போதைப்பொருள் பாவனை

போதைப்பொருள் பாவனை

தொலைபேசி திருடிய குற்றச்சாட்டு – யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது !

யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வீதியில் செல்வோரிடம் அலைபேசிகளை களவெடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருளுக்கு அடிமையாகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று வீதியில் செல்வோரிடம் அலைபேசிகளை அபகரித்து விற்பனை செய்து வந்துள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இன்று யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டனர் என்று காவல்துறையினர் கூறினர்.

 

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில்

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெ.மேனன் தலைமையிலான குழு இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தது.

 

சந்தேக நபர்கள் இருவரும் நாளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

 

போதைப்பொருள் கடத்தலுக்காக விசேடமாக தயார் செய்யப்பட்டிருந்த கெப் வாகனத்துடன் ஐந்து சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தில் கைது !

போதைப்பொருட்களை சூட்சுமமான முறையில் மறைத்து கொண்டு செல்வதற்காக விசேடமாக தயார் செய்யப்பட்டிருந்த கெப் வாகனத்துடன் ஐந்து சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக கடற்படையினர், பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

 

இவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் 15 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மூன்று கோடி ரூபாய் ஐஸ் போதைப்பொருளுடன் மன்னார் இளைஞன் கைது !

மன்னார் மதவாச்சி பிரதான வீதி உயிலங்குளம் பகுதியில் வைத்து சுமார் 3 கிலோ 394 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒரு வரை செவ்வாய்க்கிழமை (29) மாலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

 

கைது செய்யப்பட்டவர் மன்னார் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரிய வந்துள்ளது.

 

மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பஸ் குறித்த போதைப்பொருள் கடத்தி செல்லப்பட்ட நிலையில், விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உயிலங்குளம் பகுதியில் வைத்து குறித்த பஸ் விசேட அதிரடிப்படையினரால் நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது குறித்த நபர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

 

கைது செய்யப்பட்ட நபர் மற்றும் போதைப்பொருள் உயிலங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

மீட்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் 3 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியானது என தெரிய வந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஆட்களற்ற வீடுகளை இலக்கு வைக்கும் போதைக்கு அடிமையானவர்கள் – பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

யாழ்ப்பாணம் நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் ஆட்கள் அற்ற வீடுகளில் ஒன்று கூடும் போதைக்கு அடிமையானவர்கள், அந்த வீடுகளில் இருந்து போதையை நுகர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

அவர்கள் வீடுகளுக்குள் இருந்து பெரும் குரல் எழுப்பி சத்தங்களையும் எழுப்புவதனால் , அவ்வீடுகள் அமைந்துள்ள வீதிகளால் பயணிப்போர் அச்சத்துடனேயே பயணிக்கின்றனர்.

 

யாழில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வரும் நிலையில், ஊசி மூலம் அதிகளவில் போதையை உட்செலுத்துவதாலும், தொடர்ந்து போதையை நுகர்வதால் கிருமி தொற்றுக்கு இலக்காகியும் உயிரிழப்புக்கள் ஏற்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ளமையால், சந்தேகத்திற்கு உரிய இடங்களில் பொலிஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சியில் போதைப் பொருள் பாவனை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராகப் பேரணி !

கிளிநொச்சியில் போதைப் பொருள் பாவனை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராகப் பேரணி ஒன்று இன்றைய தினம் (25) முன்னெடுக்கப்பட்டது.

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள போதைப் பொருள் பாவணைக்கு ஏதிராக வேல்விசன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம், கண்டாவளை பிரதேச செயலகம், கரைச்சி பிரதேச சபை, ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் இணைந்து இவ் விழிப்புணர்வுப் பேரணியை முன்னெடுத்திருந்தனர்.

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் – வவுனியாவில் சடலத்துடன் ஆர்ப்பாட்டம்!

போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த கோரியும், இறந்தவருக்கு நீதி கோரியும் வவுனியாவில் சடலத்துடன் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று (22.08) முன்னெடுக்கப்பட்டது.

 

கடந்த வெள்ளிக்கிழமை இரவு வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு சென்றிருந்த இளம் குடும்பஸ்தரை அங்கு மது அருந்திக் கொண்டிருந்த இருவர் அழைத்து கதைத்துள்ளனர்.

 

இதன்போது, குறித்த இளம் குடும்பஸ்தரை தாக்கி நிலத்தில் தூக்கி போட்டுள்ளனர். இதனால் இளம் குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார்.

 

அங்கு நின்றவர்கள் அவரது வீட்டிற்கு தகவல் வழங்கியதையடுத்து, படுகாயமடைந்த குடும்பஸ்தரின் தாயார் வருகை தந்து வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்த போதும் குறித்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக் கிழமை மரணமடைந்தார்.

 

இச் சம்பவத்தில், வவுனியா, மகாறம்பைக்குளம் காந்தி வீதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான பிரதீபன் (தீபன்) என்பவரே உயிரிழந்தவராவார். இவரது இறுதிக் கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று நேற்று (22.08) பூந்தோட்டம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 

இதன்போது, சடலத்தை எடுத்து வந்த அக் கிராம மக்களும், கிராம பொது அமைப்புக்களும் சடலத்துடன் போதைப் பொருள் பாவனைக்கு எதிராகவும், இறந்தவருக்கு நீதி கோரியும் பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘ஐஸ் – கஞ்சா- மாபா- ஹெரோயின் – போதை மாத்திரை என்பவற்றை தடை செய், தொடர்ச்சியாக அடாவடித்தனம் செய்வோரை கைது செய், மாணவர் சமூகத்தை சீரழிக்கும் போதைப் பொருட்களை தடை செய்’ என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் !

அதிகரித்து வரும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு, வாகனத் திருட்டு மற்றும் வன்முறை சம்பவங்கள் உள்ளிட்ட குற்றங்களின் எண்ணிக்கையில் சமீபத்திய குறிப்பிடத்தக்க அதிகரிப்பு போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுடன் தொடர்புடையது.
கம்பஹாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், போதைப்பொருள் குற்றவாளிகள் நாட்டில் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும், எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண பொலிஸாரால் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பொலிஸ் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதுடன், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.போதைப்பொருள் குற்றவாளிகளை கையாள்வதன் மூலம் குற்ற விகிதம் கணிசமாக குறையும் என மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.போதைப்பொருள் தொடர்பான வழக்குகளை கையாள்வதற்கான ஆழமான அறிவை வழங்குவதற்காக பொலிஸ் அதிகாரிகளுக்கு விசேட செயலமர்வுகள் நடத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சுமார் 11 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில், நேற்றையதினம்(19) சுமார் 11 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

வெற்றிலைக்கேணி கடற்படை முகாமை சேர்ந்த கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது மாமுனை பகுதியில் கைவிடப்பட்ட 18 பொதிகளில் இருந்து 35 கிலோ 900 கிராம் கேரளா கஞ்சாவை மீட்டுள்ளனர்.

இது தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடற்படை முகாமில் வைத்துள்ள மீட்கப்பட்ட கஞ்சாவை கடற்படையினர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி காவல்துறையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

6000 இற்கும் அதிக போதை வில்லைகளுடன் மூவர் கைது !

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் 6000 இற்கும் அதிக போதை வில்லைகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீதுவ – லியனகேமுல்லயிலும் மன்னாரிலுமே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லியனகேமுல்லயில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 5488 போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 52 வயதான சந்தேகநபர் புத்தளத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, 62 போதை வில்லைகளுடன் மன்னாரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 27 மற்றும் 30 வயதான இருவர் மன்னார் – தோட்டவௌியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலையில் இருந்து இடைவிலகிய மாணவன் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது !

பாடசாலையில் இருந்து இடை விலகிய மாணவன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருள் பாவித்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மாணவனை தடுத்து வைத்து நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறனனர்.

மேலும் குறித்த மாணவனுடன் போதைக்கு அடிமையாகி உள்ள ஏனைய மாணவர்களை அடையாளம் கண்டு கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களுக்கு போதைப்பொருளை விநியோகம் செய்யும் நபர்களை கைது செய்ய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.