அனுர குமார திசாநாயக்க

அனுர குமார திசாநாயக்க

“இனவாதமற்ற தேசிய ஒருமைப்பாடுக்காக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.” – யாழில் அனுரகுமார திஸ்ஸநாயக்க !

இனவாதமற்ற தேசிய ஒருமைப்பாடுக்காக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் எனவும் இலங்கையில் தமிழ் மற்றும் சிங்களம் தொடர்பில் காணப்படும் பிளவுகள் ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டதாகவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(04) நடைபெற்ற ஆசிரியர் சேவை சங்கத்தின் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 

அத்தோடு, இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக கூறி மக்களுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்காக தான் யாழ்ப்பாணத்துக்கு பயணத்தை மேற்கொள்ளவில்லை, எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

“ஆட்சியாளர்கள் நம்மை வேறு பிரிக்கும் அரசியலிலேயே தொடர்ந்தும் ஈடுபடுகிறார்கள், அரசியல் நலனுக்கான இனவாத அரசியலே அவர்களது முதன்மையான நோக்கமாக இருந்தது.

எமது மூதாதையர்கள் காலம் தொடங்கி அனைத்து ஆட்சியாளர்கள் இனவாதத்தை மக்கள் மனதில் விதைத்தார்கள்.இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் யுத்தத்தை எதிர்நோக்க வேண்டியிருந்தது.

 

இதனால் பாரியளவில் பாதிக்கப்பட்ட மக்களாக வடக்கு மக்கள் இருக்கிறார்கள். இன்றும் அவர்களில் போராட்டத்துக்கு நீதி கிடைக்கவில்லை. எனினும், எமது தலைமுறையினர் இவ்வாறு இருக்க கூடாது. எமது கட்சி எதிர்கால சந்ததியனரை மாற்றியமைக்கும். அவர்களின் சிந்தனைகளை மாற்றும்.

எதிர்கால சந்ததியினருக்கான சரியான பாதையை நாம் உருவாக்குவோம். எமக்கு இனவாத அரசியல் தேவையா? எமது சந்ததியினர் எதிர்நோக்கிய யுத்தத்தை எதிர்கால சந்ததியினர் எதிர்நோக்க வேண்டுமா?

 

இவ்வாறான பேதங்களும் போரும் அற்ற புதிய நாடு புதிய ஆட்சி உருவாக வேண்டும். இதுவே எமது நோக்கம். தேசிய மக்கள் சக்தியின் நோக்கம். இனவாதமற்ற தேசிய ஒருமைப்பாடுக்காக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

“ஏப்ரல் குண்டுத்தாக்குதலில் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவோம்.” – கனடாவில் அனுரகுமார திஸ்ஸநாயக்க!

உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளை முன்னெடுத்த சிஐடி அதிகாரிகள் தேசிய மக்கள் சக்தியின் ஒய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மன்றத்திற்கு தலைமைதாங்கவுள்ளனர் என அனுரகுமார திசநாயக்க கனடாவில் தெரிவித்துள்ளார்.

 

மேமாதம் இந்த அமைப்பு செயற்பட ஆரம்பிக்கும் என தெரிவித்துள்ள அவர் இந்த தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக சட்டத்தைஇவர்கள் நடைமுறைப்படுத்துவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து புதிய விசாரணைகள் அவசியமில்லை ஏற்கனவே இடம்பெற்ற விசாரணைகளின் மூலம் வெளியான பல விடயங்கள் உண்மையானவையா என்பதை உறுதி செய்யவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

உயிர்த்தஞாயிறுதாக்குதல் குறித்த விசாரணைகளை மேற்கொண்ட சிஐடி உத்தியோகத்தர்கள் தற்போது ஓய்வுபெற்றுவிட்டனர் அவர்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து பணியாற்றுகின்றனர் என அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

 

மே மாதத்தில் நாங்கள் ஆரம்பிக்கவுள்ள ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் அமைப்பிற்கு உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளை முன்னெடுத்த சிஐடி தலைவர் தலைமைதாங்குவார்.நாங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைவழங்குவோம் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவோம் என அவர்தெரிவித்துள்ளார்.

 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த சில நாட்களிற்கு முன்னர் தெரிவித்துள்ள விடயங்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

 

அவ்வேளை ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றியவரின் பாரதூரமான தகவல் தாக்குதல் இடம்பெற்ற பின்னரும் அவர் பதவியிலிருந்தார் எனவும் ஜேவிபியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மொழிப் பிரச்சினை, காணிப் பிரச்சினை போன்ற தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீர்வு காணும் – வவுனியாவில் அனுரகுமார திஸ்ஸநாயக்க!

வடக்கு தமிழ்த் தலைவர்களுடன் ஏப்ரலில் பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் அமையவுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்று கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

 

அத்துடன், மொழிப் பிரச்சினை, காணிப் பிரச்சினை போன்ற தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீர்வு காணும் எனவும் தமிழர்களின் அரசியல் உரிமைகளை உறுதி செய்யும் வகையில் அரசியலமைப்புத் திருத்தங்களை கொண்டு வரவுள்ளதாகவும் அனுரகுமார குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும்,சுதந்திரத்தின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட பிரிவினைகளை தொடர்ந்தும் பின்பற்றிக் கொண்டும், பரம்பரைபரம்பரையாக ஆட்சி அதிகாரத்தினை தக்கவைக்கும் கலாசாரத்தினையும் மாற்றுதற்கு தெற்கு மக்கள் தயாராகி விட்டார்கள்.

 

அவர்களுடன் நீங்களும் இணைந்துகொள்ளுங்கள். தமிழர்களின் பங்களிப்புடனான ஆட்சியையே நாம் எதிர்பார்க்கின்றோம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையை அதிகார போட்டிக்குள் நுழைத்து இன்னுமொரு உக்ரைனாக மாற்ற நாம் தயாரில்லை – இந்தியாவிடம் ஜே.வி.பி !

இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான பூகோள அரசியல் போட்டிக்கு மத்தியில் மற்றுமொரு உக்ரைனாக மாறுவதற்கு இலங்கை தயாரில்லை என்ற விடயத்தை இந்தியாவிடம் நாம் தெரிவித்துள்ளோம் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

 

இராஜதந்திர தொடர்பு என்பது மெஜிக் கிடையாது.அது எமக்கு நன்கு தெரியும். வடகொரியா, கியூபா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் மட்டும்தான் எமது தொடர்பு இருக்கும் என சிலர் கூறுகின்றனர்.

இலங்கையை வடகொரியாவாக்குவதற்கு முற்படுகின்றனர் எனவும் பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது. இது தவறு. உலகம் இன்று மாறியுள்ளது.

 

உலக பூகோள அரசியலும் மாறியுள்ளது. நாம் இந்தியா, சீனா, அமெரிக்கா, ரஷ்யா , ஜப்பான் உட்பட உலகில் உள்ள அனைத்து நாடுகளுடனும் கொடுக்கல் – வாங்கல்களிலும் ஈடுபடுவோம். அதற்கான உறவு கட்டியெழுப்பட்டுள்ளது.

 

இலங்கை சீனாவிடம் அதிகமாக கடன் வாங்கியுள்ளது, அதற்கு அடுத்தப்படியாக இந்தியாவிடம் கடன் வாங்கப்பட்டுள்ளது. தற்போது சர்வதேச நாணய நிதியத்தை நாடியுள்ளனர்.

ஐஎம்எவ் என்பது அமெரிக்காதான். இவ்வாறு கடன்வாங்கியுள்ளதால்தான் நாடு இறுதியுள்ளது. அமெரிக்கா, இந்தியா, சீனா என்பன உலக அதிகார அரசியலில் ஈடுபடுகின்றன.

அந்த போட்டியில் எமது நாடு சிக்ககூடாது. நாம் இந்தியா சென்றிருந்தவேளை, நாம் மற்றுமொரு உக்ரைனாக மாறுவதற்கு தயாரில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்தோம்.

 

பிராந்திய பாதுகாப்பு சார்ந்த விடயத்தின்போது சரியான இடத்தில் நாம் நிற்போம். அவர் அதனை ஏற்றுக்கொண்டார் என்றார்.

கனேடிய உயர்ஸ்தானிகருடன் அனுர குமார திசாநாயக்க சந்திப்பு!

மக்கள் விடுதலை முன்னணி தலைமை அலுவலகத்தில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் (Eric Walsh) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (13) முற்பகல் இடம்பெற்றது.

 

இந்த சந்திப்பில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இரண்டாவது செயலாளர் (அரசியல்) பெற்றிக் பிக்கரிங்கும் (Patrick Pickering) தேசிய மக்கள் சக்தியின் சார்பாக விஜித ஹேரத்தும் பங்கேற்றனர்.

 

இலங்கையில் நிலவுகின்ற சமூக பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை பற்றி விரிவான உரையாடல் இதன்போது இடம்பெற்றது.

 

அத்தோடு, தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான தேசிய மக்கள் சக்தியின் திட்டங்கள் பற்றியும் இரு தரப்பினருக்கும் இடையில் கருத்துக்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டன.

 

கனடாவில் வசிக்கின்ற இலங்கையரை சந்திப்பதற்கான அநுர குமார திசாநாயக்கவின் கனடா விஜயத்துக்கு உயர்ஸ்தானிகர் வாழ்த்து தெரிவித்தார்.

 

 

இலங்கைக்கான கியூபத் தூதுவர் – அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையே சந்திப்பு !

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இலங்கைக்கான கியூபத் தூதுவர் Andrés Marcelo Garrido வுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை (08) பிற்பகல் இடம்பெற்றது.

 

இச்சந்திப்பில் கியூபத் தூதுவர் அலுவலகத்தின் பிரதான செயலாளர் Mrs. Maribel Duarte Gonzalez வும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பிமல் ரத்நாயக்கவும் கலந்துகொண்டனர்.

 

இதன்போது நீண்டகாலமாக கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் இருந்த அரசியல் தொடர்புகள் பற்றியும் நிகழ்காலத்தில் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் செயற்பாடுகள் குறித்தும் விலாவரியாக கலந்துரையாடப்பட்டது.

 

நீண்ட காலத்துக்கு முன்பாக கியூபா மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடை பற்றியும் இன்றளவில் கியூபாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள நேரடி தொடர்புகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம், பிரச்சினைக்குரிய பகுதிகள் பற்றியும் கியூபத் தூதுவர் அநுர குமார திசாநாயக்கவிடம் தெளிவுபடுத்தினார்.

அநுர குமார திசாநாயக்கவை சந்தித்த 6 நாடுகளின் தூதுவர்கள் !

6 நாடுகளின் தூதுவர்கள் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

 

இச் சந்திப்பு இன்று புதன்கிழமை (06) பிற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.

 

பாலஸ்தீனத்தின் தூதுவர் Zuhair M.H. Dar Zaid, துருக்கி குடியரசின் தூதுவர் திருமதி R. Demet Sekercioglu, பங்களாதேஷ் குடியரசின் உயர்ஸ்தானிகர் Tareq M.D. Ariful Islam, இந்தோனேசிய குடியரசின் தூதுவர் திருமதி Dewi Gustina Tobing, ஆகியோரும் இந்திதோனேசிய தூதரகத்தின் பிரதம கொன்சல் Heru Prayitno, மலேசிய உயர்ஸ்தானிகர் Badli Hisham Bin Adam மற்றும் மாலைதீவு குடியரசின் பதில் தூதுவர் திருமதி Fathimath Ghina ஆகிய இராஜதந்திரிகள் அந்நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ, தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் டாக்டர் றிஷ்வி சாலி மற்றும் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் முதித்த நாணாயக்கார ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் பற்றி இதன்போது தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளால் இராஜதந்திரிகள் விழிப்புணர்வூட்டப்பட்டதோடு நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் பற்றியும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

 

அத்துடன் நாடுகளுடன் பரஸ்பர நன்மதிப்பு மற்றும் ஒத்துழைப்பினை அடிப்படையாகக்கொண்டு செயலாற்றுவதற்கான தேசிய மக்கள் சக்தியின் தயார்நிலை பற்றியும் இந்த சந்திப்பின்போது தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் இராஜதந்திரிகளுக்கு எடுத்துரைத்தார்கள்.

தமிழர் பகுதிகளுக்கு விஜயம் செய்கிறார் அனுரகுமார திஸ்ஸநாயக்க !

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

 

இந்த நிலையில் எதிர்வரும் 16ஆம் திகதி கிளிநொச்சிக்கு விஜயம் செய்யும் அவர் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் மக்கள் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளதோடு, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.

 

அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் பிற்பகல் வேளை வவுனியாவில் நடைபெறும் மக்கள் சந்திப்பில் பங்கேற்கவுள்ளதுடன் அங்கும் பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை மேற்கொள்வுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள அவர், இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருப்பதோடு பொதுமக்கள் சந்திப்பில் பங்கேற்று, தொடர்ந்து தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறிப்பாக, இலங்கை தமிழ் அரசு கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திப்பதற்கு தற்போது ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

 

முன்னதாக, கடந்த மாதத்தின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த அக்கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சிகளான தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறீகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்து உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் நாடாளுமன்றை பெண் உறுப்பினர்களை கொண்டு நிரப்புவோம் – ஜே.வி.பி

எதிர்வரும் நாடாளுமன்றை பெண் உறுப்பினர்களை கொண்டு நிரப்புவோம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட மகளிர் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆண்கள் மட்டுமன்றி பெண்களுக்கும் நாடாளுமன்றில் அங்கம் வகிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தமது கட்சியில், நாடாளுமன்றத்தில் வேட்பாளர்களாக களமிறங்க பெண்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தேசிய மக்கள் சக்திக்கு அச்சம் கொண்டுள்ள அரசாங்கம், மேடைகளில் ஆரம்பம் முதல் இறுதி வரையில் கட்சியை குறைகூறி விமர்சனம் செய்வதாக விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழர்களின் அரசியல் உரிமை தொடர்பாக ஜேவிபி எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளது…? – டக்ளஸ் தரப்பு கேள்வி !

இந்திய தரப்பினரை சந்தித்து கலந்துரையாடிய ஜேவிபியின் தலைவர் வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியல் நிலை தொடர்பில் எவ்வாறான கருத்தை கொண்டுள்ளார் என வெளிப்படுத்த வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயத்துரை சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ் ஊடக மையத்தில் இன்றையதினம் (16) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இணைந்த வடக்கு கிழக்கு பிரதேசம் தமிழர்களின் தாயக பிரதேசம் தொடர்பில் ஜே.வி.பி. எவ்வாறான கருத்தை கொண்டுள்ளது என பல சந்தர்ப்பங்களில் கேள்வி எழுப்பப்பட்டபோதும் அவர்களிடமிருந்து தமிழர் தாயக பிரதேசம் தொடர்பாக எவ்விதமான தெளிவூட்டல்களும் வெளியிடப்படவில்லை.

இணைந்த வடக்கு கிழக்கை நீதிமன்றத்தினூடாக தனித்தனி மாகாணங்களாக பிரிப்பதற்கு ஜே.வி.பி.யே முக்கிய காரணமாக செயற்பட்டது.

ஆனால் ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு நடைபெறலாம் என்ற கருத்து நிலவும் சூழலில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஜேவிபி எழுச்சி பெற்று வருவதாக ஊடகமொன்றிற்கு கூறியுள்ளார்.

ஆனால் தமிழர்களின் அரசியல் உரிமை தொடர்பாக ஜேவிபி எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்பதை சரத்பொன்சேகா கூட தெரிவிக்க முயலவில்லை.

ஆகவே வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பாக ஜே.வி.பியின் நிலைப்பாட்டை நட்புடன் எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.