தமிழ் தேசிய கூட்டமைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைத்தவர் சுமந்திரன் தான் – செல்வம் அடைக்கலநாதன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடுவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கியவர் எம்.ஏ.சுமந்திரன் என்ற விடயம் பகிரங்கமான விடயம் என ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மன்னார் மாவட்டத்திற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்றையதினம் மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

அறிமுக நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

இல்லாத கூட்டமைப்புக்கு இரா.சம்பந்தன் எப்படி தலைவராயிருக்க முடியும்..? – தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவர் கேள்வி !

“தமிழ் தேசியத்தை சிதைக்க கூட்டமைப்பிற்குள் நுழைந்த விசமிகள் சம்பந்தனை கொண்டே அதனை நிறைவேற்றினர்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்  இலங்கை தமிழரசு கட்சியின்  கொழும்பு கிளை தலைவர் K.V.தவிராசா தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில்;

இல்லாத கூட்டமைப்பிற்கு எவ்வாறு தலைவராக இருக்க முடியும் என இரா.சம்பந்தனிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு யுத்தம் மெளனிக்கப்பட்ட பின்னர் தமிழ் தேசிய அரசியலை சிதைக்க சில விசமிகள் கூட்டமைப்பிற்குள் நுழைந்ததாகவும், திட்டமிட்டு பிரிவினையைத் தூண்டி, சம்பந்தனைக் கொண்டே அதனை நடைமுறைப்படுத்தியதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கூட்டமைப்பு இல்லாமல், அதன் தலைவர் என்ற பதவியும் பறிபோய், நாடாளுமன்ற உறுப்பினராக மாத்திரம் இரா. சம்பந்தன் நிற்பதைக் காண மனம் சகிக்கவில்லை எனவும் K.V.தவராசா குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என இனி எந்த முகத்துடன் சென்று ரணிலுடன் பேச்சு நடத்த முடியும் எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

“யாரும் கூட்டணி அமைக்கலாம். ஆனால் மக்கள் ஆதரவு எமக்குத்தான்.” – இரா.சம்பந்தன்

“உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலத்தில் நான் எதிர்ப்பு அரசியல் செய்ய விரும்பவில்லை.” என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுடன் மேலும் சில கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி ஒன்று உருவாகியுள்ள நிலையிலும் கூட்டமைப்பு என்ற பெயரிலேயே செயற்படப்போவதாகத் தெரிவித்திருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் 5 தமிழ்க் கட்சிகளைக் கொண்டு உருவான புதிய கூட்டணி தொடர்பில் நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை.

பல கட்சிகள் உருவாகலாம், கட்சிகளைப் பயன்படுத்தி பல கூட்டணிகள் கூட்டமைப்புக்கள் அமையலாம். ஆனால், தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சி எது என்பதைத் தேர்தலில் மக்கள் தங்கள் வாக்குகளால் நிரூபித்துக் காட்டுவார்கள்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.), தமிழ்த் தேசியக் கட்சி மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய 5 தமிழ்க் கட்சிகளும் இணைந்து புதிய கூட்டணிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.

எவரும் ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்திக் கட்சிகள், கூட்டணிகள் கூட்டமைப்புக்கள் அமைப்பதை நான் எதிர்க்கவில்லை. ஆனால், தேர்தலில் பல கட்சிகள் போட்டியிட்டால் அது மக்களைத்தான் தாக்கும் மக்களைப் பலவீனப்படுத்தும்.

தமிழ் மக்கள் இந்தக் கருமத்தில் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். இலங்கைத் தமிழரசுக் கட்சி நீண்டகால வரலாற்றைக் கொண்ட கட்சி. தமிழ் மக்களின் பாரம்பரிய கட்சி, 1949 ஆம் ஆண்டு தொடக்கம் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் கட்சி.

தமிழ் மக்களுக்காக அறவழியில் போராடி பல தியாகங்களைச் செய்த கட்சி. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலையொட்டி கொழும்பில் எனது இல்லத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய தமிழரசுக் கட்சி செயற்படுகின்றது.

ஆனால், கூட்டமைப்பின் ஏனைய இரு பங்காளிக் கட்சிகளும் (ரெலோ, புளொட்) அந்தத் தீர்மானத்துக்கு எதிர்மறையாகச் செயற்படுகின்றன. இது தொடர்பில் நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை.

தமிழ் மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு செயற்படும் இலங்கைத் தமிழரசுக் கட்சியை மக்கள் ஆதரிப்பார்கள் என்பது எனது திடமான நம்பிக்கை. எனவே, உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலத்தில் நான் எதிர்ப்பு அரசியல் செய்ய விரும்பவில்லை.

இதுவரை காலமும் நடந்த விடயங்கள், நடக்கின்ற விடயங்கள் ஆகியவற்றைத் தமிழ் மக்கள் கவனமாகச் சிந்தித்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என உறுதியான முடிவை எடுக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்” எனவும் தெரிவித்துள்ளார்.

உருவானது புதிய தமிழ்தேசிய கூட்டமைப்பு – விக்கி மற்றும் கஜேந்திரகுமாருக்கும் அழைப்பு !

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய ஐந்து அரசியல் கட்சிகளும் இணைந்து ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ என்ற பெயரில் புதிய கூட்டமைப்பொன்றை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.

அத்துடன், இந்தக் கூட்டமைப்பானது தேர்தலுக்கு மட்டுமானது அல்ல என்று குறிப்பிட்டுள்ள அக்கட்சிகளின் தலைவர்கள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் விடுதலைப்பயணித்தினை முன்னெடுப்பதற்கான கூட்டு என்று கூட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், தமிழ் மக்கள் பலம்பெறுவதற்காக தமது கூட்டில் ஒன்றிணையுமாறு இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு பகிரங்க அழைப்பினையும் விடுத்துள்ளனர்.

குறித்த ஐந்து கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை 14 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள திண்ணை தனியார் விடுதியில் நடைபெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அக்கட்சிகளின் தலைவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி;யின்(புளொட்) தலைவர் சித்தார்த்தன் தெரவிக்கையில், தமிழ் மக்களின் விடுதலை நோக்கிய பயணத்தில் ஐந்து கட்சிகள் ஒன்றாகச் செயற்படுவதற்கு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளோம். அந்த அடிப்படையில் தேர்தலுக்கு அப்பால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நாம் தொடர்ந்தும் கூட்டாகச் செயற்படவுள்ளோம். தமிழ் மக்கள் சார்ந்து எம்முடன் இணைந்து செயற்படக் கூடிய ஏனைய கட்சிகளையும் எம்முடன் இணைந்து செயற்படுவதற்கு வருமாறு நாம் அழைப்பு விடுகின்றோம்.

அதேநேரம், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி என்பது எம்முடன் தொடர்புடையதொரு கூட்டமைப்பாகும். அது தனிநபருக்குச் சொந்தமானது அல்ல. அதற்கு 2008ஆம் ஆண்டு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அந்தக் கூட்டணியில் தான் நாம் தேர்தலில் போட்டியிடவுள்ளோம். அந்தக் கூட்டணியின் தேசிய செயற்குழுவில் புதிய கூட்டமைப்பின் ஐந்து கட்சிகளினதும் உறுப்பினர்கள் அங்கத்துவத்தினைக் கொண்டிருப்பார்கள்.

அதேநேரம், அனுபவம் வாய்ந்த விக்னேஸ்வரனுக்கு, அரசியல் கட்சியொன்று தனிநபரின் பெயரில் பதிவு செய்ய முடியாது என்பது நன்கறிந்த விடயமாகும். ஆகவே அக்கட்சியின் செயலாளர் பதவி தான் அவருக்கு பிரச்சினையென்றால் அதனை வழங்குவதற்கு நாம் தயாராகவே உள்ளோம் என்றார்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்,

ஐந்து அரசியல் கட்சிகளுடைய புரிந்துணர்வு உடன்படிக்கை என்பது தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வினை எட்டுவதற்காக தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகள் இணைந்து தொடர்ச்சியாக பணியாற்றுவதற்கானதாகும்.

இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுப்பதற்காக கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக அரசியல் கட்சிகளுக்கு இடையில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதில் தமிழ் அரசுக்கட்சியும் பங்கேற்று வந்திருந்தது. இருப்பினும் தமிழரசுக்கட்சியானது உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் ஆசனங்களைப் பெறுவதை நோக்காக் கொண்டு தனித்து போட்டியிடுவதாக கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிவிட்டது.

இந்நிலையில், தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருக்கும் ரெலோ,புளொட் ஆகிய தரப்புக்களுடன் ஏற்கனவே கூட்டமைப்பிலிருந்து வெளியேறியிந்த நாமும் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சி, போராளிகள் கட்சி ஆகியனவும் ஒன்றிணைந்துள்ளோம்.

மேலும், தமிழ் மக்கள் மத்தியிலிருந்து சகல கட்சிகளும் ஐக்கியப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே இருந்துவருகின்றது. அவர்கள் கடந்த காலங்களில் அதற்கான பகிரங்க வெளிப்பாடுகளையும் செய்துள்ளார்கள். அதற்கமைவாகவே விடுதலை இயக்கங்களாக இருந்து ஜனநாயக வழிக்குத் திரும்பிய நாம் ஒன்றுபட்டிருக்கின்றோம்.

புதிய கூட்டணியானது. தனிக்கட்சி ஆதிக்கமற்றவகையில் ஜனநாயகத் தன்மை நிறைந்த கட்டமைப்பாகவே உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்காலத்தில் இக்கூட்டமைப்புக்கு யாப்பொன்று உருவாக்கப்பட்ட கட்டமைக்கப்பட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த விடயங்களை ஏற்றுக்கொள்கின்ற மனமாற்றம் முதலில் தமிழரசுக்கட்சிக்கு அவசியமாகின்றது. அவ்வாறான நிலைமையொன்று ஏற்படுகின்றபோது அக்கட்சியும் எம்முடன் இணைந்து பயணிக்க முடியும் என்றார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தாய்க்கட்சியான தமிழரசுக்கட்சியானது தேர்தல் நலனை அடிப்படையாக வைத்து கூட்டமைப்பிலிருந்து வெளியேறியுள்ளது. அது எமக்கு மனவருத்தினை அளிக்கும் செயற்படாக உள்ளது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் கொள்கை ரீதியில் ஏற்படுத்தப்பட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேலும் பலமான நிலையில் ஐக்கியத்துடன் பயணிக்க வேண்டும் என்பதே விருப்பமாக உள்ளது. அதுவொரு பதிவுசெய்யப்பட்ட தரப்பாக, ஜனநாயக கட்டமைப்பாக இருக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக இருந்தது.

ஆனால், தமிழரசுக்கட்சி அந்த விடயங்களை கருத்தில்கொள்ளாது வெளியேறிவிட்டது. இதனால் கூட்டமைப்பில் எஞ்சியிருந்த நாம் ஏனைய கட்சிகளை ஒருங்கிணைத்து புதிய கூட்டமைப்பினை உருவாக்கியுள்ளோம்.

மேலும், கூட்டமைப்பில் ஆரம்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னம் பயன்படுத்தப்பட்ட நிலையில் அத்தரப்புவெளியேறியது. தற்போது தமிழரசுக்கட்சி சின்னத்துடன் வெளியேறிவிட்டது. ஆகவே எதிர்வரும் காலத்தில் தனியொரு கட்சியினை நம்பி அதன் சின்னத்தில் எம்மால் இணைந்து செயற்பட முடியாது.

ஆகவே தான் நாம், பொதுவான கட்சியொன்றையும், சின்னத்தையும் பயன்படுத்த வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முகங்கொடுத்த நெருக்கடிகளின் பல அனுபங்களின் அடிப்படையில் தான் அந்தக் நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

ஆகவே, தான் விக்னேஸ்வரனின் சின்னத்திலும், அவருடைய கட்சியிலும் போட்டியிட முடியாத நிலைமை எமக்குள்ளது. இந்நிலையில், அவருடன் நாம் தொடர்ந்து பேச்சுக்களை முன்னெடுத்துக்கொண்டு இருக்கின்றோம். அவரும் எமது அணியுடன் எமது நிலைப்பாடுகளை புரிந்து இணைந்து கொள்ள வேண்டும் என்று கோருகின்றோம்.

அதேநேரம், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனதிராஜா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும் எம்முடன் இணைந்து கொள்ள வேண்டும் என்று இந்தச் சந்தர்ப்பத்தில் பகிரங்கமாக கோரிக்கை விடுகின்றோம். மக்கள் எமக்கு பலமான ஆணை வழங்குகின்றபோதுஅவர்கள் அதனை உணர்ந்து கூட்டமைப்பை பலப்படுத்துவதற்காக இணைவார்கள் என்றார்.

தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறிகாந்தா தெரிவிக்கையில், இளம்தலைமுறையினர் தமிழ்த் தேசிய அரசியலை கையேற்பதற்கான அவசியமும், அவசரமும், ஜனநாயக அரசியலில் முன் எப்பொழுதுமில்லாத அளவிற்கு தற்போது ஏற்பட்டுள்ளது. ஆகவே, இளந்தலைமுறையினர், அரசியல் ஆர்வம் கொண்டவர்கள் நீங்கள், எதிர்காலம் உங்களுக்குரியது.

எனவே, பார்வையாளர்களாக இருக்காது, தமிழ் மக்களுடைய தேசிய விடுதலையை கையேற்பதற்கு இளந்தலைமுறையினர் முன்வரவேண்டுமென பகிரங்க வேண்டுகோளாக விடுகின்றேன். அத்துடன் தனியொரு தலைவரால் இனமொன்றின் விடயங்களை கையாள முடியாது. அவ்வாறான மாபெரும் தலைவர்கள் என்று யாருமில்லை. ஆகவே கூட்டுத்தலைமைத்துவமே தற்போது அவசியமாகின்றது என்றார்.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சிவநாதன் நவீந்திரா (வேந்தன்) தெரிவிக்கையில்,

தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை உருவாக்கின்றபோது அனைத்து அரசியல்கட்சிகள் மற்றும் விடுதலை இயக்கங்கள் ஆகியவற்றை இணைத்திருந்தார். கூட்டமைப்பினை ஒரு அரசியல் தேசிய கட்டமைப்பாகவே உருவாக்கியிருந்தார். ஆனால் உள்ளுராட்சி மன்றத் தேர்லை அடிப்படையாக வைத்து தமிழரசுக்கட்சி வெளியேறியமையால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடுத்தெருவில் விடப்பட்டிருக்கின்றது. கூட்டமைப்பை அவ்வாறு பலவீனமாகச் செய்வதற்கு இடமளிக்க முடியாது. போராளிகளாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் அதனைப் பலப்படுத்துவதற்காக நாம் தொடர்ந்து பணியாற்றும் முகமாகவே இணைந்துள்ளோம் என்றார்.

“தமிழ் தேசிய தலைவரினால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கதை முடிந்துவிட்டது.” – என் கனவு யாழ் அங்கஜன் கவலை !

தமிழ் தேசிய தலைவரினால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சி உறுப்பினர்களின் செயற்பாட்டால் நேற்றுடன்(14) இல்லாமல் போயுள்ளதாக சிறிலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கத்திற்காக கட்சி பிளவுபட்டு பிரிந்து போட்டிவுள்ளமை சுயலாப அரசியல் தந்திரமாகும்.

அவர்களால் தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்கமுடியாது என அங்கஜன் இராமநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரை வேறு தரப்புக்கள் பயன்படுத்த முடியாது.” – எம்.ஏ. சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரை வேறு தரப்புக்கள் பயன்படுத்த முடியாது என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஐந்து தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டிணைவில் உருவாகியுள்ள புதிய கூட்டணியானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை தமது பாதாகையில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளமை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பெரும்பான்மையானவர்கள் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தனித்து முகங்கொடுப்பதென சிபாரிசு செய்திருந்த நிலையில் அது தொடர்பிலான தீர்மானங்களை எடுப்பதற்காக பங்காளிகளுடன் கொழும்பில் சந்திப்பொன்று நடைபெற்றது.

சம்பந்தன் ஐயாவின் வீட்டில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் சிபாரிசினை முன்வைத்து உரையாடியபோது, பங்காளிக் கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் அதனை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை.

இந்நிலையில் அவர்கள் தனித்தோ அல்லது கூட்டாகவோ செல்வதாக அறிவித்திருந்தார்கள். அப்போது சம்பந்தன் ஐயா, கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்துவது தொடர்பில் வினவியிருந்தார்.

அதனையடுத்து நடத்தப்பட்ட பேச்சுக்களில், உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை இரு தரப்பினரும் பயன்படுத்துவதில்லை என்று இணக்கம் காணப்பட்டது.

எனினும், தற்போது ஏற்படுத்தப்பட்ட இணக்கத்தினை அப்பெயர் பயன்படுத்தப்படுகின்றது. அது தொடர்பில் நாம் உரிய நடவடிக்கைளை எடுப்போம் என்றார்.

“நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவே இருக்கின்றோம்.” – எஸ்.சிறிதரன்

“உள்ளூராட்சி தேர்தலுக்காகவே தனித்து நிற்கிறோம். நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவே இருக்கின்றோம்.” என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலிற்கான கட்டுப்பணத்தை நாம் இன்று செலுத்தியுள்ளோம். கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான கட்டுப் பணம் இன்று கிளிநொச்சி தெரிவத்தாட்சி அலுவலகத்தில் செலுத்தப்பட்டது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதாக எனக்கு தெரியவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும், நாடாளுமன்ற குழுவிற்கும் இரா.சம்பந்தனே தலைமை வகித்துக்கொண்டிருக்கிறார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்புதான் நாடாளுமன்றத்திலும், சர்வதேச சமூகத்திலும் அடையாளமாகக் கொண்டிருக்கிறது. ஆகவே இது ஒரு உள்ளுர் அதிகார சபை தேர்தல்கள். இந்த தேர்தலின் வடிவம், தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகள் மற்றும் செயற்பாடுகளின் அடிப்படையில் மக்கள் தெரிவு செய்யவுள்ளனர்.

அதற்கான கள பரீட்சையாக பார்க்கலாம். இதில் சாதக பாதக நிலை ஏற்படலாம். இன்று வெளியான செய்திகளினடிப்படையில், எமது தலைவர் ஓர் இரு நாட்களில் இது தொடர்பில் அறிக்கை ஒன்றின் ஊடாக தெளிவுபடுத்த உள்ளதாக அறிய முடிகிறது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் ஏன் தனித்தனியாக போட்டியிட வேண்டிய தேவை ஏற்பட்டது என்பது தொடர்பில் அவர் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார்.

ஆகவே பொறுப்பு வாய்ந்த கட்சியின் உறுப்பினர் என்ற வகையில், அவருடைய அறிக்கை வரும்வரை பொறுமையோடும், நிதானத்தோடும் இந்த விடயங்களை கையாள்வதே பொருத்தம் என நான் கருதுகிறேன்.

இதனால் எந்த பாதகமும் தமிழ் மக்களுக்கு வராது. கடந்த காலங்களில் நாங்கள் ஓர் இலக்கை நோக்கி நகர்ந்திருக்கிறோம். அக்காலகட்டத்தில் இலங்கை அரசோடும், இந்திய இராணுவத்தோடும் சிலர் சென்றிருந்தனர்.

இவ்வாறு பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. இங்கு நாங்கள் பிழை பிடிப்பது நோக்கமல்ல. அல்லது யார்மீதும் குற்றம் சுமத்துவதும் நோக்கமல்ல. தனிநாட்டு கனவோடு பயணித்த நாங்கள் யுத்தம் முடிவுற்ற பின்பும் அதே கனவோடு ஒரே அணியாக பயணித்தோம். ஆனால் ஒற்றுமையாக செல்ல முடியாத மனதை நெருடுகின்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக தம் தன் கட்சிகளை வளர்க்கின்ற செயற்பாடுகள் நெருக்கடிகளை தந்தது. அவற்றை சீர்செய்ய பல முயற்சிகள் எடுக்கப்பட்டது. அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. இந்த தேர்தல் புதிய ஒழுங்கு முறையை உருவாக்கும். இந்த தேர்தலின் பெறுபேறுகள் தமிழ் மக்களிற்கான சிறந்த தலைமைக்கான பாதையை திறந்துவிடும் என்று நம்புகிறேன்.

இப்பொழுதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றது. அது உடைந்துபோய் இருப்பதாக கருதி அதனை கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு கட்டியெழுப்பப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதற்காக செல்ல முடியும்.

செய்திகளின் பிரகாரம், ஏனைய கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவே அறிய முடிகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்திலும், வெளியிலும் ஒன்றாகவே உள்ளது.

நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலும் கூட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவே சென்றிருக்கிறார்கள். அவ்வாறான வேறுபாடுகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆகவே நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவே இருக்கின்றோம்.

இது ஒரு உள்ளுராட்சி மன்ற தேர்தல். அதில் போட்டியிடுவதற்காகவே தனித்து நிற்கின்றார்கள். இந்த பெறுபேறுகள் வந்த பின்னர், எல்லோருக்கும் நல்ல பாடம் கிடைக்கும். அந்த பாடத்தை சரியாக கற்றுக்கொண்டு, அதனடிப்படையில் பயணத்தை தொடரலாம் என்று நான் நினைக்கின்றேன்” என்றார்.

“கூறியதையே திரும்ப திரும்ப கூறுகிறார்கள். ஜனாதிபதி ரணிலுடனான பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை.” எம்.ஏ.சுமந்திரன்

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று மாலை நடைபெற்ற சந்திப்பு அவ்வளவு நல்லதாக இல்லை. கடந்த டிசம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர் முன்னேற்றம் எதுவும் இன்று வரை இல்லை.” என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“அரசியல் கைதிகள் விடயம் மற்றும் காணி விடுவிப்பு சம்பந்தமாக கடந்த சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களையே இன்றைய சந்திப்பிலும் திரும்பச் திரும்ப அவர்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சி சந்திப்பின் போது உடனடியாக நடைமுறைப்படுத்தக் கூடிய விடயங்கள் பற்றி ஒரு பட்டியல் தருமாறு சொன்னார்கள். நான் அதைத் தருகின்றேன் என்று தெரிவித்தேன்.

அதேநேரத்தில் அரசியல் தீர்வு விவகாரம் உள்ளிட்ட ஏனைய விடயங்களிலும் இன்னமும் ஒரு முன்னேற்றம் இல்லை எனில் நாம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதா? இல்லையா? என்பது தொடர்பில் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டி வரும் என்பதை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளோம்.

இன்று மாலை 5 மணியளவில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் நானும் (எம்.ஏ. சுமந்திரன் – தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதனும் (ரெலோ), தர்மலிங்கம் சித்தார்த்தனும் (புளொட்) கலந்துகொண்டோம்.

அதேவேளை, அரச தரப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, அமைச்சர்களான விஜயதாஸ ராஜபக்ச, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் பங்கேற்றனர் . வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வெளிநாடு சென்றிருப்பதால் அவர் இந்தச் சந்திப்பில் பங்கேற்கவில்லை” – என்றார்.

இனப்பிரச்சினை தீர்வு குறித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான மூன்றாவது சந்திப்பின் முடிவு என்ன..?

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு இடையில் தற்போது காணப்படும் அதிகாரங்களை செயற்படுத்துவற்கு செய்ய வேண்டிய விடயங்கள் குறித்து இன்றைய ஜனாதிபதியுடனான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பரிசீலித்து எதிர்வரும் 10 ஆம் திகதி முடிவை அறிவிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்ததாக, சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்திருந்த நிலையில், அதிபருடன் தமிழ்க் கட்சிகள் கலந்தரையாடல்களை மேற்கொண்டு வருகின்றன.

இதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றாவது தடவையாக இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

இன்றைய சந்திப்பில் பிரதமர் தினேஸ் குணவர்தன, அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ச மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்துகொண்டுள்ளதுடன், கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

அடுத்த சந்திப்பு ஏனைய தமிழ்க் கட்சிகளையும் உள்ளடக்கி எதிர்வரும் 10 அம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமது இறுதி நிலைப்பாடு குறித்து எதிர்வரும் 10 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

“உள்ளூராட்சி தேர்தலில் சரியானவர்களையும், இளைஞர்களையும் முன் நிறுத்துவோம்.” – எம்.ஏ.சுமந்திரன்

“உள்ளூராட்சி தேர்தலில் சரியானவர்களையும், இளைஞர்களையும், யுவதிகளையும் முன் நிறுத்துவோம்.” என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

சாவகச்சேரியில் ஊடகங்களுக்கு நேற்று (04) கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

உள்ளுராட்சி தேர்தல் வேட்புமனுதாக்களுக்கான திகதி தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. எமது கட்சியின் சார்பிலே தேர்தல்கள் பிற்போடகூடாது , அது ஜனநாயகத்தினை மீறுகின்ற செயல் என தொடர்ச்சியாக கூறி வந்திருக்கிறோம்.

அரசாங்கம் இந்த தேர்தலினை பிற்போடுவதற்கு எடுத்த முயற்சிகள் எங்களுக்கு தெரியும். எதுவும் கைகூடாத நிலைமையில் தேர்தல் ஆணைக்குழு சட்ட ரீதியாக அறிவித்துள்ளது. இந்த வேளையில் இதனை தடுப்பதற்கு சில முயற்சிகள் நடக்க கூடும். அவ்வாறு முயற்சிகள் எடுக்கப்படுமிடத்து உடனடியாக நாங்கள் நீதிமன்றத்தினை நாடி சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்துவதற்கான எங்களுடைய முழுமையான அழுத்தத்தினை கொடுப்போம்.

சில வருடங்களாக நடத்தப்படாமல் இருக்கின்ற மாகாண சபை தேர்தலும் உடனடியாக நடத்தப்பட வேண்டும். மாகாண சபைகள் இயங்காமல் இருப்பது என்பது மிகவும் பாரிய பின்னடைவு. இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பினை பொறுத்தவரையில், எங்களின் மூலக்கிளையில், இருந்து இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பதாரிகளை முன் வருமாறு கோரியிருக்கிறோம்.

இந்த தடவை சரியானவர்களையும், இளைஞர்களையும், யுவதிகளையும் இந்த தேர்தலில் முன் நிறுத்துவோம். மக்களின் ஆதரவினை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார்.