கோட்டாபய ராஜபக்ஷ

கோட்டாபய ராஜபக்ஷ

ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஒரு கோடியே 78 இலட்சம் ரூபா பணம் – கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் !

ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஒரு கோடியே 78 இலட்சம் ரூபா பணம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான உத்தரவை கோட்டை நீதவான் திலின கமகே கோட்டை பொலிஸாருக்கு வழங்கியதாக “அத தெரண” செய்தியாளர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதியின் படுக்கையறையில் கண்டெடுக்கப்பட்ட பணம் இலஞ்சமாக அல்லது வேறு ஏதாவது விடயம் தொடர்பில் பெறப்பட்டதா என்பது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதியின் சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மிரிஹானவில் உள்ள அவரது இல்லத்தில் இல்லை என பொலிஸார் வழங்கிய தகவலை கவனத்தில் கொண்ட நீதவான், அவர் தற்போது வசிக்கும் இல்லத்திற்கு சென்று வாக்குமூலம் பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அரசியலே தெரியாத ஒரு குழந்தை கோட்டாபாய – தனசிறி அமரதுங்க

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசியலில் குழந்தை என தெஹிவளை கல்கிஸை முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அரசியல் தோல்விக்கு அரசியல் எதுவும் தெரியாத குழந்தைகளைக் கொண்டு வருவதே முக்கிய காரணம் என்றும் அவர் கூறினார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மறுசீரமைப்பு தொடர்பில் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

திறமையான இராணுவ அதிகாரியாக இருந்தாலும் அவருக்கு அரசியல் தெரியாது என மேலும் தெரிவித்தார்.

மோடி தொடர்பில் சர்ச்சை கருத்து வெளியிட்ட இ.மி.சபையின் தலைவர் இராஜினாமா!

இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.

இந்நிலையில் அவர் சமர்ப்பித்த இராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக நலிந்த இளங்கோகோன் நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

எரிசக்தி முதலீட்டுத் திட்டங்களை அதானி குழுமத்திற்கு வழங்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதாக ஜனாதிபதி தம்மிடம் தெரிவித்ததாக இவர் முன்னதாக கூறியிருந்தார்.

இருப்பினும் காற்றாலை மின் திட்டத்தை வழங்குவது தொடர்பாக இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்த கருத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மறுப்பு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதே நேரம் நேற்றைய தினம் தான் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் பெர்டினான்டே மன்னிப்பு கேட்டிருந்த நிலையில் இன்று இராஜினாமாவை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவதே ஒரே தீர்வு.”- நாடாளுமன்றில் அனுரகுமார திசாநாயக்க !

ஜனாதிபதி வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்றே இந்நாட்டு மக்கள் விரும்புகின்றனர் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்த இன்றும் இடம்பெறும் விவாதத்தின் போதே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி ஆசனத்தில் இருந்துகொண்டு கோட்டாபய ராஜபக்ஷ வழங்கும் எந்தவொரு தீர்வையும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஜனாதிபதி பதவி விலகினால் மாத்திரமே தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண தமது கட்சி ஆதரவளிக்கும். இன்னொருபக்கம் மக்கள் தங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளவும் விரும்புவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை ஊடகவியலாளர்கள் தமது கடமைகளை தடையின்றி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதை நாம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்

“இடைக்கால அரசாங்கத்தை அமைத்து பொதுத்தேர்தல் ஒன்றை நடாத்துங்கள்.” – விமல் வீரவங்ச கோரிக்கை!

இடைக்கால அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என  நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

 

“இந்த நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதே முக்கியமான விடயமாகும். சாதாரண நேரத்தில் எடுக்கும் தீர்மானங்கள் இப்போது நாட்டுக்கு பொறுந்தாது.

எனவே, ஜனாதிபதி உடனடியாக தனது அமைச்சரவையை கலைத்துவிட்டு, நாடாளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடன் பேச்சு நடத்தி, இணக்கப்பாட்டுடன் தற்காலிக அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டும்.

அனைத்து அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்புடன் இடைக்கால அரசாங்கமொன்றை ஏற்படுத்தி இவற்றுக்கு தீர்வுக் காணப்பட்டதை அடுத்து, பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இந்த ஒரு நடவடிக்கையே பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தீர்வாக அமையும் என நாம் கருதுகிறோம்.

அதனைவிடுத்து, இடைக்கால தீர்மானங்களை எடுத்தோ தடைகளை விதித்தோ மக்களை கட்டுப்படுத்த முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

அரசாங்கம் மீது மக்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளார்கள். இதனை மாற்றுவது கடினமாகும். இந்தநிலைமையில், இடைக்கால அரசாங்கமொன்றை அமைத்து பொதுத் தேர்தலொன்றுக்கு செல்லாவிட்டால், நாட்டின் நிலைமை இன்னமும் பாரதூரமாக மாற்றமடையும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

“கடந்த கால காயங்களை குணப்படுத்த புலிச் சந்தேக நபர்களுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும்.” – ஞானசார தேரர், ஜனாதிபதியிடம் கோரிக்கை !

நீண்டகாலமாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் விடுதலைப் புலிச் சந்தேக நபர்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு கலகொட அத்தே ஞானசார தேரர், ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

யுத்தம் முடிவடைந்து 12 ஆண்டுகள் கடந்துள்ளதால், கடந்த கால காயங்களை குணப்படுத்த புலிச் சந்தேக நபர்களுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை சுதந்திர தினத்தன்று இவர்களில் சிலருக்கு விடுதலை கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் சிறையில் இருக்கும் போது, விடுதலைப் புலிகளுடன் தொடர்பு என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பலர் என்னை சந்தித்தனர். அவர்கள் என்னை தேடி வந்து அவர்களின் வாழ்க்கை கதைகளை கூறினர். அவர்களுக்கு நடந்தது என்ன, ஏன் இந்த நிலைமைக்கு ஆளாகினர் போன்ற விடயங்களை கூறினர்.

போர் முடிந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. காயங்களை மேலும் காயப்படுத்திக்ககொண்டிருக்காது, விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்வது முக்கியமானது என ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினரிடம் எடுத்துரைத்தோம்.

இல்லை என்றால், இதனை அடிப்படையாகவும் ஒரு காரணமாகவும் கொண்டு, மேற்குலக மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழ் பிரிவினைவாத சக்திகள் ஒருங்கிணைப்புகளை மேற்கொள்வார்கள்.

ஒரு நாடு – ஒரு சட்டம் ஜனாதிபதி செயலணிக்குழு என்ற வகையில் நாங்கள் வடபகுதிக்கு விஜயம் செய்தோம். குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் சிறையில் இருக்கும் பலரது பெற்றோர் எம்மை சந்தித்தனர்.

சிறையில் இருப்போரை விடுதலை செய்ய வேண்டும் என்பதே இவர்களில் கோரிக்கையாக இருந்தது. கடந்த 25 ஆம் திகதி ஒரு கலந்துரையாடல் நடந்தது, அப்போது நாங்கள் ஜனாதிபதிக்கு இதனை நினைவூட்டினோம்.

இந்த கைதிகள் விடுதலை செய்யப்படுவது முக்கியமானது என்பதை சுட்டிக்காட்டினோம். இதனை செய்தால், பிரிவினைவாத கரு நிழல் மீண்டும் ஒருங்கிணைய இருக்கும் சந்தர்ப்பை இல்லாமல் செய்யலாம். அந்த காலத்தில் எமது இளைஞர் ஒருவர் அங்கிருந்தாலும் அவரும் புலி உறுப்பினர்தான். இதுதான் உண்மை நிலை. நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. பெப்ரவரி 4 ஆம் திகதி சிலருக்காவது விடுதலை கிடைக்கும் என நாம் நம்புகிறோம். என தேரர் குறிப்பிட்டுள்ளார்.

“மின் உற்பத்தி நிலைய விவகாரத்தில் அமைச்சர்கள் நீதிமன்றம் சென்றது தவறு.” – ஜனாதிபதி கோட்டாபய

கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலைய விவகாரத்தில் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நீதிமன்றத்தை நாடியமை தவறு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற பத்திரிக்கை ஆசிரியர்களுடனான சந்திப்பின்போது, முக்கிய விடயங்களில் அரசாங்கத்திற்குள் காணப்படும் பலதரப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக வினவியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதற்கு எதிராக குறித்த அமைச்சர்கள் இருந்தால் அவர்கள் பதவி விலகி நீதிமன்றத்திற்கு சென்றிருக்க வேண்டும் அவர்கள் அவ்வாறு செய்யாதமை அரசாங்கத்திற்கும் இருக்கும் ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சி என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மறைந்த அமைச்சர் லலித் அத்துலத்முதலியும் அவ்வாறானதொரு நடவடிக்கையை முன்னெடுத்த போது, நீதியரசர் மார்க் பெர்னாண்டோ இந்த விடயம் தொடர்பாக தீர்ப்பு வழங்கியிருந்தார் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

“புரட்சிகரமான மாற்றத்தை நான் ஏற்படுத்தும் போது சில தடங்கல்களும் ஏற்படும்.” – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ

“புரட்சிகரமான மாற்றத்தை மக்கள் வேண்டி நின்றனர். அதனைச் செய்யும்போது ஏற்படும் தடங்கல்கள் மற்றும் தடைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படும். ஆனாலும், அச்சவாலை வெற்றிகொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ  தெரிவித்துள்ளார்.

புனர்நிர்மாணம் செய்யப்பட்ட 1,500 வீதிகளை ஒரே நாளில் மக்கள் பாவனைக்குக் கையளிக்கும் நிகழ்வு, மண்டாடுவ பொது விளையாட்டரங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் பேசிய ஜனாதிபதி,..

அன்று நாம் வழங்கிய வாக்குறுதியை அவ்வாறே நிறைவுசெய்ய முடியவில்லை. ஆனாலும், அதில் எந்தவொரு குறையையும் வைக்காது, மக்கள் தம்மீது வைத்த நம்பிக்கையைப் பாதுகாப்பதாக தெரிவித்தார்.

சேதன விவசாயம் போன்று, மீள்பிறப்பாக்கச் சக்திவலு உற்பத்திக்கான மாற்றத்தை ஏற்படுத்துவதையும் தாம் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை.

பயறு, கௌப்பி, உளுந்து, மஞ்சள்  உட்பட 16 வகையான உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வது முழுமையாக நிறுத்தப்பட்டது. இன்று அதன் பிரதிபலனை விவசாயிகள் அனுபவித்து வருகின்றனர். கறுவா, மிளகு, மஞ்சளுக்கான உயர் விலையை விவசாயிகள் பெற்றுக்கொள்கின்றனர். விவசாயிகளின் கைகளுக்குக் கிடைக்கின்ற அந்த வருமானத்தைக் குறைக்காமல் இருப்பதற்கும் நுகர்வோரைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

இந்நிலைமையைப் புரிந்துகொண்டு, பசுமை விவசாயச் சவாலை வெற்றிகொள்வதற்கு ஒன்றிணையுமாறு அனைத்து விவசாயிகளிடமும் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, விவசாயிகள் மீதோ மக்கள் மீதோ அழுத்தங்களைப் பிரயோகித்து, இம்மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தாம் எதிர்பார்க்கவில்லை.

தாம் அதிகாரத்துக்கு வந்தவுடன், மதில்களில் சித்திரங்களை வரைந்த இளைஞர்கள் மாற்றத்தை ஆரம்பித்தனர். மேலும் பலர், கைவிடப்பட்டிருந்த வயல்களில் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டனர். அன்று வைத்த நம்பிக்கையுடன் புரட்சிகரமான மாற்றத்துக்காக மீண்டும் முன்வருமாறு ஜனாதிபதி அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட விருப்பம் – ஜனாதிபதி கோட்டாபய

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட தான் விரும்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு மட்டுமல்லாது அதற்குப் பின்னர் வரும் ஐந்து வருடங்களுக்கும் தனது அரசியல் கொள்கைகளை அமுல்படுத்ததவுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

பசிலின் வருகையால் தீர்வு கிட்டாது – தயாசிறீ காட்டம்

பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் வருவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பது போல உருவாக்கப்படும் விம்பங்களில் உண்மையில்லை என சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது,
பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்துக்கு வந்து அமைச்சரானால் மறுநாள் காலை நினைப்பதெல்லாம் நடந்து விடாது. இன்று நம் நாட்டில் டொலர்கள் இல்லை. 2025ஆம் ஆண்டில் கடனை செலுத்த 29 பில்லியன் டொலர் தேவை.
கோட்டாபயவின், மஹிந்தவின் அரசாங்கமோ அல்லது பசில் நாடாளுமன்றத்துக்கு வந்ததால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடும் என்றிருக்காமல், நாட்டு மக்களுக்கு முதலில் பிரச்சனைகளை தெரிவிக்க வேண்டும். அப்படி கூறினால், இந்த பொருளாதாரத்தை மீண்டும் உருவாக்க நீங்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை மக்களிடம் கேட்க முடியும். ஏனென்றால் நாம் அனைவரும் இதை எதிர்கொள்ள வேண்டும். எவரேனும் பொருளாதாரம் சிறப்பாக இருப்பதாக கூறினால், அப்படியில்லை. உண்மை நிலைமை இதுதான் – என்றார்.