யாழ்ப்பாண பல்கலைக்கழகம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகம்

கிளிநொச்சி வளாகம் பல்கலைக்கழகமாக மாற்றப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தை தனி பல்கலைக்கழகமாக மாற்றித் தரப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கிளிநொச்சி பொன்னகர் கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இந்தியன் வீட்டுத்திட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பிலான வடயங்கள் பற்றி பேசும்போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “குறித்த வளாகம் புலிகளின் பயன்பாட்டில் இருந்த நிலையில் இராணுவம் கிளிநொச்சியை விடுவித்த பின்னர் தமது முகாமாக மாற்றிக்கொண்டனர்.

அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் கதைத்து அதனை பல்கலைக்கழகத்திற்கு பெற்றுக்கொடுத்துள்ளோம்.

அங்கு நான்கைந்து வளாகங்கள் வந்துள்ளது. கிளிநொச்சி வளாகத்தை கிளிநொச்சி பல்கலைக்கழகமாக மாற்றித் தருவோம்” என அவர் தெரிவித்தார்.

தமிழர் தாயகம் மீதான வன்முறைச் சம்பவங்களை கண்டித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு!

கடந்த பல காலமாக தமிழர் தாயகம் மீதான வன்முறைச் சம்பவங்கள் வலுவடைந்து வருகின்றது.

இந்தநிலையில், நேற்றையதினம் வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் சிலைகள் உடைக்கப்பட்டு, அங்கிருந்த சிவலிங்கம் காணாமல் ஆக்கப்பட்ட செயல் தமிழ் மக்களிடையே மேலும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர் தாயகம் மீதான அத்துமீறல்களை கண்டித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருட மாணவர்களை மிருகத்தனமான தாக்கிய மூன்றாம் வருட மாணவர்கள் !

யாழ். பல்கலைகழக கலைப்பீட மாணவர்கள் 4 பேருக்கு வகுப்புத் தடை மற்றும் பல்கலைகழக வளாகத்திற்குள் நுழைவதற்கான தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.

கடந்த 22 ஆம், 23 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கலை வார நிகழ்வுகளின் போது, 3 ஆம் வருட மாணவர்களால், 2 ஆம் வருட மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் சுதந்திரமான மற்றும் முறை சார்ந்த விசாரணையை மேற்கொள்வதற்கு ஏதுவாக 4 பேருக்கும் உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் அறிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர் வதிவிடம், ஒழுக்கம் தொடர்பான விதிமுறைகளுக்கு அமையக் கடந்த 23 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை விடுதி உட்பட பல்கலைக்கழக வளாகத்தினுள் பிரவேசிப்பதற்கும், கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும், பல்கலைக்கழகம் தொடர்புபட்ட எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலைப்பீடாதிபதியின் உள்நுழைவுத் தடைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் கலைவார நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, மூன்றாம் வருட மாணவர்களுக்கும், இரண்டாம் வருட மாணவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றி, கடந்த 23 ஆம் திகதி பிற்பகல் கைக்கலப்பாக மாறியுள்ளது.

இந்தச் சம்பவத்தின் போது தலை மற்றும் தோள் பட்டைப் பகுதியில் உபாதைக்குள்ளான இரண்டாம் வருட மாணவன் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

சம்பவம் தொடர்பில், பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்று உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் 4 மாணவர்களுக்கும் சம்பந்தமிருப்பதாகக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், பல்கலைக்கழக மாணவர் வதிவிடம், ஒழுக்கம் தொடர்பான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதிமுறைகளுக்கு அமைவாகக் கலைப் பீடாதிபதியினால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

75ஆவது சுதந்திர தினத்தை எதிர்த்து பல்கலைக்கழக மாணவர்களின் கறுப்பு பேரணி !

வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்தாலுடன் இன்று காலை 9 மணியளவில் யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்து மட்டகளப்பு நோக்கிய சுதந்திர தின எதிர்ப்பு கறுப்பு பேரணி ஆரம்பமாகியுள்ளது.

இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக காலை வர்த்தக நிலையங்கள், போக்குவரத்து சேவையிலீடுபவோர், திரையரங்குகள் உட்பட்ட அனைத்து தரப்பினருக்கும் குறித்த அழைப்புக்கள் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து தரப்புக்களும் ஆதரவு நல்கியுள்ள நிலையில் இன்றையதினம் அவர்கள் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஏற்பாடு செய்த இந்த எதிர்ப்பு பேரணியில் பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புக்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பேரெழுச்சியாக போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

போராட்டத்தின் ஆரம்பத்தில் பொலிஸார் தடுப்பதற்கு முற்பட்டனர். ஆனால் போராட்டக்காரர்கள் தடைகளை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பதாதைகளை ஏந்தியவாறு கோஷமிட்டவாறு போராட்டம் ஆரம்பமானது.

இந்த போராட்ட பேரணியானது எதிர்வரும் 7ம் திகதி மட்டக்களப்பு மண்ணில்  நிறைவடையவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் மின்வெட்டு இல்லை !

நாட்டில் இன்று (புதன்கிழமை) முதல் க.பொ.த உயர்தர பரீட்சை நிறைவடையும் வரையில் மின் வெட்டினை மேற்கொள்ளாமல் இருக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று பிற்பகல் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நடத்திய விசேட கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று முதல் க.பொ.த உயர்தரப்பரீட்சைகள் நிறைவடையும் பெப்ரவரி 17ஆம் திகதி வரையில் நாட்டில் மின்வெட்டு முன்னெடுக்கப்படாது என மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு தேசிய பொங்கல் கொண்டாட வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்து மக்கள் போராட்டம் – நீர்த்தாரை பிரயோகித்த பொலிஸ் !

ஜனாதிபதியின் யாழ்ப்பாணம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த போராட்டத்தை அரசடி சந்தியில் வைத்து பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதன்போது அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதுடன் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

தேசிய தைப்பொங்கல் நிகழ்வு யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வீதி நாடகம்!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருடன் இணைந்து குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் இணைந்து வீதி நாடகமொன்றினை யாழ். பல்கலைக்கழகத்தினுள் முன்னெடுத்தனர்.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடக வளாகத்திற்கு முன்பாக நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) குறித்த வீதி விழிப்புணர்வு நாடகம் முன்னெடுக்கப்பட்டது.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் முருகையா கோமகன், இந்த முறை தைப்பொங்கலிற்கு எமது அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என நம்பிய பொழுதும் நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம்.

இதனை மையப்படுத்தியே இவ்வாறு சிறைக்கூண்டு அமைக்கப்பட்டு சிறையிலுள்ள கைதிகளை போல உருவகித்து பொங்கல் பொருட்கள் வீடுகளில் தயார் நிலையில் உள்ள போதும் இம்முறையும் எமது உறவுகள் இன்றி பொங்கலை பொங்கமுடியாத சூழலை வெளிப்படுத்துமுகமாக இதனை நாம் நாடகமாக நிகழ்த்திகாட்டியிருந்தோம்.

மேலும் அரசியல் கைதிகள் விடுதலையின்றி வாழும் சூழலில் இங்கு நடைபெற இருக்கின்ற தேசிய பொங்கல் விழாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வருகை தரும் பொழுது எமது மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் பிரிதிநிதிகள் குறித்த நிகழ்வை முற்றாக நிராகரிக்கவேண்டும்.

இதே நேரம் எங்களுடை எஞ்சிய சிறைகைதிகளும் விடுதலை செய்யபடவேண்டும் என வலியுறுத்தினார்.

சீனாவுடனான விவசாய ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த யாழ்ப்பாண பல்கலைக்கழகம் !

சீனாவுடன் விவசாயம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

வடக்கின் வளமான நிலங்களை அபகரிக்கும் வகையில் சீனாவின் இந்த திட்டம் அமையலாம் என கருதுவதால், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இதற்கு உடன்பட மறுத்துள்ளது.

இதேவேளை, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுத்தமைக்காக மாணவர் சங்கம் தமது உபவேந்தருக்கு நன்றியையும் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகிடிவதை – 19 சிரேஷ்ட மாணவர்களுக்கு வகுப்புத் தடை !

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பகிடிவதை மற்றும் துன்புறுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்ட 19 சிரேஷ்ட மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்வி ஆண்டுக்கான கற்றல் செயற்பாடுகளுக்காக மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, பதிவுகள் இடம்பெற்றுள்ள நிலையில், புதுமுக மாணவர்களைப் பகிடி வதைக்குட்படுத்திய சிரேஷ்ட மாணவர்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இடம்பெற்ற விசாரணைகளின் போது குற்றம் நிரூபிக்கப்பட்ட கலைப்பீடத்தைச் சேர்ந்த 14 பேருக்கு ஆறு மாத கால வகுப்புத் தடையும், தொழில் நுட்ப பீடத்தைச் சேர்ந்த 4 பேருக்கு இரண்டு வருட கால வகுப்புத் தடையும், விஞ்ஞான பீடத்தைத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இரண்டு வருட கால வகுப்புத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பகிடிவதைக் கெதிரான தண்டணைச் சாசனத்தின் படி, குற்றங்களின் தனமைக்கேற்ப விசாரணைக் குழுக்களினால் பரிந்துரைக்கப்பட்ட தண்டனைக் காலத்தை மாணவர் ஒழுக்காற்றுச் சபை சிபார்சு செய்தது.

அந்த சிபார்சுகளுக்கமைய பேரவையினால் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. பேரவையின் தண்டனை குறித்த அறிவிப்பு அந்தந்த பீடாதிபதிகளின் ஊடாகத் துணைவேந்தரால் மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தண்டனைக் காலத்தினுள் குறித்த மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பல்கலைக் கழகத்தின் எந்தவொரு பகுதியினுள்ளும் செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் தண்டனைக்குட்படுத்தப்பட்ட மாணவர்கள் விடுதிகளில் தங்கியிருப்பவராயின் விடுதியை விட்டு உடனடியாக வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை – கலைப்பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு பதிவு செய்த மாணவர்களுக்கான வகுப்புகள் நாளை 25 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

காட்டுமிராண்டிகள் போல புதுமுக மாணவர்களை தாக்கியுள்ள யாழ்.பல்கலைகழக கலைப்பீட மாணவர்கள் – தரங்கெட்டு போய்க்கொண்டிருக்கும் வடக்கின் கல்வி நிலை !

அண்மைய காலகட்டங்களில் வடக்கில் அடுத்தடுத்து சமூக சீரழிவுகளும் – சமூக வன்முறைகளும் பெருகி கொண்டிருக்கின்றன. அண்மையில் கூட முல்லைத்தீவில் ஒரு பாடசாலை ஆசிரியர் உயர்தர ஆண் மாணவர்களை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி குறித்த மாணவர்களின் உதவியுடன் பாடசாலை மாணவிகளை நிர்வாணமாக்கி வீடியோக்களை எடுத்திருந்தனர். அதுபோல யாழ்ப்பாண நகர்புறத்தில் உள்ள பாடசாலை மாணவர் ஒருவரிடம் இருந்து அண்மையில் ஹெரோயின் போதைப்பொருள் போலீசாரால் கைப்பற்றப்பட்டிருந்தது. இது தவிர க.பொ.த சாதாரண தர பெறுபேறுகளின் அடிப்படையிலும் – உயர்தர பரீட்சை பெறுபவர்களின் அடிப்படையில் வடக்கு மாகாணமே ஒன்பதாவது நிலையில் உள்ளது. (இலங்கையில் ஒன்பது மாகாணங்களே உள்ளன)

இது தான்  வடக்கின் அண்மைய கால கல்வி நிலை.

இவ்வாறான ஒரு நிலையிலிருந்து வடக்கின் கல்வியை மீட்பதற்கு மிகப்பெரும் பொறுப்போடு செயல்பட வேண்டிய தேவை வடக்கு தமிழர் கல்வி வளர்ச்சியின்  மிகப்பெரிய மத்திய நிலையம் என கடந்த காலங்களிலிருந்து தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு உண்டு. ஆனால் இன்று வரை இதன் தேவையை யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உணரவே இல்லை என்பதே ஆக வேதனையான விடயம்.

வருடா வருடம் என்ன சம்பவங்கள் நடக்கின்றனவோ அல்ல இல்லையோ பகிடிவதை தொடர்பான ஏதேனும் ஒரு பெரிய குற்றம் பதிவாகிவிடும். விசாரணைகள் தீவிரமாக நடக்கின்றன மாணவர்களுக்கு வகுப்பு தடைகள் வழங்கப்பட்டன என  சில செய்திகள் வெளியாகுமே தவிர பகிடி வதைகளை முழுமையாக இல்லாது செய்ய எந்த ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் யாழ்.பல்கலைகழக சமூகம் மேற்கொண்டதாக இதுவரை  தெரியவில்லை.

இந்த நிலையில் அண்மையில்  பல்கலைக்கழகத்திற்கு தெறிவாகியுள்ள புதுமுக  மாணவர்களை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்கள் காட்டுமிராண்டிகள் போல அடித்து சித்திரவதைப்படுத்தியுள்ள  ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்;

யாழ்.பல்கலைக்கழத்தின் புதுமுக மாணவர்களை ஒன்று கூடல் எனும் பெயரில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதிக்கு அழைத்து பகிடி வதைக்கு உட்படுத்தப்படுவதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த . கனகராஜ்க்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது . முறைப்பாட்டின் பிரகாரம் அது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு இணைப்பாளரால் பல்கலைக்கழக நிர்வாகத்திற்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது . அதனை அடுத்து சட்ட நிறைவேற்று அதிகாரி , மாணவர் ஆலோசகர் மற்றும் மாணவர் ஒழுக்காற்று அதிகாரி உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று புதுமுக மாணவர்களை சிரேஷ்ட மாணவர்களிடம் இருந்து மீட்டுள்ளனர் . அதனை அடுத்து குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்க ஏதுவாக சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் சிரேஷ்ட மாணவர்கள் 18 பேருக்கு தற்காலிக வகுப்பத்தடை விதிக்கப்பட்டுள்ளது . அதேவேளை சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் தனது பூர்வாங்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளததாக பல்கலைக்கழக தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் மேற்கொண்ட பகிடிவதைகள் நிரூபிக்கப்பட்டால் இரண்டு வருடங்களுக்கு பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளில் இருந்து மாணவர்கள் நீக்கப்படுவார்கள் என இலகுவான தண்டனை ஒன்றையும் பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இது பகிடிவதைகள் தொடர்பில் யாழ்.பல்கலைகழகத்தின் பொறுப்பற்ற அறிவிப்பாகவே பார்க்க முடிகிறது.

முன்னைய காலப்பகுதிகளில் தமிழர் சமுகத்தின் உரிமை சாரந்த பிரச்சினைகளுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் குரல்கொடுத்து வந்த யாழ்ப்பாண பல்கலைக்கழகம் இன்று தன்னுடைய அடையாளத்தை இழந்து முழுமையாக வேறு கோணத்தில் பயணிக்க ஆரம்பித்துள்ளது என்பதையே பகிடிவதை தொடர்பான தகவல்கள் எடுத்துக்காட்டுகின்றன. யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியும் வெறுமனே பாடசாலை கல்வி போல புத்தகங்கள் வழியானதாக  மட்டுமே மாறிப்போயுள்ள நிலையில் மாணவர்களை சமூகத்துக்கு உரியவர்களாக மாற்றாது புத்தகப் பூச்சிகளாக மாற்றி அனுப்புவதை மட்டுமே இந்த யாழ்ப்பாண  பல்கலைக்கழகம் செய்து கொண்டிருக்கிறது.

யாழ். பல்கலைக்கழகத்தில் பகிடி வதைகள் தொடர்ந்தும் இடம் பெற்றுக் கொண்டிருப்பதற்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்களே முழு காரணம். தற்போதைய யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்டு சொல்லும் சில விரிவுயாளர்களை தவிர ஏனைய விரிவுரையாளர்கள் ஒரு உழைப்பதற்கான தளமாக மட்டுமே பல்கலைக்கழகத்தை மாற்றியுள்ளனர் – பார்க்கின்றனர். பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவு நிலை மிகப் பெரிய விரிசலிலேயே இன்று வரை காணப்படுகின்றது. “எனக்கு சம்பளம் வருகிறது நான் அவர்களுக்கு கற்பிக்கிறேன்“ இந்த மனோநிலையை பல்கலைகழகத்தில் பாதிக்கும் அதிகமான விரிவுரையாளர்களிடம் காணப்படுகின்றது. இவர்கள் மாணவர்களிடம் அடிப்படை மனிதாபிமானம் பற்றியோ – பல்கலைகழக மாணவர்களின் சமூகப் பொறுப்பு பற்றியோ மறந்தும் கூட பேசுவது கிடையாது. பிறகு எவ்வாறு ஆரோக்கியமான சமுதாயம் ஒன்றின் உருவாக்கத்தை  யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து எங்களால் எதிர்பார்க்க முடியும்..?

முன்பெல்லாம் தங்களுடைய பிள்ளைகளை சைக்கிள்களிலும் – மோட்டார் சைக்கிளிலும் ஏற்றிச் சொல்லும் பெற்றோர் யாழ்.பல்கலைகழக வளாகத்தை கடக்கும் போது இந்த பல்கலைக்கழகத்துக்கு பிள்ளையை எப்படியாவது படிக்க அனுப்ப வேண்டும் என எண்ணுவர். ஆனால் இந்த பகிடிவதை கலாச்சாரத்தாலும் – முறையற்ற கற்பித்தலாலும்  இன்று நிலை தலைகீழாகியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகம் வேண்டாம் என கூறும் நிலை பெற்றோர் மத்தியில் உருவாகியுள்ளது.

தமிழர் பகுதிகளின் கல்வி முன்னேற்றத்துக்கான  நடவடிக்கைகளுக்காகவும் – சமூக மாற்றத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு வடக்கின் மிகப்பெரிய கல்வி நிலையம் என்ற அடிப்படையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு உண்டு. ஆனால் இதன் பெறுதியை அங்குள்ள விரிவுரையாளர்களும் சரி மாணவர்களும் சரி உணர்ந்து கொண்டு உள்ளார்களா..? என்றால் இல்லை என்பதே விடை.

தமிழர் பகுதிகளில் இன்னமும் சீர்படுத்தப்பட வேண்டிய எத்தனையோ  சமூகப் பிரச்சனைகள் உள்ளன. அவற்றை முன்னின்று தீர்ப்பதில் யாழ்.பல்கலைகழக மாணவர்களதும் – பல்கலைக்கழக சமூகத்தினதும் பங்களிப்பு மிக அத்தியாவசியமானதாக உள்ள நிலையில் பொறுப்பற்ற இந்த மாணவர்கள் இன்னமும் வன்முறையை வளர்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

இந்த பகிடிவதைகளில் ஈடுபடும் இதே மாணவர்கள் இன்னமும் கொஞ்ச நாட்களில் பட்டமும் பெற்றுக்கொண்டு அரச வேலைகளில் – ஆசிரியர்களாக பாடசாலைகளில்  புகுந்துவிடுவார்கள். பின்பு இவர்கள் இவர்களை போல வன்முறை குணம் கொண்ட ஒரு சமூகத்தை தான் உருவாக்க போகிறார்களே தவிர ஆரோக்கியமான சமூக்த்தை அல்ல.

நீண்டகாலமாக பகிடிவதைக்கான ஆகப்பெரிய தண்டனையாக வகுப்புத்தடைகள் மட்டுமே காணப்படுகின்றன. இதனால் எந்த மாற்றமுமே வரப்போவதில்லை. அடிப்படை மனிதாபிமானம் கூட இல்லாத இழிவான செயல்களை செய்யும் இந்த மாணவர்களை நேரடியாகவே பல்கலைக்கழக கல்வியில் இருந்து நீக்கிவிடுவதே இந்த பகிடிவதைக்கான தீர்வு. அல்லாது விடின் இது வாழையடி வாழையாக இனிமேலும் தொடரத்தான் போகிறது.

அடிப்படை மனிதாபிமானத்தை கூட கற்றுத் தர முடியாத கல்வியால் என்ன பயன்..?