எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

“வெளிநாடுகளில் மிருகங்களின் நோய்க்கு கூட பயன்படுத்தாத கதிர்வீச்சு இயந்திரங்கள் மூலம் இலங்கையில் நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகின்றது.” – நாடாளுமன்றில் சஜித் பிரேமதாச !

நாட்டில் புற்றுநோயாளர்களுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் கோபோல்ட் கதிர்வீச்சு வெளிநாடுகளில் மிருகங்களுக்கு கூட பயன்படுத்துவதில்லை. அதனால் காலாவதியான இயந்திரங்களுக்குப் பதிலாக லினியா கதிர்வீச்சு இயந்திரத்தை பயன்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஒவ்வோர் ஆண்டும் 30 ஆயிரம் புற்றுநோயாளிகள் உருவாகின்றனர். அவர்களுக்கு கதிர்வீச்சு சிகிச்சை அளிப்பது செலவு குறைந்த முறையாகும். லினியா எக்ஸலேட்டர் என்ற கதிர்வீச்சையே பயன்படுத்த வேண்டும். அதுவே தற்போதுள்ள நவீன உபகரணம். ஆனால், எமது நாட்டில்  கோபோல்ட் கதிர்வீச்சே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த கதிர்வீச்சை வெளிநாடுகளில் மிருகங்களின் புற்றுநோய்க்கு கூட பயன்படுத்துவதில்லை.

அத்துடன், லினியா எக்ஸலேட்டர் கதிர்வீச்சு உபகரணம் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி மற்றும் கராப்பிட்டிய ஆகிய இடங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதனை பதுளை, இரத்தினபுரி, குருநாகல், அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை போன்ற இடங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால், இரண்டாம் கட்டமாக இந்த உபகரணங்களை வழங்குவதற்கு 2 மில்லியன் டொலர்கள் செலவாகும் என்று சுகாதார அமைச்சின் சில அதிகாரிகள் கோபோல்ட்  கதிர்வீச்சு சாதனங்களை தொடர்ந்தும் பயன்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

இதன் விளைவாக, ஒரு லினியா கதிர்வீச்சு இயந்திரத்தின் விலையில் பாதி செலவிடப்பட்டு, காலாவதியான, வெளிநாடுகளில் விலங்குகளுக்கு கூட பயன்படுத்தாத இயந்திரங்களை இறக்குமதி செய்யத் தயாராகியுள்ளனர். இந்த காலாவதியான இயந்திரங்களுக்குப் பதிலாக லினியா கதிர்வீச்சு இயந்திரத்தை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

அத்துடன் இந்தியாவில் இருந்து பெனசியா என்ற கதிர்வீச்சு இயந்திரம் இறக்குமதி செய்யப்படவுள்ளது என்றாலும், இந்த கதிர்வீச்சு இயந்திரம் இந்தியாவில் கூட பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்றார்.

“சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் பாராளுமன்றில் மனிதக்கொலையின் பக்கம் 113 பேர் நின்றனர்.” – எதிர்க்கட்சித்தலைவர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மை குறித்து நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளதாகவும், பாரபட்சமின்றி நடுநிலையான விசாரணையின் மூலம் மேதகு கர்தினால் தலைமையிலான கத்தோலிக்க சமூகத்திற்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றிற்கு பின்னர் ஊடகங்களுக்கு இன்று (9) கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் பிரதான சூத்திரதாரியாக இருப்பவர்கள் யார்? இதை திட்டமிட்டது யார்? இதற்கு யார் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார்?இது தீவிரவாத திட்டமா? இதில் அரசியல் நோக்கங்கள் இருந்ததா என்பதும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும், உண்மையை வெளிப்படுத்துவதில் தயங்கக் கூடாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கருத்து வெளியிடும் போது;

நியாயமான விசாரணை கோரப்படும் போது அலற வேண்டிய அவசியமில்லை என்றும், அரசாங்க தரப்பு நபர்கள் இவ்வாறு கூச்சல் போடுவதால் இதில் மறைப்பதற்கு ஏதோ இருக்கிறதா என்ற சந்தேகம் எழுவதாகவும், கைகள் சுத்தமாக இருந்தால்,அந்த கைகளில் இரத்தக்கறை படியவில்லை என்றால், அரசியல் பேரங்களுக்காக பயங்கரவாதிகளுடன் ஒப்பந்தம் செய்யவில்லை என்றால்,உண்மையைத் தேட அச்சப்பட வேண்டாம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

திருட்டு,மோசடி,பொய்,மனித கொலை ஆகியவற்றுடன் 113 பேர் நின்றதாகவும், 74 பேர் மக்களை வாழ வைக்கும் பக்கம் நின்றார்கள் என்றும்,தரம் தாழ்ந்த மருந்துகளை கொண்டு வந்து மக்களை கொல்ல நினைப்பவர் பக்கம் 113 பேர் நின்றதாகவும்,மக்களை வாழ வைக்க நினைக்கும் 74 பேரின் புகைப்படங்களை தனித்தனியாக ஊடகங்கள் மூலம் வெளியிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

“சம்புத்த சாசனத்தைப் பாதுகாப்பதும் மேம்படுத்துவதும் நம் அனைவரினதும் பொறுப்பாகும்.” – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

சம்புத்த சாசனத்தைப் பாதுகாப்பதும் மேம்படுத்துவதும் நம் அனைவரினதும் பொறுப்பாகும் எனவும், இதற்காக புத்தசாசன அமைச்சு,பௌத்த நிதியம் மற்றும் பல சாசன ஊக்குவிப்பு நடவடிக்கைகள் எமது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட எமது நாட்டில், பல்வேறு காரணிகளால் தற்போது சம்புத்த சாசனம் சில பின்னடைவுகளைச் சந்தித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்த உன்னதமான சாசனத்தைப் பாதுகாப்பது அனைத்து பக்தர்களினதும் புரோகிதர்களினதும் பொறுப்பாகும் எனவும், மதமும் ஆட்சியும் ஒன்றாகக் கலக்கக் கூடாது எனவும்,பௌத்தத்தை ஒரு அரசியல் ஆயுதமாக்குவதில்,மதம் பெற வேண்டிய உயர்வான அந்தஸ்து குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படுவதாகவும், சம்புத்த சாசனத்தைப் பாதுகாப்பது வெறும் வார்த்தைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படமால் நடைமுறைச் செயல்களால் அமைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள விகாரைகளில் பல்வேறு தியாகங்களைச் செய்வது, கடினமானதொரு பயணத்தில் ஈடுபட்டுவரும் சம்புத்த சாசனத்தின் காவலர்களாக கருதப்படும் மரியாதைக்குரிய மகா சங்கரத்தினரைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும் எனவும்,அதை நடைமுறை யதார்த்தமாக்குவதற்கு அனைவரும் ஒன்றித்து சமமாக பங்களிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (10) தெரிவித்தார்.

புத்தபெருமான் போதித்த தசராஜ தர்மத்தின் பிரகாரம் அரசாட்சி நடத்தப்பட்டால் நாடும்,இனமும்,மதமும்,சம்புத்த சாசனமும் பாதுகாக்கப்படும் எனவும்,அந்த இலக்கை அடைவதற்கு செயற்படுவது அனைவரின் பொறுப்பாகும் எனவும்,தற்போது பொய் கோலோட்சி உண்மை மூடிமறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

காலி தங்கேதர ஸ்ரீ ஜயவர்தனராம மகா விகாரை, காலி ஜம்புகெட்டிய சிறி சுகதராமய,காலி சாமிவத்த அபிநவரம,துன்போதி விபச்சனா மையம்,ஹக்மன பல்லாவெல தெற்கு பிடல்கமுவ நிக்ரோதாராமய விகாரைகளின் விகாராதிபதி,ஓய்வுபெற்ற பிரதி அதிபரும்,ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முன்னாள் வருகை தரு விரிவுரையாளருமான சாஸ்த்ரபதி பல்லாவெல சுமேதவன்ச தேரருக்கு,காலி மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை பிரிவுகளுக்கான நீதிமன்ற சங்கநாயக்க பதவிக்கான சன்னஸ் பத்திரம் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“மொத்த சனத்தொகையில் 17 சதவீத மக்கள் வறுமையால் பீடிக்கப்பட்டுள்ளனர்.” – எதிர்க்கட்சித் தலைவர்

எமது நாட்டில் இலட்சக்கணக்கான மக்கள் வறுமையால் பீடிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

லிர்னே ஆசியா நிறுவனம் வெளியிட்ட அண்மைய தரவு அறிக்கையை (9) இன்று நாடாளுமன்றத்தில் சமரப்பித்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டிற்குப் பிறகு கிட்டத்தட்ட 40 இலட்சம் பேர்வரை அதாவது மொத்த சனத்தொகையில் 17 சதவீத மக்கள் வறுமையால் பீடிக்கப்பட்டுள்ளனர் எனவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், “40 இலட்சம் பேர் வறுமையில் வாடும் போது, ​நைட்ரஜன் உர மோசடி, மலக்கழிவு உர மோசடி போன்ற மோசடிகள் இடம்பெற்றுள்ளன.

 

இம்மோசடிகளில் ஈடுபட்ட சகலரையும் தகுதி தராதரம் பாராமல் சட்டத்தின் முன் நிறுத்துமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.” என்றார்.

யாழ்ப்பாண விஜயத்தின் போதாவது “பல பெண்களை ஏமாற்றிய மோசடியாளர் ஐக்கிய மக்கள் கட்சியின் மாவட்ட பிரதான அமைப்பாளர் ஜெயந்திரன் “ மீது நடவடிக்கை எடுப்பாரா எதிர்க்கட்சி சஜித்பிரேமதாஸ !

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாளைய தினம் (23.02.2023) வியாழக்கிழமை யாழ்ப்பாணம் உள்ளிட்ட இலங்கையின் வட பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவருடைய யாழ்ப்பாண விஜயத்தின் போது யாழ்மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சீர்கெட்ட நிலைதொடர்பில் கவனஞ்செலுத்துவாரா ..? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும் தன்னுடைய கட்சி விடயத்தையே ஒழுங்காக கொண்டு நடத்த முடியாதவர் எப்படி ஒரு நாட்டை நிர்வகிப்பார்..? தன் கட்சிக்குள் இருக்கும் ஊழல் – போலித்தனமுடையவர்களை இனங்கண்டு அகற்ற முடியாதாவர் எப்படி ஒரு நாட்டின் ஊழல்வாதிகளை இல்லாதொழிப்பார்..? எனவும் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்புள்ள சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் வெற்றிவேலு ஜெயந்திரன் ஒரு பெரும் ஆள்மாறாட்டம் செய்துள்ளதுடன் இளம்பெண்களை ஆசைகாட்டி மோசம் செய்யும் மோசடியாளார் என்பதும் பிரான்ஸில் குற்றவாளியாகத் தண்டனை அனுபவித்துள்ளார் என்பதும் தேசம்நெற் க்கு ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளது.

ஒரு தேசியக் கட்சி, தேசிய சிறுபான்மை இனத்தின் பிரதான அமைப்பாளரை நியமிக்கின்ற போது, அந்நபர் பற்றி எவ்விதமான விசாரணைகளும் ஆய்வுகளும் இல்லாமல் அச்சமூகத்தில் உள்ள ஒரு அயோக்கியரை கலாச்சாரத் தலைநகர் என்று சொல்லப்படுகின்ற யாழ் மாவட்டத்தின் அமைப்பாளராக நியமித்திருப்பது யாழ் மாவட்டத் தமிழர்களை அவமானப்படுத்துகின்ற செயல் என யாழ் கல்வியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வெற்றிவேலு ஜயந்திரனை யாழ் மாவட்ட அமைப்பாளராக நியமித்து சஜித் பிரேமதாஸ, அயோக்கியர் ஒருவரை தங்கள் மாவட்டத்திற்கு பிரதிநிதியாக நியமித்தால் எவ்வாறு தமிழ் மக்களின் வாக்குகளை வெற்றி பெறமுடியும் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

ஜெயந்திரன் ஒரு பொறுக்கியாகவோ ரவுடியாகவோ மட்டும் இருந்திருந்தால் அது இவ்வளவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்காது. ஆனால் ஜெயந்திரன் ஒரு சிவன் ஆலயத்தின் தர்மகர்த்தா, ஒரு தேசியக் கட்சியின் பிரதான மாவட்ட அமைப்பாளர். இந்த லட்சணத்தில் தான் ஆலயங்களும் அரசியல் கட்சிகளும் மக்களை வழிநடத்துகின்றன? எதிர்கால சந்ததிக்கு பாடம் சொல்லிக் கொடுக்கின்றன?

அன்று புலிகளில் இருந்து இன்று சிங்கங்கள் வரை ஜெயந்திரன் போன்றவர்களின் அயோக்கியத்தனத்தை யாரும் கண்டுகொள்வில்லை. இதனால் இவ்வாறான இளம்பெண்கள் ஜெயந்திரன் போன்ற பணமும் செல்வாக்கும் கொண்ட ஆசாமிகளின் முன் விட்டில் பூச்சிகளாக மடிந்து வீழ்கின்றனர். பாரிஸில் இளைத்த குற்றங்களுக்காக சிறைசென்ற ‘செம்மல்’ ‘கம்பிகள் ஊடாக’ என்று தன்னுடைய திருகு தாளங்களை எழுதி வெளியிட்டார். அதில் தன்னுடைய அழகையும் கவர்ச்சியையும் கண்டு இளம்பெண்கள் வீழ்வதாகவும் தன்னுடைய நண்பர்களின் மனைவியருக்கே தன்னில் நட்புப்பொங்கியதாகவும் அந்நூலில் அளந்துள்ளார் ஜெயந்திரன். இனி ‘அந்தப்புரக் கம்பிகள் ஊடாக’ என்று ஒரு புத்தகம் எழுதினாலும் ஆச்சரியம் இல்லை.

மீற்றர் வட்டி கட்டாத அப்பாவிகளை அடித்து அதை வீடியோ எடுத்து போடும் துணிவு யாழில் உள்ள பொறுக்கிகளுக்கும் அயோக்கியர்களுக்கும் வந்திருக்கின்றது. அதைக் தட்டிக் கேட்க அதிகாரம் உள்ளவர்களும், தமிழ் அரசியல் தலைவர்களும் தயாரில்லை. இன்னும் பல பத்து ஜெயந்திரன்கள், இந்த விளிம்புநிலை தமிழ் பெண்குழந்தைகளை வேட்டையாட தொடர்ந்தும் அனுமதிக்கப்படுகின்றார்கள்.

இதில் பெண்ணியம் பேசும் பெண்ணிய புலிகள் சிங்கங்கள் தங்களுக்கு தாங்களே முதுகுசொறிவதோடு நிறுத்திக்கொண்டு விடுகின்றன. இல்லாவிட்டால் தங்களோடு ஒத்தூத ஒருவரை முகநூலில் இழுத்து கையெழுத்துவேட்டை நடத்துவதோடு சரி.

பணம் அரசியல் செய்வதற்கு அவசியமாகிறது. அதனால் ஜெயந்திரன் போன்ற அயோக்கியர்கள் அரசியலுக்குள் உள்வாங்கப்படுகின்றனர். ஜெயந்திரன் போன்றவர்களுக்கு அரசியல் அந்தஸ்தும் கிடைத்த பின் அவர்கள் தங்களிடம் உள்ள பணம், அரசியல், அதிகாரத்தை பயன்படுத்தி இன்னும் இன்னும் அவற்றைப் பெருக்கிக் கொண்டு அதிகார மையங்களாக மாறுகின்றனர். இவர்கள் முன் விட்டில் பூச்சிகளாக வீழும்; இளம்பெண்களைக் காப்பாற்ற வேண்டுமானால் பிரான்ஸ் லாகுர்னே சிவன் கோவிலில் உண்டியலுக்குள்ளும் அரிச்சினை என்ற பெயரிலும் விழும் ஈரோக்கள் நிறுத்தப்பட வேண்டும், மக்கள் லக்ஸ் ஹொட்டலைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி அயோக்கியர்களை பொறுப்பான பதவிகளுக்கு பணத்துக்காக மதுவுக்காக மாதுவுக்காக நியமிப்பதை நிறுத்த வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமல்ல ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சிகளில் இருக்கும் அயோக்கியர்களைக் களை எடுக்க வேண்டும். இதற்கு இவர்கள் தயாரா?

( இந்த பயணத்தின் போது சஜித்பிரேமதாசவை சந்திக்கும் ஊடகவியலாளர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லும் நோக்குடன் தேசம் இணையதளம் இந்த தகவலை மீள பதிவிடுகின்றது.)

தேசத்தின் இது பற்றிய முன்னைய கட்டுரை..!

https://www.thesamnet.co.uk//?p=93631

https://www.thesamnet.co.uk//?p=94055

 

இலங்கையை விட்டு வெளியேறிய மருத்துவர்களை கறுப்புப்பட்டியலில் சேர்க்க தீர்மானம் !

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் சுமார் 300 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இதனால் இலங்கையின் சுகாதாரத் துறை வீழ்ச்சியடையும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சுகாதார அமைச்சின் அனுமதி பெறாவிட்டால் வைத்தியர்களுக்கு விசா வழங்க வேண்டாம் என கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு அமைச்சு ஏற்கனவே அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.

“வெளிநாட்டில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் கூறினார்.

“வெளிநாடுகளுக்குச் செல்லும் மருத்துவர்களுக்கு விடுப்பு அனுமதி உள்ளதா..? என்பதைச் சரிபார்க்க விமான நிலையத்தில் உள்ள குடியேற்ற அதிகாரிகளுக்கும் நாங்கள் தெரிவித்துள்ளோம். அனுமதியின்றி வெளிநாடுகளுக்குச் செல்லும் மருத்துவ அதிகாரிகள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவதுடன், இலங்கை மருத்துவ சபையினால் வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்படும். அவர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டால் அவர்கள் வெளிநாடுகளில் கூட பயிற்சி செய்ய முடியாது” என்று அவர் மேலும் கூறினார்.

கறுப்புப் பட்டியலில் உள்ள மருத்துவர்களின் பட்டியல் அவ்வப்போது வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, அரச மருந்தக சங்க விற்பனை நிலையங்களில் காலாவதியான மருந்துகள் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

“காலாவதியான மருந்துகளின் இருப்புக்களை வழங்க சப்ளையர்கள் மறுத்துவிட்டதாக இந்த விற்பனை நிலையங்கள் எங்களுக்குத் தெரிவித்துள்ளன,” என்று அவர் கூறினார்.

சவாலான பணியாக இருந்தாலும் அத்தியாவசிய மருந்துகளுக்கு விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

நாட்டை நாசமாக்கிவிட்டு “பொருளாதார கொலையாளிகளுக்கு மத்தியில்” என்று புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள் – சஜித் காட்டம் !

பொருளாதார ரீதியாக வங்குரோத்தாக்க முன்நின்ற ராஜபக்சர்களுடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை சூறையாடிய முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் “பொருளாதார கொலையாளிகளுக்கு மத்தியில்” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். மறுபுறம் இந்நாட்டில் ஜனநாயகப் போராட்டத்திற்காக வீதியில் இறங்கிய சங்கைக்குரிய சிறிதம்ம தேரர்,வசந்த முதலிகே ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எனவும், இது ஒரு விசித்திரமான நிலை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தொடம்கஸ்லந்த தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் நேற்று (12) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டைப் பொருளாதார ரீதியாக வங்குரோத்தாக்க முன்நின்ற சில பிரதான தலைவர்களில் முன் நிலையில் இருந்த ஒருவரான நிவார்ட் கப்ரால், எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தானும் தனது கும்பலும் செய்த பொருளாதாரக் குற்றங்களைப் பற்றி புத்தகங்கள் எழுதும்போது, இந்நாட்டை பொருளாதார ரீதியில் வங்குரோத்துச் செய்து பாரிய பொருளாதார குற்றங்களை இழைத்த கும்பலுக்கு எதிராக வீதியில் இறங்கிய சங்கைக்குரிய சிறிதம்ம தேரர்,முதலிகே உள்ளிட்டோரை சிறையில் அடைத்தமை என்னவொரு அநியாயமான செயல் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொருளாதார குற்றத்தைச் செய்த கும்பலே சரி என்றால் சிறையில் இருக்க வேண்டும் எனவும்,ஆனால் பொருளாதாரக் கொலையைத் தடுக்கப் போராடிய குழுவைச் சிறையிலடைக்கும் நிலையே நடந்திருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் தற்போது தேர்தலொன்றையே கோருவதாகவும்,அதனைப் பெறுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி போராடும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அச்சுறுத்தலான நிலையில் சிறுவர் பாதுகாப்பு – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் குழு சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளதாகத் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய அவர்,

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் இந்நாட்டில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக தாம் மிகவும் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என்பதை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக சிறுவர் துஷ்பிரயோகம் உட்பட அனைத்து துஷ்பிரயோகங்களில் இருந்தும் இந்நாட்டு சிறுவர்களை பாதுகாத்து அவர்களுக்கு பாதுகாப்பான நாளைய எதிர்காலத்தை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயற்பட வேண்டிய தேவையுள்ளது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன் பிரகாரம், இதனை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகக் கருதி, அரசாங்கத்திடமிருந்து குறிப்பிட்ட பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்ப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.