ஐக்கிய நாடுகள் சபை

ஐக்கிய நாடுகள் சபை

“இலங்கையிலுள்ள கடுமையான பாதுகாப்புச் சட்டங்களை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.” – ஐ.நா வலியுறுத்தல்!

இலங்கையில் உள்ள கடுமையான பாதுகாப்புச் சட்டங்களை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

பலவீனமான கடன் மற்றும் பொருளாதார நெருக்கடி, இலங்கையில் அடிப்படை பொருளாதார மற்றும் சமூக உரிமைகளுக்கான மக்களின் அணுகலை கடுமையாக தடை செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகவே மீட்புக் கொள்கைகளில் ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய வேண்டும் என்றும் சமூகப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார பின்னடைவுக்கான பிற விடயங்களில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

ஊழல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற அடிப்படை பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்ய வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் கடுமையான பாதுகாப்புச் சட்டங்களை நம்புவதும், சிவில் சமூகம் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மீதான துன்புறுத்தல் மற்றும் கண்காணிப்பு ஆகியவை முடிவுக்கு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நிலைமாறுகால நீதிக்கான உண்மையான மற்றும் விரிவான அணுகுமுறையை ஆதரிக்க தனது அலுவலகம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கூறினார்.

ஐ.நா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத இலங்கை !

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துமாறும், உக்ரைனிலிருந்து ரஷ்ய படைகளை உடனடியாக வெளியேறுமாறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இலங்கை கலந்து கொள்ளவில்லை.

ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி பீற்றர் ராம் சோரும் தனது இலங்கை விஜயத்தின் போது ரஷ்யாவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட இந்த பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு இலங்கையிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அ‍மெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான்,ஜேர்மனி, கனடா உள்ளிட்ட 141 உறுப்பு நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், ரஷ்யா, பெலாரஸ், ‍கொரியா, எரித்திரியா,மாலி, நிகரகுவா, சிரியா ஆகிய 7 உறுப்பு நாடுகள் எதிராகவும் வாக்களித்திருந்தன. இ‍தேவேளை, இலங்கை, சீனா, பாகிஸ்தான், கியூபா  உள்ளிட்ட 32 உறுப்பு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

“ஒவ்வொரு 11 நிமிடமும் ஒரு பெண் அல்லது சிறுமி தனது நெருங்கிய உறவினராலோ அல்லது காதலனாலோ கொல்லப்படுகின்றனர்.” – ஐக்கிய நாடுகள் சபை

சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் நவம்பர் 25 அன்று கடைபிடிக்கப்படுகிறது.

“ஒவ்வொரு 11 நிமிடமும் ஒரு பெண் அல்லது சிறுமி தனது நெருங்கிய உறவினராலோ அல்லது தனது காதலனாலோ கொல்லப்படுகின்றனர்.” என ஐ.நா தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ஆற்றிய உரையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை என்பது உலகளவில் மிகவும் பரவலாக நிகழும் மனித உரிமை மீறலாகும். ஒவ்வொரு 11 நிமிடமும் ஒரு பெண் அல்லது சிறுமி தனது நெருங்கிய உறவினராலோ அல்லது தனது காதலனாலோ கொல்லப்படுகின்றனர்.

கொரோனா தொற்றிலிருந்து பொருளாதாரக் கொந்தளிப்பு வரை தவிர்க்க முடியாமல் இன்னும் அதிகமான உடலாலும் மற்றும் மனதாலும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். உலக நாடுகளின் அரசுகள், பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க தேசிய அளவில் செயல் திட்டத்தை வகுத்து, நடைமுறைப் படுத்த வேண்டும். பெண்களின் உரிமைகளுக்கு ஆதரவாக நின்று குரல் எழுப்புங்கள் என தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கையை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாறும் !

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 206 சதுர கிலோமீற்றருக்கும் அதிகமான நிலப்பரப்பில் இருந்து எதிர்ப்புக் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பொதுமக்களின் நலனுக்காக விடுவிக்கப்பட்டுள்ளன என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள மீள்குடியேற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி கிட்டத்தட்ட 15 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட உள்ளதாகவும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கண்ணிவெடி தடை ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையுடன் கைச்சாத்திட்டுள்ளது. அந்த சாசனத்தின்படி, ஜூன் 2027க்குள் நாட்டை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாற்ற வேண்டும்.

கண்ணிவெடிகளை அகற்றும் அரசாங்கத்தின் அவசர வேலைத்திட்டத்தின் பிரகாரம் 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கையை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாற்ற முடியும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அதன் தொடக்கத்தில் இருந்து, தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையம் கண்ணிவெடி அகற்றும் திட்டத்தை பல்வேறு அமைச்சுக்களின் கீழ் செயல்படுத்தி தற்போது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் செயற்பட்டு வருகிறது.

2002 ஆம் ஆண்டு தொடக்கம் கண்ணிவெடி அகற்றும் திட்டம் இலங்கை பூராக இயங்கி வருகிறது, 2010 இல் ´தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையம்´ நிறுவப்பட்டது. இது கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களை ஒருங்கிணைத்து வழிநடத்துகிறது. மற்றும் கண்காணிக்கிறது. இதற்கு இலங்கை இராணுவம் நேரடியாகப் பங்களிக்கிறது.

தற்போது இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவுக்கு மேலதிகமாக, இரண்டு சர்வதேச அரச சார்பற்ற கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களும், இரண்டு உள்ளூர் அரச சார்பற்ற கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களும் இந்நாட்டில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான நிலக் கண்ணிவெடி அகற்றும் பிரிவுக்கு அரசாங்கம் நிதியுதவி வழங்குகிறது.

மற்ற நான்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சர்வதேச உதவி நிறுவனங்களிடமிருந்து ஆண்டுதோறும் 17.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுகின்றன.

இதுவரை 870,412 சாதாரண கண்ணிவெடிகளும், 2,169 இராணுவத் தாங்கி எதிர்ப்பு கண்ணிவெடிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன், வெடிக்காத 365,403 இராணுவ வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், 1,184,823 தோட்டாக்கள் மற்றும் ஏனைய சிறிய ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மீள்குடியேற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கண்டெடுக்கப்படும் நிலக் கண்ணிவெடிகள், வெடிமருந்துகள் மற்றும் ஏனைய இராணுவ வெடி பொருட்கள் பொதுமக்களின் கைகளில் சிக்குவதைத் தடுப்பதற்காக இராணுவத்தின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினரால் தினந்தோறும் வெடிக்கச் செய்து அழிக்கப்படுகின்றன.

நிலக் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கையின் போது வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வசிக்கும் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, 12,000 க்கும் மேற்பட்டவர்கள் நிலத்தை அகற்றும் செயல்முறையின் மூலம் வாழ்வாதாரத்தை ஈட்ட முடிந்தது.

ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைத்து செயற்பட்டவர்களுக்கு இலங்கையில் பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல் !

மனித உரிமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைத்ததற்காக இலங்கை உட்பட 42 நாடுகளில் உள்ள மக்கள் பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உதவி பொதுச் செயலாளர் இல்சே பிராண்ட்ஸ் கெஹ்ரிஸின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கியமாக மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் உறுப்பினர்கள் பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல்களை எவ்வாறு சந்தித்தார்கள் என்பது குறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுத்து வைத்தல், கட்டுப்படுத்தப்பட்ட சட்டத்தால் இலக்கு வைக்கப்படல் மற்றும் இணையங்கள் மூலம் அவர்கள் கண்காணிக்கப்பட்டனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அத்துமீறல்கள் அனைத்தும் 2021 மே 1ஆம் திகதி முதல் 2022 ஏப்ரல் 30ஆம் திகதி வரையில் இடம்பெற்றுள்ளன என்றும் உதவி பொதுச்செயலாளரின் வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடுகள் காரணமாக, குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளில் உள்ளவர்கள் ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைப்பதைத் தவிர்த்தனர் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உதவி பொதுச்செயலாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

‘இலங்கையில் பத்தில் மூன்று பேர் உணவுப் பாதுகாப்பில்லை.”- ஐக்கிய நாடுகள் சபை விசனம் !

இலங்கையில் பத்தில் மூன்று பேர் உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் உணவுத் திட்டத்தின் செயலாளர் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை எதிர்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடியால் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் குறைபாடுகள் உள்ளவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் நடுத்தர வருமான நாடுகளை விட 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உணவுப் பணவீக்கம் 90 சதவீதத்தை எட்டியுள்ளது. இது வாழ்வாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் திட்டங்களை பாதித்துள்ளது. இதனால் மில்லியன் கணக்கான மக்கள் உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்படுகின்றனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம், கிட்டத்தட்ட 6.3 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பற்றவர்களாகவும் உதவி தேவைப்படுபவர்களாகவும் இருப்பதாகவும் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் மக்களுக்கு அவசர உணவு உதவி தேவைப்படுவதாகவும் குறிப்பிடுகிறது.

“உலக மக்களின் நலனுக்காக போரை முடித்துக் கொள்ளுங்கள்.”- ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தல் !

ஐக்கிய நாடுகள் சபையும், பல்வேறு நாடுகளும் உக்ரைனில் ரஷ்யாவின் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

சீனா, அமெரிக்கா, அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட பெரும்பாலான பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் பல மாதங்களாக நீடித்து வரும் போருக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து  ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியதாவது:-

உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு அதன் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை மீறுவதாகும். உக்ரைன், ரஷியா மக்களுக்கு மட்டுமல்லாமல் உலக மக்களின் நலனுக்காக போர் முடிவுக்கு வர வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.

“தமிழ் மக்களுக்கு ஐ.நா. நீதி வழங்கியே தீரும்.” – மாவை சேனாதிராஜா

போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஐ.நா. நீதி வழங்கியே தீரும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

போர்க்குற்றம் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய நாடாக இலங்கை இருக்கின்றபோதும் அதனைப் பெரிதுபடுத்தாமல் அரசு இருக்கின்றது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

ஐ.நா. மனித உரிமைகள் அமர்வு தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் அமர்வு ஆரம்பிக்கப்பட்டது. ஏற்கனவே இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வாய்மூல அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

மார்ச் 03 ஆம் திகதி மீண்டும் நடைபெற்ற அமர்வில் இலங்கை பற்றியதான எழுத்து மூலமான அறிக்கையை அவர் சமர்ப்பித்த போதிலும், அதற்கு எந்தவொரு பதிலும் அளிக்காமல் பொறுப்பற்ற முறையில் இலங்கை அரசு நடந்தது என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த அமர்வில் பங்கேற்ற உறுப்பு நாடுகளும் தங்களின் முன்னேற்றகரமான கருத்துக்களை தமது தரப்பிலிருந்து முன்வைத்தனர். இதன்படி இந்தியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற பல நாடுகள் முன்னேற்றகரமான கருத்துக்களைத் தெரிவித்திருந்தன.

சோமாலியாவில் உணவு , நீரின்றி தவிக்கும் 20 இலட்சம் மக்கள்.” – ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !

சோமாலியாவில் 20 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் போதிய உணவு மற்றும் குடிநீரின்றி தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. சோமாலியாவில் தொடர்ந்து நான்காவது பருவமாக, இந்த ஆண்டும் போதிய அளவுக்கு மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறவில்லை என அந்த நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அங்குள்ள நீர் நிலைகளில் அதிவேகமாக நீர் குறைந்து வறட்சி அதிகரித்து வருகிறது.

சுமார் ஒரு இலட்சம் பேர் உணவு, குடிநீர், தங்கள் கால்நடைகளுக்கான உணவு ஆகியவை இல்லாமல் இருப்பிடங்களை விட்டு வெளியேறி உள்ளனர்.

அடுத்த ஆண்டு, சுமார் 80 லட்சம் பேர் உணவுப் பற்றாக்குறை பிரச்சனையை எதிர்கொள்ளலாம் என ஐக்கிய நாடுகள் சபை எதிர்வு கூறியுள்ளது. சோமாலியாவில் கடந்த மூன்று தசாப்தங்களாக உள்நாட்டு யுத்தங்கள் இடம்பெற்று வருகின்றன.

அத்துடன் கடுமையான வறட்சி, வெள்ளம், பூச்சிகள் பயிரை அழிப்பது போன்ற பிரச்சனைகளையும் சோமாலிய மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

லெபனானுக்கு உதவிக்கரம் நீட்டும்  ஐக்கிய நாடுகள் சபை !

பெய்ரூட் வெடி விபத்து காரணமாக லெபனானில் ஏற்படும் உணவு பற்றாகுறையை தவிர்க்கும் பொருட்டும் பல டன் மதிப்பிலான தானியங்களை ஐக்கிய நாடுகள் சபை அனுப்ப உள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் சுமார் 6 ஆண்டுகளாக வைக்கப்பட்ட 2,750 டன் மதிப்பிலான அமோனியம் நைட்ரேட் மருந்து வெடித்தது. இந்த விபத்தில் 200-க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

மேலும், பெய்ரூட் வெடி விபத்தில், 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வீடுகளை இழந்துள்ளனர். தற்போது இவர்கள் அனைவரும் விடுதிகள் மற்றும் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர். உலக நாடுகளையே இந்த பெய்ரூட் விபத்து அதிர்ச்சியடைய செய்தது.

இந்த நிலையில் பெய்ரூட் வெடி விபத்தில் அங்கிருந்த தானிய குவியல்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. எனவே லெபனானில் ஏற்படும் உணவு தட்டுப்பாட்டை தவிர்க்கும் பொருட்டு 50,000 டன் எடையையுடைய தானியங்களை ஐக்கிய நாடுகள் சபை வழங்க உள்ளது,

இதுகுறித்து ஐ.நா.வின் மற்றொரு அமைப்பான மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு கூறும்போது,” லெபனானுக்கு மூன்று மாதங்களுக்கு போதுமான 50,000 டன் எடை கொண்ட தனியங்களை அனுப்ப இருக்கிறோம். இதன் முதல் கட்டமாக 17,000 டன் எடைக் கொண்ட உணவு பொருட்கள் 10 நாட்களில் சென்றடைய உள்ளன” என்று இந்த அறிகடகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பெய்ரூட் வெடி விபத்துக்கு பொறுப்பேற்று லெபனான் அரசு பதவி விலகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே லெபனான் பொருளாதார பற்றாக்குறையை சந்தித்து வந்தது. இந்த நிலையில் பெய்ரூட்டில் ஏற்பட்ட இந்த வெடி விபத்து லெபனான் பொருளாதாரத்தை மேலும் சரித்துள்ளது.