உள்ளூராட்சி சபைத் தேர்தல்

உள்ளூராட்சி சபைத் தேர்தல்

“உடைந்தது தமிழ்தேசிய கூட்டமைப்பு“- கஜேந்திரகுமார் – விக்கி தரப்புடன் இணையும் ரெலோ !

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்து போட்டியிட இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று(செவ்வாய்கிழமை) காலை கொழும்பிலுள்ள இரா.சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்த கலந்துரையாடலில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், ஹென்ரி மகேந்திரன், எம்.ஏ சுமந்திரன், ஆர்.ராகவன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டமைப்பிற்கு வெளியிலுள்ள தமிழ் கட்சிகளை இணைத்துக் கொண்டு போட்டியிடுவதா என்பன தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலை எதிர்கொண்டதை போல எதிர்கொள்ளலாம் என ரெலோ கூறியுள்ளது.

எனினும், கடந்த முறை தமக்கு உறுதியளிக்கப்பட்ட சபைகள் வழங்கப்படாததால் அது பற்றி மீள பேசப்பட வேண்டுமென புளொட் தெரிவித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், தேர்தல் நெருங்கி விட்டதால், அதைபற்றி பேச அவகாசமில்லையென தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது.

இதே நேரம். தமிழரசுக்கட்சியை தவிர்ந்த ஏனைய கட்சிகள் கூட்டமைப்பாக தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கலந்துரையாடல்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக டெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், தமிழ்தேசிய மக்கள் கூட்டணி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து இந்த கூட்டமைப்பு அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்தேசிய மக்கள் முன்னணியையும் இந்த கூட்டமைப்பில் இணைத்துக்கொள்ள பேச்சு நடத்தப்படும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

 

இதேநேரம் தமிழ்தேசிய கட்சிகள் யாவும் இணைந்து செயற்பட வேண்டும் என மேற்கொள்ளப்பட்ட வட-கிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவினுடை்ய போராட்டம் இன்று நெடுங்கேணியில் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நேர்மையான மற்றும் ஊழலற்றவர்களுக்கு வேட்புமனுக்களை வழங்குங்கள் – மார்ச் 12 இயக்கம் வலியுறுத்தல்!

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நேர்மையான மற்றும் ஊழலற்றவர்களுக்கு வேட்புமனுக்களை வழங்கி சிறந்த நாட்டை உருவாக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளையும் மார்ச் 12 இயக்கம் இன்று வலியுறுத்தியுள்ளது.

2015 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் திகதி அரசியல் கட்சிகளால் வெளியிடப்பட்ட நிபந்தனைகளை கருத்திற்க் கொண்டு உள்ளுராட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என மார்ச் 12 இயக்கத்தின் அழைப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேட்புமனுவில் கையெழுத்திடும் போது அனைத்து வேட்பாளர்களும் தங்களது சொத்துப் பிரகடனத்தை சமர்ப்பிப்பதையும், அவற்றை வெளியிடுவதையும் அரசியல் கட்சிகள் உறுதி செய்ய வேண்டும்.

இளைஞர்கள் உட்பட சமூகத்தில் சமீபகாலமாக எழுந்துள்ள எழுச்சியானது நாட்டில் அமைப்பு மாற்றத்திற்கு அழைப்பு விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கட்சிகள் எதிர்பார்த்த மாற்றத்தை வழங்கும் வரை மக்கள் ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“உள்ளூராட்சி தேர்தலில் சரியானவர்களையும், இளைஞர்களையும் முன் நிறுத்துவோம்.” – எம்.ஏ.சுமந்திரன்

“உள்ளூராட்சி தேர்தலில் சரியானவர்களையும், இளைஞர்களையும், யுவதிகளையும் முன் நிறுத்துவோம்.” என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

சாவகச்சேரியில் ஊடகங்களுக்கு நேற்று (04) கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

உள்ளுராட்சி தேர்தல் வேட்புமனுதாக்களுக்கான திகதி தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. எமது கட்சியின் சார்பிலே தேர்தல்கள் பிற்போடகூடாது , அது ஜனநாயகத்தினை மீறுகின்ற செயல் என தொடர்ச்சியாக கூறி வந்திருக்கிறோம்.

அரசாங்கம் இந்த தேர்தலினை பிற்போடுவதற்கு எடுத்த முயற்சிகள் எங்களுக்கு தெரியும். எதுவும் கைகூடாத நிலைமையில் தேர்தல் ஆணைக்குழு சட்ட ரீதியாக அறிவித்துள்ளது. இந்த வேளையில் இதனை தடுப்பதற்கு சில முயற்சிகள் நடக்க கூடும். அவ்வாறு முயற்சிகள் எடுக்கப்படுமிடத்து உடனடியாக நாங்கள் நீதிமன்றத்தினை நாடி சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்துவதற்கான எங்களுடைய முழுமையான அழுத்தத்தினை கொடுப்போம்.

சில வருடங்களாக நடத்தப்படாமல் இருக்கின்ற மாகாண சபை தேர்தலும் உடனடியாக நடத்தப்பட வேண்டும். மாகாண சபைகள் இயங்காமல் இருப்பது என்பது மிகவும் பாரிய பின்னடைவு. இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பினை பொறுத்தவரையில், எங்களின் மூலக்கிளையில், இருந்து இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பதாரிகளை முன் வருமாறு கோரியிருக்கிறோம்.

இந்த தடவை சரியானவர்களையும், இளைஞர்களையும், யுவதிகளையும் இந்த தேர்தலில் முன் நிறுத்துவோம். மக்களின் ஆதரவினை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார்.

தேர்தல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளிலும் தான் ஈடுபடப் போவதில்லை – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளிலும் தான் ஈடுபடப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விடயம் தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களை நேற்றைய தினம் (3) சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் இரண்டு வருடங்களில் நாட்டை அபிவிருத்தி பாதைக்கு கொண்டு செல்வதற்கே தனக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல்களில் ஈடுபட தனக்கு ஆணை வழங்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தனக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையை மீறி செயற்படுவதற்கு தான் தயார் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானிக்கும் பட்சத்தில், தமது கட்சியின் மரபுக்கு அமைய, செயற்குழுவின் தலைவராக மாத்திரமே தான் தலைமை தாங்க தயார் எனவும் அவர், கட்சியின் தலைவர்களிடம் கூறியுள்ளார்.

அத்தோடு, உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பிலான எந்தவொரு நடவடிக்கைகளிலும் ஈடுபடப் போவதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றது.

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானிக்குமானால், 40 வீதமான புதுமுக வேட்பாளர்களை களமிறக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.