இலங்கை பொருளாதார நெருக்கடி

இலங்கை பொருளாதார நெருக்கடி

இலங்கையின் நிலை ஏனைய நாடுகளுக்கும் ஏற்படலாம் – எச்சரிக்கிறது சர்வதேச நாணய நிதியம்!

அரசாங்கங்கள் வறிய மக்களிற்கு உதவமுன்வராவிட்டால் இலங்கையின் நிலை உலகின் ஏனைய நாடுகளில் உருவாகலாம் என சர்வதேச நாணயநிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா எச்சரித்துள்ளார்.

உணவு எரிபொருட்களின் விலைகளை மானிய அளவில் சமூகத்தின் வறிய மக்களிற்கு அரசாங்கங்கள் வழங்கவேண்டும்,அரசாங்கங்களின் உரிய ஆதரவு இல்லாவிட்டால் இலங்கையின் நிலை ஏனையநாடுகளில் உருவாகலாம்.

உலகம் முழுவதும் வாழ்க்கை செலவு அதிகரிப்பால் மக்கள் நெருக்கடியில் சிக்குண்டுள்ளனர்.
மக்களிற்கு அவசியமான உதவிகளை மிகவும் தெரிவுசெய்யப்பட்ட முறையில் வழங்கவேண்டும் மானியங்களை மக்களிற்கு நேரடியாக வழங்கவேண்டும்.

மேலும் வாழ்க்கை செலவு தொடர்பில் இரண்டு முன்னுரிமைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் ஒன்று சமூகத்தின் வறிய மக்கள் – அவர்களே உணவு, எரிபொருள் விலை அதிகரிப்பினால் தற்போது நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது முன்னுரிமை உக்ரைன் யுத்தத்தினால் மோசமாக பாதிக்கப்பட்ட வர்த்தகங்களிற்கு வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வளங்களை அபகரித்த அமெரிக்க வாழ் இலங்கை பிரஜைகள் – பகிரங்கப்படுத்த தயார் என்கிறார் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் !

இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடி மற்றும் வங்குரோத்து நிலைமை குறித்து தான் அறிந்துள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஸ்டீவன் கோர்ஸ்போர்ட் தனியொரு குடும்பமே அதற்கு காரணம் என தான் அறிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

US Congress to probe fleecing of Sri Lankan resources - Congressman Steven  Horsford

இலங்கையின் சொத்துக்களை அபகரித்ததன் மூலம் தற்போதைய நிலை உருவாவதற்கு யார் காரணம் என்பதுகுறித்து காங்கிரஸ் விசாரணைகளிற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறான விசாரணைகளை அமெரிக்காவின் நியாயாதிக்க எல்லைக்குள் முன்னெடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகார குழுவிற்கு தலைமை தாங்கும் கிரகரி மீக்ஸ் உடன் இணைந்து விசாரணைகளிற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்போவதாக ஸ்டீவன் கோர்ஸ்போர்ட் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள இலங்கையர்களை சமீபத்தில் சந்தித்தவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நெவடாவின் லாஸ்வெகாசில் இலங்கையர்களின் நிதிதிரட்டும் நடவடிக்கைகளில் கலந்துகொண்டவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் சொத்துக்களை அபகரித்த இலங்கை அரசாங்கத்தின் ஒரு பகுதியாக விளங்கும் அமெரிக்க பிரஜைகள் குறித்து காங்கிரஸ் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தற்போதைய நிலையில் அந்த நாடு வங்குரோத்து நிலையையும் நிதிவீழ்ச்சியையும் எதிர்கொள்கின்றது. இதற்கு நாட்டை ஆளும் தனியொரு குடும்பமே காரணம் அமெரிக்க தலைமைக்கும் இது தெரிந்திருக்கின்றது என என்னால் உறுதியளிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் வளங்களை அபகரித்தவர்களை பகிரங்கப்படுத்துவதற்கு அமெரிக்ககாங்கிரசுடன் இணைந்து பணியாற்ற முடியும் என நம்புகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையை மீட்க அவசர உதவிகள் – கைகொடுக்க முன்வரும் சீனா !

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் நெருக்கடிகளிலிருந்து இலங்கை மக்கள் மீள்வதற்காக அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க சீனா தீர்மானித்துள்ளது.

 

இலங்கைக்கான சீன தூதரகம் தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் இதனை அறிவித்துள்ளது.

இலங்கை மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சமாளிக்கும் வகையில் இந்த உதவி வழங்கப்படுவதாகவும், வழங்கப்படும் உதவிகள் குறித்த தகவல்கள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த உதவிகளை சீன வெளிவிவகார அமைச்சும் சீன சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனமும் ஒன்றிணைந்து வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

“எம் மீதான நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். பொருளாதார சிக்கலுக்கு ரஷ்யாவே காரணம்.” – நிதி அமைச்சர் பஷில்

லங்கா IOC நிறுவனம் எரிபொருளுக்கான விலையை அதிகரித்ததை போன்று, ஏனைய நிறுவனங்களும் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் பேசிய அவர்,

நாட்டிற்கு வெளியில் நடக்கும் விடயங்கள் காரணமாகவே இவ்வாறான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இடம்பெறும் சம்பவங்களுக்கு தம்மால் தலையீடு செய்ய முடியாது.

உள்நாட்டில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு எவ்வாறேனும் தீர்வொன்று பெற்றுக்கொடுக்கப்படும். ஒரு பிரச்சினை முடியும் போது, மற்றுமொரு பிரச்சினை உருவாகின்றது. தற்போது யுக்ரேன் ரஷ்யா யுத்தம் ஆரம்பித்துள்ளது.

நிவாரணங்களை வழங்க முழுமையாக முயற்சித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் தங்கள் மீது கொண்ட நம்பிக்கையை அவ்வாறே வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எமது அமைச்சர்கள் அனைத்து விதமான முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றனர் எனவும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.