சிறீதரன்

சிறீதரன்

“சர்வதேசத்தை ஏமாற்றவே அமைச்சர்கள் வடக்கை நோக்கபுறப்படுகிறார்கள். ” – சிறீதரன்

“மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரை மையமாக கொண்டே அமைச்சர்கள் வடக்குக்கு வருகிறார்கள்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார்.

உதயநகர் வட்டார மக்களுடனான சந்திப்பில் பேசிய போதே அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கொடூரத்தை சிங்களதேசம் தற்போதே உணர தொடங்கியுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டம், தமிழ் இளைஞர்களை அச்சுறுத்தவும் தமிழ் மக்களை துன்புறுத்தவுமே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது பயங்கரவாத தடைச் சட்டம் பாய இருக்கின்றது.

இதேவேளை மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாக இருக்கின்ற நிலையில் அமைச்சர்கள் வடக்கை நோக்கபுறப்படுகிறார்கள்.  இருப்பினும் அவர்களின் போலி முகத்தையும் இரட்டை வேடத்தையும் சர்வதேச சமூகம் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளது.

பொருளாதார ரீதியில் அதளபாதாளத்திற்கு போயிருக்கும் இந்த நாட்டை மீட்டெடுக்க வேண்டுமெனில் முதலில் இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

“இந்தியாவின் கரிசனையினால் வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான தனி நிர்வாக கட்டமைப்பினை உருவாக்க முடியும்.”- சிறீதரன்

யுத்தம் நடந்து 30 ஆண்டுகள் அதற்கு பின்னர் 12 ஆண்டுகள் கடந்து 42 ஆண்டுகள் இந்த மண்ணிலே கடந்திருக்கின்றது. ஆனால் வடக்கு கிழக்கில் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் ஏற்படவில்லை. என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வடக்கு கிழக்கின் அபிவிருத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பரசியல் பாதிப்படைய செய்யுமல்லவா எனவும், அதற்கான மாற்று திட்டங்கள் உள்ளதா எனவும் ஊடகவியலாளர் அவரிடம் வினவியபோது இவ்விடயத்தினை அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கில் 30 வருடங்களிற்கு மேல் பொருளாதார ரீதியில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2009க்கு முதலே 30 ஆண்டுகளிற்கு மேலாக தொடர்ச்சியான பொருளாதார தடை, மக்கள் உழைக்கக்கூடிய சூழல் இல்லா நிலை குறிப்பாக 10 ஆண்டுகளாக மின்சாரம் என்றால் என்ன என்று கேள்வி கேட்குமளவிற்கு வடக்கு கிழக்கிலே மக்கள் வாழ்ந்திருந்தார்கள்.

இந்த நிலையில்தான் பொருளாதார ரீதியில் மக்கள் ஒடுக்கப்பட்டு உற்பத்தி தொழில்துறைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. இலங்கை அரசாங்கம் யுத்தத்தை காரணமாக காட்டிக்கொண்டிருந்தார்கள். உலக நாடுகளும் இலங்கை அரசு சொல்வதை கேட்டு வடக்கு கிழக்கில் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு பின்னின்றன.

யுத்தத்திற்கு பின்னர் வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கென பெருந்தொகையான நிதியை இலங்கை அரசுக்கு உலக நாடுகள் வழங்கியிருந்தன. அவ்வாறு வழங்கப்பட்ட நிதிகளைக்கூட அதிவேக பாதைகள், தெற்கின் அபிவிருத்திகளிற்கு இலங்கை அரசு பயன்படுத்தியபோது, அதனை கண்காணிக்கக்கூடிய நிலை இல்லாமல் எங்களுடைய பொருளாதாரம் கீழ் நிலைக்கு சென்றுள்ளது.

எங்கள் மக்களின் தற்துணிவும், அவர்களது சுய நம்பிக்கையும் தாங்கள் உழைத்து வாழ்வோம் என்ற எண்ணமும் இருந்தமையால்தான் இன்று பல நீண்ட நாட்களாக வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழர்கள் தங்களது சுய பொருளாதாரத்தில் பொருளாதாரத்தை கட்டி நிமிர்த்தி வருகின்றார்கள். இந்த நிலையிலே இடைக்கால பொருளாதார நிர்வாகம் தொடர்பிலே பேச்சுக்கள் அடிபடுகின்றது. இது ஒரு நல்ல விடயமாக பலராலும் பார்க்கப்படுகின்றது. நானும் அதனை சாதகமான செய்தியாக பார்க்கின்றேன்.

குறிப்பாக யுத்தம் நடந்து 30 ஆண்டுகள் அதற்கு பின்னர் 12 ஆண்டுகள் கடந்து 42 ஆண்டுகள் இந்த மண்ணிலே கடந்திருக்கின்றது. ஆனால் வடக்கு கிழக்கில் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இளைஞர்களிற்கான தொழில்வாய்ப்பு உள்ளிட்டவை குறைந்திருக்கின்றது. இல்லையென்றும் சொல்லலாம்.

இதற்கான வாய்ப்பாக வடக்கு கிழக்கிற்கான தற்காலிக வாய்ப்பாக வடக்கு கிழக்கினை இணைந்த வகையில் குறிப்பிட்ட சில ஆண்டுகளிற்கு பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதற்கான இடைக்கால நிர்வாகத்தினை உருவாக்குவது காலத்திற்கு பொருத்தமானது என கருதுகின்றோம்.

இது தொடர்பில் புத்திஜீவிகள், புலம்பெயர் உறவுகள் உள்ளிட்டவர்கள் மத்தியில் இந்த விடயம் பரவலாக பேசப்படுகின்றது. இதில் மிக முக்கியமாக பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாகும். பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதன் ஊடாக தமிழ் மக்களினுடைய அரசியல் அங்கிகாரத்தினை பெற்றுக்கொள்ளுதல், அந்த அரசியல் அங்கிகாரம் என்பது வடக்கு கிழக்கு அபிவிருத்தியினால் கட்டப்படுவது தொடர்பில் சிங்கள மக்களிற்கு கூட்டாக அவர்களிற்கு விளங்கும் வகையில் சொல்வதாகும்.

குறிப்பாக வடக்கு கிழக்கு இணைப்பு, சமஸ்டி என கூறுவது தமிழீழம் எனும் தனிநாடு என சிங்கள மக்கள் மத்தியில் பயக்கின்றது. ஆகவே இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்டதாக ஒரு நிர்வாகம் ஒன்று கிழக்கையும், வடக்கையும் உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டால் சிறப்பாக அமையும், ஏற்கனவே இவ்வாறு1987ம் ஆண்டு ஒரு கட்டமைப்பு எழுத்து வடிவிலே பேசப்பட்டு எழுத்துடனேயே போய்விட்டது. சிரான் அமைப்பும் இவ்வாறான நிர்வாக கட்டமைப்பை வரைந்தது. அதுவும் அரசியல் மாற்றங்களால் இல்லாது போனது. அது நடைமுறைப்படுத்தப்படவும் இல்லை.

இப்பொழுது இருக்கின்ற சூழல் இலங்கையின் அரசியலமைப்புக்குள் இந்தியாவினுடைய கூடுதலான கரிசனையில் உதவி வழங்கும் நாடுகளையும் சேர்த்துக்கொண்டால் வடக்கு கிழக்கிற்கான தனி கட்டமைப்பினை உருவாக்க முடியும்.

யுத்த காலத்தில் தென்னிலங்கையில் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு அங்கு அபிவிருத்தி அடைந்திருக்கின்றது என்பதுடன், எல்லா மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள் மற்றம் துறை சார்ந்த அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வேலைவாய்ப்புக்களும் வழங்ப்பட்டுள்ளது.

ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதற்கான வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது. காரணம் யுத்தம். இதனை நிமிர்த்துவதற்கான ஒரு வழியாக இந்த இடைக்கால நிர்வாகத்தினை நாங்கள் பார்க்கின்றோம். இதன் ஊடாக நாட்டுக்கு நிதியை கொண்டுவர முடியும்.

குறிப்பாக உலக நாடுகளின் நிதி, இந்தியாவின் நேரடி கண்காணிப்பில் முதலீடுகளை கொண்டு வருதல், இந்தியாவின் மேற்பார்வையில் கொண்டு வருவதன் ஊடாக பல சலுகைகளையும் எதிர்பார்க்கலாம். புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களின் முதலீடுகளை வடக்கு கிழக்கிலே அதிகரிப்பதன் மூலம் தொழில் துறைகளை இயக்க முடியும். குறிப்பாக ஆனையிறவில் உள்ள குறிஞ்சாதீவு உப்பளம், மட்டக்களப்பு காகித தொழிற்சாலை உள்ளிட்ட மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை இப்பொழுது இருக்கின்ற காலத்திற்கேற்ற தொழிற்சாலைகளாக மாற்றியமைப்பதன் மூலம் உடனடி வேலைவாய்ப்புக்களை உருவாக்க முடியும்.

அதேபோன்று பரந்தன் இரசாயன தொழிற்சாலையில் கைத்தொழில்பேட்டை ஒன்றை உருவாக்குவதன் மூலம் அதில் பல்வேறுபட்ட தொழில் துறைகளை உருவாக்க முடியும். வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களை சேர்ந்தவர்களும் சந்திக்கக்கூடிய பகுதியாக பரந்தன் பகுதி உள்ளது.

அவ்வாறான தொழிற்துறைகளை முன்னெடுப்பதன் மூலம் வடக்கு கிழக்கில் அபிவிருத்தி அலையொன்றை அல்லது தொழில் புரட்சியொன்றை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையில்தான் இந்த இடைக்கால நிர்வாகம் தொடர்பில் நாங்கள் சிந்திக்கின்றோம். இது தொடர்பில் நாங்கள் பல தடவை சிந்திக்க இருக்கின்றது. இது தொடர்பில் கட்சியின் உயர் மட்டத்திலும் இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டிருக்கின்றது.

தொடர்ந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளுடனும் இது தொடர்பில் கூடி ஆராய்ந்து அவர்களின் கருத்துக்களும் பெறப்பட்டு வடக்க கிழக்கில் பொருளாதார ரீதியாக ஒரு நிர்வாக கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் அரசியல் உள்ளிட்ட விடயங்களிற்கும் பலத்தை தரும் என்று நாங்கள் கருதுகின்றோம்.

இதேவேளை வனவள திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றால் முன்னெடுக்கப்படும் நில அபகரிப்புக்களை தடுத்து வடக்கு கிழக்கினை பாதுகாக்க முடியும் என்பதுடன், வடக்கு கிழக்கு என்றால் அது தமிழீழம் அல்ல என்பதையும், உலகத்தில் உள்ள சமஸ்டியின் கூடிய அலகாக இந்த நாட்டில்தான் இருக்கின்றது. அவர்கள் அப்படி வாழ வேண்டும் என்பதில் நியாயம் உள்ள என்பதை சிங்கள மக்கள் உணரக்கூடிய வகையிலான செயற்பாடடை அதன் ஊடாக கொண்டுவர முடியும்.

அதுதான் தென்பகுதி மக்களிற்கும் நன்மையை கொண்டு வரும். ஏனென்றார் நிதி நாட்டுக்குள் கொண்டுவரப்படும்போது இலங்கையின் பொருளாதாரத்திலும் கடுமையான வளர்ச்சியினை கொண்டுவரும். சிங்கள மக்கள் உணர்ந்துகொள்ளக்கூடிய இந்த காலத்தில் இடைக்கால நிர்வாகம் என்பது எங்களிற்கு அவசியமானது.

அது தொடர்பில் தூர நோக்கோடும், நல்லெண்ணத்தோடும் ஒவ்வொருவரும் சிந்தித்தால் வாய்ப்பானதாக அமையும் என்று நான் கருதுகின்றேன் என அவர் தெரிவித்தார்.

இவ்வாறான விடயத்தை நடைமுறைப்படுத்த முற்படுகின்ற பொழுது மத்திய அரசினை நீங்கள் எதிர்க்கின்றபொழுது அவர்களும் இதனை எதிர்ப்பார்கள் அல்லவா என அவரிடம் ஊடகவியலாளர் வினவினார்,

சுனாமி ஏற்பட்ட குறிப்பிட காலத்தில் இவ்வாறான நிர்வாக அலகு ஒன்றை சிரான் அமைப்பு விரைந்து முயற்சி எடுத்தபொழுது ஆட்சியில் ரணில் விக்ரமசிங்க இருந்தார். அதன் பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் அது கைவிடப்பட்டது. தற்பொழுது அவர் பிரதமராக இருப்பதால் குறித்த திட்ட வரைபை அவர் மறுக்கமாட்டார் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.

“சொந்த மக்களின் குழந்தைகளையே கொல்லுகின்ற சூழலுக்கு இந்த அரசாங்கத்தினுடைய நிலை மாறி இருக்கிறது.” – சிறீதரன்

“சொந்த மக்களையே சொந்த மக்களின் குழந்தைகளையே கொல்லுகின்ற சூழலுக்கு இந்த அரசாங்கத்தினுடைய நிலை மாறி இருக்கிறது.” என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பூநகரி பிரதேச சபையின் புதிய தவிசாளர் சிறீரஞ்சன் அவர்களை வரவேற்கும் நிகழ்வு  பூநகரி பிரதேச சபையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

சின்னக் குழந்தைகளைக்கூட பட்டினி போட்டு சாகடிக்கும் ஒரு நிலையை இந்த அரசாங்கம் உருவாக்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறது. குடிக்கும் பால்மா கூட அளவிற்கு பயன்படுத்த முடியாத அளவிற்கு பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு போயிருக்கிறது. சொந்த மக்களையே சொந்த மக்களின் குழந்தைகளையே கொல்லுகின்ற சூழலுக்கு இந்த அரசாங்கத்தினுடைய நிலை மாறி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் சிற்றுண்டிகள் உரிமையாளர் சங்கம் அறிவித்திருக்கிறது பால்த் தேநீர் தேநீர் கடைகளில் கேட்க வேண்டாம் என்று இலங்கையில் தேநீர் கூட குடிக்க முடியாத அளவிற்கு நிலை மாறி இருக்கிறது.

இந்த அரசாங்கம் பிரதேச சபைகளின் உடைய அதிகாரங்களை மீளப்பறிக்கின்ற முயற்சியில் இந்த அரசாங்கம் ஈடுபட்டு கொண்டு இருக்கிறது. பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பிரதேச சபைகளுக்கு ஊடாகவே பணிகளை ஆற்றி வந்தார்கள். இப்போது அவர்களை சுகாதார அமைச்சோடு இணைத்திருக்கிறார்கள் அதேபோன்று உள்ளூராட்சி சபைகளின் பொதுச் சுகாதார செயற்பாடுகளையும் மத்திய சுகாதார அமைச்சிற்கு கீழ் கொண்டு வருவதற்கு முயல்கிறார்கள். சுகாதார அமைச்சுக்கு கீழே பொதுச் சுகாதாரபணிகளை உள்வாங்கினால் பிரதேச சபைகளினுடைய சுகாதார நடவடிக்கைகள் செயற்பாடுகள் அவர்களின் மக்களுக்கான பணிகளை செய்ய முடியாத நிலை உருவாகும். ஒரு குறுநில அடிப்படையில் பிரதேச சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பறிப்பதற்கு இந்த அரசாங்கம் முயற்சிப்பது ஒரு துர்ப்பாக்கியம் ஆகும்.

இந்த அரசாங்கத்தினுடைய போக்குகள் இராணுவ ரீதியாகவும் முழு இராணுவ சிந்தனையோடும் நடைபெறுகின்ற காரணத்தினால் மக்களுக்கான பணிகள் அற்று ஒரு வெற்று அரசாங்கமாக இராசி இல்லாத அல்லது மக்களால் விரும்பப்படாத ஒரு தலைவனாக இந்த நாட்டினுடைய ஜனாதிபதி மாறியிருக்கிறார். மக்களால் விரக்தியடைந்திருக்கின்ற இந்த அரசாங்கம் தன்னுடைய செயற்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும். மக்களின் விருப்பங்களின் அடிப்படையில் மக்களின் எண எண்ணங்களின் அடிப்படையில் செயற்படவேண்டும்.

இந்த நாட்டில் இரண்டு தேசிய இனங்கள் உண்டு. ஒன்று தமிழ்த் தேசிய இனம் மற்றையது சிங்கள தேசிய இனம். சிங்கள தேசிய இனத்திற்கு உள்ளது போன்ற கலை கலாச்சாரம் பண்பாடு மொழி அடையாளங்கள் போன்றன தமிழ்த் தேசிய இனத்திற்கும் உண்டு. சிங்கள தேசிய இனத்திற்கு முன்பாக பல ஆயிரம் ஆண்டுகள் பூர்வீகமாக வரலாற்று ரீதியாக மொழி அடையாளங்களோடும் நில அடையாளங்களோடும் பஞ்ச ஈச்சரங்களை வைத்து வாழ்ந்தவர்கள் தமிழர்கள். ஆகவே அவர்களின் இழந்து போன இறைமையை வழங்கி அவர்களையும் அணைத்து இந்த நாட்டிலே தேசிய அரசியல் நீரோட்டதைக் கொண்டு சென்றால் இந்த நாட்டின் பொருளாதாரம் மட்டும் அல்ல இந்த நாட்டின் இன ஒற்றுமையும் நாடும் வளர்ச்சி அடையும் இவற்றை புரிந்து கொண்டு இந்த அரசாங்கம் தமிழர்களின் அபிலாசைகளை புரிந்து கொண்டு வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

“உலகிலேயே முன்பள்ளிக் கல்வித் திட்டம் இல்லாத ஒரே நாடு இலங்கை.” – சிறீதரன்

உலகிலேயே முன்பள்ளிக் கல்வித் திட்டம் இல்லாத ஒரே நாடு இலங்கை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற கல்வி அமைச்சுக்கான ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

”நாட்டின் சாதாரண பாடசாலைகளுக்குக் கிடைக்கின்ற வளங்கள் தேசிய பாடசாலைகளுக்குக் கிடைப்பதில்லை.

இலங்கையில் மொழி காரணமாகவே பல பிரச்சினைகள் ஏற்பட்டது. கல்வி அமைச்சு உள்ளிட்ட எந்த ஒரு அமைச்சிலும் தமிழ் மொழியில் சேவையை வழங்க ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்” என்றார்.

அதேபோன்று கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மட்டுமே முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இராணுவம் சம்பளம் வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரா.சாணக்கியனை மொஹமட் சாணக்கியன் என குறிப்பிட்ட வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் – சிறீதரன் வழங்கிய பதில் என்ன..?

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபனை கீழ்த்தரமான அரசியல்வாதியென திட்டித்தீர்த்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், எந்தத் தகுதியும் திலீபனுக்கு இல்லை எனவும் தெரிவித்தார்.

வரவு- செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் நேற்று  கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனை “மொஹமட் சாணக்கியன்“ என தனது உரையில் கூறியிருந்தார்.

எனினும் இதன்போது சாணக்கியன் சபையில்லை என்பதால் உடனடியாக ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி திலீபனின் சர்ச்சைக்குரிய கூற்றுக்கு எதிர்ப்பைத் தெரிவித்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் , இராசமாணிக்கம் இராஜபுத்திர சாணக்கியன் என்கிற பெயரை மாற்றி மொஹமட் சாணக்கியன் திலீபன் தனது உரையில் கூறுகிறார். இதுவொரு கீழ்த்தரமான செயலாகும். அதனால், இதனை ஹன்சாட்டில் இருந்து நீக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினரின் பெயரை தவறாக கூறுவது பாராளுமன்ற சட்டத்திட்டங்களுக்கு முரணானது என்றார். இந்த (திலீபன்) படிக்காத பாராளுமன்ற உறுப்பினரை திருத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இறுதி யுத்தத்தில் குடும்பங்களோடு சரணடைந்தவர்கள் எங்கே ..? – நாடாளுமன்றில் விபரங்களுடன் கேள்வியெழுப்பிய சிறீதரன் !

இறுதி யுத்தத்தின் முடிவில் தங்கள் குடும்பங்களோடு சரணடைந்த குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு என்ன நடந்தது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் நாடாளுமன்றில் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் வேளையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புப் போரின் இறுதிக் கணங்களில், படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து பல சிறுவர்கள், அதிலும் குறிப்பாக விடுதலைப்புலிகளின் முதல்நிலை உறுப்பினர்கள் பலரது பிள்ளைகள் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.

1. விடுதலைப்புலிகளின் அரசியல்துறை அறிக்கைப் பொறுப்பாளர் அம்பி அவர்களின் குழந்தைகள் பிரியாளினி பரமேஸ்வரன், பிரதீபன் பரமேஸ்வரன், பிறையாளன் பரமேஸ்வரன்,

2. மணலாறு தாக்குதல் படையணியைச் சேர்ந்த இளங்குமரன் அவர்களின் மகள் அறிவுமதி,

3. யாழ் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இளம்பரிதி அவர்களின் பிள்ளைகளான தமிழொளி மகாலிங்கம், எழிலினி மகாலிங்கம், மகிழினி மகாலிங்கம்,

4. கலை மாஸ்டரின் மகள்மாரான கானிலா திருச்செல்வம், லக்சாயினி திருச்செல்வம்,

5. மணலாறு தளபதி மஜீத் அவர்களின் பிள்ளைகளான சாருஜன் முரளிதரன், அபிதா முரளிதரன்,

6. அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் அவர்களின் மகன் ஜனகன் மகேந்திரன்,

7. நிர்வாகசேவைப் பொறுப்பாளர் பிரியன் அவர்களின் ஒரு வயதேயான மகள் கலைச்சுடர் தயாசிறீ,

8. விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் ராஜா அவர்களின் மகன்மாரான சாருஜன் கிருஸ்ணமூர்த்தி, நிகநிலான் கிருஸ்ணமூர்த்தி, ஆதிரையன் கிருஸ்ணமூர்த்தி,

9. வனவளத்துறைப் பொறுப்பாளர் சக்தி அவர்களின் பிள்ளைகளான தமிழின்பன் சத்தியமூர்த்தி, தமிழ்முகிலன் சத்தியமூர்த்தி, இசைநிலா சத்தியமூர்த்தி,

10. சுடர் அவர்களின் குழந்தைகளான அபிராமி சுரேஸ்குமார், அபிசன் சுரேஸ்குமார்,

11. வனவளப் பாதுகாப்புக்கான மன்னார் மாவட்ட பொறுப்பாளர் சுமன் அவர்களின் மகள் தணிகைச்செல்வி செல்வகுமார்,

12. அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் தங்கன் அவர்களின் பிள்ளைகளான துவாரகன் சுதாகரன், துவாரகா சுதாகரன், துர்க்கா சுதாகரன்,

13. மன்னார் மாவட்ட படையணிப் பொறுப்பாளர் வாகீசன் அவர்களின் பிள்ளைகளான சிந்தரசி நிமலநாதன், கோகலை நிமலநாதன், கலையரசன் நிமலநாதன்,

14. புகைப்படப்பிரிவுப் பொறுப்பாளர் ஜவான் அவர்களின் மகள் எழில்நிலா சற்சுதன் உள்ளிட்டோர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் சரணடைந்ததற்கான சாட்சிகள் இருக்கிறது .குழந்தைகள் சிறுவர்களுக்கான புதிய சட்டங்கள் சீர்திருத்தங்கள் பற்றி பேசிக் கொண்டிருக்கிற மேலே குறிப்பிட்ட சிறார்களுக்கு என்ன நடந்தது இவர்களில் பெரும்பாலானோர் எனது மாணவர்கள் ஆவர். சிறைச்சாலைகளில் எத்தனையோ பெண்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குழந்தைகளோடு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
பயங்கர வாத தடைச்சட்டத்தின் மூலம் தற்போதும் தமிழர்களை சித்திரவதை செய்து கொண்டிருக்கிறார்கள். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 39 பேர் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அழைக்கப்படும் கரைச்சி பச்சிலைப்பள்ளி  பூநகரி ஆகிய பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் ஏனையோரும் சித்திரவதைக்கு உள்ளாகின்றனர்.
எமக்கு நினைவேந்தல் செய்கிற உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது எமது பிள்ளைகளை நினைவுகூர முடியாதவர்களாக நாங்கள் இருக்கிறோம் என்றார்.

“தமிழ்மக்களின் மாவீரர் தின அனுஷ்டிப்பு தொடர்பான கோரிக்கையை நாட்டின் தலைவர் என்ற வகைக்கு அப்பால் ஒரு தந்தை என்ற வகையில் உணர்ந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்” – ஜனாதிபதிக்கு பா.உ .சிறீதரன் கடிதம் !

“தமிழ் மக்களின் உரிமைகளில் ஒன்றான மாவீரர் நாளினை நினைவு கூறுவதற்கான அனுமதி வழங்கும் கோரிக்கையை பிள்ளைகளினுடைய தந்தையாகவும், கௌதம புத்தர் அவர்களின் நல் இயல்புப்போதனைகள் ஊடாக வந்த ஒரு பௌத்தனாகவும் இவ்விடயத்தினை அணுகுவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்”  தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஜனாதிபதிக்கு கடிதமொன்றினை எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தின் முழுவடிவம் வருமாறு,

2020.11.04
மேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள்,
ஜனாதிபதி செயலகம்,
இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு,
கொழும்பு.01

அஞ்சலி நிகழ்வுகளை நடாத்துதல்

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களே!

கடந்த நான்கு வருடங்களாக இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பையோ, பயங்கரவாததடைச் சட்டத்தையோ மீறாத வகையில் நாம் எமது உறவுகளை நினைவு கூர்ந்த முன்னுதாரணமான முறையை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். விசேடமாக 2019ம் ஆண்டு தாங்கள் இலங்கை நாட்டின் மேன்மை தங்கிய ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் 2019 நவம்பர் 27ம் திகதி எமது உறவுகள், தமது பிள்ளைகளை நினைவு கூருவதற்கு தங்களுடைய ஒத்துழைப்பு கிடைத்திருந்தமை பாராட்டத்தக்கது.

இலங்கை நாட்டில் நடைபெற்ற இனரீதியான ஆயுதப்போர் முடிவடைந்து, போருக்குப் பின்னர் இந்த நாட்டின்அதிபராக தலைமையேற்றிருக்கும் தாங்கள் போருக்கான அடிப்படைக் காரணிகளை இல்லாமற்செய்து இலங்கைத்தீவின் முன்மாதிரியான தலைவராக விளங்குவீர்கள் என்ற நம்பிக்கையில் எமது மக்களின் நம்பிக்கைகளையும், எதிர்பார்ப்புக்களையும் உங்களுக்கு இக் கடிதம் மூலம் வெளிப்படுத்துகின்றேன்.

கடந்த முப்பது ஆண்டுகால கடும் போரின் விளைவாக பொருளாதார ரீதியாகவும், வேலைவாய்ப்பு, கல்வி, கலை, கலாசார, மொழி, நில அடையாள ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட, போரின் நினைவுகளும்,
வடுக்களும் கொண்ட சமூகம் என்ற வகையில் நாமும், எம் தமிழ் உறவுகளும் வலிதாங்கி நிற்கிறோம்.

பல்லாயிரக்கணக்கான உறவுகளின் உயிரிழப்பு, அவய இழப்பு, மாற்றுத்திறனாளிகளின் உருவாக்கம், ஆயிரக்கணக்கான விதவைகளின் தோற்றம், அன்னை, தந்தையை இழந்த நிலையில் அநாதரவாக்கப்பட்ட
சிறுவர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோர், இன்னும் விடுவிக்கப்படாத நிலங்கள் என அத்தனை அவலங்களையும் எம்மிடையே உருவாக்கிய கொடூரமான யுத்த முடிவிற்குப் பிற்பாடு நாட்டின் அமைதி, சமாதானம், சகவாழ்வு என்பவற்றை நிலைநாட்டுவது குறித்து தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையைப் போல் இலங்கைத்தீவில் வாழ்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே சமத்துவம், சம உரிமையுடைய மன உணர்வைக் கட்டியெழுப்பும் நிலையில் நாங்களும் அதீத அக்கறை கொண்ட, இந்த நாட்டின் தேசிய இனமாக பங்களிப்புச்செய்ய விளைகிறோம்.

போருக்கான காரணிகள் எவையாக இருப்பினும் போரில் பங்குபற்றியவர்களதும், போர் நிகழ்ந்த நிலத்தினதும் விளைவுகள் அப்பகுதி மக்களைச் சார்ந்ததாகவே இருக்கிறது. இனச்சமத்துவத்தை அங்கீகரிக்கத் தவறிய முற்போக்குத்தனமற்ற அரசியல் தலைவர்களின் வழிநடத்தல்கள் இளைய சமூகத்தவர் பலரை பலியெடுத்திருந்தது. அது போரில் ஈடுபட்டிருந்த இரு தரப்பிலும் நிகழ்ந்தது என்பதை நாம் அறிவோம்.
இப்பொழுது மக்களின் மனக்காயங்களுக்கும் அவர்களின் ஆற்றாமைகளுக்கும் ஆறுதலளிப்பது, அமைதி தருவது, நம்பிக்கையை ஊட்டுவது, இறந்தவர்களை நினைவு கூரும் அவர்களின் அடிப்படை உரிமையொன்றே ஆகும்.

அவ்வுரிமை என்பது ஒவ்வொரு குடும்பத்தவர்களதும் சமய, சமூக, பண்பாட்டு விழுமியங்களைத் தழுவியது என்பதால் அத்தகைய பிரார்த்தனைகளையும், சடங்குகளையும் மேற்கொள்கின்ற போது அவை அதிகாரத்துவமுடைய அதிகாரிகளினால் பயங்கரவாத விடயங்களோடு ஒத்துப் பார்க்கப்படுதல்,
அல்லது போராட்டம் ஒன்றினை மீள உருவாக்கம் செய்வதற்கான செயல் முனைப்பாக காண்பிக்கப்படுதல் என்பன தவறான அர்த்தப்படுத்தல்களாகும்.

வாழும் வயதுடைய இளம் பராயப் புதல்வனை, புதல்வியை, தனது இளவயதில் கரம் பிடித்துக்கொண்ட காதல் கணவனை, இழந்து துயருறுகின்ற நெஞ்சம் எவ்வாறு இருக்கும் என்பதை நாட்டின் தலைவர் என்ற வகைக்கு
அப்பால் ஒரு தந்தை என்ற வகையில் உணர்ந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

காலச்சூழலில் கரைந்து போன உறவுகளினை நினைத்து கண்ணீர் வடிக்கவும், விளக்கேற்றவும் துடிக்கின்ற ஒவ்வொரு பிள்ளைகளினுடைய தந்தையாகவும், கௌதம புத்தர் அவர்களின் நல் இயல்புப்போதனைகள் ஊடாக வந்த ஒரு பௌத்தனாகவும் இவ்விடயத்தினை அணுகுவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

இனி ஒரு போதும் போரொன்றை விரும்பாத எமது மக்களின் சார்பில் பயங்கரவாதம் எனப்படுகின்ற இயல்புகளுக்கு ஒத்திசையாத வகையில் எங்களின் பிள்ளைகளை அவர்கள் புதைக்கப்பட்ட நிலங்களில்
சென்று வழிபடுவதற்கு, விளக்கேற்றுவதற்கு, கண்ணீர் விட்டு அழுவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை இவ் அரசு அளித்திருப்பது நிறைவைத் தருகின்றது என எமது மக்கள் நம்பும் வகையில் தங்களுடைய செயல் அமைய வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.

இம் முறையும், இனிவரும் காலங்களிலும் எமது மக்கள் தமது உறவுகள் புதைக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று விளக்கேற்றி, மலர்தூவி, கண்ணீர் சிந்தி, வழிபடுவதற்கான தங்களதும், முப்படைகளதும்
காருண்யமான ஒத்துழைப்பு கடந்த நான்கு ஆண்டுகளைப் போல தொடர்ச்சியாக கிடைக்குமென்ற அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடாய் எமது மக்களின் சார்பில் இக்கடிதத்தை சமர்ப்பிக்கின்றேன்.
தாங்களும் தங்கள் அரசும் காண விளைகின்ற சமத்துவமும், சமநீதி உடைய இலங்கை நாட்டில் எங்கள் பிள்ளைகளுக்காக நாம் ஏற்றும் சுடர்களின் ஒளியும் பரவட்டும்”

இங்ஙனம்,
மக்கள் பணியிலுள்ள,
சிவஞானம் சிறீதரன்
பாராளுமன்ற உறுப்பினர்,
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்,
கிளிநொச்சி.

தமிழர்களிடம் தாம் இந்நாட்டு பிரஜைகள் என்ற உணர்வு இதுவரை ஏற்படவில்லை !- பாராளுமன்ற முதலாவது அமர்வில் சிறீதரன்.

இன்றைய அரசாங்கம் அறுதிப் பெரும்பான்மையோடு, தங்களுக்கு ஒரு பெரும்பான்மை பலம் இருப்பதாக கருதிக் கொண்டு ஒரு மிகக்கூடிய மமதையோடு  செயற்பட முனைவார்களானால் மீண்டும் இந்த நாடு ஒரு இனவாத ரீதியான சகதிக்குள் தள்ளப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கடந்த 20.08.2020 காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியிருந்தது. இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டின் ஒரு முக்கியமான பிரச்சினை தொடர்பில் நாட்டின் தலைவர் பேசாமல் விட்டமையானது நாட்டின் ஒரு துரதிஷ்ட நிலையாக எம்மால் பார்க்கப்படுகிறது.

இந்த நாட்டில் வாழ்கின்ற இரு தேசிய இனங்கள் சிங்கள தேசிய இனமும், தமிழ் தேசிய இனமும். தமிழ் தேசிய இனம் கடந்த 70, 80 ஆண்டுகளாக இந்த மண்ணிலே பல இனப்படுகொலைகளுக்கும், அழிவுகளுக்கும் உள்ளாக்கப்பட்ட ஒரு இனம்.அதனால் தான் அவர்கள் ஒரு நீண்ட கால போராட்டத்திற்குள் தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்திருந்தார்கள்.

அவ்வாறு அர்ப்பணிக்கப்பட்ட அவர்களது வாழ்க்கையிலே இன்று போராட்ட வடிவங்கள் மௌனிக்கப்பட்டிருந்தாலும் இந்த நாட்டினுடைய பிரஜைகள் தாங்கள், தாங்கள் இந்த நாட்டிற்கு உரியவர்கள் என்ற எண்ணம் அவர்களிடம் இன்னமும் உருவாகாமல் இருப்பது இந்த நாட்டிலே கொண்டு வரப்படுகின்ற பல்வேறுபட்ட சட்டங்களும், சிங்கள மக்களுடைய மனோ நிலைகளும், அவர்களை வழிநடத்துகின்ற சிங்கள தலைவர்களின் எண்ணங்களுமே இன்னும் இந்த நாட்டை வேறுபட்ட நிலைக்குள் வைத்திருக்கிறது.

குறிப்பாக இன்றைய அரசாங்கம் அறுதிப் பெரும்பான்மையோடு, தங்களுக்கு ஒரு பெரும்பான்மை பலம் இருப்பதாக கருதிக் கொண்டு ஒரு மிகக்கூடிய மமதையோடு இதனை நடத்த முனைவார்களானால் மீண்டும் இந்த நாடு ஒரு இனவாத ரீதியான சகதிக்குள் தள்ளப்படும் என்பதற்கு வரலாறு அவர்களுக்கு ஒரு பாடத்தை கற்றுக் கொடுக்கவேண்டும் என்பதல்ல.

ஏனென்றால் நீண்ட நெடும் வரலாற்று பாடங்களை அவர்கள் கற்றுக் கொண்டவர்கள். இந்த ஒரே தீவினுள் இரண்டு தேசிய இன மக்கள் வசிக்கின்ற போதும் அவர்கள் தமக்குரிய அரசியலையும் பொருளாதாரத்தையும் வெவ்வேறு அடிப்படையில் கொண்டுள்ளனர்.

இந்த உண்மைகளை அனுசரித்து ஏற்கனவே நடந்திருந்தால் இலங்கை பொருளாதாரத்தின் அபிவிருத்தியை எட்டுவதில் எவ்வித பிரச்சினைகளையும் கொண்டிருக்க மாட்டாது என குறிப்பிட்டுள்ளார்.

நான் துரோகி எனில் எனக்கு வாக்களிக்க வேண்டாம் – யாழில் சிறீதரன்

இரணைமடு குடிநீர்தான் பிரச்சனை என்றால் என்னை நிராகரியுங்கள் தோல்வியை எதிர்கொள்ள நான் தயாரென  தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரான சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (02.08.2020) யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரணைமடு குளத்தின் தண்ணீரை யாழ்ப்பாணத்திற்கு வழங்க முடியாதென நான் கூறியதாக ஊடங்களில் வெளிவந்துள்ள செய்திகள் தொடர்பில் விளக்கமளிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.   இரணைமடு தொடர்பில் இப்போது யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டியங்கும் தொலைக்காட்சி என் பெயரைக் குறிப்பிடாமல் எனக்கு எதிராக இரணைமடு நீரை தர மறுத்தவர் யார்? மறக்க மாட்டார்கள் யாழ்ப்பாண மக்கள் என்று கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் ஒன்றை பிரசுரித்து வருகிறார்கள். இதன் விளக்கம் இல்லாமல் குறுகிய வட்டத்துக்குள் அவர்கள் நிற்கிறார்கள்.

கிளிநொச்சியில் தண்ணீர் இல்லை குடிக்க, விவசாயம் செய்ய தண்ணீர் இல்லாத நிலையில் யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டால் இங்கே ஒரு விரோதத்தை கட்டி வளர்க்கலாம் இதனை அரசாங்கம் திட்டமிட்டு செய்தது .இதனையே சிலர்  அரசியலாக காவிச் செல்கின்றார்கள்.நான் யாருக்கும் தண்ணீர் தரமாட்டேன் என்று சொல்லவில்லை. நியாயத்தை சொன்னேன்.

குடிநீர் பிரச்சனையை தீர்க்க நாங்கள் முக்கியமான முயற்சிகளை செய்தோம். பாலியாறு எப்போதும் கடலுக்கு தண்ணீர் போகின்ற ஆறு, மண்டைக்கல்லாறு,குடமுறுட்டி போன்ற ஆறுகளாலும் கடலுக்கு தண்ணீர் போகிறது எத்தனையோ வளங்கள் உள்ளது.

நிலத்தடி நீரையும் நன்னீராக்கி 24 மணிநேரமும் குடிதண்ணீர் வழங்கக் கூடிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. எனினும் இவை குண்டுவெடிப்பு, ஜனாதிபதி தேர்தல், கொரோனா போன்றவற்றால் இத்திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது தான் இதன் உண்மை.

இதன் பிறகும் இரணைமடு தண்ணீரை தரவில்லை என்று நீங்கள் எண்ணினால் நான் துரோகி என நினைத்தால், என் மீது நம்பிக்கை இல்லை என்றால் தயவு செய்து எனக்கு வாக்களிக்க வேண்டாம். தோல்வியை நான் ஏற்கத்தயாராக உள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.