அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அபார வெற்றி பெற்றார். அவர் 290 ஓட்டுகளை பெற்று இருக்கிறார். குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் 214 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார். ஆனால் தோல்வியை டிரம்ப் ஏற்று கொள்ளாமல் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.
ஜோர்ஜியா, அரிசோனா, பென்சில்வேனியா ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்து உள்ளதாகவும் அங்கு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர போவ தாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஜோர்ஜியா மாநிலத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என்று அம்மாநில நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வாக்குகள் கைகளால் எண்ணப்படுகிறது.
16 வாக்கள் கொண்ட ஜோர்ஜியா மாநிலத்தில் நடந்த வாக்கு எண்ணிக்கையில் ஜோ பைடனைவிட டிரம்ப் 14 ஆயிரம் ஓட்டுகள் மட்டுமே பின் தங்கி உள்ளார். இதையடுத்து அங்கு மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஜார்ஜியா மாநில செயலாளர் பிராப் ராபென்ஸ்பெர்கர் கூறும்போது, ‘‘கணித ரீதியாக, வித்தியாசம் மிக நெருக்கமாக உள்ளதால் அனைத்து ஓட்டுகளும் கைகளால் மீண்டும் எண்ணப்படும். மறுவாக்கு எண்ணிக்கையை இந்த வாரத்துக்குள் தொடங்க விரும்புகிறோம்’’ என்றார்.
இந்த நிலையில் தேர்தல் முடிந்த பிறகு ஒரு வாரம் கழித்து அலாஸ்கா மாநிலத்தின் முடிவு வெளியிடப்பட்டது. இதில் டிரம்ப் வெற்றி பெற்று உள்ளார். இதனால் அவருக்கு 3 ஓட்டுகள் கிடைத்தன. இதன் மூலம் அவர் பெற்ற ஓட்டு எண்ணிக்கை 217 ஆக உயர்ந்தது.
ஏற்கனவே ஜோ பைடன் 290 ஓட்டுகள் பெற்று விட்டதால், அலாஸ்காவில் டிரம்பின் வெற்றி, ஜார்ஜியாவில் மறு வாக்கு எண்ணிக்கை ஆகியவை ஜோ பைடனின் வெற்றியை எந்த விதத்திலும் பாதிக்காது.
இந்நிலையில் கடந்த 8-ந்தேதி டொனால்டு டிரம்ப் ஒரு ட்வீட் போட்டிருந்ததார். அதில் ‘‘வாக்குகள் எண்ணப்பட்ட அறைக்குள் எங்களது பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. 71,000,000 சட்டப்பூர்வமான வாக்குகள் பெற்று நான் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன்.
எங்களுடைய பார்வையாளர்களை அனுமதிக்காததை பார்க்க முடிந்தது மோசமான நிகழ்வு. இதற்கு முன் இப்படி நடந்ததே கிடையாது. மக்கள் கேட்காத போதிலும் லட்சக்கணக்கான வாக்குச்சீட்டுகள் மெயில் மூலம் அனுப்பப்பட்டது’’ என்று தெரிவித்திருந்தார்.
அதை மேற்கோள் காட்டி இன்று ‘‘தற்போது 7,30,00,000 வாக்குகள்’’ என பதிவிட்டுள்ளார். இதனால் டிரம்ப் நம்பிக்கையில் உள்ளார்.
ஜோ பைடன் 7,71,81,757 வாக்குகளும் டொனால்டு டிரம்ப் 7,20,71,588 வாக்குகளும் பெற்றுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.