ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்காமல் சர்வதேச நாணய நிதியத்தின் மாயாஜாலத்தால் நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி கம்பஹாவில் நடத்திய மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம் பதினைந்து நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும், எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பது, ரூபாவின் பெறுமதி குறைப்பு, அரச நிறுவனங்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட 15 நிபந்தனைகளை பூர்த்தி செய்ததன் பின்னரே பணம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு முன்னர் 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை இலங்கை பெற்றிருந்த போதிலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொருளாதாரம் வலுவாக இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
திருட்டு, ஊழல், வீண் விரயத்தை ஒழிக்காமல் சர்வதேச நாணய நிதியத்தின் மாயாஜாலத்தைக் காட்டினாலும் நாட்டைக் காப்பாற்ற முடியாது என்றும் அவர் கூறினார்.
நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு உற்பத்திப் பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும், அரசியல் கலாசாரத்தை மாற்றி குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.