோற்றுவிடுவார். இதுதான் நிலவரம். இந்த அரகலியாக்கள் இலங்கை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அவர்கள் கார் வைத்திருப்பவர்களும் இலவசக் கல்வி முடிய வெளிநாடு செல்ல இருப்பவர்களும் தான். இவர்கள் ஒட்டுமொத்த இலங்கை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.

உலகத் தலைவர்கள் பொறிஸ் ஜோன்சன், மோடி போல் ராஜபக்சாக்களும் ஊழல் பண்ணி உள்ளனர் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. குஜராத் படுகொலைகளுக்கும் அவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தமைக்காக, இந்தியப் பிரதமர் மோடி பிரதமராகுவம் வரை அவருக்கு அமெரிக்கா செல்லத் தடைவிதிக்கப்பட்டு இருந்தது. சவுதி அரசர் பின் சலமனின் உத்தரவில் அவரை கடுமையாக விமர்சித்து வந்த ஊடகவியலாளர் ஜமால் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டு உடல் உறுப்புகளும் துண்டுதுண்டாக்கப்பட்டது. சவுதியை ‘பறையர் தேசம்’ என்றார் அமெரிக்க ஜனாதிபதி பைடன். இப்போது பைடனும் பின் சல்மனும் கூடிக் குலாவுகின்றனர். ‘கொஞ்சம் உன்டெண்ண பெற்றோல் விடுங்கோ’ என்று கேட்க பைடன் சவுதி சென்றுள்ளார். மறுபக்கம் யேமன் மக்களை சவுதி குண்டுபோட்டு அழித்துக்கொண்டுள்ளது.

‘உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் செய்யக்கூடாது’ என்று சொல்வார்கள். அதேபோல் முதலுதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை இருக்கும் நிலையை மோசமடையச் செய்யக் கூடாது. உங்களால் ஒரு விடயத்தை ஆக்கபூர்வமாகச் செய்ய முடியாவிட்டால் அதனைச் செய்யாமல் இருப்பதே மேல். குட்டையைக் குழப்பி விடுவதில் பயனில்லை. காலிமுகத்திடல் போராட்டம் குறுகிய சிலரின் நலன்களுக்காக ஒரு பொழுது போக்காக ஆரம்பிக்ப்பட்டது. தமிழரசுக்கட்சி தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் இப்படித் தான் தூண்டிவிட்டது. மக்களது மெல்லிய உணர்வுகளை உணர்ச்சியூட்டி தூண்டிவிட்டு அழிவை ஏற்படுத்துவதே கடந்தகால போராட்டங்கள் தந்த படிப்பினை. காலிமுகத்திடல் அரகலியாக்களின் போராட்டம் இன்னுமொரு உதாரணம்.

நாட்டிற்குள் டொலரை வர வழிவிடுங்கள்! உல்லாசப் பயணிகளுக்கு வழிவிடுங்கள்! – த.ஜெயபாலன்

நாட்டின் மொத்த உற்பத்தியில் 12வீதத்தை அதாவது 10 பில்லியன் டொலர்களை நாட்டிற்குள் கொண்டுவரும் உலாசப் பயணிகளுக்கு வழிவிடுங்கள். நாட்டின் பொருளாதாரம் நெருக்கடி நிலையைச் சந்திக்கிறது என்று போராடுபவர்கள் நாட்டின் பொருளாதார விருத்தியை முடக்குவது தீர்வு அல்ல.

இன்று எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு மற்றும் அத்தியவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பது அவற்றை கொள்வனவு செய்வதற்கான அந்நியச் செலவாணி இல்லாமையே. அதனால் நாட்டிற்குள் டொலரைக் கொண்டுவரக்கூடிய நடவடிக்கைகளை முடக்கிவிட வேண்டும். இக்கருத்துக்கு முற்றிலும் முரணாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டிற்குள் வரும் உல்லாசப் பயணிகள் காலிமுகத்திடலில் மட்டையைப் பிடித்து போராடலாம் என்ற வகையில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இப்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை நாங்கள் பயப்படும் அளவுக்கு ஆபத்தானது அல்ல. இச்சூழலை சாதகமாக்கவும் வாய்ப்பு உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகள் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்த வெளிநாட்டவர் தற்போது உலகம் சுற்ற விரும்புகின்றனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள நாணய ஒடுக்கும் அல்லது நாணயத்தின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி இலங்கையின் உல்லாசப் பயணத்துறைக்கு ஒரு வரப்பிரசாதம். உல்லாசப் பயணிகளை எங்கள் நாட்டுக்கு வந்து, குறைந்த செலவில் எம் நாட்டின் அழகை ரசியுங்கள். எங்கள் கலை கலாச்சாரங்களை அறியுங்கள் என்று உல்லாசப் பயணிகளுக்கு செங்கம்பள வரவேற்பளிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு போராடுகிறோம், எரிக்கிறோம், கொழுத்துகிறோம் என்பதெல்லம் கஞ்சி ஊத்தாது.

இரண்டு ஆண்டுகால கோவிட் முடக்கத்தில் உலக பொருளாதாரமே முடங்கிக் கிடந்தது. அந்த முடக்கத்தில் இருந்து மெல்ல எழ ரஷ்யா, உக்ரைன் மீது படைநகர்த்தி சர்வதேச அரசியல் – பொருளாதாரச் சூழலை முற்றிலும் மாற்றி அமைத்துள்ளது. இந்த நெருக்கடி நிலைக்குள் இருந்து மீள்வதற்கு எவ்வித திட்டமிடலும் இல்லாமல் ஜேவிபி இப்போராட்டத்தை மிகத் திட்டமிட்ட முறையில் நடாத்தி வருகின்றது. இந்தப் போராட்டம் இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக தன்னியல்பானதாக நடைபெற்றதாகச் சொல்லப்பட்டாலும் ஜேவிபிக்கு ஆதரவாகவே போராட்டம் நகர்கின்றது. ஜேவிபின் தவைரைத் தவிர ஏனைய கட்சித் தலைவர்கள் போராட்ட களத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

ஒரே நாளில் 30 பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை திட்டமிட்டு எரிக்கின்ற அளவுக்கு இலங்கையில் தன்னியல்பு தலைமைகள் கிடையாது.

முப்பது ஆண்டுகள் உலகின் மிக நவீன ஆயதங்களை வைத்து போராடிய விடுதலைப் புலிகளால் மே 19ற்குப் பின் ஒரு துப்பாக்கிச் சூட்டைக் கூட நடத்த முடியவில்லை. ஆகையால் நடந்த எரிப்புச் சம்பவங்களுக்குப் பின்னணியில் ஜேவிபி இல் இருந்து பிரிந்த அதிதீவிரவாதப் பிரிவாகச் செயற்பட்டுவரும் முன்னிலை சோசலிசக்கட்சி குமார் குணரட்ணம் மீதே மையம்கொள்கின்றது.

ஆனால் இடதுசாரித்துவம் பேசும் ஜேவிபியோ முன்னிலைவாத சோசலிசக் கட்சியோ இந்தப் பொருளாதார நெருக்கடியில் இந்தியா மற்றும் அமெரிக்காவின் பங்களிப்புப் பற்றி வாயே திறக்கவில்லை. சர்வசே நாணய நிதியம் உலக வங்கி பற்றி தொடர்ந்தும் மௌனமாகவே உள்ளனர். இவர்களின் தோழமைக் கட்சியாக அணுகக் கூடிய பிரித்தானியாவில் செயற்படும் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினர் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாகவும் முன்னிலை சோசலிசக் கட்சி மௌனம் காக்கின்றது.

பிரித்தானியாவில் இருந்து இயங்கும் இடதுசாரி அமைப்பான தமிழ் சொலிடாரிட்டி என்ற அமைப்பு காலிமுகத்திடல் போராட்டத்திற்கு கொள்கையளவான ஆதரவை வழங்கிய போதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. அவை அனைத்துமே சர்வதேச நாணய நிதியத்த்தினதும் உலக வங்கியினதும் கொள்கைகளுக்கும் அவர்களுடைய நிபந்தனைகளுக்கும் முற்றிலும் எதிரானதாக உள்ளது. அனைத்து கடன்களையும் இரத்து செய்யுமாறு கோருவதோடு பெரு முதலாளிகளின் சொத்துக்கள் உட்பட ராஜபக்ச குடும்பத்தின் சொத்துக்களையும் பறிமுதல் செய்யக் கோருகின்றது. விவசாயிகளுக்காக மானியங்களை வழங்குவதுடன் மலையக தொழிலாளர்களின் நிலவுரிமையை உறுதி செய்யவும் கோருகின்றது. ஆனால் காலிமுகத்திடல் போராட்டம் இந்த நிபந்தனைகளைப் பற்றி எவ்வித கரிசனையும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

ஒரு பொருளாதார நெருக்கடிக்காகப் போராடும் தன்னை தீவிர இடதுசாரியாக தக்கவைத்துக்கொள்ளும் ஜேவிபி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி எந்தவொரு இடதுசாரி பொருளாதாரக் கோசங்களையும் வைக்கவில்லை. மாறாக அரசியல் கோஷத்தை மட்டுமே வைக்கின்றனர்.

இதன் பின்னணி என்ன? ஜேவிபி, முன்னிலை சோசலிசக் கட்சி தற்போது விலைபோகத் தயாராகி விட்டதா? குமார் குணரட்ணம் முன்னிலை சோசலிசக் கட்சியயை உருவாக்கியதைத் தொடர்ந்து பின் புலம்பெயர்நாடுகளில் இருந்தும் பலர் முன்னிலை சோசலிசக் கட்சியின் – சமவுடமை இயக்கத்தில் தங்களை வெளிப்படையாக இனம்காட்டிக்கொண்டனர். குறிப்பாக பிரான்ஸில் இடதுசாரிப் புயல் இரயாகரன், பிரித்தானியாவில் புதிய திசைகள் மற்றும் பல இடதுசாரி சிந்தனையுடையவர்களும் தங்களை முன்னிலை சோசலிசக்கட்சியுடன் அடையாளம் காட்டினர்.

ஆனால் தமிழ் சொலிடாரிட்டி தவிர்ந்த ஏனை இடதுசாரிக்குழுக்கள் சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிராகவோ உலக வங்கிக்கு எதிராகவோ கருத்துக்களை மிக அடக்கியே வாசிக்கின்றனர். பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன்பும் வெற்று அரசியல் கோஷங்களையே வைத்து போராட்டம் நடத்தினர்.

அரசும் புதிய பிரதமர் உட்பட போராட்டகாரர்களும் நாட்டின் நிலைமையை மோசமடையச் செய்துகொண்டுள்ளனர். அரசு ஆணித்தரமான முடிவுகளை எடுக்க வேண்டும். இன்று ஏற்பட்டுள்ள நிலையை இலங்கையின் எதிர்காலத்திற்கு சாதகமாக மாற்ற முடியும். அதற்கு அரசியல் வாதிகளும், பல்கலைக்கழகங்களும் ஒருங்கிணைந்து நீண்டகாலத் திட்டங்களை வகுக்க வேண்டும்.

நாட்டை உல்லாசப் பயணிகளுக்கு திறந்துவிடுவதுடன் உல்லாசப் பயணத்துறையை காத்திரமான முறையில் வளர்க்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
அரசு நாடுகளுக்கு இடையேயான கடன்கள் உட்பட அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்!
நாணயப் பெறுமதி குறைந்துள்ளதை சாதகமாக்கி ஏற்றுமதி நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும்!!
சிறிலங்கா பெஸ்ற் மற்றும் மேடின் சிறிலங்கா என்பன நாட்டின் தாரகமந்திரமாக வேண்டும்!!!

‘கோட்டா கோ ஹோம்’ அல்ல ‘ஸ்றிலங்கா பெர்ஸ்ற்!’, ‘ரூறிஸ்ற் ஹம் ஹோம்!!’ அன் ‘மேட் இன் சிறிலங்கா!!!’ பணவீக்கம் என்பது அடிப்படையில் தவறான பொருளாதார புரிதல்!

‘இன்று மே 21ம் திகதி முதல் குழந்தைகளின் பால்மாவுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டு கடைகளில், சுப்பர்மாக்கற்களில் பால்மா தட்டுக்கள் காலியாகிக் கிடக்கின்றது. கைக் குழந்தைகளின் பெற்றோர் பால்மாவுக்காக கடை கடையாக ஏறி இறங்குகின்றனர். ஏற்கனவே பால்மா உற்பத்தி குறைந்திருந்த நிலையில் பால்மா அருந்திய குழந்தைகளில் பற்றீரியா தொற்று ஏற்பட்டதால் குறிப்பிட்ட நிறுவனம் தன்னுடைய பால்மாக்களை உடனடியாக மீளப்பெற்றது நிலைமையை மோசமடையச் செய்துள்ளது. அதனால் ஜனாதிபதி இராணுவத்தை உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஈடுபடுத்துவதாக அறிவித்துள்ளார்’.

இந்நிலை இலங்கையில் அல்ல அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவில் சமையல் எண்ணைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. கோதுமை மாவுக்கான நெருக்கடி உலகத்தை நெருக்கப் போகின்றது. இந்தியா கோதுமை மற்றும் உணவுப் பொருட்களுக்கான ஏற்றுமதியை தடைசெய்துள்ளது. இன்றைய பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் நெருக்கடிகள் இலங்கைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டது அல்ல. அவ்வாறு குறுக்கிப் பார்ப்பது மிகவும் ஆபத்தான பின் விளைவுகளுக்கு நாட்டை இட்டுச் செல்லும்.

உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் சர்வதேச பொருளாதார பயங்கரவாதிகள்:

பின்விளைவுகளை ஆழமாக நோக்காமல், இலங்கையில் அரசியல் மாற்றத்தை கொண்டுவரப் போவதாகக் கூறி நடக்கும் போராட்டங்கள்; உலகப் பொருளாதாரப் பயங்கரவாதிகளான உலக வங்கியிடமும் சர்வதேச நாணய நிதியத்திடமும் இலங்கையைத் தள்ளிவிட்டுள்ளன. பழைய ஆனால் மீண்டும் புதிதாகப் பதவியேற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் இலங்கை மக்களை தயார்படுத்த ஆரம்பித்துவிட்டார். நிலைமைகள் மோசமடையும் என்பதை மெல்ல மெல்ல அவிழ்த்து வருகின்றார். ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பற்றி அவர் வாய் திறக்கவில்லை. ஆனால் அரையும் குறையுமாக தங்களுக்கே புரியாமல் செய்தி வெளியிடும் ஊடகங்கள், சர்வதேச நாணய நிதியம் கோத்தபாய ராஜபக்ச பதவி விலகினால் தான் தாங்கள் உதவமுடியும் என அறிவித்திருப்பதாக செய்தியை வெளியிட்டு வருகின்றன. சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் நாட்டை சூறையாடுவதற்கு யார் அனுமதித்தாலும் அந்நாடுகளுக்கு தங்கள் ‘உதவிக் கரத்தை’ நீட்டும். உலகில் இருந்த சர்வதிகாரிகள், கொடுங்கோலர்கள் எல்லோருக்கும் வாரி இறைத்து அந்நாடுகளைச் சுரண்டுவது தான் உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியத்தியமும் இதுவரை செய்து வந்தது. அதனை அவர்கள் பசுத்தோல் போர்த்திக் கொண்டு செய்வார்கள்.

ஏப்ரல் 23இல் சர்வதேச நாணய நிதியமும் உலகவங்கியும் இளவேனிற்கால சந்திப்பை வோஷிங்டனில் மேற்கொண்டன. அதில் இலங்கையின் நிதியமைச்சர் அலி சபாரி, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கேயும் கலந்துகொண்டனர். இச்சந்திப்பின் பின் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட செய்தி அறிக்கை: Going forward, the IMF team will support Sri Lanka’s efforts to overcome the current economic crisis by working closely with the authorities on their economic program, and by engaging with all other stakeholders in support of a timely resolution of the crisis. – முன்நோக்கிச் செல்ல சர்வதேச நாணய நிதியக் குழு இலங்கை தனது பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளிவருவதற்கு ஏனைய பங்குதாரர்களோடும் இணைந்து அதிகாரிகளின் பொருளாதாரத் திட்டத்திற்கு ஆதரவு அளித்து தக்க தருணத்தில் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவரும்”. இந்தச் செய்தி அறிக்கை வெளியிடப்பட்டு மூன்று வாரங்களில் மேற்குலகுக்கு சார்பான ரணில் விக்கிரமசிங்க பதவிக்குக் கொண்டுவரப்பட்டார். ஆயினும் பொருளாதார நெருக்கடிக்கு உதவத்தயார்; பாதிக்கப்படும் ஏழை பாளைகளின் நெருக்கடியை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவத் தயார் என்றெல்லாம் அறிக்கை வெளியிட்டு ஒரு மாதமாகியும் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படவில்லை.

அவ்வாறு உடன்பாடு எட்டப்படாத விடயம் என்ன? யார் அந்த ஏனைய பங்கு தாரர்கள்? சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் உலகெங்கும் சோசலிசக் கொள்கைகள் உருவாகிவிடக்கூடாது, நாடுகள் தங்கள் எல்லைகளை தங்கள் நாட்டு (அமெரிக்க – பிரித்தானிய மற்றும் நாடுகளுக்கு இவர்கள் தான் ஏனைய பங்குதாரர்கள்) நிறுவனங்களுக்கு திறந்துவிட்டு திறந்த சந்தைப் பொருளாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும். இந்நாடுகள் தொடர்ந்தும் நவகாலனிகளாக இருக்க வேண்டும். அதற்காக இந்த மக்களின் அடிப்படைத் தேவைகளில் கை வைத்தாலும் கேள்வி எழுப்பக்கூடாது. எரிபொருள், மின் சக்தி, விவசாயத்திற்கு வழங்கப்படும் மானியங்கள் குறைக்கப்பட வேண்டும் அல்லது முற்றாக நிறுத்தப்பட வேண்டும். இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதாரம் என்பனவற்றுக்கு படிப்படியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இந்நாடுகளில் மக்கள் எவ்வளவு சுரண்டப்பட்டாலும் வறுமைப்பட்டாலும் பரவாயில்லை ஆனால் தாங்கள் அறவிடும் அறாவட்டியை ஒரு சதம் பாக்கி இல்லாமல் செலுத்த வேண்டும். இவை தான் இந்த பொருளாதார பயங்கரவாதிகளின் நிபந்தனை. இவர்கள் ஒன்றும் கோல்பேஸில் காற்று வாங்கவரும் போராளிகள் எதிர்பார்ப்பது போல் தேவதூதர்கள் அல்ல.

போராட்டகாரர்களுக்கு தமிழ் சொலிடாரிட்டியின் வேண்டுகோள் கேட்குமா:

உறுதியாக இருந்த இடதுசாரிகளின் நீண்ட போராட்டங்களினால் இலங்கை மக்கள் பல்வேறு அடிப்படை உரிமைகளைப் பெற்றிருந்தனர். இதனால் இலங்கை, அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகளினால் கூட வழங்கமுடியாத இலவசக் கல்வியை பல்கலைக்கழகம் வரை வழங்குகின்றது. இலங்கையில் இலவச அடிப்படைச் சுகாதார கட்டமைப்புகள் குறிப்பிடத்தக்கன. விவசாயிகளுக்கான மானியங்கள், எரிபொருள் மானியங்கள் அடித்தட்டு மக்களுக்கும் குறைந்தபட்ச பாதுகாப்பையாவது வழங்கி இருந்தது.

ஆனால் அடுப்பில் இருந்து நெருப்பில் வீழ்ந்த கதையாக இலங்கையின் நிலைமை மாறி வருகின்றது. பொருளாதார நெருக்கடியில் இருந்த இலங்கை தற்போது சர்வதேச பொருளாதார பயங்கரவாதிகளின் பொறிக்குள் வீழ்ந்துகொண்டிருக்கிறது. காலிமுகத்திடல் போராட்டம் சர்வதேச நாணய நிதியத்திற்கும் உலக வங்கிக்கும் இலங்கையை தாரைவார்த்து கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது போலவே தெரிகின்றது.

பிரித்தானியாவில் இருந்து இயங்கும் இடதுசாரி அமைப்பான தமிழ் சொலிடாரிட்டி என்ற அமைப்பு காலிமுகத்திடல் போராட்டத்திற்கு கொள்கையளவான ஆதரவை வழங்கிய போதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. அவை அனைத்துமே சர்வதேச நாணய நிதியத்த்தினதும் உலக வங்கியினதும் கொள்கைகளுக்கும் அவர்களுடைய நிபந்தனைகளுக்கும் முற்றிலும் எதிரானதாக உள்ளது. அனைத்து கடன்களையும் இரத்து செய்யுமாறு கோருவதோடு பெரு முதலாளிகளின் சொத்துக்கள் உட்பட ராஜபக்ச குடும்பத்தின் சொத்துக்களையும் பறிமுதல் செய்யக் கோருகின்றது. விவசாயிகளுக்காக மானியங்களை வழங்குவதுடன் மலையக தொழிலாளர்களின் நிலவுரிமையை உறுதி செய்யவும் கோருகின்றது. ஆனால் காலிமுகத்திடல் போராட்டம் இந்த நிபந்தனைகளைப் பற்றி எவ்வித கரிசனையும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

கடன்களை திருப்பிச் செலுத்த முடியாது என இலங்கை அறிவிக்க வேண்டும்:

இலங்கை அனைத்து கடன்களையும் இரத்து செய்ய வேண்டும். கடன்களை மீளக் கட்ட முடியாது என்பதை வெளிப்படையாகக் அறிவிக்க வேண்டும் என என்னுடைய முன்னைய பதிவுகளிலும் ஆணித்தரமாகக் குறிப்பிட்டு இருந்தேன். ஏற்கனவே பல தனிப்பட்ட கடன்களை கட்ட முடியாத நிலையில் அக்கடன்களை இலங்கை இரத்துசெய்துள்ளது. ஆனால் நாடுகளுக்கு இடையிலான பன்நிலைக் கடன்களை செலுத்த முயற்சிக்கின்றனர். இக்கடன்களையும் இலங்கை உடனடியாக இரத்து செய்ய வேண்டும். புதிதாகப் பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க மேலும் கடன் வாங்கி, கடன்களை திருப்பிச் செலுத்த முயற்சிக்கின்றார். உலக வங்கியினதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் முகவராக இயங்கும் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் நலன்களை முன்னிலைப்படுத்தவில்லை.

அவர் அமெரிக்க தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் ‘உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வருவது பாதுகாப்பானதா என்று கேட்கப்பட்ட போது, “அவர்களும் காலிமுகத்திடலில் வந்து போராட்டத்தில் கலந்து கொள்ளலாம்” என்று குறிப்பிட்டார். அவருக்கு கேள்வியின் ஆழம் புரியவில்லை என்பதால் அதே கேள்வி திருப்பிக் கேட்கப்பட்ட போதும் ரணில் விக்கிரமசிங்க உல்லாசப் பயணிகளின் வருகையை வரவேற்று கருத்துத் தெரிவிக்கவில்லை. இலங்கை மக்கள் மீது அழுத்தங்களை இறுக்கி அவர்களை இயலாமையின் விழிம்பில் பணயம் வைத்து, தங்கள் நிபந்தனைகளுக்கு பணிய வைக்கவே அனைத்து முயற்சிகளையும் ரணிலும் – சர்வதேச நாணய நிதியமும் மேற்கொள்கின்றது.

இலங்கை ஆண்டுக்கு 7 முதல் 9 பில்லியன் டாலர்களை 51 பில்லியன் வெளிநாட்டு கடன்களை கட்டுவதற்கு செலுத்துகின்றது. அறவட்டிக்கு வாங்கப்பட்ட இக்கடன்களை தொடர்ந்தும் செலுத்தினால் பெற்றோல், மருந்து மற்றும் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான டொலர் கையிருப்பு இருக்காது. அதனால் அரசு உடனடியாக அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். கடன்களை மீளச்செலுத்துவதற்கான மீள்வரையறை செய்வது இப்போதுள்ள நெருக்கடியை சற்றுத் தள்ளிப்போடவே வழிவகுக்கும். அரசு தற்போது கூட்டு முடிவை எடுப்பதாக இல்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களின் நலனிலும் பார்க்க உலக வங்கியினதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் நலனிலேயே கூடுதலாக அக்கறைகொள்கின்றார்.

‘பணவீக்கம்’ மிகத் தவறான சொற்பாவனை – விலை வீக்கம் என்பதே சரியானது:

தமிழில் தற்சமயம் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்களில் ஒன்று ‘பணவீக்கம்’ இந்தச் சொல்லானது அடிப்படையிலேயே மிகத் தவறான சொல். ஆங்கிலத்தில் இன்பிளேஷன் – inflation என்ற சொல் பொருளாதாரத்தில் மிக முக்கியமானது. அது குறித்த காலப்பகுதியில் பொருட்களின் விலையுயர்வை குறிக்கும். இன்பிளேஷன் – inflation என்பது வீக்கத்தை குறிக்கும். எமது உடலில் ஏற்படும் வீக்கம் முதல் பலூனை ஊதுவது எல்லாமே இன்பிளேயர் – inflare என்ற லத்தீன் சொல்லில் இருந்து ஆங்கிலத்திற்குச் சென்றது. ‘காற்றடித்து பெரிதாவது’ என்பதை அது குறிக்கும். இதனை தமிழில் ‘பணவீக்கம்’ என்கின்றனர். அதன் தமிழாக்கத்தின்படி வீக்கம் என்பது ‘பெரிதாவது’. அதாவது ‘பணவீக்கம்’ என்பது பணத்தின் பெறுமதி அதிகரிப்பது என்றே அர்த்தப்படும். பணத்தின் பெறுமதி அதிகரிப்பது ஒரு பொருளாதாரத்திற்கு சாதகமான விடயம். ஆனால் அதனை புரிதல் இல்லாமல் பாவிக்கின்றனர். பணவீக்கம் என்பது ஆங்கிலத்தில் அப்பிரிசியேஷன் – appreciation என்பார்கள். அதாவது பணத்தின் பெறுமதி அதிகரிப்பது. பணத்தின் பெறுமதி ஒடுங்கினால் அல்லது வீழ்ந்தால் அதனை டிப்பிரிசியேஷன் – depreciation என்பார்கள். பதங்களின் உண்மையான அடிப்படையில் இலங்கையில் தற்போது ஏற்பட்டு இருப்பது பணஒடுக்கமும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட விலைவிக்கமும் ஆகும். இதனைப் புரியாமல் விலையுயர்வை பணவீக்கம் என்று குறிப்பிடுவதன் மூலம் பொருளாதாரத்தின் அடிப்படை விதிகளையே போட்டுக் குழப்புகின்றனர். பல்கலைக்கழகங்கள் இவை தொடர்பில் சொற்களஞ்சியத்தில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.

விலைகள் ஏன் உயர்கின்றது:

ஒரு நாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உண்டு: 1) பொருட்களின் சேவைகளின் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் (போக்குவரத்துச் செலவு உட்பட) விலை அதிகரிக்கின்ற போது – cost push inflation 2) பொருட்களுக்கான தேவை கேள்வி அதிகரிக்கின்ற போது – demand pull inflation 3) நாட்டின் பணத்தின் பெறுமதி வீழ்ச்சி அடையும் போது அதாவது பணஒடுக்கம் – currency depreciation ஏற்படும் போது (இறுக்குமதி செய்கின்ற) பொருட்களின் விலை அதிகரிக்கும். இலங்கையில் மட்டுமல்லாது கோவிட் தாக்கத்தில் இருந்து வெளிவரும் உலகின் பெரும்பாலான நாடுகளின் நிலை இதுவே.

கோவிட் காலத்தில் பெரும் வேலையிழப்புகள் ஏற்படும் என்று எதிர்பார்த்த போதும் அமெரிக்கா, பிரித்தானியா, இலங்கை போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வேலையிழப்புகள் ஏற்படவில்லை. பெரும்பாலும் சம்பளம் வழங்கப்பட்டது. மேலும் அரச உதவிகளும் மற்றும் உதவிகளும் மக்களுக்கு கிடைத்தது. ஆனால் சாதாரண காலத்து செலவீனங்கள் அளவுக்கு அவர்களுக்கு செலவீனங்கள் ஏற்படவில்லை. நாடுகள் முடக்கத்தில் இருந்ததால் செலவழிப்பதற்கான வாய்ப்பும் இருக்கவில்லை. அதனால் முடக்கத்தில் இருந்து நாடுகள் தங்களைத் திறக்க ஆரம்பித்ததும் மக்கள் தாராளமாகவே செலவழிக்க ஆரம்பித்தனர். அதனால் பொருட்களுக்கான தேவையும் கேள்வியும் அதிகரித்தது. ஆனால் நாடுகள் திறக்கப்பட்ட வேகத்திற்கு தொழிற்காலைகள் திறக்கப்படவில்லை. உற்பத்திகள் குறைந்தது. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விநியோகத்திலும் தடங்கல் ஏற்பட்டது. குறிப்பாக உலகின் தொழிற்சாலையாக இருக்கும் சீனாவின் சில பகுதிகள் மாறி மாறி தொடர்ந்தும் முடக்கத்திலேயே இருக்கின்றது. அதனால் விநியோகத்தில் தடை அது பொருட்களின் விலையை மேலும் அதிகரித்தது. – Demand pull inflation.

கோவிட் முடிவில் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தன் மூலம் உலகில் எரிபொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டது. அனைத்து உற்பத்திக்கும் விநியோகத்திற்கும் எரிபொருள் தவிர்க்க முடியாதவொன்று. அதனால் பொருட்களின் விலை மேலும் எகிறியது. Cost push inflation.

ஒரு நாட்டின் நாணயத்தின் பெறுமதி இன்னுமொரு நாட்டின் நாணயத்தின் பெறுமதியோடு ஒப்பிட்டே தீர்மானிக்கப்படுகின்றது. இந்நிலையில் இலங்கை மத்திய வங்கி நிதி நிலையைச் சமாளிக்க ஒரு சோம்பேறித்தனமான முடிவை எடுத்தது. பணத்தை அச்சிட்டு (quantitative easing) புழக்கத்தில் விட்டது. இது பணத்தின் பெறுமதியை மேலும் வீழ்ச்சியடையச் செய்தது. பணத்தின் பெறுமதி வீழ்ச்சியடைய பணஒடுக்கம் (currency depreciation) ஏற்பட இறுக்குமதிப் பொருட்களுக்கு நாங்கள் செலுத்தவேண்டிய பணத்தின் அளவு அதிகரித்தது. பொருட்களின் விலைவீக்கமடைந்தது (விலையுயர்வு).

இலங்கையின் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகம்:

பணத்தின் பெறுமதி வீழ்ச்சி அடைவது அல்லது பணஒடுக்கம் முற்றிலும் மோசமானது அல்ல. இலங்கை ஏற்றுமதி வர்த்தகத்தை கூடுதலாக செய்யும் நாடாக இருந்திருந்தால் எமது பொருட்களின் விலை உலக சந்தையில் குறைந்திருக்கும். அதனால் ஏற்றுமதி அதிகரித்து இருக்கும். ஆனால் இலங்கை கூடுதலாக இறக்குமதியையும் மிகக் குறைந்தளவில் ஏற்றுமதியையும் செய்வதால் அதுவும் இலங்கைக்கு பாதகமானதாகி உள்ளது. ஒவ்வொரு நாடும் இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரிப்பதையே செயற்திட்டமாகக் கொண்டுள்ளது. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம், சீனா அமெரிக்காவினுடைய பொருட்களை இறக்குமதி செய்யும் அளவைக் கூட்ட வேண்டும் என்று அந்நாட்டோடு ஒரு வர்த்தக யுத்தத்தையே மேற்கொண்டார். உலகமயமாதல் – globalization மூலம் தங்களை வளர்த்துக்கொண்ட பெரு முதலாளித்துவ நாடுகளான அமெரிக்காவும் பிரித்தானியாவும் அவற்றின் நட்பு நாடுகளும் தற்போது அதே உலகமயமாதல் தங்களுக்கு சாதகமாக இல்லை என்றதும் திறந்த சந்தைப் பொருளாதாரத்தோடு (open market economy) தங்கள் நாடுகளில் பொருளாதார பாதுகாப்பு கொள்கையை (protectionism) கொண்டு வருகின்றனர். அவர்கள் கோருவதெல்லாம் தாங்கள் உலகெங்கும் சென்று சுரண்டுவதற்கான உரிமையை மட்டுமே. ஆனால் ஆசிய, ஆபிரிக்க நாடுகள் தங்கள் நாடுகளுக்குள் பொருட்களை கொண்டுவரக்கூடாது.

அதனால் சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் இலங்கை போன்ற நாடுகள் ஏற்றுமதி செய்வதை செய்வதை ஒரு போதும் ஊக்கப்படுத்தாது. அவர்களை இறக்குமதியாளர்களாகவும் கடன்காரர்களாகவுமே வைத்திருக்கும். சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமராக இருந்த 1970க்களில் கொண்டுவரப்பட்ட கடுமையான தன்னிறைவுப் பொருளாதாரக் கொள்கையால் 1977இல் மட்டும் இலங்கையில் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்தில் ஏற்றுமதி கூடுதலாக இருந்தது. ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் சக 3.6 வீதமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து ஜே ஆர் ஜெயவர்த்தனாவின் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்ததும் 1980இல் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக விகிதாசாரம் சய (எதிர்மறையானது) 22.5 வீதமானது. இன்று வரை இந்த ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக விகிதாசாரம் எதிர்மறையாகவே உள்ளது. தற்போது இது சய மூன்று வீத்திலும் குறைந்திருக்கும்.

இப்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை நாங்கள் பயப்படும் அளவுக்கு ஆபத்தானது அல்ல. இச்சூழலை சாதகமாக்கவும் வாய்ப்பு உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகள் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்த வெளிநாட்டவர், தற்போது உலகம் சுற்ற விரும்புகின்றனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள நாணய ஒடுக்கும் அல்லது நாணயத்தின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி இலங்கையின் உல்லாசப் பயணத்துறைக்கு ஒரு வரப்பிரசாதம். இலங்கைக்கு அந்நியச் செலவாணியை ஈட்டித்தரும் முக்கியமான துறை இது. போராடுகிறோம் என்ற பெயரில் சர்வதேச நாயண நிதியத்திற்கும் உலக வங்கிக்கும் நாட்டை தாரைவார்க்காமல், எங்கள் நாட்டுக்கு வந்து குறைந்த செலவில் எம் நாட்டின் அழகை ரசியுங்கள். எங்கள் கலை கலாச்சாரங்களை அறியுங்கள் என்று உல்லாசப் பயணிகளுக்கு செங்கம்பள வரவேற்பளிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு போராடுகிறோம், எரிக்கிறோம், கொழுத்துகிறோம் என்பதெல்லம் கஞ்சி ஊத்தாது.

இப்பொருளாதார நெருக்கடியை ஒவ்வொருவரும் நாட்டிற்கு சாதகமானதாக்க வேண்டும். நாட்டினை தற்சார்புப் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்த வேண்டும். உள்ளுர் உற்பத்திகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அதரிக்கப்பட வேண்டும். தரமாக்கப்பட வேண்டும். அத்தியவசியமற்ற சர்வதேச பொருட்களை கொக்கோ கோலா முதல் பஜ்ரோ வரை மக்கள் நிராகரிக்க வேண்டும். இவற்றின் இறக்குமதிகள் தடுக்கப்பட வேண்டும். ‘மேட் இன் சிறிலங்கா – made in Sri Lanka’ என்ற சொல்லுமளவிற்கு பல்கலைக்கழகங்கள் உள்ளுர் உற்பத்தியை நோக்கி நாட்டை நகர்த்த வேண்டும்.

யாழ் பல்கலைக்கழக உப வேந்தரின் ஆதங்கம்:

இது பற்றி யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எஸ் சற்குணராஜா தனது ஆழமான விசனத்தை வெளிப்படுத்தி உள்ளார். தமிழ் அரசியல் தலைவர்களை பிச்சைக்கராரர் என்றும் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை ‘கொழும்பு செவன்’ இறக்குமதி என்றும் கடுமையாகத் தாக்கி உள்ளார். வடக்கு – கிழக்கு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் ஒருவர் இவ்வளவு துணிச்சலாக தனது கருத்தை வெளிப்படுத்தி இருப்பது இதுவே முதற் தடவை என நினைக்கிறேன். சில வாரங்களுக்கு முன் அவர் ஆற்றிய உரையில்: “இப்போது வோஷிங்டனில் இருந்து பத்தரமுல்ல வரை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் ஆண்களோ பெண்களோ most of them GCE(O/L) qualified இல்லை. அவர்களால் எப்படி எங்களை lead பண்ண இயலும். blind serve the blind என்று சொல்வார் என்னுடைய மாஸ்டர். நாங்கள் தான் எங்களை lead பண்ண வேண்டும். எங்கட பலம் strength என்ன என்று பார்க்க வேண்டும். எங்களுடைய பலவீனம் weakness என்ன என்று பார்க்க வேண்டும். எங்கட தமிழ் கலாசாரத்தில தமிழ் கலாசாரத்தில, சுதந்திரத்தைப் பற்றி கதைக்கிறத விட துரோகிய பற்றி கதைக்கிறதுதான் கூட. Parliment வேண்டாம் pajero வேண்டாம் permit வேண்டாம் extra disel வேண்டாம் என்றெல்லாம் சும்மா சொல்றது. எங்களுடைய அரசியல்வாதிகள் எல்லாம் beggars (பிச்சைக்காரர்கள்). ஏன் நீங்கள் பங்ளோவில இருக்கிறியல்.

இன்றைக்கு ஆயிரம் விதவைகள் இருக்கிறார்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம். Women lead families எங்களிடம் ஒரு பிளானும் இல்ல. நாங்கள் அடுத்த மாகாண சபை வருதென்றால் உடனே வேர்த்து விறுவிருத்து statementவிடத் தொடங்கிடுவோம். மோடி, அம்பேத்கர் அவங்க தங்கட ambassador இல்ல வாராங்க. நாங்க அந்நியத்தை நாடுறம்.

இன்றைக்கு மினி யாழ்ப்பாணம் எங்கிருக்கு. வெள்ளவத்தையில் இருக்கு. விட்ட நிலத்தில் சீவிக்க ஆட்களில்லை. எங்களுக்கு நாட்டம் அங்க. கொழும்பு செவன் வடக்கையும் கிழக்கையும் கண்டுகொள்ளயில்ல. ஆனால் எங்களுடைய weakness ஆடி… அடி… அடி… அடிச்சால் எல்லாத்தையும் weak ஆக்கிக் கொடுத்தால் எதிரிக்கு சுகம். இப்ப நாங்கள் politicianனையும் கொழும்பில் இருந்து import பண்ணற அளவுக்கு போய்ட்டம். நாங்க அந்நியத்தை நாடினால் என்ன நடக்கும்? இப்ப இருக்கும் economic இந்த problem எங்க கொண்டு போய் முடிக்கும் என்று தெரியாது. ஒருவர் ஒருவர் அடிச்சுக் கொல்லலாம், இன்னும் கொஞ்ச நாளில். Body guard போட்டுத் தடுக்க இயலாது. நடக்கலாம். இதெல்லாம் கன நாடுகளில் நடந்திருக்கு. இப்படியே போனால் என்ன நடக்குமோ எங்களுக்கு தெரியாது. எங்களுக்கு மார்ட்டின் லூதர் கிங் வேணும். மொரார்ஜி தேசாய் வேணும். மாவோ சேத்துங் வேணும், லெனின் வேணும்” என்று தமிழ் மக்களிடம் சீரான ஒரு அரசியல் தலைமையில்லாத ஆதங்கத்தைக் கொட்டினார்.

துணைவேந்தர் எஸ் சற்குணராஜா தொடர்ந்தும் குறிப்பிடுகையில்: “எத்தனை சாம்ராஜ்யங்கள் உலகத்தில் இருந்திருக்கு. பாபிலோனியா சாம்ராஜ்யம். இன்றைக்கு பாருங்கள் ஈராக் எப்படி இருக்கிறதென்று? எகிப்திய சாம்ராஜ்யம் எப்படியிருக்கு? இன்றைக்கு பிரிட்டன் மூன்றாம் உலக நாடாக போயிருக்கும், Northsea oil கண்டுபிடிக்காட்டி. நாம் deserving ஆக இருந்தால் எம்மை யாரும் அடிமைப்படுத்த இயலாது. இது natural law. இதில் பெண் என்றால் என்ன? ஆண் என்றால் என்ன?

சுதந்திர சரித்திரத்தை இவர்கள் சுதந்திரத்திற்கு பின்தான் கதைக்கிறார்கள். எமக்கு 2000 ஆண்டு 3000 ஆண்டு history இருக்கிறது. நல்லுரடிக்கு போனால் ஆட்கள் தரிசனத்திற்கு போகிறார்கள். பெரிய பெரிய தலங்களுக்கு எல்லாம் தரிசனத்திற்கு போகிறார்கள். ஆனால் அதில பிச்சைக்காரரகள் எப்பொழுதும் அங்கு இருக்கிறார்கள். 24 மணித்தியாலயமும். ஆனால் அவர்களுக்கு ஏதாவது ஆத்ம சித்தி கிடைத்ததா என்றால் இல்லை. 24 மணித்தியாலயமும் அந்தத் தளத்தில் இருக்கிறார்கள். ஏன் என்றால் அவர்களின் சிந்தனை முழுவதும் ரொட்டித் துண்டும் பிளேன் டீ யும். உயர்ந்த சிந்தனை இல்லை. Vision தான் முதல் எங்களுடைய பலம். எங்களுக்கு ஒரு பாரம்பரியம் இருக்கிறது. எங்களுக்கு ஒரு கலை இருக்கு, எங்களுக்கு ஒரு அழிவில்லா மொழி இருக்கு. அழிவில்லாத மொழி எங்களுக்கு. அப்படி பொக்கிஷங்கள் இருக்கு. இன்றைக்கு எங்களுக்கு knowledge நிறைய வேணும்” என்று சொல்லி தமிழ் மக்களில் மாற்றத்தை வேண்டி எஸ் சற்குணராஜா தன்னுரையை முடித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அமைச்சர்கள் காலிமுகத்திடல் போராளிகள் உட்பட அனைவரும் ஒரே குரலில் சிறிலங்கா பெஸ்ற் – Sri Lanka First, ருறிஸ்ற் ஹம் ஹோம் – Tourists Come Home, மேட் இன் சிறிலங்கா – Made in Sri Lanka என்ற கோசங்களை முன் வைக்க வேண்டும். எந்தக் கடனையும் மீளச் செலுத்த முடியாது என அறிவிக்க வேண்டும். இலவசக் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்கள் அந்நாட்டை தோள்களில் தாங்கக் கூடிய கல்விச் சமூகத்தை உருவாக்க வேண்டுமெயொழிய பட்டத்தை பெற்றபின் வேலையையும் வாங்கித் தரச்சொல்லி போராடும் சோம்பேறிக் கூட்டத்தை உருவாக்கக் கூடாது. அப்படிச் செய்தால் நிச்சயம் இலங்கை சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கிச் செல்லும்.

சடுதியாக அதிகரித்துள்ள இலங்கையின் கடன்கள் – சுட்டிக்காட்டியுள்ள உலக வங்கி !

கொரோனா வைரஸ் தொற்று இலங்கையின் பொருளாதாரத்தில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி ஏற்பாடு செய்திருந்த இணையவழி மூலமான நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே, தெற்காசியப் பிராந்தியத்தின் பிரதம பொருளாதார விசேட ஆய்வாளர் ஹான்ஸ் ரிமர்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால், பல பிரச்சினைகளை இலங்கை எதிர்கொண்டுள்ளதென்றும் அரசாங்கத்தால் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் உண்டெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இலங்கையின் முக்கிய பிரச்சினை, மொத்த உற்பத்திக்கு அமைவாக நடைமுறையில் உள்ள கடன் அதிகமாக இருப்பதேயாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, எதிர்காலத்தில் கடனைச் செலுத்தும் வகையில் நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுப்பது முக்கிய தேவையாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“இலங்கையின் கடன்களுக்கு மகிந்தராஜபக்ஷவே காரணம்.” – ஹர்ச டி சில்வா காட்டம் !

“இலங்கை இன்று செலுத்திக்கொண்டிருக்கும் ஒவ்வொரு கடனுக்கும் காரணம் மகிந்தராஜபக்ஸவே.” என  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

தற்போதைய அரசாங்கம் வருடாந்தம் செலுத்திக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பில்லியன் டொலர் கடனும் கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த சமயத்தில் பெற்றுக்கொண்டவை. சுற்றுலாத்துறை மூலம் இலங்கை  ஒருபோதும் 5 பில்லியன் டொலர்களை அந்நிய செலாவணியாக பெற்றுக்கொண்டதில்லை.

சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கப் பெறும் 5 பில்லியன் டொலர் தற்போது முற்றாக இல்லாமல் போயுள்ளதாக அரச தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் சுற்றுலாத்துறையின் ஊடாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 5 பில்லியன் டொலர் கிடைக்கப் பெற்றதில்லை. கடந்த 2018 ஆம் ஆண்டில் மாத்திரமே சுற்றுலாத்துறை ஊடாக 4.5 பில்லியன் என்ற அதிகபட்ச அந்நிய செலாவணி கிடைக்கப் பெற்றது. மாறாக ஏனைய வருடங்களில் சராசரியாக 2.4 பில்லியன் மாத்திரமே சுற்றுலாத்துறை ஊடாகக் கிடைக்கப் பெறும். இலங்கையின்  அந்நிய செலாவணி கிடைக்கப் பெறும் அதேவேளை இலங்கையர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது 1.6 பில்லியன் டொலர் செலவிடப்படுகிறது.

தற்போது சுற்றுலாத்துறை மூலமான அந்நிய செலாவணி வீழ்ச்சியடைந்துள்ளமைக்கான காரணம் கொவிட் தொற்று அல்ல. அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகமேயாகும். கொவிட் தொற்றின் பின்னர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இலங்கையில் 0.7 வீதமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய நாடுகளில் 4.5 வீதமளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமின்றி தடுப்பூசி கொள்வனவு உள்ளிட்ட கொவிட் செலவுகளுக்காக உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்டவற்றிடமிருந்து நிதி உதவிகள் கிடைக்கப் பெற்றன.

கடந்த அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடன்களையே தற்போது தாம் செலுத்திக் கொண்டிருப்பதாக அரச தலைவர் கூறுவது உண்மைக்கு புறம்பானது. காரணம் கடந்த ஆண்டு செலுத்திய ஒரு பில்லியன் டொலர் 2010 இல் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் பெற்ற கடனாகும். அதேபோன்று இவ்வாண்டு செலுத்திய ஒரு பில்லியன் டொலர் 2011 இல் மஹிந்த ராஜபக்ச பெற்றுக் கொண்டதாகும். இவ்வாண்டு ஜூலை மாதமளவில் பெற்றுக் கொண்ட ஒரு பில்லியனும் 2012 இல் தனது சகோதரன் பெற்றுக் கொண்ட கடன் என்பதை ஜனாதிபதி நினைவில் கொள்ள வேண்டும். நாடு தற்போது பாரிய அபாயத்தில் உள்ளது என்பதை அவர் உணர வேண்டும். தாம் ஒருபோதும் சர்வதேச நாணய நிதியத்தை நாடப் போவதில்லை என்றும், அஜித் நிவாட் கப்ரால் முஸ்லிம் நாடுகளிடம் கடன் பெறுவார் என்றும் அரச தலைவர் செயலர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இங்கு நீதி அமைச்சர் அலி சப்ரி பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். அவ்வாறிருக்கையில் எவ்வாறு முஸ்லிம் நாடுகளிடமிருந்து உதவியை எதிர்பார்க்க முடியும் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.