ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

நாட்டை முன்னேற்ற மகிந்த ராசபக்சவும் பொதுஜன பெரமுனவும் ஆதரவு வழங்கினர் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் தனது வேலைத்திட்டங்களுக்கு பொதுஜன பெரமுனவினா் தமது ஒத்துழைப்பை வழங்கியிருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொிவித்துள்ளாா்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹித்த அபேகுணவர்தனவின் அரசியல் வாழ்வின் 27 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு களுத்துறையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

நாடு நெருக்கடியை எதிர்நோக்கி சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறிய போது பதில் ஜனாதிபதியாக நான் பொறுப்பேற்றேன்.அதன்பின்னர் நாட்டை வீழ்ச்சிப்பாதையில் இருந்து கட்டியெழுப்புவது தொடர்பாக சிந்தித்தேன்.

அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியிருந்தது. சஜித்திடம் இருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. அனுரகுமாரவும் அப்போது எதனையும் தெரிவிக்கவில்லை. அதன்பின்னர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஆதரவு கோரியிருந்தேன்.

அதன்பின்னர் கட்சி தரப்பினரும் கலந்துரையாடி பசில் ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பொதுஜன பெரமுன கட்சியாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் எனது வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

அதன்பின்னர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு நாடாளுமன்றிலும் பொதுஜன பெரமுனவினர் எனக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். அவர்களின் ஒத்துழைப்பினால் தடையின்றி என்னால் பொருளாதார வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடிந்தது.

அதேபோல் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலரும் எனக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள்” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தொிவித்தாா்.

 

இலங்கையின் பாடசாலைகளில் செயற்கை நுண்ணறிவு கழகம் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

புதிய பொருளாதாரத்துடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்பட்ட கல்வி முறையும் அவசியமானது எனவும், அதற்கான கல்விச் சீர்திருத்தங்கள் தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

காலி – ஹால் டி கோல் ஹோட்டலில் இன்று (06) நடைபெற்ற கல்வி நவீனமயமாக்கலின் புதிய அத்தியாயமாக தென் மாகாணத்தின் 200 பாடசாலைகளுக்கு 2,000 நவீன வகுப்பறைகள் மற்றும் 2,000 டெப் கணனிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்திர் ரமேஷ் பத்திரன இந்திய அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய தென் மாகாண சபைக்கு கிடைத்த 3,000 இலட்சம் ரூபாய் (30 கோடி) நிதி ஒதுக்கீட்டின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்திற்காகத் தெரிவு செய்யப்பட்ட 200 பாடசாலைகளில் 150 பாடசாலைகள் காலி மாவட்டத்திலும் ஏனைய 50 பாடசாலைகள் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அமைந்துள்ளன.

ஒரு வகுப்பறைக்கு 10 டெப் கணினிகள் என்ற வகையில் 200 வகுப்பறைகளுக்கு 2,000 டெப் கணினிகள் வழங்கப்பட்டன.

இதன் அடையாள அம்சமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய உயர்ஸ்தானிகர் சந்தூஷ் ஜாவிற்கு நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க:

“தற்போது உலகம் நவீன தொழில்நுட்பத்துடன் முன்னேறி வருகிறது. அதற்கேற்ப, இந்நாட்டின் கல்வி முறையும் நவீன தொழில்நுட்பத்துடன் நடத்தப்பட வேண்டும். அதற்குத் தேவையான கல்விச் சீர்திருத்தங்கள் அமைச்சினால் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

அன்று நாம் பல கல்விக் கொள்கைகளை நாட்டுக்கு அறிமுகப்படுத்தினோம். அந்தக் கல்விக் கொள்கைகள் அன்றைய காலத்திற்கு ஏற்றதாக இருந்தாலும், இன்று ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியால், கல்வித் துறையில் புதிய சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன.

தற்போது பாடசாலைகளில், செயற்கை நுண்ணறிவுக் கழகங்களை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பக் கல்வியை தொடங்கி சில வருடங்கள் ஆகிறது. இந்த ஆண்டு நாம் ஆரம்பித்திருக்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ஆசிரியர்களுக்கு சிறந்த பயிற்சி தேவைப்படும். அதற்குத் தேவையான பயிற்சி மற்றும் உட்கட்டமைப்பு வசதிளை அரசாங்கம் ஏற்படுத்தும். மத்திய கல்லூரிகள் மற்றும் தேசிய பாடசாலைகள் செயற்கை நுண்ணறிவு பாடசாலைகளாக மேம்படுத்தப்பட வேண்டும்.

நவீன தொழில்நுட்பத்துடன் முன்னேறுவதில் அண்டை நாடான இந்தியாவிடம் இருந்து கிடைக்கும் ஆதரவு மிகவும் பாராட்டத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கைக்கு ஐ.ஐ.டி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுடன் எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக நடந்து வருகின்றன.

மலேசியாவில் நான் எலான் மஸ்குடன் கலந்துரையாடினேன். அவரது நிறுவனத்தின் இணையத் தொழில்நுட்பம் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் தொலைதூர கிராமங்களில் உள்ள பிள்ளைகளுக்கு தொழில்நுட்பக் கல்வி வழங்கும் வாய்ப்பு கிடைக்கும். இன்று தென் மாகாணம் கல்வித்துறையில் அதீத திறமைகளை வெளிப்படுத்தும் மாகாணமாக மாறியுள்ளது. தென் மாகாணத்தின் முதலாவது டச்சு பாடசாலையான பத்தேகம கல்லூரி இன்று தேசிய பாடசாலையாக மாறியுள்ளது.

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்காலத்திற்கு ஏற்ற சந்ததியை உருவாக்கி ஒரு நாடாக உலகையே வெல்லும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.

“நாடு பற்றி எரிந்தபோது ஓடி ஒழிந்தவர்கள் ஜனாதிபதி தேர்தல் என்றவுடன் நானும் ஜனாதிபதிதான் என்று கூவிக்கொண்டு வருகின்றார்கள்.” – இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்

“நாடு பற்றி எரிந்தபோது ஓடி ஒழிந்தவர்கள் ஜனாதிபதி தேர்தல் என்றவுடன் நானும் ஜனாதிபதிதான் என்று கூவிக்கொண்டு வருகின்றார்கள்.” என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் பேரில் உறுமைய காணி உறுதி வழங்கும் வேலை திட்டத்திற்கு அமைவாக கிழக்கு மாகாணத்திற்கான நடமாடும் சேவை வியாழக்கிழமை (04) மட்டக்களப்பில் முன்னெடுக்க எடுக்கப்பட்டிருந்தது.

காணி சீர்திருத்த ஆணைக்குழுக்கு சொந்தமான காணியில் குடியிருந்து இதுவரையில் காணி உறுதிகள் இல்லாதவர்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் மூன்றாவது நடமாடும் சேவை இதன்போது மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் கோரிக்கைக்கு அமைவாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயம் இணைந்து இந்த நடமாடும் சேவை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

 

இதன் ஆரம்ப நிகழ்வு காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கான பணிப்பாளர் என்.விமல்ராஜ் தலைமையில் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

 

மேலும், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பத்மசிறி லியனகே, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் உட்பட பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர்கள், உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

 

இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

 

கிழக்கு மாகாணத்தில் அதிகப்படியான வேலை திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு எம்மிடம் உள்ளது.இந்த நாடு மிகப்பெரிய ஆபத்தான நிலையில் இருந்த வேலையில் நாம் அவர்களை கைவிட்டு ஓடிவிட முடியாது ஒரு குறுகிய காலத்துக்குள்ளே எமது நாடு பொருளாதார ரீதியில் படிப்படியாக முன்னேற்றம் கண்டு வருகின்றது. மக்கள் தலைவர்கள் என்பவர் வெளிச்சத்தை ஏற்பவராக இருக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தல் வர இருக்கின்றது. தினம் தினம் பல ஜனாதிபதி வேட்பாளர்கள் வந்து கொண்டே இருக்கின்றார்கள் நாடு பற்றி எரிந்தபோது ஓடி ஒழிந்தவர்கள் ஜனாதிபதி தேர்தல் என்றவுடன் நானும் ஜனாதிபதிதான் என்று கூவிக்கொண்டு இதில் பலர் இந்த நாடு பற்றி எரிந்தபோது,நாட்டு மக்கள் தவிர்த்தபோது வீட்டு மூலைக்குள் ஒழிந்திருந்தவர்களும் இந்த நாடு இன்னும் நூறு வருடத்திற்கு மேல் எழமுடியாது என்று அறிக்கை விட்டவர்களுமே இவர்கள்தான்.

 

நாம் இந்த நாட்டை நேசிப்பவர்களாக இருக்க வேண்டும் அப்போது நாட்டை பொறுப்பெடுத்த தலைவர் நாட்டை விட்டு ஓடவில்லை களத்தில் நின்று தான் மக்களுக்காக இறுதிவரை போராடினார். என அவர் இதன்போது தெரிவித்தார்.

ஆசிரியர்களின் முறையற்ற போராட்ட செயல்களுக்கு ஆதரவளிக்க வேண்டாம் – எதிர்க்கட்சிகளிடம் ஜனாதிபதி வேண்டுகோள்!

ஆசிரியர் தொழிலில் பிரவேசிக்கும் அனைவரும் எதிர்கால சந்ததியினருக்காக தமது சேவைகளை அர்ப்பணிக்க வேண்டுமெனவும், ஒழுக்கமின்றி ஒரு நாட்டில் கல்வியை பேண முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு மற்றும் பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாடசாலைக் கல்வியை சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என தெரிவித்த ஜனாதிபதி, இது தொடர்பில் தேவையான மேலதிக நடவடிக்கைகளை ஆராயுமாறு சட்டமா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்துமாறு சகலரையும் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, இந்த முறையற்ற செயல்களுக்கு ஆதரவளிக்க வேண்டாம் எனவும் எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் ஆசிரியர் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வுக்கான இணைய முறைமை தொடர்பில் கல்வி அமைச்சருடன் கலந்துரையாடியதாக தெரிவித்த ஜனாதிபதி, பதவி உயர்வு அல்லது ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் எவருக்கும் அநீதி இழைக்க இடமளிக்கப்பட மாட்டாது எனவும் வலியுறுத்தினார்.

இதேவேளை இலங்கை கல்வி நிர்வாக சேவையில் தரம் III பொது ஊழியர் வெற்றிடங்களுக்கு 60 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டதுடன் 1706 பட்டதாரிகள் மற்றும் 453 ஆங்கில டிப்ளோமாதாரர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“ரணில், நான் நாட்டைப் பிரிப்பேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்னிடம் சம்பந்தன் கேட்டார் – நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், மறைந்த நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் எப்பொழுதும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக பங்காற்றியதாவும், அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டிய விதம் தொடர்பில் அவருக்கு தனியான நிலைப்பாடு இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இரா.சம்பந்தனின் மறைவு தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நான் இந்த உரையாற்றும் போது, ​​அன்று என்னுடன் நாடாளுமன்றத்திற்கு வந்தவர்களில் எஞ்சியிருந்த எனது சகாக்களில் ஒருவரான சம்பந்தன் இப்போது எங்களுடன் இல்லை.

மிகவும் கடினமான காலகட்டங்களில் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் ஆற்றிய பங்களிப்பை நன்றியுடன் நினைவு கூர்கிறேன். அவர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்திய போதிலும், அவர் எப்போதும் இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டிற்காக பங்காற்றினார்.

ஒருமுறை அவர் என்னுடன் உரையாற்றும் போது “ரணில்,நான் நாட்டைப் பிரிப்பேன் என்று நினைக்கிறீர்களா? நான் சிறுவனாக இருந்த போது, 1948ல் நாடு சுதந்திரம் பெறுவதைப் பார்க்கச் சென்றிருந்தேன்” என்று அவர் என்னிடம் குறிப்பிட்டார்.

அதனைக் காணும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கவில்லை. நம்மில் பலர் அப்போது பிறக்கவே இல்லை. ஆனால் அதிகாரப் பகிர்வு தொடர்பில் அவர் தனித்துவமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். அதைப் பற்றி விவாதம் செய்ய அவசியமில்லை. அவர் அதற்கான போதுமான பங்கை செய்துள்ளதாக நினைக்கிறேன். அதனை நிறைவு செய்ய இன்னும் கொஞ்சம் பங்காற்ற வேண்டியுள்ளது. மேலும் அந்த வேலைகளை நிறைவு செய்வதே அவருக்கு செய்யக்கூடிய மிக உயர்ந்த பங்களிப்பாக இருக்கும்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவின் சேவை இராணுவத்தளபதியாகவோ, பாராளுமன்ற உறுப்பினராகவோ முடிந்துவிடப் போவதில்லை – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவின் சேவை இராணுவத்தளபதியாகவோ, பாராளுமன்ற உறுப்பினராகவோ முடிந்துவிடப் போவதில்லை. அவர் நாட்டுக்கு சேவையாற்றுவதற்கு இன்னும் வாய்ப்புக்கள் உள்ளன. யுத்த களத்தில் மாத்திரமின்றி அரசியல் களத்திலும் வரலாற்று வெற்றியை அவர் பதிவு செய்வார் என்று தான் நம்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவின் ‘இராணுவத்தளபதி நாட்டுக்கு வழங்கிய வாக்குறுதி’ நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை (28) கொழும்பு, தாமரை தடாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில்,

பீல்ட் மார்ஷல் பொன்சேக்கா வழங்கிய வாக்குறுதிக்கமைய இராணுவத்தளபதியாக பொறுப்பேற்று 3 தசாப்தகால யுத்ததத்தை நிறைவு செய்தார். அதன் காரணமாகவே அவர் பீல்ட் மார்ஷலாக தரமுயர்த்தப்பட்டார். இலங்கையில் பீல்ட் மார்ஷலாக செயற்பட்ட ஒரேயொரு இராணுவத் தளபதி அவர் மாத்திரமே.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய தேவை காணப்பட்டது. அதற்காக அங்கு இராணுவத்தின் ஒரு முழுமையான படையணி கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று கோரப்பட்டது. ஆனால் நான் சரத் பொன்சேக்காவையே நியமித்தேன். காரணம் பொன்சேக்கா என்ற ஒரு நபர் ஒரு படையணிக்கு சமமானவர் என்பதால் ஆகும்.

யுத்த களத்தைப் போன்று அரசியலிலும் பல்வேறு பல்வேறு போராட்டங்களை எதிர்கொண்டுள்ளார். சவால்களையும் சந்தித்துள்ளார். அவற்றில் வெற்றியும் பெற்றுள்ளார். அதே போன்று எதிர்காலத்திலும் அவர் நிச்சயம் வெற்றியைப் பதவி செய்வார். எனவே அவரது சேவை இராணுவத்தளபதியாவோ, பாராளுமன்ற உறுப்பினராகவோ நின்று விடப் போவதில்லை. நாட்டுக்கு சேவை செய்வதற்காக இன்னும் வாய்ப்புக்கள் உள்ளன என்று நான் நம்புகின்றேன் என்றார்.

பாடசாலைக் கல்வி நேரத்தின்போது ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட இடமளிக்கபோவதில்லை – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

”எதிர்காலத்தில், பாடசாலைக் கல்வி நேரத்தின்போது தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் ஈடுபட இடமளிக்கபோவதில்லை என்றும் அவசரச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியேனும் மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாப்போம்” என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பலாங்கொட ஸ்ரீ தர்மானந்த வித்யாயதன பிரிவெனாவுக்கு நேற்றைய தினம் ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டிருந்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இந்நாட்களில் ஆசிரியர் சங்கங்களின் நடவடிக்கைகளால் ஆசிரியர் பணியின் மரியாதை கேள்விக்குறியாகியுள்ளது. கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலுக்கு மத்தியில் பாதுகாப்பு தரப்பினரின் தடைகளை தகர்த்துச் செல்லும் ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக இருக்க முடியாது.

எனவே, எதிர்காலத்தில், பாடசாலைக் கல்வி நேரத்தின்போது தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட இடமளிக்கபோவதில்லை. விசேட சட்டத்தை நடைமுறைப்படுத்தியேனும் மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாப்போம்”இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தொங்கு பாலத்திலிருந்து இலங்கைத் தாய்த்திருநாடு எனும் குழந்தையை பாதுகாப்பாக அழைத்து வந்தவன் நான் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

ஆபத்தான தொங்கு பாலத்திலிருந்து இலங்கைத் தாய்த்திருநாடு எனும் குழந்தையை பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் பிரதான உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் இன்று காலை கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் இன்று பீஜிங்கில் இறுதி உடன்பாடு எட்டப்பட்டது. அத்தோடு, அதற்கான முறையான நடைமுறைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் இது நற்செய்தியாகும். சிலர் ஜனாதிபதி பதவிக்காக கடுமையாக பாடுபடும் நிலையில் நான் நாட்டிற்காக பாடுபட்டு வருகிறேன்.

அவர்கள் தமக்குக் கிடைக்கும் பதவிகளைப் பற்றிக் கனவு காணும் போது, நாட்டின் அபிவிருத்தியைப் பற்றிக் கனவு காண்கிறேன்.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் இலங்கைத் தாயை ஆபத்தான கயிற்றுப் பாலத்தின் ஊடாக கொண்டு வர முடிந்ததுள்ளது.

ஹ{னுவட்டயே நாடகத்தில் வருவதைப் போன்று கடினமான நிலைமையில் குழந்தையை பாதுகாப்பதற்கு அஞ்சி எந்த ஆதரவையும் வழங்காத நபர்கள், குழந்தை கயிறு பாலத்தை கடக்கும் முன்பே குழந்தையின் உரிமையைக் கேட்டு போராடுகின்றனர்.

கடனை செலுத்த முடியாமல் வங்குரோத்தான நாடென்று முத்திரை குத்தப்பட்ட ஒரு நாட்டினால் இரண்டு வருடங்களில் இந்தளவு முன்னேற்றத்தைப் பெற முடிந்திருப்பது பாரிய வெற்றியாகும்.

அண்மைய வரலாற்றில் பொருளாதார புதைகுழியில் விழுந்த உலகின் எந்த நாடும் இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வாறான நிலையை அடைந்ததில்லை.

நாடு எதிர்நோக்கும் சவால்களை உண்மையாகப் புரிந்துகொண்டு அவற்றிற்கு நடைமுறை தீர்வுகளை வழங்கி, முடிவுகளைக் காட்டிய என்னுடன் சேர்ந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வீர்களா?

இல்லையேல் இன்னும் பிரச்சினையை புரிந்து கொள்ளாத மற்றும் அதிகாரத்திற்காக இருட்டில் தத்தளிக்கும் குழுக்களுடன் இணைவதா என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கிழக்கு விஜயத்தின் பின் வியாழேந்திரனுக்கு மேலும் ஒரு அமைச்சு பதவி !

இராஜாங்க அமைச்சா் சதாசிவம் வியாழேந்திரன் மேலதிகமாக வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராகவும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில், இன்று காலை அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளாா்.

குறித்த சத்தியப்பிரமாண நிகழ்வு, ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சதாசிவம் வியாழேந்திரன் வர்த்தக இராஜாங்க அமைச்சராக பதவி வகித்துவரும் நிலையிலேயே, மேலதிகமாக மற்றுமொரு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவே ஹை கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆசிரியர் நியமனங்களை வழங்கி வைப்பதற்காகவும் – கலந்துரையாடலுக்காவும் கிழக்கிற்கு விஜயம் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பொது வேட்பாளராக களமிறங்குகிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க !

உத்தேச ஜனாதிபதி தேர்தலில் பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கும் கூட்டணியில் பொது வேட்பாளராக போட்டியிட உள்ளதாகவும், தேர்தல் குறித்த அறிவிப்புக்கு பின்னர் மேலும் சாதகமான பல மாற்றங்கள் தேசிய அரசியலில் இடம்பெறும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட பிரத்தியேக சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 26 ஆம் திகதி புதன்கிழமை நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்த உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் பொருளாதார சாதக தன்மைகள் குறித்து தெளிவுப்படுத்த உள்ளார். இதன் போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் பெரும்பாலும் கூறப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைத்துள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சராக எஸ்.ஜெய்சங்கர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை டெல்லியில் சந்தித்து வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் கலாநிதி. எஸ். ஜெய்சங்கர் வெளிவிவகார அமைச்சராக பதவியேற்று முதலாவது விஜயமாக கடந்த வியாழக்கிழமை கொழும்பை வந்தடைந்தார்.

இந்த விஜயத்தின் போது பிரதமர் மோடியின் விசேட செய்தியுடனேயே இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு வந்திருந்தார். இதன் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் உட்பட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை இராஜதந்திர வழிமுறைகளுக்கு அமைய சந்தித்து கலந்துரையாடினார்.

இதேவேளை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ் அரசியல் பிரதிநிதிகளையும் சந்தித்திருந்தார்.

இவ்வாறானதொரு நிலையில், இரு தரப்பு கலந்துரையாடலுக்கு அப்பால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகிய இருவருக்கிடையில் மாத்திரம் பிரத்தியேகமான விசேட சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

இதன் போது உத்தேச தேர்தல்கள் மற்றும் நாட்டின் அரசியல் – பொருளாதார ஸ்தீரதன்மைக்கான முன்னெடுப்புகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது. குறிப்பாக உத்தேச ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து உருவாக்கப்படும் கூட்டணியின் முன்னேற்றங்கள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் வினாவியுள்ளார்.

பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து நம்பிக்கைக்குறிய வகையில் வலுவான கூட்டணியை உருவாக்கியுள்ளன. அந்த கூட்டணியில் பொது வேட்பாளராக தான் போட்டியிட உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த சந்திப்பின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் குறிப்பிட்டுள்ளதுடன், ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான உத்தியோகப்பூர்வ அறிவிப்புடன், மேலும் சாதகமான பல மாற்றங்கள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இந்திய அமைச்சர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பினை விடுக்க உள்ளார். இந்த அறிவிப்பில் சர்வதேச நாணய நிதியத்துடனான முன்னெடுப்புகளில் உள்ள பன்னாட்டு கடன் வழங்குனர்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளமையை அறிவிக்க உள்ளார்.

இலங்கையின் கடன் மேலாண்மை வசதிகளில் சர்வதேசத்தின் ஒத்துழைப்புகளை அரசாங்கம் கோரியுள்ள நிலையில், இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் முழுமையான ஒத்துழைப்புகளுக்கு உறுதியளித்துள்ளன.

குறிப்பாக சர்வதேச கடன் வழங்குநர்களுடனான ஒப்பந்தம் இருநாட்களுக்குள் கைச்சாத்திடப்பட உள்ளது. இந்த தகவலையும், இரண்டு ஆண்டுகள் என்ற குறுகிய காலத்திற்குள் நாடு அடைந்த பொருளாதார வெற்றிகளையும் நாட்டு மக்களுக்கு கூறவுள்ள ஜனாதிபதி ரணில், ஜனாதிபதி தேர்தல் குறித்தும் தெரியப்படுத்த வாய்ப்புகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.