கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த்

கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த்

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி !

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து நாட்டில் பாடசாலை அப்பியாசப்புத்தகம் தொடங்கி பாடசாலை பொருட்கள் அனைத்தினதும் விலைகள் இரட்டிப்பானது. இந்தநிலையில் பல பாடசாலை மாணவர்கள் பாடசாலை பொருட்களை வாங்கமுடியாத சூழல் ஏற்பட்டிருந்ததது.

இந்த நிலையில் , பாடசாலை மாணவர்களுக்கு 30 சதவீத சலுகையின் அடிப்படையில் பயிற்சி புத்தகங்களை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அரசாங்க அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தினால் அச்சிடப்பட்ட பயிற்சிப் புத்தகங்களை சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக அடுத்த வாரம் முதல் பாடசாலை மாணவர்கள் கொள்வனவு செய்ய முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தரமான கல்வி வாய்ப்புகள் அனைத்து பிள்ளைகளுக்கும் பாடசாலை முறை ஊடாக வழங்க வேண்டும் – கல்வி அமைச்சர்

வெற்றிகரமான மனித வளத்தை உருவாக்குவதற்கு தரமான கல்வி வாய்ப்புகளை அனைத்து பிள்ளைகளுக்கும் பாடசாலை முறை ஊடாக வழங்க வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்

எதிர்காலத்தில் பாடசாலைகளை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்துவது இலகுபடுத்தப்படும்; ஆரம்ப, கனிஷ்ட இரண்டாம் நிலை மற்றும் சிரேஷ்டஇரண்டாம் நிலை மற்றும் 8,000 பட்டதாரிகள் நிதி நிர்வாகத்திற்காக வைக்கப்படுவார்கள்.

தற்போதுள்ள 100 கல்வி வலயங்கள் 120 ஆக அதிகரிக்கப்படும் என்றும் ஆசிரியர்களுக்கான சேவை பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உலகில் பல அபிவிருத்தியடைந்த நாடுகளில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள STEM கல்வி (விஞ்ஞானம், தொழிநுட்பம், பொறியியல், கணிதம்) நாட்டின் கல்வி முறையில் பிரபல்யப்படுத்தப்படும் அதேவேளை தேசிய கல்வி நிறுவகம் ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டங்களை வழங்கும் நிறுவனமாக.அபிவிருத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார மற்றும் சமூக சவால்களை எதிர்கொள்ள கல்வி சீர்திருத்தங்கள் மாத்திரம் போதாது என்றும், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்வி நிர்வாக அதிகாரிகள் உட்பட அனைத்து பங்குதாரர்களிடமிருந்தும் செயலூக்கமான பங்களிப்பை எதிர்பார்க்கும் அதே வேளையில் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மத அடிப்படைவாதம் கொண்ட புத்தகங்களை விநியோகிக்கும் கல்வி அமைச்சர்..? – அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த விளக்கம் !

2022 ஆம் ஆண்டு இஸ்லாம் பாடத்துடன் தொடர்புடைய திருத்தப்பட்ட பாடப்புத்தகங்கள், தற்போது தரம் 6 முதல் 11 வரையிலான மாணவர்களுக்கு விநியோகிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நேற்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தப் பாடப்புத்தகங்களில் உள்ள சில விடயங்கள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட விசேட குழு இவ்விடயங்களை ஆராய்ந்து, உரிய திருத்தங்களை மேற்கொண்டு அப்புத்தகங்களை புதிதாக அச்சிட்டுள்ளது.

எவ்வாறாயினும், சில இணையத்தளங்களில் மத அடிப்படைவாதம் கொண்ட புத்தகங்களை விநியோகிப்பதாக தன் மீது குற்றம் சுமத்தப்படுவதாகவும், இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்றும் கல்வி அமைச்சர் வலியுறுத்தினார்.

´அனைத்து மதத்தினரினதும் உடன்பாட்டுடன் இந்தப் புத்தகங்கள் விநியோகிக்கப்படுகின்றன. எல்லா மாணவர்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே நான் இதைச் செய்தேன். நான் தவறாக ஏதும் செய்யவில்லை. அந்த மாணவர்கள் எதிர்வரும் மே மாதம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். ஒவ்வொரு மாணவர்களுக்கும் சமமான வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும். இந்த இணையத்தளம் பொய்ப் பிரச்சாரங்களை பரப்பி வருகிறது. இதனை நிறுத்தாவிடின் சிறப்புரிமை பிரச்சினை முன்னெடுக்கப்படும்´ என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டு முதல் ஆறுவயதிலிருந்தே ஆங்கிலக்கல்வி – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

முதலாவது தரத்திலிருந்து பிள்ளைகள் மத்தியில் ஆங்கிலம் பேசும் பழக்கத்தை பலப்படுத்த 2023ஆம் ஆண்டு முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இதற்கமைய அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரச பாடசாலைகளின் முதலாம் மற்றும் இரண்டாம் தரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 13,500 ஆசிரியர்களை நவம்பர் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் பயிற்றுவிப்பாளர்களாகப் பயிற்சியளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்காலத் தேவைக்கு ஏற்ற வகையில் பாடசாலை மாணவர்களுக்கு ஆங்கில மொழியைக் கற்பிப்பதற்கு முன்னுரிமை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார விடுத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் அண்மையில் (08) நடைபெற்ற கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலேயே இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

ஆங்கில மொழிமூலப் பாடப்புத்தகங்களில் உள்ள இலக்கணப் பிழைகள் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், அவ்வாறான இலக்கணப் பிழைகள் உள்ளதா என்பதைக் கண்டறியுமாறு தேசிய கல்வி நிறுவகத்துக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

அத்துடன் இலங்கையிலுள்ள தமிழ் மொழிமூலப் பாடசாலைகளில் உள்ள பிள்ளைகள் விரும்பினால் சிங்கள மொழிமூலத்தில் கல்வி கற்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் இங்கு பரிசீலிக்கப்பட்டது. குறிப்பாக சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் உள்ள தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் உள்ள பிள்ளைகள் இவ்வாறு சிங்கள மொழி மூலம் கற்பதில் ஆர்வம் காட்டுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

தற்பொழுது பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருப்பதாகவும், இதனைத் தடுப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கருத்துத் தெரிவித்ததுடன், இது தொடர்பில் ஏற்கனவே நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் பதில் வழங்கினார்.

சில பாடநெறிகளை ஆங்கிலத்தில் மட்டும் கற்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், தற்போது கலைப் பீடங்களில் கூட ஆங்கிலத்தில் கற்கைகள் நடத்தப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கற்பிக்கக் கூடிய ஆசிரியர்கள் தேவை எனப் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பு விஷாகா கல்லூரியின் அதிபர் நியமனத்தில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் கவனம் செலுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே விடுத்த கோரிக்கை குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அதிபர் ஆட்சேர்ப்புக்கான நடைமுறை மற்றும் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தொடர்பில் அதிகாரிகள் விபரங்களை வழங்கினர்.

அத்துடன், சியனே கல்வியியல் பீடத்துக்குச் சொந்தமான காணியை மே.மா/கம்/வித்யாலோக மகா வித்தியாலயத்தின் விளையாட்டு நடவடிக்கைகளுக்காகப் பெற்றுக்கொடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் உபுல் மகேந்திர ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையும் இங்கு பரிசீலிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் இராஜாங்க கல்வி அமைச்சர் சுரேன் ராகவன், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். மேலும், கல்வி அமைச்சின் செயலாளர் ஹேமந்த யு. பிரேமதிலக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, தேசிய கல்வி நிறுவகப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன மற்றும் அதிகாரிகள் பலரும் குழுவில் கலந்துகொண்டனர்.

“அனைத்து ஆசிரியர்களும் தொழில்நுட்பத்தில் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.” – கல்வி அமைச்சர்

யுனெஸ்கோவின் சமீபத்திய அறிக்கைகளுக்கு அப்பாற்பட்ட கல்வி மாற்றத்தை நோக்கி இலங்கை செல்ல வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதன்படி அடுத்த வருடம் 10 ஆம் வகுப்பில் செயற்கை நுண்ணறிவு கற்பித்தல் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

அனைத்து ஆசிரியர்களும் தொழில்நுட்பத்தில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். குறிப்பாக நகர்ப்புற மற்றும் அரை நகர்ப்புறங்களில் பல்வேறு சமூக நடவடிக்கைகளில் இருந்து குழந்தைகள் மற்றும் இளைஞர்களை பாதுகாப்பது சவாலாக உள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி, சுகாதாரமற்ற உணவுப் பொருட்களை மாணவர்கள் பாடசாலைக்கு கொண்டு வருவது போன்ற பல்வேறு பழக்கவழக்கங்களையும் மரபுகளையும் தடுப்பதற்காக கொழும்பில் உள்ள 144 பாடசாலைகளிலுமுள்ள ஆசிரியர்களின் பங்கேற்புடன் செயலமர்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆசிரியர்கள் ஆலோசகர்களாக இணைத்துக் கொள்ளப்படுவர் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

போதைப்பொருள் பாவனை தொடர்பில் கைது செய்யப்படுவோரில் 25 சதவீதம் பேர் மாணவர்கள் – பகல் கனவு கண்டுகொண்டிருக்கும் கல்வி அமைச்சரும் ஆசிரியர்களும் !

இலங்கையில்  போதைப்பொருள் பாவைனை தொடர்பான அறிக்கைகள் மற்றும் தரவுகளின் படி “ போதைப்பொருள் பாவனை தொடர்பில் கைது செய்யப்படுவோரில் பெரும்பாலானோர் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களே எனவும் அவர்களில் 20 அல்லது 25 சதவீதம் பேர் பாடசாலை மாணவர்களாாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.” எனவும் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த நிலை வட-கிழக்கில் இன்னமும் மோசமடைந்துள்ளது. பாராளுமன்ற அமர்வுகளில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட இது தொடர்பான பதற்றமான நிலை தொடர்பில் பாராளுமன்றில் பதிவு செய்திருந்தனர்.

போதைப்பொருள் ஒழிப்புக்கான  முறையான தீர்வுத்திட்டம் ஒன்றை கல்வி அமைச்சு முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில் இந்த போதைப்பொருள் ஒழிப்புக்கான கல்வி அமைச்சின் நடவடிக்கைகள் என்ன என்ற கேள்வி பாராளுமன்றின் ஏனைய உறுப்பினர்களாலும் அதிகமாக  விமர்சிக்கப்பட்டன. அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் இது தொடர்பான கேள்வியை கல்வி அமைச்சரிடம்  எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்து கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த உரையாற்றிய போது

“பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளை பரிசோதிக்கும் நடைமுறை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. மேலும் எதிர்காலத்தில் இது தொடர்பான சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்படும் எனவும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் நுட்பமான வழிகளில் பல்வேறு போதைப் பொருட்கள் பரிமாற்றப்படுகின்றன எனவும்  இது தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும்   கூறியிருந்தார்.  இதனை  தற்காலிகமான – வழமையான அமைச்சர்கள் வழங்கும் சராசரியான உறுதிப்பாடற்ற பதிலாகவே எடுத்துக்கொளள முடியும். தவிர இது பற்றி எந்த முன்னேற்றமும் ஏற்படப்போதில்லை என்பதையும் கல்வி அமைச்சரின் பதில் மூலமாக உணர முடிகிறது.

 

ஒப்பீட்டளவில் தெற்கை விட வட-கிழக்கில் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஐஸ்போதைப்பொருள், ஊசி போதப்பொருள் பாவனை அசுர வளர்ச்சி கண்டு வருவதுடன் இதன் விளைவாக வாள்வெட்டு மற்றும் வன்முறை கலாச்சாரம் ஒன்றும் நமது பகுதிகளில்  மேலோங்கிக்கொண்டிருக்கின்றது. கடந்து முடிந்த குறுகிய கால இடைவெளியில் ஊசி போதைப்பொருள் பாவனையால் யாழ்ப்பாணத்தில் ஐந்து  இளைஞர்கள் வரையில்  உயிரிழந்துள்ளமையும் இங்கு நோக்கப்பட வேண்டியது. இது அண்மைய காலத்தில் போதைப்பொருள் பாவனையின் தீவிர தன்மையை நன்கு தெளிவுபடுத்துகிறது.

இலங்கையின் குறிப்பாக வட-கிழக்கு நகர்ப்புற இளைஞர்களிடையேயும் – மாணவர்கள் மத்தியிலும் தூள், ஊசிபோதை, ஐஸ் போதை பொருள் என இந்த போதைப்பொருள் சர்வசாதாரணமான விடயமாக மாறிக்கொண்டிருக்கின்ற நிலையில் இதனை தடுப்பதற்கான அடிப்படை  நடவடிக்கைகளில் கூட கல்வி அமைச்சோ – அரசாங்கமோ இறங்கவில்லை என்பதே ஆகக்கவலையான உண்மை.

பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளில் போதைப்பொருள் உள்ளனவா என சோதிப்பதை விட முக்கியமானது போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதாகும். இதற்கான எந்த  நடவடிக்கைகளையும் கல்வி அமைச்சு முன்னெடுக்க முனைவதாக தெரியவில்லை. மாணவர்கள தனதுகட்டுப்பாட்டிலுள்ள பாடசாலை நேரங்களில் எந்த பிழையும் நடந்து விடக்கூடாது என்பதில் மட்டுமே கல்வி அமைச்சர் கவலைப்படுவதாகவே அமைச்சரின் மேற்சொன்ன  கருத்தை எடுத்துக்கொள்ள முடிகிறது.

பாடசாலைகளில் போதைப்பொருள் கிடைக்காவிட்டால் என்ன மாணவர்களுக்கு பாடசாலைகளுக்கு வெளியில் கிடைக்க தான் போகிறது. இதற்கான தீர்வு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்கி வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருட்கள் இலங்கையினுள் வருவதை தடுப்பது மட்டுமேயாகும் .

போதைப்பொருள் பாவனை கல்வி அமைச்சு மட்டுமே கவனம் செலுத்தி கட்டுப்படுத்துகின்ற விடயமல்ல என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். பாதுகாப்பு துறையினர் மிக விழிப்புடன் செயலாற்ற வேண்டும்.

தென்னிலங்கை பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அடுத்தடுத்து கைது என்ற தகவல்கள் வெளியாகும். ஆனால் வட – கிழக்கில் அவ்வாறான செய்திகளை பார்ப்பதே அபூர்வம். போதைப்பொருள் மிதந்து வந்ததது – போதைப்பொருள் மீட்பு போன்ற செய்திகள் கிடைக்குமே தவிர கடத்தலில் ஈடுபட்டவர்கள்- விற்பனையாளர்கள் கைது என்ற செய்திகளை பார்ப்பதே அபூர்வமானது. திட்டமிட்ட வகையில் நமது பகுதி இளைஞர்களின் கவனம் வேறு திசைக்கு மாற்றப்படுகிறதா என்ற அச்சத்தையும் – சந்தேகத்தையும் இது ஏற்படுத்துகிறது. போதைப்பொருள் மாபியாவுக்கு வாலாட்டுவோராக வட – கிழக்கு காவல்துறை அதிகாரிகள் செயற்படாது எதிர்கால தலைமுறையை பாதுகாக்க இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும்.

இது தவிர பெற்றோர்களிடமும் – கிராமத்து இளைஞர்களிடமும் சமூக அமைப்புக்கள் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான இயக்கங்களை – கருத்துக்களை பரப்ப முன்வர வேண்டும். பெற்றோர் தமது பிள்ளைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இப்படியாக போதைப்பொருள் பாவனையற்ற சமூகத்தை உருவாக்க கல்வி அமைச்சு மட்டுமே நினைத்து முடியாது ஒட்டுமொத்த சமூகமுமே பாடுபடவேண்டிய தேவையுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு இந்த மாற்றத்துக்கான அழுத்தத்தையே கல்வி அமைச்சர் கொடுக்க வேண்டும். அதுவே காலத்தின் தேவையும் கூட. ஒவ்வொரு பாடசாலைகளும் – ஒவ்வொரு ஆசிரியர்களும் – ஒவ்வொரு பிள்ளைகளின் பெற்றோரும் இதன் தேவையை உணர்ந்து போதைப்பொருள் அற்ற எதிர்காலத்தை உருவாக்க முன்வரவேண்டும்.

பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக வெளிநாடுகளுடன் பேச்சுவார்த்தை – கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த்

பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்.

பிள்ளைகளின் போஷாக்கு நிலையை உயர்த்துவது தொடர்பில், தான் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் கலந்துரையாடியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் நேற்று (01) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாடசாலை மதிய உணவின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்க அரசாங்கம் உலர் உணவுகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. அமெரிக்காவினால் வழங்கப்பட்ட இந்த உணவுப்பொருட்கள் தொடர்பில் நேற்று சில ஊடகங்கள் தெரிவித்துள்ள உண்மைக்குப் புறம்பான விடயங்கள் குறித்து அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

´பிள்ளைகள் பாடசாலைக்கு வரும்போது, அவர்களுக்கு சரியான உணவு கிடைக்கவில்லை என்றால், அது ஒரு பிரச்சனை. பிச்சை எடுத்தாவது இந்நாட்டின் குழந்தைகளுக்கு உணவு வழங்க முடியுமானால் அதை நான் செய்வேன். சில பாடசாலைகளில் குழந்தைகளுக்கு இந்த மதிய உணவு வழங்கும் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. ஆனால் இத்திட்டம் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்.´ என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.