கோட்டாபய ராஜபக்ச.

கோட்டாபய ராஜபக்ச.

“எதிர்காலத்தில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மீது மக்கள் கல்லெறிவார்கள்..” – இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க

“எதிர்காலத்தில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மீது மக்கள் கல்லெறிவார்கள்..” என இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டை அரசியல் ரீதியாக அபிவிருத்தி செய்வதில் அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச  தனிமையான பயணத்தை மேற்கொள்வார் என்றால் அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இணைய வழியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்த போது ,

நாட்டின் அபிவிருத்திக்கு அமைச்சரவையை கோட்டாபய நியமிக்க வேண்டும். அரசாங்கத்தின் உயர் பதவிகளுக்கு சரியான அரச உத்தியோகத்தர்களை நியமித்து அமைச்சரவை மற்றும் அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அரசதலைவர் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

ஐந்தாண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்ய முடியாமல் அரசாங்கம், வீழ்ச்சியடையும் என நம்புகிறேன். ஐந்து வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டியிருக்கும்.

அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகளுக்கு முகங்கொடுத்து எதிர்காலத்தில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மக்கள் கல்லெறிவார்கள்.

இதேவேளை, எல்என்ஜி விநியோகம் மற்றும் எல்என்ஜி மின் உற்பத்தி நிலையங்களை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றுவதை தனிப்பட்ட ரீதியில் எதிர்ப்பதாக இராஜாங்க அமைச்சர் விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

“அரசின் தவறான தீர்மானங்களுக்கு துணை போக முடியாது.” – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

அரசைப் பலவீனப்படுத்தும் நோக்கம் கிடையாது. ஆனால், அதற்காகத் தவறான தீர்மானங்களுக்குத் துணைபோகவும் முடியாது.” என  நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் வகையிலான ஒப்பந்தம் தொடர்பில் உயர்நீதிமன்றம் சிறந்த தீர்வை வழங்கும் என முழுமையாக எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எமது தலைமையிலான அரசு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு முரணாகச் செயற்படுகின்றமை கவலைக்குரியது. கொள்கைக்கு எதிரான தீர்மானங்கள், அரசு தொடர்பில் மக்களின் நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியையும், அரசின் கொள்கையையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்குண்டு.

யுகதனவி மின்நிலையம் இயற்கை எரிவாயு விநியோகத்தின் ஊடாக செயற்பட வேண்டும் என்பது அவசியமானதாகும். இயற்கை எரிவாயு விநியோக நிறுவனத்துக்கும், மின்சாரத்துறை அமைச்சுக்கும் இடையில் சாதாரண ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். அதனை விடுத்து எரிவாயு விநியோகத்தின் உரிமையைப் பிற நாட்டின் தனியார் நிறுவனத்துக்கு ஏகபோகமாக விட்டுக் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அமெரிக்க நிறுவனம் இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஏகபோக உரிமையைத் தனதாக்குவதன் ஊடாக எதிர்காலத்தில் தோற்றம் பெறும் சவால்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதன் காரணமாகவே அமைச்சரவையின் மூன்று பிரதான உறுப்பினர்கள் அதற்குக் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றோம்.

யுகதனவி விவகாரத்துக்கு சமூகத்தின் மத்தியில் பல எதிர்ப்புக்கள் தோற்றம் பெற்றுள்ளன. கைச்சாத்திடப்பட்டுள்ள யுகதனவி ஒப்பந்தத்துக்கு எதிராக பல தரப்பினர் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்கள்.” என அவர் கூறியுள்ளார்.

“ராஜபக்ஷக்களுக்கு இனி என்ன நடக்கப் போகின்றது என்பதை எம்மால் எதிர்வுகூற முடியாமல் உள்ளது.” – இரா.சம்பந்தன்

“ராஜபக்ஷக்களுக்கு இனி என்ன நடக்கப் போகின்றது என்பதை எம்மால் எதிர்வுகூற முடியாமல் உள்ளது.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

கொழும்பில் அரசுக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற மாபெரும் போராட்டம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஆட்சியில் அமர்த்திய சிங்கள மக்களாலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு விரட்டியடிக்கப்படும் காலம் உருவாகுகின்றது. கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சியின் ஆதரவாளர்கள் மட்டும் கலந்துகொள்ளவில்லை. அரசை ஆட்சிக்குக் கொண்டு வந்த சிங்கள மக்களும் பங்கேற்றுள்ளனர்.

ராஜபக்ச அரசை வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில் சிங்கள மக்கள் மட்டுமல்ல பௌத்த தேரர்களும் கைகோர்த்துள்ளனர். இனி ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு அரசு வந்துள்ளது. இனி என்ன நடக்கப் போகின்றது என்பதை எம்மால் எதிர்வுகூற முடியாமல் உள்ளது.

நாடெங்கும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் விஸ்வரூபம் அடைந்து வருகின்றன. வீதிகளில் மக்கள் அலை மோதுகின்றது. இந்த நிலைமைக்கு அரசே முழுப்பொறுப்பு.

அடக்குமுறைகளால் மக்களை ஆள முற்பட்டமையாலேயே அரசுக்கு இன்று தலைகுனியும் நிலை ஏற்பட்டுள்ளது”  என்றார்.

“மக்களின் துயர்துடைக்கவே கோட்டாபய ராஜபக்ச ஆட்சி பீடமேறினார்.” – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு, மக்களின் துயர் துடைக்கவே ஆட்சிப்பீடம் ஏறியது. மக்களின் வயிற்றில் அடிப்பது இந்த அரசின் நோக்கமல்ல.” என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலையில், மக்கள் மீது சுமையை இறக்க வேண்டாம் என நாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, பஸ் உரிமையாளர்கள் பஸ் கட்டணங்களை அதிகரிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படுமா என்று கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-

நாளுக்கு நாள் எரிபொருள் விலை அதிகரிக்குமானால் அது பாரிய பிரச்சினையாக மாறிவிடும். டீசலின் விலையை  அதிகரித்தால் பஸ் கட்டணங்களை அதிகரிக்க நேரிடும். எரிபொருள் விலையை அதிகரிப்பது அவசியம் என்றாலும் தற்போதைய நிலையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படக்கூடாது.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டால், பஸ் கட்டணங்கள் தொடர்பான பிரச்சினை ஏற்படும். கடந்த காலங்களில் பஸ் கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் என்று பஸ் உரிமையாளர்கள் எம்மிடம் கோரிக்கை விடுத்தனர். எனினும், நாட்டின் தற்போதைய நிலையில், மக்கள் மீது சுமையை இறக்க வேண்டாம் என நாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவர்கள் பஸ் கட்டணங்களை அதிகரிக்கவில்லை.

ஒட்டுமொத்த நாட்டு மக்களின் துயர் துடைக்கவே நாம் ஆட்சிப்பீடம் ஏறினோம். மக்களின் வயிற்றில் அடிப்பது எமது நோக்கமல்ல. எதிரணியினரின் ஆசைகள் நிறைவேற நாம் ஒருபோதும் இடமளியோம்- என்றார்.

“ஐ.நாவில் ஜனாதிபதி கூறிய விடயங்களை தமிழ்தேசிய கூட்டமைப்பு வரவேற்கிறது.” – நாடாளுமன்றில் எம்.ஏ.சுமந்திரன் !

“வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் புலம்பெயர்ந்தோருடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் ஜனாதிபதி அறிவித்திருந்த நிலையில் அதனையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டுடன் செயற்படுவதே தற்போதிருக்கும் பிரச்சினை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார நாடாளுமன்றில் முன்வைத்த ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின் போது அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பில் மேலும் பேசிய அவர் ,

ஐக்கிய நாடுகளின் பொது செயலாளரை சந்தித்த ஜனாதிபதி நாட்டின் பொறுப்புக்கூறல் தொடர்பாக வினைத்திறனாக செயற்பட தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். இதனை உடனடியாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றது.

ஆனால் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அந்த கூற்றுக்கு முற்றிலும் மாறுபட்டவகையில், எந்தவிதமான வெளிவாரி பொறிமுறைகளையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது. அதேபோன்றுதான் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் புலம்பெயர்ந்தோருடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் ஜனாதிபதி அறிவித்திருந்த நிலையில் அதனையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

ஆனால் ஜனாதிபதி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கடந்த யூலை மாதம் நடத்தவிருந்த சந்திப்பு இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டதுடன், பின்னர் அந்த சந்திப்பை நடத்த திகதி ஒதுக்குவதாக கூறி 2 மாதங்கள் கடந்துவிட்டன. இன்னும் அதற்கான திகதி ஒதுக்கப்படவில்லை.

அரசாங்கம் புலம்பெயர்ந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னதாக, தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று எம்.ஏ.சுமந்திரன் கோரினார்.

“தயவு செய்து பதவியை ஒப்படைத்துவிட்டுச் செல்லுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கேட்டுக்கொள்கின்றேன்.” – மேர்வின் சில்வா

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்ய முயற்சித்த போது அவரை பாதுகாத்த விஜயதாஸ ராஜபக்ஸவுக்கே கொலை ஜனாதிபதி அச்சுறுத்தல் விடுவது  பொறுத்தமற்றது. இவ்வாறான பொறுத்தமற்ற நடத்தைகளை ஜனாதிபதி மாற்றிக்கொள்ள வேண்டும்.” என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

1994 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவின் சட்ட ஆலோசகராக ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ச செயற்பட்டார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க வேட்புமனுத் தாக்கல் செய்யாமலிருந்தபோது இவரே போராடி வேட்புமனு தாக்கல் செய்ய வைத்தார்.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது , நல்லாட்சி அரசில் நீதி அமைச்சராகச் செயற்பட்டு அதனை விஜயதாஸ ராஜபக்சவே தடுத்தார். ‘இது சட்டத்துக்கு முரணான செயலாகும். நான் நீதி அமைச்சராக இருக்கும் வரை இதற்கு இடமளிக்கமாட்டேன்’ என்று விஜயதாஸ பகிரங்கமாகக் கூறினார்.

சிறைவாசத்திலிருந்து பாதுகாத்த நபருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அச்சுறுத்தல் விடுப்பது பொறுத்தமற்றது. ஜனாதிபதியொருவர் பேசக் கூடிய முறைமையிலிருந்து விலகி தரமற்ற வகையில் விஜயதாஸவுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.

செய்யும் தொழில் பற்றி அறியாவிட்டால் மறைந்த ராஜபக்சக்களின் கௌரவத்துக்கு இழுக்கை ஏற்படுத்தாமல் தயவு செய்து பதவியை ஒப்படைத்துவிட்டுச் செல்லுமாறு  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம்  வலியுறுத்துகின்றேன். ஜனாதிபதி என்ற பதவியின் கௌரத்தைப் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இராணுவத்திலும் நீங்கள் உயர் பதவி வகிக்கவில்லை. கேர்ணலாக மாத்திரமே செயற்பட்டீர்கள். ஒழுக்க விழுமியங்கள், முக்கியத்துவம், பொறுப்பு, அச்சமற்ற நிலை இன்றும் இராணுவத்துக்கு உள்ளது. ஜனாதிபதி பதவியும் தற்காலிகமானது என்பதை மறந்து விட வேண்டாம். மனிதாபிமானமே நிரந்தரமானது. எனவே, தயவு செய்து இவ்வாறான நடத்தைகளை மாற்றிக் கொள்ளுங்கள்.

ஒரு ஹிட்லரைப் போன்று செயற்படுங்கள் என்று கூறுகின்றனர். ஆனால், ஹிட்லருக்கு என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஹிட்லரைப் பற்றி வரலாற்றில் கூட எழுத முடியாது. ஹிட்லருக்கு என்ன ஆயிற்று என்பதை அவரும் அறியவில்லை, அவரைச் சார்ந்தோரும் அறியவில்லை. எனவே, ஒரு மனிதனாகச் செயற்படுங்கள்” – என்றார்.

“மக்களின் ஆணையை மீறி நடப்பவர்கள் அரசியலில் முகவரி இல்லாமல் போவார்கள்.” – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.  

அரசைக் கவிழ்ப்பதற்கு எதிரணியினர் பல வழிகளிலும்  சூழ்ச்சிகளுக்கு அரசிலுள்ள எவரும் இதற்குத் துணைபோகக்கூடாது.” என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களிடம் நேரில் வேண்டுகோள் விடுத்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.

ஸ்ரீலங்கை சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த வியாழக்கிழமை இரவு விசேட சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான அமைச்சர் விமல் வீரவன்ச, அமைச்சர் உதய கம்மன்பில, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, நாடாளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ விதாரண, ஏ.எல்.எம்.அதாவுல்லா, அத்துரலிய ரத்ன தேரர் மற்றும் முன்னாள் அமைச்சர் டியூ. குணசேகர உள்ளிட்ட பலரும்  கலந்துகொண்டனர்.

ஆளும் தரப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதால் கொழும்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசுக்குள் பூகம்பம் வெடித்துள்ளது என்றும், அரசு விரைவில் கவிழும் என்றும் எதிரணியினர் சிங்கள ஊடகங்களிடம் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் அவசர சந்திப்பை நடத்தியுள்ள ஜனாதிபதி, மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

அரசிலுள்ள பங்காளிக் கட்சிகள் ஒன்றுகூடிப் பேசுவதில் தவறு இல்லை. ஆனால், அந்தச் சந்திப்புக்கள் எதிரணியின் சூழ்ச்சிகளுக்குத் துணைபோகக்கூடாது. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவராக  – பலம் மிக்க தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ச இருக்கின்றார். பங்காளிக் கட்சிகள் தங்கள் குறைநிறைகளை அவருடன் நேரில் பேசித் தீர்த்துக்கொள்ள  முடியும்.

நாட்டு மக்களின் அமோக ஆதரவுடன் இந்த ஆட்சி அமைக்கப்பட்டது. இதைக் கவிழ்ப்பதற்கு எவரும் இடமளிக்கக்கூடாது. மக்களின் ஆணையை மீறி நடப்பவர்கள் அரசியலில் முகவரி இல்லாமல் போவார்கள். இது கடந்த கால வரலாறு.

எதிரணியின் சதி முயற்சிகளை நாம் ஓரணியில் நின்று தோற்கடிக்க வேண்டும் .”  என்றார்