ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

“உலகின் வல்லரசுகள் பக்கம் நிற்காது அணிசேரா நிலைப்பாட்டிலிருந்தே செயற்படுகிறது.”- ஜனாதிபதி ரணில்

உலகின் வல்லரசுகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை எந்தவொரு அணியுடனும் ஒத்திசைந்து செயற்படவில்லை. மாறாக சுயாதீனமான அணிசேரா நிலைப்பாட்டிலிருந்தே செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தியத்தலாவை இராணுவ பயிற்சி முகாமில் பயிற்சிகளை நிறைவு செய்த இராணுவ சிப்பாய்களுக்கு பதக்கமளிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிடுகையில்,

இராணுவத்தில் தலைவர்கள் என்ற ரீதியில் ஏனைய இராணுவ வீரர்களையும் அதே போன்று நாட்டையும் பாதுகாக்கும் பொறுப்பு உங்களுக்கு காணப்படுகிறது. நாட்டுக்காக நாட்டின் தலைவராக நான் உங்களுக்கு அந்த பொறுப்கை வழங்கியுள்ளேன். எனவே நாட்டை பாதுகாப்பது உங்களது பொறுப்பாகும்.

நாட்டைப் போன்றே நாட்டின் அரசியலமைப்பையும் பாதுகாக்க வேண்டும். அதன் மூலமே நாட்டை பாதுகாக்க முடியும். நாட்டை அந்நியர்களிடமிருந்தும் பாதுகாக்க வேண்டும். இவ்விரு காரணிகளுமே உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதனை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்றுவீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் உங்களுக்கு பயிற்றுவித்த நிறுவனத்தின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டும். அந்த நற்பெயரை மேலும் மேம்படுத்துங்கள். அதே போன்று நீங்கள் இணையும் இராணுவத்தின் கௌரவத்தையும் நற்பெயரையும் பாதுகாக்க வேண்டும் என்றும் உங்களுக்கு நினைவுபடுத்துகின்றேன்.

இந்து சமுத்திரத்தில் எமது நாடு ஒரு சிறிய தீவாகும். நாம் உலக சக்திகளுடன் ஒவ்வொரு குழுவில் இணையவில்லை. எந்தவொரு குழுவுடனும் , உலக சக்திகளுடன் ஒப்பந்தங்களை செய்து கொள்ளப் போவதில்லை. உலகில் தனி நாடாகக் காணப்படுகின்றோம். எம்மைப் போன்று சிறிய தனித்துள்ள நாடுகள் பல உள்ளன. இவ்வாறிருக்கும் போது ஏனைய நாடுகளுடனான நட்புறவை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு காணப்படுகிறது.

உங்களின் பொறுப்பு நாட்டை பாதுகாப்பதாகும். உள்ளக மற்றும் வெளிக்கள சவால்களுக்கும் முகங்கொடுக்க வேண்டும். ஐ.நா. இராணுவம் உள்ளிட்ட ஏனைய தரப்பினருடனும் இணைந்து சேவையாற்ற வேண்டியுள்ளது. நீங்கள் இணையும் இராணுவம் யுத்த அனுபவம் கொண்டதாகும். இரு தசாப்தங்களுக்கும் அதிக காலம் யுத்தத்தில் ஈடுபட்டு , ஒழுக்கமும் அனுபவமும் பெற்ற இராணுவமாகும்.

இன்று ஐ.நா.விற்காக மாலி நாட்டின் இராணுவத்துடன் இணைந்து சேவையாற்றும் இராணுவமாகும். இவ்வாறானதொரு இராணுவத்திலேயே நீங்கள் இணைகின்றீர்கள். இவ்வாறான இராணுவத்தில் தலைமைத்துவத்தை ஏற்பதற்கு நீங்கள் பலம் மிக்கவர்களாக இருக்க வேண்டும். பலமற்றவர்களாக இருந்தால் இராணுவத்துடன் இணைந்து செயற்படுவது கடினமாகும்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சவால்கள் ஏற்படும் பட்சத்தில் அவற்றை ஏற்று புத்தி கூர்மையுடன் செயற்பட வேண்டும். அச்சமின்றி முன்னோக்கிச் செல்வதற்கான சக்தி காணப்பட வேண்டும். நாடு உங்களிடம் கொண்டுள்ள எதிர்பார்ப்பினை நிறைவேற்றுங்கள் என்றார்.

“பசிக்கு கட்சியோ, நிறமோ இல்லை என்பதால் இணைந்து பணியாற்ற முன்வாருங்கள்.”- ஜனாதிபதி ரணில் !

பசிக்கு கட்சியோ, நிறமோ இல்லை என்பதனால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள வலிமையான நாடு என்ற அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து, உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதிப்படுத்தும் வகையில் கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுவூட்டும் பல்துறை கூட்டுப் பொறிமுறையின் கீழ் பதுளை மாவட்டத்துக்கான வேலைத்திட்டத்தில் நேற்று (15) இணைந்துகொண்டபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பதுளை மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டில் உரம் மற்றும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவிய நேரத்திலும், எந்த நாடும் எமக்கு கடன் வழங்க முன்வந்திராத நிலையிலுமே நாம் இந்த உணவுப் பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்கினோம்.

2023 ஆம் ஆண்டு உணவுப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு முகங்கொடுப்பதற்காகவே உணவுப் பாதுகாப்பு திட்டத்தை நாம் தொடங்கினோம். ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் இந்த வேலைத்திட்டத்தின் அமுலாக்கம் பற்றி மீண்டும் மீளாய்வு செய்யப்பட வேண்டுமென நான் பரிந்துரைக்கிறேன். அப்போது உங்களுக்கு புதிய தரவுகள் கிடைக்கலாம். அதன்படி, உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை முறையான முறையில் மேற்கொள்வோம். இந்த திட்டம் 2023க்கு பின்னரும் முடிவடையாது. அதை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம்.

பிரதேச சபைகளில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் உள்ளனர். எனினும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

எவ்வாறாயினும் விவசாயிகளுக்குத் தேவையான உரங்களை நாம் வழங்கி வருகின்றோம். இம்முறை பெரும்போகம் வெற்றி பெற்றுள்ள அதேநேரம் எதிர்காலத்தில் எமக்கு மேலதிக அரிசி கையிருப்பும் கிடைக்கும்.

அங்கே போதிய களஞ்சிய வசதிகள் இல்லாமைக் குறித்தும் கண்டறிந்துள்ளோம். அப்பிரச்சினைகளைத் தீர்க்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அதற்கிடையே நெல்லுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்கவும் நாம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.

பதுளை மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய முடியும். அதற்குத் தேவையான வேலைத்திட்டத்தையும் நாம் தயாரித்து வருகிறோம்.” என குறிப்பிட்டார்.

தமிழ் அரசியல் கைதிகளை முழுமையாக விடுதலை செய்ய வேண்டும் – சபையில் மனோகணேசன் கோரிக்கை!

“தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் பொது மன்னிப்பின் பேரில் ஒரே தடவையில் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ள வேண்டும்.” என மனோ கணேசன்  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (டிச. 08) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு, மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு விடயதானங்களுக்கான  நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்நது தெரிவிக்கையில்,

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தெரிவிக்கும்போது, இன்னும் 40 பேரே அவ்வாறு சிறைச்சாலைகளில் உள்ளதாகவும் அவர்கள் தொடர்பான விசாரணைகள் சம்பந்தமாகவும் தெரிவித்தார்.

எனினும் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்களை கட்டங்கட்டமாக அல்லாமல் ஒரே தடவையில் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்க முடியும். அத்தகைய நம்பிக்கையளிக்கும் நடவடிக்கைகள் மூலமே தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியும்.

ஏற்கனவே கடந்த தீபாவளியின் போது எட்டுப் பேரை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தது போன்று எதிர்வரும் பொங்கல் தினத்திலும் மேலும் சிலரை விடுதலை செய்யுமாறு நாம் அவரிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.

அதேவேளை அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் பொது மன்னிப்பின் பேரில் ஒரே தடவையில் விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும்.

அத்துடன் வரவு -செலவுத் திட்டத்தில் மலையக தோட்டப்பகுதி மக்கள் தொடர்பில் எத்தகைய வேலை திட்டங்களும் முன் வைக்கப்படவில்லை.

தற்போதைய நிலைமையில் நிவாரணங்களை வழங்க முடியாது என்றாலும் குறைந்தபட்சம் அது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றாவது குறிப்பிட்டிருக்க வேண்டும்.

நாட்டில் உணவுப் பாதுகாப்பு தொடர்பில் பேசப்படும் நிலையில், கிராமப் புறங்களில்  அது 36 வீதமாகவும் நகர்ப்புறங்களில் அது 46 வீதமாகவும் காணப்படுவதுடன் மலையகத் தோட்டப்புறங்களில் அது 53 வீதமாகவும் காணப்படுகின்றது.

அது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்துவதுடன் தோட்டப் பகுதி மக்களுக்காக அரசாங்கம் எத்தகைய திட்டத்தை முன்னெடுக்கப் போகின்றது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

அதேபோன்று கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சமுர்த்தி உதவி வழங்குவது முறைப்படுத்தப்பட வேண்டும் அதற்காக தற்போதுள்ள சமுர்த்தி பட்டியலை நீக்கிவிட்டு மின் கட்டண பட்டியலை வைத்து அதற்கான செயற் திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் நியாயமானதாக அமையும் என்பதால் அதையே மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார்.

“நாட்டை விட்டு வெளியேறாதீர்கள். நாட்டை மீட்டெடுப்போம்.” – இளைஞர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை!

“நாடு நிச்சயமாக பொருளாதார சுபீட்சத்தை நோக்கி நகரும் என வலியுறுத்திய அதிபர், தாய் நாட்டை விட்டு யாரும் வெளியேறத் தேவையில்லை.” என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் தொடர்பில் கடந்த 3ஆம் திகதி இளைஞர்களுடன் நடந்த இணையத்தள உரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதேரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

 

தமது நாட்டில் தமக்கான உலகத்தை உருவாக்குவது இளைஞர்களின் பொறுப்பாகும் என்றும் அதுவே உண்மையான திறமை.

2025 ஆம் ஆண்டளவில் வளமான பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு இளைஞர்கள் பங்களிக்க வாய்ப்பு இருக்கிறது.

அன்று ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்தபடியாக இலங்கை இருந்தது. ஆனால் இன்று நாட்டின் பொருளாதாரம் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு அதிகரித்துள்ளது.  தற்போதுள்ள அரசியல் அமைப்பில் அவர்கள் மகிழ்ச்சியடையாததே இதற்குக் காரணம்.

இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி நாட்டிற்கு பொருத்தமான பொருளாதார அமைப்பை விரைவாக அமைக்க வேண்டும்.  கடந்த ஓகஸ்ட் மாதம் கொண்டு வரப்பட்ட இடைக்கால வரவு செலவுத்திட்டத்தின் மூலம் நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு கொண்டு வர முடிந்தது.

இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் நாடாளுமன்ற வரவு – செலவுத் திட்ட அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி ஒரேயடியாக ஏற்படவில்லை. நாடாளுமன்றத்தில் பல விவாதங்கள் இடம்பெற்ற போதிலும் அவ்வாறானதொரு பொருளாதார நெருக்கடி குறித்த அறிக்கையை எவரும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக விசேட வேலைத்திட்டமொன்றை வகுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனம் !

விசேட தேவையுடையவர்களின் நலனுக்காக புதிய வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

விளையாட்டு, சுகாதாரம், இளைஞர் விவகாரம் உள்ளிட்ட பல அமைச்சுக்களின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்படும் இப்புதிய வேலைத்திட்டத்தை விரைவில் அமைச்சரவையில் சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

2022 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு இன்று (03) முற்பகல் அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

பல்வேறு திறன்களைக் கொண்ட விசேட தேவையுடையவர்கள் இருப்பதனால், அவர்களின் படைப்புத் திறமைகளை நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்காக திறம்பட பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

அரச நிறுவனங்களில் விசேட தேவையுடையோரின் நலன் தொடர்பில் நிலவும் குறைபாடுகள் குறித்து கவனத்திற்கு கொண்டு வந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், அது தொடர்பில் ஆராய்ந்து அத்துறைகளில் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

மாகாண சபைகள் கலைக்க ஜனாதிபதி ரணில் திட்டம்..? – ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பு !

மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களை ஸ்தாபிக்க ஜனாதிபதி தயாராகி வருவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்த பதில், அர்த்தத்தை சிதைக்கும் விதத்தில் பல ஊடகங்களில் செய்திகளாக வெளியாகியுள்ளன என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும் 2023ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மாகாண சபைகளில் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களை ஸ்தாபிக்கத் தயார் எனத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுதவிர மாகாண சபைகள் கலைப்பு தொடர்பாக ஜனாதிபதி எந்த கருத்தையும் வெளியிடவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிறைவேற்றுத் தீர்மானங்களை அமுல்படுத்துவதில் அரசாங்கம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு இடையில் சரியான ஒருங்கிணைப்பைப் பேணுவதற்கான களமாக மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் செயற்படும் என்பதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நிலைப்பாடாகும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம், வளர்ச்சிப் பணிகள் முறையாக நடைபெறுவதுடன், நிதி வீண்விரயம் மற்றும் தாமதங்கள் தவிர்க்கப்படும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“வடக்கிலுள்ள இந்து மதக்கடவுளரை தெற்கில் உள்ள மக்களும் வழிபடுகின்றனர்.”- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கையில் இந்து மதத்தின் தனித்துவத்தை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (29) உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் பேசிய அவர்,

இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கையில் இந்து மதத்தின் தனித்துவத்தை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும். இந்துக்கள் மட்டுமன்றி பௌத்த விகாரைகளிலும் இந்துமதத்தின் பல தெய்வங்களை வழிபடுகின்றார்கள்.

உதாரணமாக யாழ்ப்பாணத்தில் சிவ வழிபாடு பொதுவானது. தெற்கில் விஸ்ணு கடவுளை வழிபடுகின்றனர். ஏராளமான இந்து தெய்வங்களை தெற்கில் வழிபடுகின்றனர். விஸ்ணு, கந்தன், பத்தினி உள்ளிட்ட பல தெய்வங்களை வழிபடுகின்றனர். இந்தியாவில் உள்ள இந்து மதத்தைவிட இலங்கையில் உள்ள இந்து மதத்தின் தனித்துவம் குறித்து ஒரு அறிக்கையை தொகுக்குமாறு அமைச்சரைக் கேட்டுக்கொள்கின்றேன்.

ஏனைய கட்சிகள் இதற்கு உதவ முடியும். வட இந்தியாவிற்கும், தென் இந்தியாவிற்கும் உள்ள வித்தியாசத்தையும் நீங்கள் காணலாம். இது நாம் செய்ய வேண்டிய ஒன்று. அதேபோல், இலங்கை வரலாற்று ஆய்வு நிறுவனமொன்றை ஸ்தாபிக்க வேண்டும். நாம் வரலாற்றை மறந்துவிடுகிறோம். எனவே, வரலாறு குறித்த அறிவையும், ஆராய்ச்சியையும் முன்னெடுப்பதற்காக இந்த நிறுவனம் செயற்பட வேண்டும். மகாவம்சத்துடன் நாம் அறிந்த வரலாற்றில் பெரிய வித்தியாசம் இருக்கிறது. மகாவம்சத்தில் உள்ள திகதிகளை மாற்ற முடியாது. மகாவம்சத்திலும் ஒரு தரப்பினரின் கருத்துக்களே இருக்கின்றன. வெளியே வேறுகருத்துக்களும் இருக்கின்றன. இவற்றை கருத்திற்கொண்டு இலங்கை வரலாற்று ஆய்வு நிறுவனமொன்றை ஏற்படுத்த வேண்டும்.” என கூறியுள்ளார்.

ஒரு மாணவர் மருத்துவ படிப்பை இலவசமாக படிக்க 60 லட்சம் ரூபாயை அரசு செலவிடுகிறது – வெளிநாடு செல்லும் மருத்துவர்கள் குறித்து ஜனாதிபதி ரணில் விசனம் !

இலங்கையில் பல இலட்சங்களை செலவழித்து படித்து வெளிநாடு செல்லும் மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர்கள் குறித்து ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு மாணவர்கள் வெளிநாடு செல்லும் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் கலந்துரையாடி ஏதாவது விடை காண வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கையில் தங்கியிருந்து மருத்துவ படிப்பை முடிக்கவே மாணவன் ஒருவருக்கு இலங்கை அரசாங்கம் அறுபது இலட்சம் ரூபாய் செலவழிப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு பயிற்சி பெற்று வெளிநாடுகளுக்கு செல்லும்போது அந்த நாடுகள் எமக்கு வழங்கும் உதவிகளை விட அந்த நாடுகளுக்கு நாம் செய்யும் உதவிகளே அதிகம் என தெரிவித்தார்.

எனவே எவ்வாறான அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் இந்த பிரச்சினை பாதிக்கும் எனவும் இந்த பிரச்சினைக்கான பதிலை நாம் காண வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இலங்கைக்கு சீனா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் – சீன தூதுவர்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கைக்கான சீன தூதுவர் குய் ஜென்ஹொங்க்கும் இடையில் சந்திப்பொன்று இன்று (25) இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடி குறித்து இரு தரப்புக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு சீனா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என சீன தூதுவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்தார்.

சீனா தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்களில் வெளியாகும் பொய்யான தகவல்களை கண்டிப்பதாகவும் சீன தூதுவர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் கூறியதையிட்டு அவமானப்பட வேண்டும்.”- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

காலி முகத்திடல் போராட்ட களத்தில் தாக்குதல் நடத்தப்பட்டமை முழுமையாக மறைக்கப்பட்டுள்ளது. ஜனநாயக போராட்டத்தில் ஈடுப்படுபவர்களின் பாதுகாப்பை எதிர்க்கட்சிகள் உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24)  இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்  பாதுகாப்பு  அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொழில்நுட்ப அமைச்சு  ஆகியவற்றின் மீதான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்ட கருத்து முற்றிலும் தவறானது. அவர் 8 வருடகாலமாக பல்கலைக்கழக பட்டப்படிப்பை பூர்த்தி செய்யவில்லை என ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவி வகித்துக் கொண்டு குறிப்பிடுவது உயர்ந்த பதவிக்கு அழகல்ல.

நாட்டு மக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்யவில்லை. முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜக்ஷவுக்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிரான செயற்பாடுகள் மாத்திரம் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உயர் பதவி வகித்துக் கொண்டு ஒரு இளைஞனை நகைப்புக்குள்ளாக்கியதை அவமானமாக கருத வேண்டும்.

தனிப்பட்ட அரசியல் சித்தாந்தங்களை பின்பற்றும் உரிமை அனைவருக்கும் உண்டு. முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கு நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இன்று வசந்த முதலிகே உள்ளிட்டோர் பயங்கரவாத தடைச்சட்டத்தினால் தண்டிக்கப்பட்டுள்ளார்கள்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கொடுமையை தமிழ்கள் நன்கு அறிவார்கள். இதன் காரணமாகவே பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்கிறோம். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

காலி முகத்திடலில் தோற்றம் பெற்ற போராட்டம் வன்முறையற்றது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மே மாதம் பிரதமராக பதவியேற்ற போது காலி முகத்திடல் போராட்டம் பாதுகாக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார், அப்போராட்டம் பயங்கரவாதம் என அவர் அப்போது குறிப்பிடவில்லை. மே மாதம் 09 ஆம் திகதி போராட்டக்களத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தற்போது மறைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த சபையில் உள்ள ஆளும் தரப்பினரால் நாட்டு மக்களின் பொருளாதாரம், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, நெருக்கடிக்குள்ளான மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள். ஜனநாயக போராட்டத்தை எவ்வாறு பயங்கரவாத போராட்டம் என்று குறிப்பிடுவது. ஆகவே போராட்டத்தில் ஈடுப்படுபவர்களின் பாதுகாப்பை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.