ஜோ பைடன்

ஜோ பைடன்

“இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு ஜோ பைடனும் கமலா ஹரிஷும் உதவுவார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்” – இரா.சம்பந்தன்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 290 தொகுதிகளைக்  கைப்பற்றி 46ஆவது ஜனாதிபதியாகவும், கமலா ஹரிஷ் அமெரிக்காவின் முதலாவது பெண் உப ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் இருவரையும் வாழ்த்தி கருத்துத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினரான  இரா.சம்பந்தன்  “இலங்கையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வின் அடிப்படையில்  உறுதியான மீளப்பெற முடியாத அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு ஜோ பைடனும் கமலா ஹரிஷும் உதவுவார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்” என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடனும், உப ஜனாதிபதியாக கமலா ஹரிஷும் தெரிவு செய்யப்பட்டமை மிகவும் வரவேற்கத்தக்க விடயம். இதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். இலங்கைத் தமிழர்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் இவர்களுடன் தொடர்புகொண்டு பேசுவோம்.

2009ஆம் ஆண்டு தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க தமிழர் விவகாரத்தை அமெரிக்காவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்குக் கொண்டுவந்திருந்தது.  அப்போது அமெரிக்காவில் பராக் ஒபாமா தலைமையிலான ஜனநாயகக் கட்சியே ஆட்சியில் இருந்தது.

இந்தநிலையில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் புதிய ஜனாதிபதியாகவும், கமலா ஹரிஸ் உப ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இது மிகவும் வரவேற்கத்தக்க விடயம். இதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.

இவர்கள் இருவரும் ஜனநாயகவாதிகள். அரசியல் ரீதியில் நீண்ட காலம் அனுபவம் பெற்றவர்கள். ஜோ பைடன், செனட் சபையிலும் இருந்திருக்கின்றார்; அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் இரண்டு தடவைகள் உப ஜனாதிபதியாகவும் பதவி வகித்திருக்கின்றார்.

கமலா ஹரிஸ், இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணின் மகள். நீண்ட காலம் அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார். இவர்கள் இருவரும் சமத்துவம், நீதி, நியாயம், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளுக்குப் போதிய மதிப்பு வழங்கிச் செயற்படக்கூடிய தலைவர்கள்.

இலங்கைத் தமிழர்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் இவர்களுடன் தொடர்புகொண்டு பேசுவோம். இலங்கையில் சமத்துவத்தின் அடிப்படையில் – நீதியின் அடிப்படையில் – நியாயத்தின் அடிப்படையில் – சமாதானத்தின் அடிப்படையில் ஓர் அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும்.

இலங்கைத் தீவில் நீண்டகாலமாக அவ்விதமானதோர் அரசியல் தீர்வு இன்னமும் ஏற்படவில்லை. அதியுச்ச அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் – உறுதியான மீளப்பெற முடியாத அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு ஜோ பைடனும் கமலா ஹரிஷும் உதவுவார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். ஏனெனில் இவர்கள் உதவக்கூடிய பக்குவம் உடையவர்கள். அதில் ஆற்றல் உடையவர்கள்; அறிவுடையவர்கள்” எனவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

“ஜோ பைடன் வெற்றி பெற்றுவிட்டதாக தவறுதலாக ஊடகங்களால் சித்தரிக்கப்படுகிறது. தேர்தல் இன்னும் முடியவில்லை” – டிரம்பின் பிரசார குழு அறிக்கை !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 294 வாக்குகள் பெற்று 46வது அதிபராக பதவியேற்க உள்ளார். குடியரசு கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் 214 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
இந்நிலையில், தோல்வியை ஏற்பதற்கு டொனால்ட் டிரம்ப் தயாராக இல்லை.
இதுதொடர்பாக, டிரம்பின் பிரசார குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
“ஜோ பைடன் வெற்றி பெற்றுவிட்டதாக தவறுதலாக ஊடகங்களால் சித்தரிக்கப்படுகிறது. அவரது ஆதரவு மீடியாக்கள் அவருக்கு உதவி செய்வதற்காகவும், உண்மையை மறைக்கவும் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளன.
தேர்தல் முடிவடைய இன்னும் நிறைய காலம் இருக்கிறது என்பதுதான் உண்மை. எந்த ஒரு மாகாணத்திலும் ஜோ பிடன் வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கவில்லை. முக்கியமான மாகாணங்களில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பற்றி நீதிமன்றத்தை நாடியுள்ளோம். எங்கள் சட்ட போராட்டம் இன்னமும் நடந்து கொண்டு இருக்கிறது.
திங்கட்கிழமை முதல் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்து சரியான வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்க உள்ளோம். அமெரிக்க மக்கள் ஒரு நேர்மையான தேர்தலுக்கு தகுதியானவர்கள். இதுதான் நமது தேர்தல் நடைமுறை மீது மக்களுக்கு நம்பிக்கை வருவதற்கு காரணமாக அமையும்” என தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி: ஜோ பைடன் இன்னும் சில மணி நேரங்களில்!!!

அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக ஜோ பைடன் அறிவிக்கப்பட உள்ளது. 270 எலக்ரோரல் கொலிஜ் வாக்குகளை வெல்லப்பட வேண்டிய சிலையில் ஜோ பைடன் – கமலா ஹரிஸ் கூட்டு 264யையும் டொனால்ட் ட்ரம் – மைக் பென்ஸ் கூட்டு 214யையும் வென்றுள்ளனர். ஆனால் இன்னும் பென்சில்வேனியா, ஜோர்ஜியா, அரிசோநா, நோர்த் கரலினா, நவாடா ஆகிய ஐந்து மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு வந்து கொண்டுள்ளது. அதில் குறிப்பாக பென்சில்வேனியா ஜோர்ஜியா ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு வந்துகொண்டுள்ளது. இங்கு எண்ணப்பட்டு வரும் வாக்குகள் பெரும்பாலும் ஜோ பைடன் – கமலா ஹரிஸ் கூட்டுக்கு சாதகமாகவே அமைந்து வருகின்றது.

அமெரிக்காவில் மிக இறுக்கமான போட்டியாக அமைந்துள்ள 2020 தேர்தலில் மிகக் கடுமையான போட்டி நிலவுகின்ற மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை சில ஆயிரத்திலேயே வேறுபடுகின்றது. அதனால் மீள எண்ணப்பட வேண்டும் என்ற சட்ட நடவடிக்கைகள் இரு தரப்பிலும் முடக்கி விடப்பட்டு இருந்தது. ஆனால் இப்பொழுது தபால் மூலமான வாக்கள் சட்டப்படியானவையல்ல என்று டொனால்ட் ட்ரம் சட்ட நடவடிக்கைகளைத் தூண்டிவிட்டுள்ளார். ஆனால் இதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லாததால் நீதிமன்றங்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளன. டொனால்ட் ட்ரம் இன் குடியரசுக் கட்சி – ரிப்பப்பிளிக்கன் பார்ட்டி தேர்தல் மோசடி ஏற்பட்டுள்ளது என்ற டொனால்ட் ட்ரம் இன் குற்றச்சாட்டில் இருந்து தம்மை ஓரம்கட்டி உள்ளனர்.

டொனால்ட் ட்ரம் தபால் மூலமான வாக்குகளுக்கு பயப்படுவதற்கும் அவை எண்ணப்படக் கூடபது என்று கோருவதற்கும் காரணம் பெரும்பாலும் தபால் மூலமான வாக்குகள் டெமோகிரட் கட்சிக்கு சாதகமாக அமைவதே வழமை. அதனால் தபால் மூலமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டால் தான் இலகுவாக வெற்றி பெறலாம் என்பது அவரது சரியான கணிப்பே. வழமைக்கு மாறாக கோவி-19 போன்ற காரணங்களினாலும் தபால் மூலமான வாக்குகள் பத்து மடங்கிற்கும் அதிகமாக எகிறி இருந்தது. மேலும் 68 வீதமானவர்கள் தேர்தல் நாளுக்கு முன்னரே தபால் மூலமாகவும் நேரடியாக வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்றும் வாக்களித்து இருந்தனர். அதற்கு முந்திய தேர்தலில் 2016இல் 34 வீதமானவர்களே அவ்வாறு வாக்களித்து இருந்தனர்.

ஜோ பைடன் இன்னும் சில மணி நேரங்களில் தேர்தலில் தெரிவான ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டாலும் ஜனவரி 21ம் திகதியே அவர் உத்தியோகபூர்வ ஜனாதிபதியாக கடமைகளையாற்ற ஆரம்பிப்பிப்பார். இந்த இடைவெளியில் டொனால்ட் ட்ரம் இன் வெள்ளை மாளிகை நாடகம் மிக சுவாரஸ்யமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஜோ பைடன் உத்தியோகபூர்வமாக தெரிவு!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றமை வாழ்நாள் கௌரவம்  என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஜோ பைடன் உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியுமான டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்த்து ஜோ பைடன் போட்டியிடவுள்ளார்.

ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மூன்றாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.

இந்த நிலையில், இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றிலேயே ஜோ பைடன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது தமது வாழ்நாளில் கிடைத்துள்ள மிகப்பெரிய கௌரவம்“ என அவர் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் அடுத்த ஜனாதிபதி யார்..? என்ற ஆவல் அனைவரிடமும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.