ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

“அனைத்து அமைச்சுக்களின் செலவுகளும் குறைந்தது ஐந்து வீதத்தால் குறைக்கப்பட வேண்டும்.”- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

இந்த வருடத்தில் செலவுகளை ஐந்து வீதத்தால் குறைக்குமாறு அனைத்து அமைச்சரவை அமைச்சுக்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

நேற்றைய வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது, ​​2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக மதிப்பிடப்பட்ட ஒதுக்கீட்டில் ஐந்து வீதத்தினால் செலவினங்களைக் குறைக்குமாறு ஜனாதிபதி விக்ரமசிங்க அனைத்து அமைச்சுக்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் ஏற்பட்ட தவறுகள் காரணமாக, அரச துறை ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளை வழங்குவதற்கு கூட நிதியை பெறுவதில் இலங்கை சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதன்படி அனைத்து அமைச்சுக்களின் செலவுகளும் குறைந்தது ஐந்து வீதத்தால் குறைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

“இலங்கைக்கு வழங்கப்படும் நிதிகள் நட்டங்களை ஈடுசெய்வதற்கு பயன்படுத்தக்கூடாது என்பதே நிதி வழங்குபவர்களின் முக்கிய கரிசனை.“- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

இலங்கை மின்சாரசபையின் நிலைமை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தை விட மோசமாக உள்ளது என தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸை தனியார் மயப்படுத்துவதே ஒரே வழி என தெரிவித்துள்ளார்.

தனியார் மயப்படுத்துவதற்கு அல்லது மறுசீரமைப்பதற்கு அரசாங்கம் பல நிறுவங்களை அடையாளம் கண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனியார் மயப்படுத்தப்படவுள்ள மறுசீரமைக்கப்படவுள்ள அரசநிறுவனங்களின் பங்குகளை வைத்திருப்பதற்காக இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் புதிய நிறுவனமொன்று ஏற்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வழங்கப்படும் நிதிகள் நட்டங்களை ஈடுசெய்வதற்கு பயன்படுத்தக்கூடாது என்பதே நிதி வழங்குபவர்களின் முக்கிய கரிசனை என தெரிவித்துள்ள ஜனாதிபதி நிதி வழங்கும் சமூகத்தினர் தாங்கள் வழங்கும் நிதியை சுகாதார உற்பத்தி துறைகளில் பயன்படுத்தவேண்டும் என விரும்புகின்றனர் இதன் காரணமாக நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை அரசாங்கம் தொடர்ந்தும் கொண்டுசெல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.அரசதுறையைஅரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பது தொடர்பான உத்தேச திட்டம் குறித்து அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பது தனியார் மயப்படுத்துவது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் எதிர்கொண்டுள்ள நஷ்டங்கள் காரணமாக அதனை தனியார் மயப்படுத்துவதே ஒரே வழி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இழப்புகளை சரிசெய்வதற்கு வேறு வழியில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி அதன் நஷ்டத்தினை சரிசெய்வதற்கு செலவு பிரதிபலிப்பு விலைப்பொறிமுறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தை பொறுத்தவரை கடனே அதன் பிரச்சினை கடனை திருப்பி செலுத்துவதற்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் ஐந்துவருடங்களை கோரியுள்ளது எனவும் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கை மின்சாரசபையின் நிலைமை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தை விட மோசமாக உள்ளது 200 பில்லியனிற்கும் மேல் நஷ்டம் என மதிப்பிடப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வட்டை அதிகரிப்பதா அல்லது மின்கட்டணத்தை அதிகரிப்பதா என்ற இரண்டில் ஒன்றை தெரிவு செய்யவேண்டியுள்ளது. மின் உற்பத்திக்காக நுரைச்சோலை மின் நிலையத்திற்கு நிலக்கரியை வழங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை.

இலங்கை மின்சார சபைக்கான திட்டங்கள் குறித்து பதிலளித்துள்ள ஜனாதிபதி அதற்கான திட்டங்கள் இடம்பெறுகின்றன நாடு எதிர்கொண்டுள்ள அந்நிய செலாவணி பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு நாட்டிற்கான ஒரே வழி மறுசீரமைப்பே எனவும் தெரிவித்துள்ளார்.தனியார் மயப்படுத்தவேண்டிய மறுசீரமைக்கவேண்டிய நிறுவனங்களாக ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் இலங்கை மின்சாரசபை லங்கா ஹொஸ்பிட்டல் ஹில்டன் கொழும்பு ஸ்ரீலங்கா டெலிகோம் வோட்டர் எட்ஜ் ஆகியவை இனங்காணப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்தளமாக மாற்றப்படுகிறது இலங்கை ஜனாதிபதி மாளிகை – ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள உத்தரவு !

கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு பதிலாக கோட்டே பிரதேசத்தில் புதிய ஜனாதிபதி மாளிகையை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட பல விசேட இடங்களை பயன்படுத்த தீர்மானித்ததன் பிரகாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, கோட்டே பிரதேசத்தில் ஜனாதிபதி மாளிகையை நிறுவவும், தற்போது கொம்பனி வீதியில் உள்ள விமானப்படை தலைமையகத்திற்கு பொலிஸ் தலைமையகத்தை கொண்டு வரவும், வெளிவிவகார அமைச்சை வேறு இடத்திற்கு மாற்றவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்பிறகு, இந்தப் பகுதியை சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா தனது பதிலை ஜனவரி மாதத்திற்குள் அறிவிக்கும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா தனது பதிலை ஜனவரி மாதத்திற்குள் அறிவிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் செய்தி ஆசிரியர்களுடனான கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கான தனது திட்டத்தை இலங்கை தெரிவித்துள்ளதாகவும், இந்த மாதத்திற்குள் இந்திய அதிகாரிகளிடமிருந்து பதிலை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்காக கடனாளிகளுடன் உறுதிமொழிகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டதாகும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினை தீர்வு குறித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான மூன்றாவது சந்திப்பின் முடிவு என்ன..?

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு இடையில் தற்போது காணப்படும் அதிகாரங்களை செயற்படுத்துவற்கு செய்ய வேண்டிய விடயங்கள் குறித்து இன்றைய ஜனாதிபதியுடனான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பரிசீலித்து எதிர்வரும் 10 ஆம் திகதி முடிவை அறிவிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்ததாக, சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்திருந்த நிலையில், அதிபருடன் தமிழ்க் கட்சிகள் கலந்தரையாடல்களை மேற்கொண்டு வருகின்றன.

இதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றாவது தடவையாக இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

இன்றைய சந்திப்பில் பிரதமர் தினேஸ் குணவர்தன, அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ச மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்துகொண்டுள்ளதுடன், கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

அடுத்த சந்திப்பு ஏனைய தமிழ்க் கட்சிகளையும் உள்ளடக்கி எதிர்வரும் 10 அம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமது இறுதி நிலைப்பாடு குறித்து எதிர்வரும் 10 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளிலும் தான் ஈடுபடப் போவதில்லை – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளிலும் தான் ஈடுபடப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விடயம் தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களை நேற்றைய தினம் (3) சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் இரண்டு வருடங்களில் நாட்டை அபிவிருத்தி பாதைக்கு கொண்டு செல்வதற்கே தனக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல்களில் ஈடுபட தனக்கு ஆணை வழங்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தனக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையை மீறி செயற்படுவதற்கு தான் தயார் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானிக்கும் பட்சத்தில், தமது கட்சியின் மரபுக்கு அமைய, செயற்குழுவின் தலைவராக மாத்திரமே தான் தலைமை தாங்க தயார் எனவும் அவர், கட்சியின் தலைவர்களிடம் கூறியுள்ளார்.

அத்தோடு, உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பிலான எந்தவொரு நடவடிக்கைகளிலும் ஈடுபடப் போவதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றது.

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானிக்குமானால், 40 வீதமான புதுமுக வேட்பாளர்களை களமிறக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

2023 முடிவதற்குள் நாட்டை மீட்டெடுப்பேன் – ஜனாதிபதி ரணில்

2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கும் புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தி, முழு அரசாங்கமும் ஒரே பொறிமுறையாகச் செயல்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.​

இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அரச ஊழியர்கள் தமது பணிகளை ஆரம்பித்து உறுதிமொழி மேற்கொள்ளும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

நமது பணி நேரம் 8 மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்படுவதில்லை. நமது பணிகள் வாரத்தில் 5 நாட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படுவதில்லை.

உங்கள் அனைவரின் ஆதரவுடன் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டை வழமைக்கு கொண்டு வர எதிர்ப்பார்த்துள்ளதுடன் இந்நாட்டை முன்னேக்கி கொண்டு செல்லவும் எதிர்ப்பார்த்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.

“மாகாணங்களுக்கான அதிகாரங்கள் அனைத்தும் மீளவும் மாகாண சபைகளிடம் கையளிக்கப்பட வேண்டும்.”- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தினால் இல்லாது செய்யப்பட்ட மாகாணங்களுக்கான அதிகாரங்கள் அனைத்தும் மீளவும் மாகாண சபைகளிடம் கையளிக்கப்பட வேண்டும் என்ற விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மேலும், நடைமுறைச் சாத்தியமான வழிமுறையை ஏற்றுகொண்டு வெளிப்படைத் தன்மையுடன் செயற்படக் கூடிய தமிழ் தரப்புக்களுடன் இணைந்து, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை தொடர்பான விடயத்தில் செயற்படுவதற்கு தயாராக இருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடனான கலந்துரையாடல் தொடர்பாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், குறித்த கலந்துரையாடலில் அமைச்சரவை உப குழுவின் பிரதிநிதி என்ற அடிப்படையிலும் அரசியல் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையிலும் இரட்டை வகிபாகத்தினை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டகளஸ் தேவானந்தா, 13 ஆம் திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்ட போது மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மீளவும் கையளிக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து முன்னோக்கி நகர வேண்டும் என்று கடந்த 35 வருடங்களாக ஈ.பி.டி.பி. வலியுறுத்தி வருகின்ற வழிமுறையையே தற்போது ஏனைய தரப்புக்களும் வலியுறுத்தி வருகின்றமை தன்னுடைய அரசியல் பயணத்திற்கு கிடைத்த வெற்றி எனவும் தெரிவித்துள்ளார்.

” இனப்பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தை இலங்கைக்குள்ளேயே நடைபெறவேண்டும்.” – எரிக் சொல்ஹெய்ம்

இனப்பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு தாம் மத்தியஸ்தம் வகிக்கப் போவதில்லை என ஜனாதிபதியின் சர்தேச காலநிலை ஆலோசகரும் நோர்வையின் முன்னாள் விசேட சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு நோர்வே மாத்திரமல்லாமல் வேறு எந்தவொரு மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தமும் தற்போது தேவை இல்லை என எரிக் ஹொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.

இனப்பிரச்சினைக்கு உள்ளக ரீதியில் தீர்வு காண்பதற்கான சூழ்நிலைகள் தற்போது உருவாகியுள்ளதாகவும் அதன்படி பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து நிரந்தர தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை பல்லின அடையாளங்களை கொண்ட நாடு என்பதால் அனைத்து இனங்களின் அபிலாஷைகளும் பூர்த்தி செய்யப்படும் வகையில் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

“சிங்கள மக்கள் மத்தியில் மனமாற்றம் ஏற்பட்டுள்ளதால் ஜனாதிபதி ரணிலுடன் பேசத்தயாராகியுள்ளோம்.” – எம்.ஏ.சுமந்திரன்

இன்று நாட்டில் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு விதமான மன மாற்றம் தென்படுகின்றது. இதனை நாங்கள் சாதகமாக பயன்படுத்தி எமது மக்களது பிரச்சினையை தீர்க்க வேண்டிய காலம் கனிந்து இருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

 

திருக்கோவிலில்  நேற்று (17) இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பிலேயே இதை தெரிவித்தார் .

தொடர்ந்து பேசுகையில்,

ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருக்கின்றார். நிச்சயம் நாங்கள் அதில் கலந்து கொள்கின்றோம். அங்கு தமிழ் மக்களுக்கான நிரந்தரதீர்வு என்ன என்பதை தெளிவாக கூறவிருக்கிறோம்

இன்று நாட்டில் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு விதமான மன மாற்றம் தென்படுகின்றது. இதனை நாங்கள் சாதகமாக பயன்படுத்தி எமது மக்களது பிரச்சினையை தீர்க்க வேண்டிய காலம் கனிந்து இருக்கின்றது.

அரசுடன் பேசாமல் எதுவும் செய்ய முடியாது. அங்கு நமது தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வு பற்றி தெளிவாக எடுத்துரைப்போம்.

அதாவது  வடக்கு கிழக்கிலுள்ள   தமிழ் மக்கள் சரித்திரமாக வாழ்ந்து வருகின்ற பிரதேசத்தில் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டி கட்டமைப்பில் அதி உச்ச அதிகார பகிர்வு தரப்பட வேண்டும்.

இதுவே எமது தெளிவான தீர்க்கமாக முடிவாக இருக்கின்றது. இதனை நாங்கள் ஜாதிபதியிடம் நிச்சயம் தெளிவுபடுத்த இருக்கின்றோம். ரணிலை நம்புவதா நம்பாமல் விடுவதா என்பதெல்லாம் இப்பொழுது பிரச்சனை அல்ல.

எமது தீர்வை அங்கு சொல்ல வேண்டும். அதற்கு அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது தான் இப்பொழுது பிரச்சனை. கடும் சிங்கள தேசியவாதம் உருவாகின்ற பௌத்த சம்மேளனம் போன்ற அரங்குகளில் நாங்கள் சமஷ்டி பற்றி பேசி இருக்கின்றோம். அவர்கள் அதனை மௌனமாக ஏற்றுக் கொண்டார்கள் .

இந்த நாட்டிலே தேர்தல் மூலமாக மட்டுமே ஆட்சி மாற்றம்  இடம் பெற்றது. தேர்தல் இன்றி எந்த ஆட்சி மாற்றமும் இதுவரை இடம் பெறவில்லை . ஆனால் அண்மையில் காலிமுகத்திடலில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டம் சரித்திரத்தில் இடம் பெற்றது. ஆம் அசைக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு மேல் இருந்த கோட்டா முதல் மொட்டு அரசாங்கம் வரை கவிழ்த்து விட்டது.

1960 களில் இராணுவ புரட்சி இடம்பெற்றது. அது கைவிடவில்லை. 1971களில் ஜே.வி.பி. புரட்சி ஏற்பட்டது. அதுவும் கைகூடவில்லை.1988 களில் ஆயுதம் தூக்கி போராடினார்கள். அதுவும் கைகூடவில்லை. இடையிலே எமது இளைஞர்கள் பெருநிலப்பரப்பை தனது கட்டுப்பாட்டுக்குள் சில தசாப்தங்கள் வைத்திருந்து போராடினார்கள். அதுவும் கைகூட வில்லை .

ஆனால் இந்த வருட நடுப்பகுதியில் கொழும்பிலே இடம்பெற்ற போராட்டம் என்பது பல வெற்றிகளை தந்து இருக்கின்றது .

2009 நவம்பரில் 69 லட்சம் வாக்குகளை பெற்று வந்த ஜனாதிபதி கோட்டபாய நாட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்டார் .அதன் பின்பு அந்த பொதுத் தேர்தலிலே 68 லட்சம் வாக்குகளைப் பெற்று பெரும்பான்மை அரசை அமைத்த அந்த அரசும் கவிழ்ந்தது .ஆகவே அந்தப் போராட்டத்தை நாங்கள் சாதாரணமாக நோக்கக்கூடாது .

இது ஒரு பாடம். இலங்கைக்கு தேர்தல் மூலமாக இல்லாமல் ஒரு போராட்டம் மூலமாக ஆட்சி அமைக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இது என்பதை நாங்கள் மறந்து விடக்கூடாது.

நான் பாராளுமன்றத்தில் இப்பொழுது  சமஸ்டி பற்றி பேசுகின்றேன். யாரும் வாய்திறப்பதில்லை. அன்று சமஸ்டி என்றால் கூக்குரலிடுவார்கள்.

ஆனால் இன்று அதனை கூறுகின்ற பொழுது அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ ஒரு மௌனத்தோடு கவனிக்கிறார்கள். அவர்கள் மத்தியிலும் அந்த மாற்றம் தென்படுகின்றது.

எனவே நம்பிக்கையோடு பேச்சுவார்த்தையை நாங்கள் எதிர்கொள்வோம். என்றார்.