இலங்கை – இந்தியா

இலங்கை – இந்தியா

இலங்கை – இந்தியா மின்பாதை அமைப்பு முயற்சி – சேதுக்கால்வாய் திட்டத்திற்கு மூடு விழா நடத்துவதற்கான தொடக்கம் என்கிறார் ராமதாஸ் !

இலங்கை -இந்தியா மின்பாதையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை இலங்கைக்கு கொண்டு செல்வதற்கு வசதியாக மதுரையிலிருந்து இலங்கையின் அனுராதபுரம் பகுதிக்கு கடல் வழியாக மின்பாதை அமைக்கும் திட்டம் நீண்ட காலமாக இரு நாடுகளின் பரிசீலனையில் இருந்து வருகிறது. 2000-ஆவது ஆண்டுகளின் பிற்பகுதியில் இத்திட்டத்தை செயல்படுத்த முயற்சிகள் நடந்த போது, அதற்கு தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. அதனால் அத்திட்டம் கைவிடப்பட்டது.

அதன்பின் 2010-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இந்தியா -இலங்கை இடையே மின்சார கோபுரங்களை அமைத்து மின்சாரத்தை கொண்டு செல்வதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால், அத்திட்டமும் தமிழ்நாட்டின் ஆதரவு இல்லாததால் கிடப்பில் போடப்பட்டது.

கடந்த 20 ஆண்டுகளில் இரு முறை கைவிடப்பட்ட இந்தியா – இலங்கை மின்பாதை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே பேச்சுகள் தொடங்கியிருப்பதாகவும், அவை தொடக்க நிலையில் இருப்பதாகவும் இலங்கை அரசின் மின்துறை செயலாளர் வசந்த பெரேரா தெரிவித்துள்ளார். இந்த முயற்சி பொதுவாக இந்திய நலனுக்கும், குறிப்பாக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் பாதகமாக அமையும் என்பதே உண்மை.
இலங்கைக்கு கடல் வழியாக மின்சாரப் பாதை அமைக்கும் திட்டம் குறித்து இதற்கு முன் பேசப்பட்ட போதெல்லாம் அதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. அதற்கான முக்கியக் காரணம், கடந்த காலங்களில் இத்திட்டம் குறித்த பேச்சுகள் தொடங்கப்பட்ட போது தமிழ்நாடு கடுமையான மின்வெட்டை எதிர்கொண்டு வந்தது. இப்போது தமிழகத்தின் மின்வெட்டு கட்டுப்படுத்தப்பட்டு விட்ட போதிலும் கூட, இலங்கைக்கு மின்பாதை அமைப்பதை எதிர்க்க இன்னும் பல காரணங்கள் உள்ளன.
சேது சமுத்திரம் திட்டம் தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கான கனவுத் திட்டம் ஆகும். பல்லாண்டு கால போராட்டத்திற்குப் பிறகு தான் அத்திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுத்து தொடங்கப்பட்டது. ஆனால், அத்திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக சேது சமுத்திர திட்டப் பணிகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் சேதுக்கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்; இலங்கையை சுற்றிச் செல்லும் பன்னாட்டு சரக்குக் கப்பல்கள் தூத்துக்குடி, இராமேஸ்வரம், வேதாரண்யம், காரைக்கால் வழியாக செல்ல வேண்டும்; அதன் காரணமாக அப்பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தான் தமிழகத்தின் எதிர்பார்ப்பு ஆகும். அது நிறைவேறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
ஆனால், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடலுக்கு அடியிலோ, மின் கோபுரங்கள் அமைத்து கடலுக்கு மேலாகவோ மின் பாதை அமைக்கப்பட்டால், அத்துடன் சேதுக்கால்வாய் திட்டத்திற்கு மூடு விழா நடத்தப்பட்டு விடும். இது இந்தியாவுக்கு பாதகமாகவும், இலங்கைக்கு சாதகமாகவும் அமையும். இலங்கைக்கு மட்டுமே பயனளிக்கக்கூடிய மின்பாதை திட்டத்திற்காக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் பங்களிக்கக்கூடிய சேதுக்கால்வாய் திட்டத்தை எதற்காக இழக்க வேண்டும்?
சேதுக்கால்வாய் திட்டம் கைவிடப்படுவதும் இலங்கை அரசுக்குத் தான் லாபமாக அமையும்.

இவை அனைத்தையும் கடந்து இலங்கை போர்க்குற்றங்களை நிகழ்த்திய நாடு, தமிழர்களை இனப் படுகொலை செய்த நாடு, இத்தகைய குற்றங்களுக்காக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணையை எதிர்கொண்டு வரும் நாடு என்பதை மத்திய, மாநில அரசுகள் மறந்து விடக் கூடாது.

இலங்கை கடுமையான அரசியல், பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் சூழலில், அந்நாட்டுக்கு கருணை அடிப்படையில் உதவிகளை செய்வது வேறு; அந்நாட்டின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உதவுவது வேறு என்பதில் இந்தியா தெளிவாக இருக்க வேண்டும். அதேபோல், சீனாவின் ஆதிக்கத்தைத் தடுப்பதாகக் கூறிக் கொண்டு, கண்களை மூடிக் கொண்டு இலங்கைக்கு உதவுவதும் தவறு ஆகும்.இலங்கைக்கு செய்யப்படும் உதவிகள் ஒருபோதும் இந்தியாவுக்கு எதிராக அமைந்து விடக் கூடாது. பாகிஸ்தானின் பக்கம் இலங்கை சாய்ந்து விடக் கூடாது என்பதற்காக கச்சத்தீவை தாரை வார்த்ததன் விளைவை இப்போது வரை தமிழகம் தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

அதேபோல், சேதுக்கால்வாய் திட்டத்தை தாரை வார்த்து இலங்கைக்கு மின்பாதை அமைப்பதன் பாதிப்பையும் தமிழகம் தான் அனுபவிக்கும். இவற்றைக் கருத்தில் கொண்டு இலங்கை & இந்தியா மின்பாதையை மத்திய அரசு கைவிட வேண்டும்” என்று குறித்த அறிக்கையில்  கேட்டுக்கொண்டுள்ளார்.

 

“இலங்கையர்கள் விரும்பினால் இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்க தயார் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கர் ட்வீட் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் !

இலங்கை மக்கள் விரும்பினால்- இந்தியா இலங்கை தனது ஒரு மாநிலம் என அறிவிக்க தயார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார் என வெளியாகியுள்ள டுவிட்டர் செய்தி உண்மைக்கு புறம்பானது என தெரிவித்துள்ள இந்தியா அதனை கடுமையாக சாடியுள்ளது.

இலங்கை மக்கள் இணங்கினால் இலங்கையை இந்தியா தனது இன்னுமொரு மாநிலமாக அறிவிக்க தயார். அதற்கு பதிலாக இந்தியா இலங்கையில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு உட்பட ஏனைய பிரச்சினைகளிற்கு தீர்வை காணும் நீண்டகால விடயங்களிற்கும் உதவலாம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார் என குறிப்பிடும் டுவிட்டர் செய்தியொன்று வைரலாகி வருகின்றது.

இந்த டுவிட்டர் செய்தி போலியானது என தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ள இந்திய தூதரகம்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களின் ட்விட்டர் கணக்கிற்குரியதென காண்பிக்கும்வகையில் வடிவமைக்கப்பட்ட போலியானபடம் தொடர்பாக நாம் அறிந்துள்ளோம்.இது முழுக்கமுழுக்க போலியானதும் புனையப்பட்டதுமாகும்.தீய எண்ணத்துடனான இதன் உள்ளீடுகளை நாம் கடுமையாக மறுக்கின்றோம்.

இந்தியா இலங்கை இடையில் காணப்படும் நட்புரீதியானதும் நெருக்கமானதும்இ தொன்மையானதுமான உறவை பாதிக்கும்வகையில் அவநம்பிக்கைகொண்ட தரப்பினரால் மேற்கொள்ளப்படும் தீய நோக்கத்துடனான இம்முயற்சிகள் ஒருபோதும் வெற்றியடையப்போவதில்லை என தெரிவித்துள்ளது.

“இலங்கையின் நிதி நெருக்கடியை தீர்க்க நாங்கள் தயார்.” – இந்திய அரசாங்கம் அறிவிப்பு !

“இலங்கையின் நிதி நெருக்கடியை தீர்ப்பதற்காக இலங்கையில் முதலீடு செய்ய தயார்.” என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இணையவழி கலந்துரையாடலின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர்இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நிதி நெருக்கடிக்கு தீர்வை காண்பது தொடர்பில் இருநாடுகளிற்கும் மத்தியில் பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் உட்பட ஏனைய அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியா கடன் உதவிகளை வழங்கியது என அவர் தெரிவித்துள்ளார்.

“இந்திய அரசாங்கம் இலங்கையின் தென்பகுதி குறித்தும் கவனம் செலுத்தவேண்டும்” – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  கோரிக்கை !

“வடக்கு-கிழக்கு மற்றும் மலையக பகுதிகளின் வீடமைப்புத்திட்டங்கள் குறித்து இந்திய அரசாங்கம் கவனம் செலுத்துவதைப் போன்று இலங்கையின் தென்பகுதி குறித்தும் கவனம் செலுத்தவேண்டும்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீஅஜித் தோவாலுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (27.11.2020) விஜேராம உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போதே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீஅஜித் தோவாலிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இலங்கை, இந்தியா உள்ளிட்ட இந்த பிராந்திய நாடுகளுக்கு வெளிநாட்டில் தொழில்புரிபவர்கள் ஊடாக சிறந்த பொருளாதார பலம் கிடைத்ததுடன், தற்போதைய கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் அவர்கள் வேலைவாய்ப்பை இழந்தமையினால், அவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பியுள்ளமையால் அனைத்து நாடுகளுக்கும் கிடைத்த அந்நிய செலாவணி குறைவடைந்துள்ளதாகவும் அஜித் தோவால் சுட்டிக்காட்டினார். எனினும், கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும் என்று கூறியதுடன், இப்பிராந்தியத்தின் பிற நாடுகளுடன் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் மற்றும் அபிவிருத்தியை நோக்கி பயணிக்கும் மூலோபாயங்களை கண்டறிய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதற்கு, பிராந்தியத்தின் பிற நாடுகளுக்கு இடையே கருத்தாடலொன்றை கட்டியெழுப்புவதுடன், பொருளாதார மந்தநிலைக்கு தீர்வை கண்டறிந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான மூலோபாயங்களை கண்டறிவதற்கும், மூலோபாய பொறிமுறையொன்றை உருவாக்குவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை முன்னிலை வகிக்குமாறும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால்  முன்மொழிந்தார்.

அதற்கு இந்திய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவை பெற்றுத் தருவதாக தெரிவித்த அஜித் தோவால், கொவிட-19 நிலைமைக்கு மத்தியிலும் இலங்கை, இந்தியா உள்ளிட்ட பிராந்தியத்தின் பிற நாடுகளின் அபிவிருத்தியை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பிரதேசங்களில் வீடமைப்பு திட்டங்களை செயற்படுத்தியுள்ளதாக தெரிவித்த  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அத்தகைய வீடமைப்பு திட்டங்களை தென் பகுதிகளை மையமாகக் கொண்டு ஆரம்பிப்பதற்கும் ஆதரவை பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டார்.

அதற்கு இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை பெற்றுத் தருவதாக ஸ்ரீஅஜித் தோவால்  தெரிவித்தார்.

அத்துடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டலின் கீழ் நவீன தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தி இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள குடிநீரை பெற்றுக் கொடுக்கும் திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தி, அத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இலங்கையில் நீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு இச்சந்திப்பின் போது உடன்பாடு எட்டப்பட்டது.

இது தொடர்பில் உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கு அறிவுறுத்தினார்.

குறித்த சந்தர்ப்பத்தில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் பிரதமரின் செயலாளர் காமினி செனரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.