ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

“கஞ்சாவின் மதிப்பை ஜனாதிபதி புரிந்து கொண்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.” – அமைச்சர் டயானா கமகே பூரிப்பு !

இலங்கையில் கஞ்சா பயிரிடுவது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று தெரிவித்துள்ளார்.

“இந்த மூலிகையின் மதிப்பை ஜனாதிபதி புரிந்து கொண்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பல வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய தொழில் இது. அதனால்தான் நான் அதை விளம்பரப்படுத்தினேன். அடுத்த ஆண்டு கஞ்சா உற்பத்தி மூலம் இரண்டு பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான முதலீட்டைக் கொண்டுவர எதிர்பார்க்கிறேன் என்றார்.

“தனியார் துறை ஊழியர்களுக்கு காப்புறுதித் திட்டம்.” – வரவு செலவு திட்ட உரையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க !

தனியார் துறை ஊழியர்களுக்கு காப்புறுதித் திட்டத்தை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே இந்த யோசனையை முன்வைத்தார்.

தனியார் துறையில் பணிபுரியும் போது பல்வேறு காரணங்களால் வேலையிழக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியுடன் இது மிகவும் சிக்கலான சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அங்கு, ஒரு காப்புறுதிக் கொள்கையை வழங்குவதற்கும், வேலை இழக்கும் வரையிலான காலத்துக்கு காப்புறுதி நிதியை நிறுவுவதற்கும் முன்மொழியப்பட்டதுடன் அதிகபட்சமாக மூன்று மாதங்களுக்கு வரையறுக்கப்பட்ட மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படலாம்.

மேலும், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அக்ரஹார மருத்துவக் காப்புறுதித் திட்டத்தின் மூலம் ஏராளமானோர் நிவாரணம் பெறுவார்கள் என்றும், தனியார் துறை ஊழியர்களுக்கும் இதுபோன்ற மருத்துவக் காப்புறுதி வழங்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, உத்தேச சுகாதார மற்றும் காப்புறுதித் திட்டங்களுக்காக ஊழியர் நம்பிக்கை நிதியத்திலிருந்து சில தொகைகளை ஒதுக்குவது பொருத்தமானது எனத் தெரிவித்தார்.

இதன்படி, ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் கீழ் இந்த இரண்டு புதிய முறைகளையும் உள்ளடக்கும் வகையில் ஊழியர் நம்பிக்கை நிதிச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

“75ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்திற்கு முன்னதாக தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தருவேன்.” – நாடாளுமன்றில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க !

வடக்கில் உள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு வெளிநாட்டுத் தலையீடுகள் இன்றி அடுத்த ஆண்டு 75ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்திற்கு முன்னதாக அமைதியான முறையில் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கை விடயத்தில் யாரும் தலையிட விரும்பவில்லை எனவும், இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து முன்னோக்கிச் செல்லும் திறன் இலங்கைக்கு இருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அடுத்த வாரம் நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றம் கூடும் நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் அல்லது நாட்டின் சட்ட அமைப்பை நவீனமயப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சகல சட்ட முறைமைகளையும் இந்த வருடமும் அடுத்த வருடமும் நவீனமயப்படுத்துவதற்காக பாராளுமன்றத்தில் முன்வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து சுமார் 50 – 60 கைதிகள் தப்பியோட்டம் – அறிக்கையை கோரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க !

பொலன்னறுவை வெலிகந்த – கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிக்கை கோரியுள்ளார்.

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்தே ஜனாதிபதியினால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்துமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் நேற்றுமுன்தினம் இரு குழுக்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டதோடு , இந்த சந்தர்ப்பத்தில் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து சுமார் 50 – 60 கைதிகள் தப்பியோடியுள்ளனர்.

குளிக்கும் போது இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே பின்னர் மோதலாகி , அங்கு பதற்றமான சூழல் ஏற்படக் காரணம் என ஆரம்பட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்தார்.

இவ்வாறு மோதலில் ஈடுபட்ட தரப்பினர் புனர்வாழ்வு மையத்தில் உள்ள ஆயுதக் களஞ்சியத்திற்குள் நுழைய முயற்சித்ததாகவும், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் ஆகயத்தை நோக்கி துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஏற்பட்ட கைலப்பினால் நான்கு கைதிகள் மற்றும் ஒரு இராணுவ சிப்பாய் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த எவருக்கும் பாரதூரமான பாதிப்புக்கள் ஏற்படவில்லை. மோதலில் ஈடுபட்ட கைதிகள் அனைவரும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி புனர்வாழ்வு பெற்று வருபவர்களாவர்.

தப்பிச் சென்றுள்ள கைதிகளை கைது செய்வதற்காக இராணுவத்தினரால் வீதித் தடைகளை அமைக்கப்பட்டு சோதனைகளும் , கண்காணிப்புக்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

“பருவ மழை பெய்கிறது. அது முடியட்டும் வடக்கு காணி பிரச்சினைகளுக்கு தீர்வு.” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

வடக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பருவ மழைக்காலம் நிறைவடைந்ததும் சாதகமான – தீர்க்கமான முடிவெடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பருவ மழைக்காலத்தின் பின்னர் காணிகளை விடுவிப்பது தொடர்பில் தீர்மானம் – டக்ளஸ்

வலி வடக்கு, மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்கு இன்றைய தினம் புதன்கிழமை சென்ற அமைச்சர் அங்கு கடற்றொழிலாளர்களுடனான சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்

“வடக்கு கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அபிலாஷைகளுக்கு தீர்வுகாணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் ஜனாதிபதி இந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.

பருவ மழை காலம் நிறைவடைந்ததும் நேரடியாக சம்மந்தப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்து தீர்க்கமான சாதகமான முடிவுகளை எடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளார். எனவே, கடந்த காலங்களில் தமிழ்த்தரப்புகள் விட்ட தவறுகள் என்னவென்றால் கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதே.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டிருக்காது.

தற்போது கிடைக்கும் சாதகமான வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு இனியாவது இருப்பதை பாதுகாத்துக்கொண்டு அதனை முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

பிரச்சினைகள் தீர்வை நோக்கி போகவேண்டுமேயொழிய அதனை குழப்பிக்கொண்டு போகும் நோக்கம் எனக்கில்லை” என அமைச்சர் தெரிவித்தார்.

வலி வடக்கு, மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கு முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளை பார்வையிட்டதுடன் பிரதேசக் கடற்றொழிலாளர்களினால் முன்வைக்கப்பட்ட அபிப்பிராயங்கள் தொடர்பில் ஆராய்ந்தது தேவையான ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கினார்.

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவு இல்லை.”- வீ. இராதாகிருஷ்ணன்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தற்போதைய சூழ்நிலையில் ஆதரவு வழங்காது என கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் பிளவுகள் ஏற்பட வேண்டும் என சிலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அவ்வாறு எந்தவொரு குழப்பமும் எங்களுக்குள் இல்லை. கூட்டணியாக இருந்தாலும் கருத்து சுதந்திரம் உள்ளது.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற தீபாவளி நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு எமக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கொழும்புக்கு வெளியில் இருந்ததால் நாம் பங்கேற்கவில்லை. கொழும்பில் இருந்த மனோ கணேசன் நிகழ்வில் பங்கேற்றார். தீபாவளி என்பது தமிழர்களின் பண்டிகை. அதற்கு அழைப்பு விடுத்தால் செல்ல வேண்டியது தமிழர்களின் மரபாகும்.

தீபாவளி நிகழ்வுக்கு சென்றதால் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்துக்கு ஆதரவு என்ற முடிவுக்கு வரக்கூடாது. அத்தகையதொரு தீர்மானத்தை இன்னும் நாம் எடுக்கவில்லை.

வெள்ளையர் அல்லாத இந்திய வம்சாவளி ஒருவர் இங்கிலாந்து பிரதமராக தெரிவாகியுள்ளார். இது பெருமைப்பட வேண்டிய விடயமாகும். பல தசாப்தங்களுக்கு முன்னர் வெள்ளையர்கள் எம்மை ஆண்டனர். அந்த மண்ணில் தெற்காசிய நாட்டவர் ஒருவர் வெள்ளையர்களை ஆள்வது மகிழ்ச்சி. இங்கிலாந்தில் இளம் பிரதமர் ஒருவர் பிரதமராக வந்திருப்பதுபோல, இலங்கையிலும் எதிர்காலத்தில் இளம் ஜனாதிபதி ஒருவர் தெரிவாக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குவது அத்தியாவசியமானது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குவது அத்தியாவசியமானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

The Economist சஞ்சிகைக்கு வழங்கிய நேர்காணலில், ஸ்ரீலங்கா விமான சேவையைத் தவிர, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் மற்றும் டெலிகொம் போன்ற நிறுவனங்களையும் தனியார்மயமாக்க முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பிரச்சினையாக உள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, 40 வருடங்களாக களத்தில் இருப்பவர்களுடன் கலந்துரையாடி புதிய முதலீடுகளுக்கான வாய்ப்புகளைத் திறந்து வைப்பதாகத் தெரிவித்தார்.

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதில் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பைப் பற்றி தாம் கவலைப்படப் போவதில்லை எனவும், தனக்கு மக்கள்தான் முக்கியம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

2024-2025 இல் நாடு பழைய நிலைக்குத் திரும்ப முடியும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார் . 2023 ஆம் ஆண்டின் ஆரம்பம் இலங்கையர்களுக்கு கடினமானதாக இருக்கும் எனவும், ஆனால் இந்த வருடத்தின் இறுதிக்குள் நிலைமை சீராகும் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார் .

பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்வதில் மீண்டும் வரிகளை அதிகரிப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நிகரான தலைவர் உலகில் இல்லை – வஜிர அபேவர்தன புகழ்ச்சி !

2020ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் விஞ்ஞாபனத்தை மக்கள் குப்பைத் தொட்டியில் வீசாமல் இருந்திருந்தால் நாடு இவ்வாறு குப்பைத் தொட்டியில் வீழ்ந்திருக்காது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கிராமம் கிராமமாக விநியோகிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் விஞ்ஞாபனத்தை மீண்டும் வாசிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்த வஜிர அபிவர்தன ,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நிகரான தலைவர் உலகில் இல்லை. ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்கினால் நிச்சயமாக நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்.  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடயங்களை ஒவ்வொன்றாக சரி செய்து வருவதாகவும் அதனால் ஜனாதிபதி மீதுள்ள நம்பிக்கை ஒவ்வொரு நொடியும் அதிகரித்து வருகின்றது. இன்று ரணில் விக்கிரமசிங்க ஒரு தேசிய பொக்கிஷமாக மாறியுள்ளதாகவும், ஆசியாவில் இலங்கையை உயர்ந்த இடத்திற்கு உயர்த்த தேசிய பொக்கிஷம் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.