இலங்கை போதைப்பொருள் பாவனை

இலங்கை போதைப்பொருள் பாவனை

போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு ஆதரவாக முன்னிலையாவதால் மில்லியன் கணக்கில் சம்பாதிக்கிறார்கள் சட்டத்தரணிகள் – பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்

பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் நியமனத்தை எதிர்த்த சட்டத்தரணிகள் தற்போது கைது செய்யப்படும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்காக முன்னிலையாவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான வழக்குகளுக்கு முன்னிலையாவதன் மூலம் குறித்த சட்டத்தரணிகள் மில்லியன் கணக்கில் சம்பாதிப்பதாக அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

காவல்துறையினரால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது 2 ஆயிரத்து 121 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட காலி முகத்திடல் போராட்டங்கள் காரணமாக போதைப்பொருள் தொடர்பான விடயங்களில் அதிக கவனம் செலுத்த முடியாதிருந்தாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கை, இலங்கையில் போதைப்பொருள் பாவனையை அதிகரித்ததுடன், விநியோகத்தையும் பாரியளவில் அதிகரித்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கைக்கு தற்போது பல சட்டத்தரணிகள் முன்னிலையாகி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், பதில் பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டதை குறித்த தரப்பினர் எதிர்த்திருந்தாக டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் மக்களுக்காக குரல் கொடுப்பதாக தெரிவிக்கும் சட்டத்தரணிகளே, இவ்வாறாக போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு ஆதரவளிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை – கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்கிறார் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகொன் !

பாடசாலைக்கு உள்ளே மற்றும் வெளியே முன்னெடுக்கப்படும் மாணவர்களுக்கு பொருத்தமற்ற போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகொன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சமீப காலமாக நாட்டில் மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பொருத்தமற்ற செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன.

பாடசாலை மாணவர்களிடையே காணப்படும் பொருத்தமற்ற செயற்பாடுகளை முற்றாக ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைக்கு உள்ளே மற்றும் பாடசாலைக்கு வெளியே பிள்ளைகளுக்கு பொருத்தமற்ற பல்வேறு விடயங்கள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகின்றன.

பாடசாலைக்கு 500 மீற்றர் இடைவெளியில் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு பொருத்தமற்ற விடயங்களை விநியோகிக்கும் மற்றும் மாணவர்களை ஈடுபடுத்தும் நடவடிக்கைகள் பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கும் போது இடம்பெறுவதற்கு நான் இடமளிக்க மாட்டேன்.

இது தொடர்பில் நாட்டிலுள்ள அனைத்து பிரதேசங்களிலுமுள்ள பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நான் கடுமையான நடவடிக்கை எடுப்பேன்.

போலிஸாரை ஈடுபடுத்தி பாடசாலைக்குள் மற்றும் வெளியில் முன்னெடுக்கப்படும் அனைத்து முறையற்ற நடவடிக்கைகளும் ஒழிக்கப்படும்” என அவர் மேலும் தொவித்துள்ளார்.

பொலிசாரால் கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் என்னவாகின்றன ..? – பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் விளக்கம்!

பொலிஸாரினால் கைப்பற்றப்படும் போதைப்பொருட்களுக்கு என்ன நடக்கின்றது என்பது குறித்து பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் விளக்கமளித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“பொலிஸாரினால் கைப்பற்றப்படும் போதைப்பொருட்களுக்கு என்ன நடக்கின்றது என்ற மாபெரும் பிரச்சினை பொதுமக்களுக்கு இருக்கின்றது.

 

குறித்த போதைப்பொருட்கள் மீண்டும் போதைப்பொருள் வியாபாரிகளை சென்றடைகின்றது என்ற பிழையான கருத்தும் மக்களிடையே காணப்படுகின்றது.

 

அதேபோன்று இவ்வாறான சில சம்பவங்களும் பதிவாகியிருக்கின்றன.

 

ஆனால் இதன் பின்னர் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் மிகவும் குறுகிய காலத்தில் அழித்துவிட நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போதைப்பொருள் பாவனை குற்றங்களுக்காக போதைப்பொருள் குற்றங்களுக்காக கிட்டத்தட்ட 1 இலட்சத்து 23 ஆயிரம் பேர் கைது !

இந்த வருடத்தில் இதுவரையில் போதைப்பொருள் குற்றங்களுக்காக கிட்டத்தட்ட 1 இலட்சத்து 23 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.

 

இந்தக் கைதுகளின் போது 61 கிலோ ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் ஷாக்ய நாணயக்கார தெரிவித்தார்.

 

போதைப்பொருள் தொடர்பில் இதுவரை 831 பாடசாலைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஷாக்ய நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கில் முப்படைகள் ஊடாகவே திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் பாவனை ஊக்குவிக்கப்படுகிறது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு !

வடக்கு கிழக்கில் முப்படைகள் ஊடாகவே திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் பாவனை ஊக்குவிக்கப்படுவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்தல்கள் அமைச்சு விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சுக்கள் மீதான விவாதத்தின் போது கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு கிழக்கைப் பொறுத்த வரையில் வழிகாட்டலும் ஆலோசனையும் என்பது மிக முக்கியமானது வடக்கு கிழக்கில் போதைக்கு அடிமையாதல் என்பது, மிகப் பெரும் பிரச்சனையாக உருவாகிவருகின்றது.

ஏனென்றால் – சிறிலங்கா அரசானது இன்னும் ஆயுதக் கிளர்ச்சியை தோற்கடிக்கும் மனோநிலையில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் முப்படைகள் ஊடாகவே இந்த போதைப்பொருள் பாவனை ஊக்குவிக்கப்படுகின்றது.

அரசாங்கம் மற்றும் இராணுவத்தினரது முழு ஒத்துழைப்புடனேயே இவை நடைபெறுகின்றன. இராணுவம் தான் நோரடியாகவே அந்த செயற்பாட்டை செய்துவருகின்றது. இப்படியான ஒரு சூழலில் வடக்கு கிழக்கில் மிகப்பெரும் அளவிலான இளைஞர்கள் போதைவஸ்துக்கு அடிமையாக்கப்பட்டு மோசமான நிலமைக்கு தள்ளப்படுகின்றார்கள்.

எனவே பாடசாலைகளில் உளவள செயற்பாடுகள் மிக முக்கியமானதாகும். பாதிக்கப்படுபவர்களை ஏதோ ஒரு வழியில் அதிலிருந்து மீட்க வேண்டுமாயின் இத்தகைய உளவள செயற்பாடுகள் முக்கியமானதாக இருக்க வேண்டும்.

மாணவர்கள் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்குரிய மனோநிலையை உருவாக்கி, அவர்களை நற்பிரஜைகளாக்குவதை விடுத்து, மாறாக அவர்களை குற்றவாளிகளாக்கி சமூகத்திலிருந்து அவர்களை ஒதுக்கும் நிலைமையையே உருவாக்கியிருக்கிறது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

4000 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயினுடன் ஐவர் கைது !

4000 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயினுடன் நீண்ட நாள் மீன்பிடி படகில் பயணித்த 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

பொலிஸ் போதைப்பொருள் பிரிவினரும் கடற்படையினரும் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

இன்று(22) காலை தேவேந்திரமுனை மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்த குறித்த படகை சோதனையிட்ட போது, அதிலிருந்து சுமார் 200 கிலோகிராம் ​ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் கைதான 9 ஈரானிய பிரஜைகளுக்கும் மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு !

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒன்பது ஈரானிய பிரஜைகளுக்கு தீவிர விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (12) குறித்த 9 ஈரானிய பிரஜைகளுக்கும் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

குறித்த ஈரானிய பிரஜைகள் கடந்த 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பு பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் 100 கிலோ ஹெரோயினுடன் சந்தேகத்தின் பேரில் ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர், இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

மீட்கப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் சோதனைக்காக அரச பகுப்பாய்வாளரிடம் அனுப்பி வைக்கப்பட்டு சுமார் 84 கிராம் பொதிகளில் ஹெரோயின் போதைப்பொருள் இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து,  இன்று குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், நீதிபதி ரணராஜாவினால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் 70 வயது முதியவர் கைது !

யாழ்ப்பாணத்தில், ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் 70 வயது முதியவர் ஒருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட முதியவரிடம் இருந்து, ஒரு கிலோ கிராம் 40 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வான் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 70 வயதுமிக்க ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

ஊசி போதைப்பொருள் பாவித்த இளைஞன் கிருமி தொற்றுக்கு உள்ளாகி பலி – யாழில் சம்பவம் !

அதிகளவான ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்து வந்த இளைஞன் ஒருவர் கிருமி தொற்றுக்கு உள்ளாகி , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

திடீர் சுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், வைத்திய பரிசோதனையில் இளைஞன் கிருமி தொற்றுக்கு உள்ளாகி இருப்பதும் போதைக்கு அடிமையானவர் என்பதனையும் வைத்தியர்கள் கண்டறிந்தனர்.

இளைஞனுக்கான சிகிச்சையை வழங்கி வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, இன்னுமொரு இளைஞனும் போதைக்கு அடிமையான நிலையில், உடலில் கிருமி தொற்றுக்குள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் ஹெரோயினுடன் கைதான இரு பெண்கள் உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல் !

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உயிர்கொல்லி போதைப்பொருளான ஹெரோயினுடன் கைதான இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஹெரோயின் போதைப்பொருள்களுடன் இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் சனிக்கிழமை (29) கைது செய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட நால்வரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நால்வரையும் ஞாயிற்றுக்கிழமை (30) மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தினர்.

அதனை அடுத்து நால்வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.