வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம்

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம்

வெடுக்குநாறிமலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்டமை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு !

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்டமைக்கு எதிராக ஆலய நிர்வாகத்தினரால் வவுனியா பிராந்திய மனிதஉரிமை ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டை வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் செயலாளர் து. தமிழ்செல்வன் கருத்து தெரிவிக்கையில்,

எமது ஆலயத்தின் விக்கிரகங்கள் அழிக்கப்பட்டமை மூலம் பௌத்த ஆக்கிரமிப்பின் வெளிப்பாட்டை அனைவரும் உணர்ந்துகொள்ள முடியும். இந்த துன்பியல் சம்பவம் எமக்கு மிகுந்த வேதனை அளிப்பதுடன் இவ்வாறான செயலை செய்தவர்களுக்கு எமது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஆலயத்திற்குள் செல்வதற்கு தொல்லியல் திணைக்களத்தால் எமக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த திணைக்களத்தின் வாகனங்களே அங்கு தொடர்ச்சியாக சென்றுவந்தது. எனவே இந்தச்சம்பவத்தின் பின்னணி தொடர்பாக தொல்லியல் திணைக்களத்தின் மீதே நாம் சந்தேகம் கொள்கின்றோம்.  மனிதஉரிமை ஆணைக்குழுவிலும் அவர்களுக்கு எதிராகவே எமது முறைப்பாட்டை பதிவுசெய்திருக்கின்றோம். என்றனர்.

இதேவேளை விக்கிரகங்கள் அழிக்கப்பட்ட விடயம் தொடர்பாக இன்றையதினம் காலை நெடுங்கேணி பொலிஸ்நிலையத்திலும் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வர் ஆலய வழிபாடுகள் உறுதிப்படுத்தப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வர் ஆலயத்தில் தொடர்ச்சியாக பூஜை வழிபாடுகளை மேற்கொள்வது உறுதிப்படுத்தப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.

குறித்த பகுதியில் உள்ள தொல்லியல் சின்னங்கள் மற்றும் இயற்கை வளங்களின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்தும் வகையில் இன்று(15.02.2023) கண்காணிப்பு பயணம் ஒன்றினை மேற்கொண்ட போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

பாரம்பரியமாக இந்துக்களினால் வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதி லிங்கேஸ்வர் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பூஜை வழிபாடுகளை தொடர்வதற்கு, அரசாங்க திணைக்களங்கள் சிலவற்றின் கடமைசார் செயற்பாடுகள் இடையூறாக அமைந்துள்ளதாக கடந்தகாலங்களில் பல்வேறு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பாக பிரதேச மக்களின் கருத்துக்களையும் எதிர்பார்ப்புக்களையும் கேட்டறிந்த அமைச்சர், மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் அரசாங்க திணைக்களங்களின் செயற்பாடுகள் அமையுமாயின், அவைதொடர்பாக கரிசனை செலுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

மேலும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதுடன், துறைசார் அமைச்சர்களுடனும் பிரஸ்தாபித்து சுமூகமான தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார்.

ஏற்கனவே வெடுக்குநாறி விவகாரம் தொடர்பாக, தமிழ் மக்களின் பிச்சினைகள் மற்றும் அபிலாசைகளை தீர்ப்பதற்கான அமைச்சரவை உப குழுவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்டது.

அதன்போது, சம்மந்தப்பட்ட பகுதிக்கு நேரடியாக சென்று நிலமைகளை ஆராய்வதுடன், சம்மந்தப்பட்ட துறைசார் அமைச்சர்களுடன் இணைந்து சுமூகமான தீர்வை காணுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்ததாக கூறியிருந்தார்.

 

 

தமிழர் பகுதி ஆலயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு அரசியல் தலையீடே காரணம் – பொலிஸார்

வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் புதிதாக படி அமைத்தமை, அதற்கு இடையூறு விளைவித்தமை தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை இன்றையதினம் (22) வவுனியா நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா வடக்கு நெடுங்கேணியில் அமைவு பெற்றுள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மக்கள் சென்று வழிபாடு செய்யவும், ஆலயத்தினை புனருத்தானம் செய்யவும் நீதிமன்றினால் தடைவிதிக்கப்பட்டதோடு, குறித்த ஆலயத்தில் புதிய அபிவிருத்தி செய்த குற்றசாட்டில் குறித்த ஆலய பூசகர், நிர்வாகத்தினர் மீதும் நெடுங்கேணி பொலிஸாரால் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய நேற்றையதினம் குறித்த வழக்கானது வவுனியா நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டது. குறித்த வழக்கு தொடர்பாக சிவசேனை அமைப்பின் வன்னி பிராந்திய இணைத்தலைவர் தமிழ்த்திரு மாதவன் ஊடகங்களுக்கு கூறுகையில்,

வெடுக்கு நாறிமலை ஆலய தலைவர், செயலாளர், பொருளாளர், பூசகர் குறித்த வழக்கிற்கு சமூகம் அளித்திருந்தார்கள். சட்டத்தரணி தயாபரன் தலைமையிலான எட்டு சட்டதரணிகள் குழாம் இதற்கு ஆதரவாக ஆஜராகியிருந்தார்கள். குறித்த வழக்கில் நெடுங்கேணி பொலிஸாரை விசாரணைக்குட்படுத்தப்பட்டது. அதில் பொலிஸ் சாஜனிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் குறித்த பிரச்சினைக்கு அரசியல் தலையீடே காரணம் என கூறியிருந்தார்.

அத்தோடு குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆலய நிர்வாகத்தினர், பூசகர் இதற்கு காரணம் இல்லை எனவும் குறித்த ஆலயத்தில் பூசைக்கு தடையில்லை எனவும் , இதற்கு காரணமான உண்மையான குற்றவாளி யார் என்பதை வருகின்ற 13.10.2022 ஆம் திகதிக்கு முன்பதாக நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறும் பொலிஸாருக்கு வவுனியா நீதிமன்ற நீதவானால் உத்தரவு பணிக்கப்பட்டிருந்தது.

அத்தோடு எமது ஆலயங்களில் சில அரசியல் நடத்துவதே குறித்த பிரச்சினைக்கான காரணம். எமது ஆலயங்களின் வழக்கத்தின்படி ஒரு ஆலயத்தில் நித்திய பூஜைகள் கட்டாயம் நடைபெற வேண்டும் அதற்கு எந்த தடையும் இல்லை அபிவிருத்தி பணிகளை செய்வதற்கே தடை செய்யப்பட்டுள்ளது. தொல்பொருள் திணைக்களத்தின் விளம்பரப் பலகை இதையே கூறுகின்றது எனவும் கூறியிருந்தார்.