யாழ்ப்பாணம் தீவகப் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு, பாலியல் தொல்லை வழங்கியமைக்காக 42 வயதான ஆசிரியரொருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
7ஆம் தரத்தில் கல்வி கற்கும் 12 வயதான மாணவிக்கே குறித்த ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது தொடர்பில் மாணவி தன் தாயாரிடம் முறையிட்டதையடுத்து, தாயார் அதிபரிடம் விடயத்தைத் தெரியப்படுத்தியுள்ளார்.
எனினும், ஆசிரியருக்கு எதிராக பாடசாலைச் சமூகத்தால் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து, இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டதைத் தொடர்ந்து ஆசிரியர் நேற்றுமுன் தினம் கைதுசெய்யப்பட்டார்.
அவர் நேற்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். இதனை தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
குறித்த விடயம் தொடர்பில் நெடுந்தியில் உள்ள சமூக ஆர்வலர் ஒருவரிடம் தேசம்நெட் மூலமாக விடயத்தை அறிந்து கொள்ள தொடர்பு கொண்ட போது “குறித்த ஆசிரியர் குற்றம் செய்தமை தொடர்பில் அதிபருக்கும் – ஏனைய ஆசிரியர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்ட போதிலும் கூட பாடசாலையின் நட்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடும் என பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்களிடம் பாடசாலை சமூகத்தினர் கோரிக்கைகளை முன் வைத்ததாக ” குறித்த நபர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கைதான ஆசிரியர் ஏற்கெனவே வலிகாமம் பகுதி பாடசாலையொன்றில் கல்வி கற்பிக்கும்பொழுது சில மாணவிகளை பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.
எனினும், மாணவிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க முன்வரவில்வை. இதையடுத்து அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, அவர் மீளவும் ஆசிரியர் சேவையில் இணைக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவலையும் குறித்த சமூக ஆர்வலர் தெரியப்படுத்தியிருந்தார்.
பாடசாலை ஆசிரியர்களால் பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் வடக்கில் அண்மைய காலங்களில் அதிகரித்துள்ளது. சுய கௌவுரவம் குடும்பமான மானம், கல்வி சமூகத்தின் உயர்ந்த தரம், பாடசாலையின் பெருமை போன்ற விடயங்களை காரணம் காட்டி பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் குற்றவாளிகள் பலரும் பாதுகாக்கப்படுகின்ற ஒரு சூழல் தொடர்ந்தும் நீடிக்கின்றது. கடந்த வருடம் முல்லை தீவில் பாடசாலை ஆண் மாணவர்களுக்கு போதைப் பொருள் கொடுத்து சக மாணவிகளை குறித்த மாணவர்களின் துணையுடன் துஷ்பிரயோகம் செய்த தூண்டிய ஆசிரியர் அழுத்தத்தின் காரணமாக கைது செய்யப்பட்ட போதும் கூட இன்று விடுதலையாகி மீளவும் அவர் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். இது போலவே அண்மையில் பல சம்பவங்கள் யாழ்ப்பாணம் வவுனியா முல்லைத்தீவு உள்ளிட்ட பல பாடசாலைகளிலும் பதிவாகியுள்ளது. என்னிடம் இது தொடர்பாக இதுவரையில் இறுக்கமான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாத காரணத்தினால் குற்றவாளிகள் சுதந்திரமாக இதுபோன்றதான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் சமூக ஆர்வலர்கள் பலரும் அதிருப்தி வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
படம் :- கோப்பு