இலங்கையின் ஜனாதிபதியாக ஆறு மாதங்களுக்கு கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணாண்டோ பரிந்துரையொன்றை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ஹரீன் பெர்ணாண்டோ, அடுத்த ஒராண்டிற்கு தாம் வேதனத்தை பெறாமல் பணியாற்றுவதாக கூறியுள்ளமை சமூக வலைத்தளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
மக்கள், நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் ஒரே மாதிரியாகவே பார்க்கின்றனர். அனைவரும் திருடர்கள் என்றே அவர்கள் கருதுகின்றனர். எனினும் இரண்டு பக்கங்களிலும் நல்லவர்களும் இருக்கின்றார்கள். ஏன் எமக்கு தற்போது இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது. எம்மால் குழுவாக ஒன்றிணைய முடியாதுள்ளது. மக்கள் வீதிகளில் மரணிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகினால், என்ன செய்வது? யார் ஆட்சியை வழிநடத்துவது? அரசியலமைப்பில் அதற்கான ஏற்பாடுகள் உள்ளன.
இடைக்கால அரச தலைவரை நியமிக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்துவரும் நிலையில், தேர்தலை நடத்த முடியுமா? அனைவரும் ஒன்றிணைவது, முதலாவதாக நடைபெற வேண்டிய ஒன்று. அந்த ஒன்றிணைவு என்பது உளமார்ந்ததாக இருக்க வேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்து, ஆறு மாதங்களுக்கு ஹர்ஷ டி சில்வாவிடம் ஜனாதிபதி பதவியை கையளியுங்கள். எமது தலைவர் ஜனாதிபதி பதவியை கோரப் போவதில்லை. அதன்பின்னர் தேர்தலை பார்ப்போம்.
நாட்டிற்கு ஏதாவது செய்யும் ஒருவர் வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் நன்மதிப்பை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் செய்ய வேண்டிய ஒன்று உள்ளது. எனக்கு ஒரு வருடத்திற்கு சம்பளம் வேண்டாம். நான் யோசனை ஒன்றை முன்வைக்கின்றேன். சிற்றுண்டிச் சாலையில் நான் உணவருந்த மாட்டேன். நாம் மாற்றமொன்றை கொண்டுவர வேண்டும். மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்காமல் இருப்பதற்கு செய்ய வேண்டிய விடயங்கள் உள்ளன.
மக்கள் துன்பத்தில் இருக்கும் போது இவ்வாறு இரண்டரை இலட்சம் சலுகையை பெறுவதில் எந்தவொரு பயனும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.