பயங்கரவாத தடைச் சட்டம்

பயங்கரவாத தடைச் சட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக தேசிய பாதுகாப்பு சட்டம் – நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ

தேசிய பாதுகாப்பு சட்டத்தை அடுத்த மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

நீதி அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே விஜயதாஸ ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக இரத்து செய்து குறித்த தேசிய பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவரவுள்ளதாக கூறினார்.

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் காலம் காலமாக காணப்படும் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்காது என்றும் தெரிவித்தார்.

மேலும் உண்மையான நல்லிணக்கத்தை ஸ்தாபிக்கும் வகையில் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை போன்று ஒரு விசேட ஆணைக்குழுவை உருவாக்க ஆரம்பக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக இலங்கைக்கான தென்கொரிய உயர்ஸ்தானிகர் மற்றும் ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சிறைச்சாலையில் உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு ஆதரவாக யாழிலும் உறவினர்கள் போராட்டம்!

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுவரும் இளைஞர்களினுடைய உறவினர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இன்று 12 ஆம் திகதி திங்கட்கிழமை காலை முதல் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில்  ஈடுபட்டு வருகிறனர்.

கடந்த 2019,2020 ஆகிய காலப்பகுதிகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 12 பேர், தமது விடுதலையை வலியுறுத்தி கொழும்பு மகசின் சிறைச்சாலையில் செப்டம்பர் 06ம் திகதி முதல் உண்ணாவிரத  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், அவர்களுக்கு ஆதரவாக இளைஞர்களினுடைய உறவினர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தனர்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் உறவுகளை விடுதலை செய், சிறுபிள்ளைகளின் எதிர்காலத்தை சிறையில் சிதைத்து விடாதே,பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு போன்ற வாசகங்களடங்கிய பதாகைகளை போராட்டக்காரர்கள் தாங்கியவாறு காணப்படுகின்றனர்.

“சர்வதேசத்தை ஏமாற்றவே அமைச்சர்கள் வடக்கை நோக்கபுறப்படுகிறார்கள். ” – சிறீதரன்

“மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரை மையமாக கொண்டே அமைச்சர்கள் வடக்குக்கு வருகிறார்கள்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார்.

உதயநகர் வட்டார மக்களுடனான சந்திப்பில் பேசிய போதே அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கொடூரத்தை சிங்களதேசம் தற்போதே உணர தொடங்கியுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டம், தமிழ் இளைஞர்களை அச்சுறுத்தவும் தமிழ் மக்களை துன்புறுத்தவுமே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது பயங்கரவாத தடைச் சட்டம் பாய இருக்கின்றது.

இதேவேளை மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாக இருக்கின்ற நிலையில் அமைச்சர்கள் வடக்கை நோக்கபுறப்படுகிறார்கள்.  இருப்பினும் அவர்களின் போலி முகத்தையும் இரட்டை வேடத்தையும் சர்வதேச சமூகம் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளது.

பொருளாதார ரீதியில் அதளபாதாளத்திற்கு போயிருக்கும் இந்த நாட்டை மீட்டெடுக்க வேண்டுமெனில் முதலில் இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

“ராஜபக்ஷக்கள் ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும்.”- ஹட்டனில் எம்.ஏ.சுமந்திரன் !

“மக்களை ஒடுக்குவதற்கு ஆட்சியாளர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவார்கள். அதனால்தான் இப்படியான பயங்கர சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்துகின்றோம்.” – என்று அறைகூவல் விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, நீண்டநேர மின்வெட்டு, பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் ஹட்டனில் இன்று (06) நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மேலும் கூறியவை வருமாறு,

“இந்த எதிர்ப்பு போராட்டத்திலும், பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக நடைபெறும் கையெழுத்து போராட்டத்திலும் பங்கேற்பதற்காகவே நாம் மலையகம் வந்துள்ளோம்.

நாட்டில் ஒருவரும் வாழ முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. எந்த பொருளை வாங்கச்சென்றாலும் ´இல்லை´ என்ற பதிலே வழங்கப்படுகின்றது. அப்படியே பொருட்கள் இருந்தாலும் அவற்றின் விலை அதிகம். அத்தியாவசியப் பொருட்களின் விலைகள்கூட எகிறியுள்ளன. நாட்டிலே பிரயாணம் செய்ய முடியவில்லை. வீட்டிலே சமைக்க முடியவில்லை.

நாட்டை வளப்படுத்துவோம், பாதுகாப்போம் என கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இரு வருடங்களுக்குள்ளேயே நாட்டை அதாள பாதாளத்துக்குள் தள்ளிவிட்டனர். நாட்டு மக்களும் விழுந்துள்ளனர். இப்படியான ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் இருக்கக்கூடாது. மக்கள் கிளர்ந்தெழ வேண்டும். மக்களை ஒடுக்குவதற்கு ஆட்சியாளர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவார்கள். அதனால்தான் இப்படியான பயங்கர சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்துகின்றோம்.” – என்றார் சுமந்திரன்.

“பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் வரையில் எமது போராட்டத்தைக் கொண்டு செல்வோம்.” – சுமந்திரன் திட்டவட்டம் !

“பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் வரையில் எமது போராட்டத்தைக் கொண்டு செல்வோம்.” என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

 

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ச்சியாக முன்வைத்து நாடு பூராகவும் அதற்கான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

ஆரம்பத்தில் இருந்தே தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட இந்தச் சட்டமானது இன்று நாட்டில் சகல மக்களுக்கும் எதிராகப் பயன்படுத்தப்படும் நிலைமையே உருவாகியுள்ளது. ஆகவே, இன, மத, பேதம் இன்றி பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையைச் சகலரும் முன்வைத்து வருகின்றனர்.

ஏற்கனவே முன்னைய ஆட்சியில் இந்தச் சட்டத்தை நீக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு அதற்குப் பொது இணக்கம் காணப்பட்ட போதலும் 2018ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற அரசியல் குழப்பங்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவங்களுக்குப் பின்னர் நாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.

எனினும், இன்று நிலைமைகள் சுமுகமாக உள்ள காரணத்தால் இதனை நாம் வலியுறுத்த வேண்டியுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை சர்வதேச நாடுகளும், அமைப்புகளும் தொடர்ச்சியாக வலியுறுத்திக்கொண்டுள்ளன. இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையிலும் இந்த விடயங்கள் வலியுறுத்தப்படும். இப்போது நாம் முன்னெடுத்துள்ள போராட்டமும் இறுதி வரையில் கொண்டுசெல்லப்படும். பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் வரையில் எமது போராட்டத்தைக் கொண்டு செல்வோம்” – என்றார்

பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கக் கோரிய போராட்டத்தில் இணைந்தார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா !

பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கக் கோரிய மனுவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரும் கையெழுத்திட்டுள்ளார்.

பயங்கரவாத தடைக்ச் சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டு விசாரணை இன்றி நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனவே அதனை முழுமையாக நீக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடளாவிய ரீதியில் கையெழுத்து போரட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் நேற்று குறித்த மனுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் கையொப்பமிட்டனர்.

முன்னதாக கொழும்பில் இந்த வாரம் இடம்பெற்ற கையெழுத்து போராட்டத்தில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.