“ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஷ்வினருக்கு செய் நன்றி செலுத்துவதற்கு மிகவும் திறமையானவர்.”என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படும் செய்தி தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படுமா என பலரும் கேட்கின்றனர். ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி ஆகிய இரண்டு கட்சிகளிலும் ஒரே ஆதரவாளர்களே இருக்கின்றனர். இணைந்து செயற்படுவதாக இருந்தால், எமது நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்துகொண்டு ராஜபக்ஷவினரை பாதுகாத்தவர்கள் அவர்களுடன் டீல் வைத்துக்கொண்டு இருந்தவர்கள் இல்லாத கட்சியாக இருக்கவேண்டும்.
அதேபோன்று பல்வேறு ஊழல் மோசடிகளுடன் தொடர்புபட்டவர்கள் இருக்கும் வரைக்கும் ஐக்கிய தேசிய கட்சியுடன் நாங்கள் இணைந்து செயற்படப்போவதில்லை. அவ்வாறானவர்களின் நடவடிக்கையாலே மக்கள் ஐக்கிய தேசிய கட்சியை கடந்த பொதுத் தேர்தலில் நிராகரித்தனர். அவ்வாறு இருக்கையில் மீண்டும் அவர்களுடன் எவ்வாறு நாங்கள் ஒன்றாக செயற்பட முடியும் என கேட்கின்றேன்.
அத்துடன் ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஷ்வினருக்கு செய் நன்றி செலுத்துவதற்கு மிகவும் திறமையானவர். செய்நன்றி செலுத்துவதன் பரிசுதான் 37 பேருக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கியது. இதுமாத்திரமல்லாது எதிர்வரும் நாட்களில் 10க்கும் மேற்பட்ட அமைச்சரவை அமைச்சர்களும் நியமிக்கப்பட இருக்கின்றனர்.
அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கயையை குறைந்தபட்சம் 20 பேருக்கு வரையறுக்குமாறே நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தோம். அதேபோன்று தற்போதைய நிலைமையில் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சுக்கள் வேண்டாம் என்றே நாங்கள் தெரிவித்து வந்தோம்.
மேலும் நாட்டின் தற்பாேதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் வரிக்கு மேல் வரி அதிகரித்தும், மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களை அதிகரித்து சாதாரண மக்கள் மீது பாரிய சுமையை சுமத்தியுள்ள நிலைமையில் நாடு என்றவகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னரிமை வழங்கவேண்டியது அமைச்சுப் பதவிகளை நியமிப்பதற்கு அல்ல என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்.